ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவும் நிராகரிப்புக்கான சதிக்கோட்பாடுகளும்! -ஐ.வி.மகாசேனன்-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பிலான கருத்தாடல் பிரதான பேசுபொருளாகி தமிழரசியல் பரப்பில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. கருத்தியலாளர்களை ஒன்றிணைத்து 'மக்கள் மனு' எனும் தலைப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்பு, தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியதை தொடர்ந்து கடந்த வாரம் மட்டக்களப்பில் ஒழுங்குபடுத்தியிருந்தது. பொதுமக்களிடம் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டு வரும் விழிப்பு அரசியல் கட்சிகளையும் அது தொடர்பில் விவாதிக்க தூண்டியுள்ளது. இந்நிலையிலையே கடந்த வாரம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதேவேளை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இக்கட்டுரை தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு தொடர்பிலான வாதங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் மக்கள் நலன்களுக்கு அப்பால் தமது குறுகிய நலன்களை இலக்குவைத்து பயணிப்பதையே தமிழ்த்தேசிய அரசியலில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தமது நலன்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளுக்கு பெருங்கதையாடல் ஊடாக சதிக்கோட்பாட்பாட்டை வடிவமைத்து வருகின்றார்கள். 2009களுக்கு பின்னர் தமிழ் அரசியல் பரப்பில் அதிகரித்து வரும் தமிழ் அரசியல் கட்சிகளின் போட்டிச்சூழல் பெருங்கதையாடல்களாலும் சதிக்கோட்பாடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளது. அறிவியல் தளத்தை பற்றிய சிந்தனைகளை முழுமையாக புறக்கணிக்கும் தன்மைமையையே தமிழரசியல் கட்சிகள் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதிகளவில் தமது அரசியல் எதிராளிகளை இந்தியாவின் புலனாய்வாளர்களாக திரித்து செல்லும் மரபு காணப்படுகின்றது. இவ்வாறனதொரு சதிக்கோட்பாட்டு அரசியல் மரபையே தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னகர்த்தி வருகின்றனர். தமிழ் பொதுவேட்பாளருக்கு பின்னால் உள்ள தமிழ்த் தேசியத்துக்கான அறிவியல் அரசியல் களத்தை முழுமையாக புறக்கணிப்பதாகவே நிராகரிக்கும் சதிக்கோட்பாடுகள் காணப்படுகின்றது.
ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவானது என வியாக்கியானம் அளித்திருந்தார். தற்போது யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதத்தை ஊக்குவிப்பதனூடாக மகிந்த ராஜபக்ஷhவிற்கு ஆதரவானதென விளக்கம் அளித்துள்ளார். 'ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்கும்போது அதை மையமாக வைத்தே தீவிரவாத இனவாத சிங்கள சக்திகள் ஒன்றுசேர்ந்து அவர்களுடைய கைகளைப் பலப்படுத்துகின்ற சம்பவம் நிகழலாம். ஆகவே, தோற்றுப்போயிருக்கும் ராஜபக்ச தரப்பினருக்குத் திரும்பவும் உயிரூட்டும் ஒரு செயலாகக்கூட அது அமையலாம். இந்த ராஜபக்சக்களே முன்னைய காலங்களில் இப்படியான ஒரு யுக்தியைக் கையாண்டு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிறுத்தியும் இருக்கின்றார்கள்.' எனக் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு முனையில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், 'பொது வேட்பாளரைத் தேடிப் பிடிப்பதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித்தான் இருக்கின்றன' எனக்கூறி தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு சாத்தியமற்றதெனக்கூறி புறக்கணித்துள்ளார். அவ்வாறே தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பயணிப்பதற்குள் நெருக்கடியை கொண்டுவருமெனக்கூறி நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரின் அரசியல் இலக்கு பற்றிய புரிதலின்றி கருத்து வைப்போரின் பின்புலம் தென்னிலங்கைக்கு சேவகம் செய்வதாகவே அமைகின்றது. தமிழ்ப்பொது வேட்பாளர் தெரிவு தமிழ் மக்களின் இறைமையை வெளிப்படுத்துவதற்கானதொரு களமாகும். தமிழ் மக்கள் இறைமையை வெளிப்படுத்துவது தென்னிலங்கையை கோபப்படுத்தி இனவாதத்தை தோற்றுவிக்குமாயின், ஒன்றுபட்ட இலங்கைக்குள் பயணிக்க முடியாது என்பதே வெளிப்படையான செய்தியாகும். அல்லது தென்னிலங்கைக்கு அடிமையாக தமிழ்த்தேசிய இனம் பயணிக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் தெரிவை தென்னிலங்கையை காரணங்காட்டி நிராகரிக்கும் தரப்பு தமிழ் மக்களை அடிமையாக வாழ நிர்ப்பந்திப்பதாகவே அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு என்பது தமிழ்த் தேசிய நீரோட்டத்தை பாதுகாக்கும் உத்தி என்பதுவே அரசியல் கருத்தியலாளர்களது விளக்கமாக காணப்படுகின்றது. இப்பகுதியின் முன்னைய கட்டுரைகளிலும் அதுதொடர்பில் விளக்கப்பட்டிருந்தது. இப்பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளர் தெரிவினை நிராகரிக்கும் தரப்பினருக்கு தமிழ் மக்கள் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் கொண்டுள்ள அரசியல் சூழலை தெளிவுபடுத்தல் அவசியமாகின்றது. அதனூடாக தமிழ் பொது வேட்பாளர் தெரிவை நிராகரிக்கும் அரசியல் பிரதிநிதிகளது நலன்களையும் நிலைப்பாடுகளையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்வது இலகுவாகின்றது.
முதலாவது, 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் மக்கள் நீண்டதொரு ஏமாற்றத்துக்குள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக ஏங்கிக்கொண்டு உள்ளனர். அதன் வெளிப்பாட்டையே எழுக தமிழ் பேரணிகள் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் என்பன உறுதி செய்தன. எனினும் தமிழ் மக்களின் ஏமாற்றத்தை நீக்கி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய அரசியல் பொறிமுறையை தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது தமிழ் சிவில் சமுக இயக்கங்களோ கொண்டிருக்கவில்லை. அதன் வெளிப்பாடாகவே 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்கு சரிவு வெளிப்படுத்தியிருந்தது. எனினும் அதன் பின்னரும் கூட தமிழ் அரசியல் தலைமைகள் இன்னும் தமது அரசியல் செல்நெறியை சுயபரிசோதனை செய்ய தவறியுள்ளார்கள். அரசியல் அதிகாரங்களை பெற்றவர்கள் தமது இருப்பை தொடர்ச்சியாக பாதுகாக்க முயலுகின்றார்களேயன்றி தமிழ்த்தேசியத்தையோ தமிழ் மக்களின் விருப்புக்களையே சிந்திக்க தவறுகின்றார்கள். தமது சுயநல குறுகிய எண்ணங்களுக்குள்ளே தமிழ் மக்கள் சார்பான தீர்மானங்களையும் எடுக்க முயலுகின்றார்கள். இது தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் ஏமாற்றத்தையே அதிகரிக்கின்றது. அண்மையில் வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் மக்கள் சந்திப்பொன்றில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மக்கள் முன்வைத்த கருத்தொன்ற அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் பதிவு செய்திருந்தார். வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று கேட்டிருந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள். அதில் யாரோ ஒரு பெண் இரகசியமான குரலில், 'அந்தப் பொது வேட்பாளர் தமிழ் ஈழம் கேட்டால் சந்தோஷமாக வாக்களிப்போம்' எனவும் தெரிவித்திருந்தார் என பதிவு செய்துள்ளார். தமிழ் மக்கள் நம்பிக்கையான எதிர்காலத்திற்காகவே ஏங்கியுள்ளனர். தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவும் அரசியல் போராட்ட உத்தியாக தமிழ் மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்துவதனூடாக ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய களமாக அமையக்கூடியதாகும்.
இரண்டாவது, தமிழ் அரசியல் கட்சிகள் தமது பிளவுகளை தமிழ்த்தேசியம் பிளவுற்று இருப்பதாகவும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளை தமிழ்த் தேசியம் பலவீனப்பட்டுள்ளதாகவும் கருத்துரைப்பது தவறான நிலைப்பாடாகும். தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் பலவீனங்களே தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளை பலப்படுத்துகின்றதேயன்றி, அவை தேசியத்தை நீக்கி செல்லவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் பலரும் தனிப்பட்ட ரீதியல் அரசாங்கத்துடன் இணக்கமான உறவுகளூடாக தமது தனிப்பட்ட அபிவிருத்திகளை சாத்தியப்படுத்தியுள்ளனர். மாறாக தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் வினைத்திறனான செயற்பாட்டை முன்னெடுத்திருக்கவில்லை. அதன் வெளிப்பாடே தமிழ் மக்களின் தென்னிலங்கை அரசியல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாக்காக அமைகின்றது. வடக்கு-கிழக்கில் தென்னிலங்கை அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்கு வங்கிக்காக தமிழ்த் தேசிய பிரச்சாரத்தையே முன்னெடுத்திருந்தனர். அண்மையில் சாந்தனின் மரணத்திலும் அது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எனவே, தமிழ்த் தேசிய கொள்கையை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்துகையில் தமிழ் மக்களின் திரட்சி தமிழ்த் தேசியத்துக்கானதாவே அமையக்கூடியதாகும். அத்திரட்சியை தொடர்ச்சியாக பேணக்கூடிய வலு தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படாமையே குறைபாடாக அமைகின்றது.
மூன்றாவது, மனித வாழ்வில் போராட்டம் தவிர்க்க முடியாததாகின்றது. மனிதன் தனது இருப்பிற்காக தினசரி போராடுதனூடாகவே வாழ்ந்து வருகின்றான். இதுவே யதார்த்தமானதாகும். டார்வினின் இயற்கை தேர்வு கோட்பாடும் மனித இனத்தின் பரிணாமத்தை இயற்கை போராட்டத்தின் விளைவாகவே வெளிப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தற்பொழுது இருப்பது போன்றே உருவாகவில்லை. அவை தோன்றும்பொழுது ஏதேனும் ஓர் அமைப்பில் உருவாகியிருக்கலாம். காலவெளியில் பல சிக்கலான வடிவங்களைக் கடந்து, தற்போது தனக்கெனத் தனித்துவமான இருப்பை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்நிலையை இயற்கைப் போராட்டத்தின் விளைவு. ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயற்கை உயிர்களிடத்தில் அதனை நிலைநிறுத்திக்கொள்ளப் பல நிர்ப்பந்தங்களை விதிக்கிறது. அந்தந்த நிலைக்குத் தன்னை தகவமைத்துக்கொள்ளும் இனம் அடுத்தகட்டத்துக்குப் பரிணமிக்கிறது. தக்கணப் பிழைக்கும் பண்புகளை இழக்கும்பொருட்டு பரிணாமம் பெறாமல், சூழ்நிலைகளை வெல்ல முடியாமல் உயிர்கள் மறைந்துபோகின்றன. தமிழினம் போராடுவது தென்னிலங்கையின் இனவாதத்தை ஒருங்குசேர்க்கும் எனும் பூச்சாண்டியூடாக தமிழினத்தின் போராட்டத்தை முடக்க முற்படுவது தமிழினத்தை அழிப்பதற்கான செயலாகவே அமைகின்றது.
நான்காவது, தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு தென்னிலங்கையில் கொதிநிலையை உருவாக்கி இனவாதிகளுக்கான வாய்ப்பை உருவாக்குவதுடன், ஒன்றுபட்ட இலங்கைக்கு சவாலாக அமையுமென எச்சரிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த பதினைந்து வருட கால பேரினவாத அரசியலுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகால மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளார்கள். குறிப்பாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இனப்படுகொலை போரின் இராணுவத்தளபதிக்கும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இனப்படுகொலை போரின் பாதுகாப்பு அமைச்சருக்கும் வாக்களித்திருந்தனர். இதுவே தமிழ் அரசியல் கட்சிகளின் தெரிவாகவும் அமைந்திருந்தது. இக்காலப்பகுதிகளில் தமிழ்த்தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நிகழ்ந்து வருகின்றது. சமகாலத்தில் வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை என நீண்டதொரு பட்டியலைக்கொண்ட தமிழ் நிலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு தொல்லியல் திணைக்கள அரச இயந்திர ஆதரவுடள் அரங்கேற்றப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு சென்று கொண்டே வருகின்றார்கள். இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை மீட்பதற்கு சர்வதேச சக்திகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கத்துக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஆதரவு வழங்கி வருகின்றார்கள். தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நல்லிணக்க அரசியல் காலப்பகுதிகளிலும் சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டு தான் உள்ளது. எனவே தமிழ் மக்களின் இறைமை தென்னிலங்கையின் இனவாதத்தை ஒன்றுதிரட்டுமெனும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்தாடல் தமிழ் மக்களை முழுமையாக ஒடுக்குவதற்கான கருத்தாகவே அமைகின்றது.
எனவே, தமிழ் அரசியல்வாதிகளின் தமிழ் பொதுவேட்பாளர் நிராகரிப்பு தொடர்பான கதையாடல்களும் சதிக்கோட்பாடுகளும் தமது தனிப்பட்ட நலன்களுக்கானதாகவே அமைகின்றது. தமது தனிப்பட்ட நலன்களை தாண்டி தமிழ்த் தேசிய நலனுக்குள் சிந்திப்பார்களாயின், தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு தமிழ்த்தேசியத்துக்கு ஏற்;படுத்தக்கூடிய வாய்ப்புக்களை புரிந்து கொள்ளக்கூடியதாக அமையும். தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு ஏற்படுத்தக்கூடிய தமிழ்த்தேசிய அலை தனிப்பட்ட குறுகிய நலனுக்குள் பயணிக்கும் தமிழ்த்தேசிய முலாம் பூசியுள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிர்காலங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அந்த அச்சத்தின் விளைவாகவே தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் இழிவான கருத்தாடல்களை முன்வைக்க முயல்கின்றனர். எனினும், அரசியல்வாதிகளை புறந்தள்ளி தமிழ் மக்கள் தேசியம் தொடர்பில் தெளிவான பார்வையை கொண்டுள்ளனர். தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான கருத்தரங்குகளில் மக்களின் எதிர்விளைவுகள் அதனையே உறுதிசெய்கின்றது. தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு ஜனாதிபதி தேர்தலின் முடிவோடு தமிழ் மக்களிற்கு தேசிய விடுதலையை அளித்திட போவதில்லை. அத்தகைய அற அரசியல் நடைமுறையில் சர்வதேச ஒழுங்கில் காணப்படுவதில்லை. எனினும் தமிழ்த்தேசியத்தை உயிர்ப்புடன் பேணுவதற்கான ஓர் அடையாள அரசியலாக தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு அவசியமாகின்றது. அதனை நெறிப்படுத்துவதற்கு தொடர்ந்து விவாதிக்க வேண்டும்.
Comments
Post a Comment