ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் பொதுக்கட்டமைப்பினாலேயே சாத்தியப்படுத்தக்கூடியது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட வேண்டும். பெருமளவில் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்கும் நிலைப்பாடுகளே அதிகளவில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் அரசியலை மையப்படுத்தி இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் முடிவுகள் தமது தேர்தல் அரசியல் நலன் மீதான அக்கறையுடன் தொடர்புற்றதாகவே காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே அரசியல் கட்சிகள் மூன்று கோணங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழ் சிவில் சமுகங்களும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் போதிய அக்கறையை வெளிப்படுத்தாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தலை தமிழ் சிவில் அமைப்புக்கள் கையாள வேண்டிய தேவைப்பாட்டை அடையாளப்படுத்துவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிசுபிசுப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே 2023இன் வருட இறுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பகிஷ்கரிப்புக்கான அழைப்பை விடுத்திருந்தனர். அவ்வாறே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தினை முன்வைத்திருந்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளரும் தொடர்ச்சியாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரித்து வருகின்றார். தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிடவில்லை. எனினும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் இருவேறுபட்ட கோணங்களில் கருத்துரைத்து வருகின்றனர். தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ போட்டியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பொதுவேட்பாளர் கருத்தை ஆதரிக்கும் வகையிலேயே செய்தி வெளியிட்டுள்ளார். மாறாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ;ட தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தமிழ் பொது வேட்பாளர் மற்றும் பகிஷ;கரிப்பு கருத்தியலை நிராகரித்து தென்னிலங்கை வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்க வேண்டுமென்ற சாரப்பட கருத்துரைத்துள்ளனர். இந்த பின்னணியிலேயே ஒவ்வொரு கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தெரிவு தொடர்பில் பிற கட்சிகள் சதிக்கோட்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தியல் தமிழ் மக்களின் ஏகோபித்த தேர்வாக அமைய வேண்டுமாயின் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏகோபித்த முடிவாக பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாடு அவசியமாகின்றது. 2019ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழு தமிழ் பொதுவேட்பாளர் தெரிவை தமிழ் கட்சிகளின் ஏகோபித்த முடிவாக செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும், கட்சிகளுக்குள் இணக்கம் காணப்படாமையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. பின்னாளில் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார். அவருடைய கட்சியே அவருக்கு ஆதரவளிக்காததுடன், அவரை கட்சியிலிருந்தும் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் பொதுவேட்பாளர் கருத்தை ஆதரிக்கும் தரப்பினர், அதனை அனைத்து கட்சிகளினதும், சிவில் சமுகத்தினதும் பொதுக்கருத்தியலாக மாற்றுவதாலேயே தமிழ் மக்களின் பொதுவேட்பாளர் என்ற கருத்தை உருவாக்க முடியும். மாறாக தனிப்பட்ட கட்சிகளின் முடிவாகவே காணப்படின், 1982ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலம் மற்றும் 2019ஆம் ஆண்டு எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் வேட்பாளர்களாக போட்டியிட்டதன் தொடர்ச்சியாகவே அவதானிக்கப்படக்கூடியதாகும். இது பொதுவேட்பாளர் என்பதை பிரதிபலிக்கப்போவதில்லை.

இந்த பின்னணியிலேயே தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளில் போட்டியிட்டு வருகின்றனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக கலந்துரையாட ஏற்பாடு செய்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுகத்தினருக்கு பொதுவேட்பாளர் தொடர்பான கலந்துரையாடலுக்கான திகதியை வெளியிட்டு அழைப்பு விடுத்திருந்தார். விக்னேஸ்வரனின் அழைப்புக்கு சிவில் சமுகப்பிரதிநிதிகள் மாத்திரமே சென்றிருந்தனர். அரசியல் கட்சிகள் எவரும் சென்றிருக்கவில்லை. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர், 'தாம் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தை ஆதரிப்பது தொடர்பில் முன்னரே வெளிப்படுத்தியுள்ளதாகவும், தமிழ் பொதுவேட்பாளராக முன்னிறுத்துவதற்கான வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ளதாகவும்' தெரிவித்திருந்தார். இது கட்சிகளின் தமது நலன் சார்ந்த போட்டி அரசியலையே வெளிப்படுத்துகின்றது. இது தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக கருத்துரைக்கும் கட்சிகளின் நோக்கங்களை சந்தேகத்திற்குள்ளாக்குவதாகவே அமைகின்றது.  

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இத்தகைய முரணான போக்குகள் காணப்படுகையில் அதனை களைந்து, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த முடிவுகளை வெளிப்படுத்த நெறிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சிவில் சமுகத்திடம் காணப்படுகின்றது. எனினும் 'மக்கள் மனு' எனும் சிவில் சமுகத்தினரே தமிழ் சிவில் சமுகப்பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பிலான அணுகுமுறையை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான கருத்தரங்கை முன்னெடுத்துள்ளதுடன், ஒரு சில அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளனர். மக்கள் மனு எனும் சிவில் சமூகம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை முன்னிலைப்படுத்தியே பொது அரங்கிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்திட செயற்பட்ட பல சிவில் சமூகங்கள் மற்றும்  கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் அனைத்து தமிழரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்திருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் முரண்பாடு தொடர்பில் போதிய அக்கறை காட்டியிருக்கவில்லை. 

இது மீளவும் ஜனாதிபதி தேர்தலை கையாள்வதில் தமிழ் மக்கள் பலவீனப்படுத்தப்படுவார்களோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதிபதி தேர்தலை கையாள்வதில் அரசியல் கட்சிகளை தனித்து விடுவதன் பலவீனத்தையும், சிவில் சமுக ஈடுபாட்டின் தேவைப்பாட்டையும் நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகின்றது.

முதலாவது, கடந்த காலங்களை போன்று விட்டுக்கொடுப்புடைய தலைமைத்துவங்களை தமிழ் அரசியல் கட்சிகளிடையே காணமுடிவதில்லை. 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமும், (தமிழர் கூட்டணி) 1976ஆம் ஆண்டு தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தமிழ்த்தேசியம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் எதிர்ப்பு அரசியல் மற்றும் இணக்க அரசியல் என வேறுபட்ட தளங்களை பரீட்சித்து பார்த்தும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தென்னிலங்கை பேரினவாத அரசாங்கத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே தமிழ்த்தேசியத்தின் திரட்சியின் தேவைப்பாட்டை உணந்த செல்வநாயகம், எவ்வித வறட்டு அரசியலையும் வெளிப்படுத்தாது தனது பிரதான போட்டியாளரான ஜி.ஜி.பொன்னம்பலத்தை நேரில் சென்று கூட்டணிக்கான அழைப்பை விடுத்திருந்தார். அத்துடன் தமிழரசுக்கட்சி மற்றும் அதன் சின்னத்தை முடக்கி, கூட்டு தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையாக வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறான விட்டுக்கொடுப்புடைய தமிழ்த்தேசியத்தின் நலனை சிந்திக்கும் தலைமைகள் தற்போது தமிழ் அரசியல் பரப்பில் இல்லை. செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்ட கட்சிக்குள்ளேயே இன்று அதிகார போட்டியால் கட்சி நீதிமன்றத்துக்குள் முடக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களையும், தேர்தல் அரசியலை மையப்படுத்தி கட்சி நலன்களையும் முதன்மைப்படுத்தும் போக்கே காணப்படுகிறது. இவ்வாறான தலைமைகளிடம் சுயமாய் கூட்டு முடிவு எதிர்பார்க்க முடியாததாகும்.

இரண்டு, தமிழ் மக்களின் பொது ஆணையை அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பாதுகாப்பார்களா என்பது தொடர்பில் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது. வரலாற்றில் தமிழ் மக்களின் பொது ஆணையை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நிராகரித்து சென்ற போக்கே காணப்படுகின்றது. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மக்கள் ஆணையை பெற்றிருந்தார்கள். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் பெற்றிருந்தார். எனினும் பொதுத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி மக்கள் ஆணையை புறந்தள்ளி செயற்பட்டிருந்தனர். தன்னாட்சிக்கு அளிக்கப்பட்ட பொது ஆணையை நிராகரித்து, தமிழ் மக்களின் இறைமையை மாவட்ட சபைக்குள் சுருக்க இணங்கி சென்றனர். அவ்வாறே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பொது ஆணையை வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரிக்கப்பட்ட 13அம்ச கோரிக்கைகளை  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பேற்றனர். எனினும், அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாது கிடப்பில் போட்டனர். தமிழ் மக்களை தென்னிலங்கை அரசியல் பிரதிநிதிகள் மாத்திரமின்றி தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக ஏமாற்றியே வந்துள்ளனர். இவ்அனுபவங்களில், தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான தமிழ் மக்களின் பொது ஆணையை வெளிப்படுத்தும் அரசியலை தமிழ் அரசியல்  கட்சிகளிடம் தனித்து விடமுடியாத நிலை காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை பொறுத்தவரையில் அரசியல் கட்சிகளை அரசியலை கையாளும் முதன்மையான கூறாகும். எனினும் தமிழ் அரசியல் கட்சிகளின் மக்கள் விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டவும், அழுத்தங்களை பிரயோகிக்கவும் சிவில் சமுக கட்டமைப்பின் தலையீடு அவசிமானதாகும். 

மூன்று, தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு மற்றும் பொது ஆணை உருவாக்கத்தில் தமிழ் சிவில் சமூகங்கள், புத்திஜூவிகள், புலம்பெயர் செயற்பாட்டு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்த பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். தமிழ் மக்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக காணப்படுகின்ற போதிலும், தமிழ் மக்களின் அரசியல் கூறுகள் தனியன்களாகவே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் கூட்டு பலத்தை வெளிப்படுத்தக்கூடிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதாக காணப்படுகின்றது. தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பொதுக்கட்டமைப்பின் தேவைப்பாட்டை பகுதியளவில் பூர்த்தி செய்திருந்தது. எனினும் தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியின் பின்னர் புதிய கட்டமைப்புக்கான உருவாக்கம் சாத்தியமற்றதாக இழுபறியில் காணப்படுகிறது. எனினும் தொடர்ச்சியாக பொதுக்கட்டமைப்பின் தேவைப்பாடு உணரப்பட்டு, அதற்கான முனைப்புகளும் புத்திஜூவிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டே வருகிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியும் அதற்கானதொரு முன்முயற்சியே ஆகும். எனினும் பொதுக்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான சரியான புள்ளியை கண்டறிவதில் சிரமப்பாடு காணப்படுகின்றது. பொதுவேட்பாளர் தெரிவு மற்றும் பொது ஆணை உருவாக்கம் என்பது சிவில் சமூகங்கள் புத்திஜூவிகள், புலம்பெயர் செயற்பாட்டு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்த பொதுக்கட்டமைப்பினால் நெறிப்படுத்துவதனூடாக கொள்கையளவில் அதனை தொடர்ச்சியாக நகர்த்துவதற்கு ஏதுவாகும். அரசியல் கட்சிகள் பின்வாங்குகின்ற சூழலிலும் பொதுக்கட்டமைப்பு அழுத்தம் கொடுப்பதாகவும் தமிழ் மக்கள் பொது ஆணையை பாதுகாக்கக்கூடிய கட்டமைப்பாகவும் காணப்படும்.

நான்கு, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தமிழ் அரசியல் தரப்பினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை சிவில் சமுகம் சார்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொள்வது பொருத்தமுடையதாக காணப்படும். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனியன்களை கடந்து கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் பொதுப்பரப்பில் தமிழ்த் தேசிய அரசியலை உயிர்ப்புடன் பேணும் நிறுவனமாக நன்மதிப்பை பெற்றுள்ளது. இப்பின்னணியிலேயே 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட பிரதான கட்சிகள் யாவும் இறுதி தீர்மான வரைபு உருவாக்கம் வரை பங்கு கொண்டிருந்தனர். பிற்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் அரசியல் முதிர்ச்சியின்மையால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் ஏமாற்றத்துக்குள் சிக்கி கொண்டனர். இந்நிலையில் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு இம்முறை முதிர்ச்சியான அரசியல் அனுபவத்தை மாணவர் ஒன்றியம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. தமிழ் அரசியல் தரப்பினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுடன், அறிவியல்ரீதியான கலந்துரையாடல்களுக்கு நிபுணத்துவமிக்க சிவில் சமுக செயற்பாட்டாளர்களை முதன்மைப்பத்தி செயலாற்றுவது மாணவர் ஒன்றியத்தின் முதிர்ச்சியான செயற்பாட்டை வெளிப்படுத்தக்கூடியதாக அமையும். சர்வதேச அரசியல் பரப்பில் பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை மாணவர் ஒன்றியங்களின் முன்முயற்சிகளே சாத்தியமாக்கியுள்ளது. குறிப்பாக தென்னாசிய அரசான பங்களாதேஷ; அரசு உருவாக்கம் மாணவர் புரட்சியிலிருந்தே உதயமாகி இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் தொடர்ச்சித் தன்மை இன்மை என்பது பரவலான குறைபாடாக காணப்படுகின்றது. இக்குறைபாட்டை களைந்து 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் முன்னெடுப்பை மாணவர் ஒன்றியம் 2024 ஜனாதிபதி தேர்தலிலும் தொடருவது அணைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க பலமான உத்தியாக காணப்படும். தேர்தல் நலன்களுக்கும் இயங்கும் தமிழரசியல் கட்சிகள் ஏனைய சிவில் சமுக செயற்பாட்டாளர்கள மீது கட்சி முத்திரைகளை குத்தும் சூழலில் பிற சிவில் சமுகத்தவர்களின் அழைப்பை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமா தொடர்ச்சியா பயணிக்குமா என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது.

எனவே, தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான அரசியல் கட்சி அரசியலிலிருந்து தமிழ்த்தேசிய அரசியலாக வடிவமைப்பதில் சிவில் சமூகங்களும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் கூடிய அக்கறை காட்டுதல் அவசியமாகும். கடந்த ஒரு தசாப்த காலமாக புத்திஜூவிகளிடம் உரையாடல் பரப்பில் மாத்திரம் தேங்கியிருந்த தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியல் தமிழ் அரசியல் கட்சிகளின் முதன்மையான பிரச்சாரமாக மாறியுள்ளமை வரவேற்றகத்தக்க விடயமாகும். எனினும் தமிழரசியல் கட்சிகளின் பிரச்சார மோதலுக்குள் சிக்குண்டால் கருத்தியல் விதையாகவே சிதைந்து போகும் சூழலே உருவாகக்கூடியதாகும். தமிழ் அரசியல் கட்சிகளின் வாதங்களை கட்டுப்படுத்தும் வகையில் சிவில் சமுகம், புத்திஜூவிகள் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டு பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் பொதுஆணை கருத்தியலை வலுப்படுத்துவார்களாயின் வளமான தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்த ஏதுவாக அமையும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-