கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தெரிவும்! -ஐ.வி.மகாசேனன்-

கடந்த ஒரு சில வாரங்களாக தமிழ் அரசியல் தரப்பினரிடையே தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் வலுப்பெற்று வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எதிரான வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் அரங்கிற்கு தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான உரையாடல் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகவே அமைகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசிய கருத்தியலில் வலுவான நிலையை பெற்றுள்ள தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல், 2024களிலேயே தமிழ் அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது தனியன்களின் அரசியலாகவே அமைந்துள்ளது. தமிழ்த்தேசியத்தின் மக்கள் ஆணைக்கான கருத்தியலை கொண்டிருக்கவில்லை. தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ்த்தேசிய சித்தாந்தரீதியிலான கருத்தாகவே அமைகின்றது. இங்கு தமிழ்த்தேசிய அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்தியே அரசியல் கட்டமைக்கப்படுகின்றது. இந்த தெளிவுடனேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பளரை நிறுத்துவது தொடர்பிலான உரையாடலை தமிழ் அரசியல் கட்சிகள் நகர்த்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளரை தனியனாக சிந்திப்பதனாலேயே கட்சி அரசியல் நலன் முரண்பாட்டுக்குள் எதிரான வாதங்களும் எழுகின்றது. இக்கட்டுரை தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான நீதிப்போராட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரசியலின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஓர் இனத்தின் மீதான அழிவுகள் நீண்ட பழமையான வரலாற்றை பகிர்கின்றது. கிரேக்க நகர அரசு காலத்தில் கிரேக்கர்களால் ரோய் நகர மக்கள் அழிக்கப்பட்டிருந்தார்கள். ரோமானியர்களால் கார்தேஜ் அழிக்கப்பட்டது. மற்றும் செங்கிஸ்கானின் ஆட்சியில் மங்கோலியர்களின் அட்டூழியங்கள் என்பவை வரலாற்றில் சில பகுதிகளேயாகும். ஐக்கிய அமெரிக்காவின் வரலாறும் இன்கா, மாயா மற்றும் செவ்விந்தியர்களின் எச்சங்களிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் 'இனப்படுகொலை' (Genocide) பற்றிய சொல்லாடல் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட அழிப்பை தொடர்ந்தே 1948ஆம் ஆண்டு சர்வதேச சட்ட பெறுமதியை பெற்றிருந்தது. அதேவேளை 'இனப்படுகொலை' என்ற சொல் முதன்முதலில் போலந்து யூத சட்ட அறிஞர் ரபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரால் 1933இல் மாட்ரிட்டில் நடைபெற்ற மாநாட்டிலேயே பயன்படுத்தப்பட்டிருந்தது. மார்ட்டின் ஷா போன்ற அறிஞர்கள், 'இனப்படுகொலை பற்றிய ஆய்வு பொதுவாக சமூகவியல் கண்ணோட்டங்களைக் காட்டிலும் சட்ட மற்றும் வரலாற்று ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஃபேல் லெம்கின் மற்றும் ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் வரைவாளர்களின் முன்னோடி முயற்சிகள் மூலம், குற்றத்தின் வரையறைக்கு சட்டம் உத்வேகத்தை அளித்தது. முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களின் பணிகளில், சமீபத்திய இனப்படுகொலைகளை அங்கீகரிப்பதில் பெரும்பகுதியை அது தொடர்ந்து அளித்து வருகிறது.' எனச்சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பின்னணயில் இனப்படுகொலைக்கு நிலையான வரையறையை உருவாக்க முடியவில்லை. காலத்தின் தேவை கருதி இனப்படுகொலை ஆய்வும் வரையறையும் விரிவடைந்து கொண்டு செல்கின்றது. இனப்படுகொலையின் செயல்முறைகளின் ஒரு ஒருங்கிணைந்த கூறாக கலாச்சார பாரம்பரிய அழிவினை ரபேல் லெம்கின் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நீதிமன்ற பொறிமுறையினூடாக இனப்படுகொலை உறுதிப்படுத்தப்பட்ட நாடுகள் சிலவற்றில் இனப்படுகொலையைத் தொடர்ந்து பல தசாப்தங்களில் அதன் வரலாற்று தாயகத்தில் உள்ள பூர்வீக இருப்பின் பெரும்பாலான அறிகுறிகளை அழிப்பது இன்றும் தொடர்கிறது. கலாச்சார அழித்தல் இனப்படுகொலையை செய்த அரசின் இனப்படுகொலை மறுப்பு மற்றும் அதன் தேசிய கதையை மீண்டும் எழுதுதல் மற்றும் புராணமாக்குதல் ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது. இவ்அனுபவங்கள், இனப்படுகொலை தொடர்பான சர்வதேச வரையறையை கேள்விக்குட்படுத்துவதுடன் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (Structural Genocide) பற்றிய விவாதத்தை அதிகரித்துள்ளது.

1933ஆம் ஆண்டிலேயே, இனப்படுகொலை சர்வதேச சட்டத்தில் குறியிடப்படுவதற்கு முன்பே லெம்கின் கட்டமைப்பு இனப்படுகொலையின் பண்புகளை இனப்படுகொலையாக அடையாளப்படுத்துகின்றார். 'இவை கூட்டுக்குழுவின் உறுப்பினராக உள்ள ஒரு நபருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள். குற்றவாளியின் குறிக்கோள் ஒரு தனிநபருக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் சேர்ந்த கூட்டுக்கு சேதம் விளைவிப்பதும் ஆகும். இந்த வகையான குற்றங்கள் மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சமூக ஒழுங்கின் அடிப்படை அடிப்படையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஒரு கூட்டுத்தொகையை குறிவைக்கும் தாக்குதல் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அழிவின் வடிவத்தை எடுக்கலாம். இதில் ஒரு கூட்டுப்படையின் தனித்துவமான மேதை மற்றும் சாதனை அறிவியல், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் வெளிப்படுகிறது.' என லெம்கின் இனப்படுகொலையை அடையாளப்படுத்துகின்றார்.

இத்தகைய அனுபவங்களை ஈழத்தமிழர்கள் சுதந்திர இலங்கையில் தொடர்ச்சியாக அனுபவத்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம், கல்லோயா குடியேற்ற திட்டம், தனிச்சிங்கள சட்டம் முதல் யாழ்ப்பாண நூலக எரிப்பு உட்பட இன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரிக்கான இடையூறு வரை தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை இயல்புகளையே வெளிப்படுத்துகின்றது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அவலம் மற்றும் முந்தைய கலவரங்கள் உயிரிழப்பை ஏற்படுத்துவதனூடாக தமிழினத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழிப்பதற்கான நேரடி வன்முறையாக அமைகின்ற போதிலும், காலத்திற்கு காலம் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள் பாரம்பரிய நிலத்தை சிதைப்பதனூடாகவும், தமிழ் மக்களின் பூர்வீக பண்பாட்டு கலாசாரங்கள் மீது ஆக்கிரமிப்பு போரினூடாக தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு நீண்ட வரலாற்றை பகிர்கின்றது. எனினும் ஈழத்தமிழரசியல் இனப்படுகொலை தொடர்பில் தெளிவான அறிவை பெற தவறியுள்ளது. ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கை அரசு எனும் கட்டமைப்பினை முழுமையாக ஈடுபடுத்தியே மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு, நிறைவேற்று ஜனாதிபதிபதித்துவ முறைமை, அமைச்சவை என அரச கட்டமைப்புக்கள் முழுமையாக இனவழிப்பின் கருவிகளாக காணப்படுகின்றது. இக்கட்டமைப்புக்களூடாகவே தொடர்ச்சியாக தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் மரபுரிமைகளை சிதைப்பதனூடாக இலங்கை அரசின் இனப்படுகொலை மறுப்பபுதுடன் அதன் தேசிய கதையை மீண்டும் எழுதும் மற்றும் புராணமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. மகாவம்ச உருவாக்கத்தினுடான அரச இயந்திரம் பேரினவாதத்தையே கட்டமைத்து வருகின்றது. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களை தெரிவு செய்தமை, தமிழினத்தின் மீதான இனவழிப்பிற்கு தமிழ் மக்களே துணை போயுள்ளார்கள் என்ற கருத்தியலை வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் கட்டமைப்புரீதியாக அரச மற்றும் அரசாங்க தலைவர்களுக்கு முதன்மையான வகிபாகம் காணப்படுகின்றது. 1978ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியே இலங்கை அரசின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இலங்கையின் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்பின் கட்டமைப்பை வலுவாக பேணுபவராக இருந்து வந்துள்ளார். இலங்கை வரலாற்றின் முதலாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா 1977இல் பிரதமராக பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது 'போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று முழங்கி கலவரத்தை தமிழினத்தின் மீதான இனவழிப்பாக மாற்றியமைத்தார். பின்னாளில் 1983இல் மீளவொரு இனக்கலவரத்தில் அரச ஆதரவை வழங்கி தமிழினத்தின் இனப்படுகொலையை அரச கட்டமைப்பின் உதவியுடன் மேற்கொண்டிருந்தார். தனது அமைச்சர்களூடாக யாழ் நூலகத்தை எரியூட்டி தமிழ் மக்களின் கல்விச்சொத்தை சிதைத்திருந்தார். இவ்வாறான அனுபவத்தையே தொடர்ச்சியாக நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி பதவியில் அலங்கரித்தவர்களும் நிறைவேற்றி வந்துள்ளார்கள். கோத்தபாய ராஜபக்ஷh அநுராதபுரத்தில் பதவியேற்றமையும், ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக்காலத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பேரால் அமைச்சரவையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் தமிழர்களின் மரபுரீதியான நிலங்கள் மீதான பௌத் ஆக்கிரமிப்பு என்பவையும் இலங்கை ஜனாதிபதி மற்றும் நிர்வாகத்துறை தமிழினத்தின் மீது கட்டமைப்புரீதியாக இனப்படுகொலையின் கருவிகளாகவே செயற்பட்டு வருகின்றார்கள் என்பதையே உறுதி செய்கின்றது. அதன் தொடர்ச்சியை பாதுகாப்பவர்களாகவே தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களும் காணப்படுகின்றார்கள்.

இரண்டாவது, தங்களை கணவான்களாக காட்டிக்கொள்ள முயலும் தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களால் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை வெளிப்படுத்த இயலாதவர்களாய் காணப்படுகின்றார்கள். இதன் பின்னணியில் இனப்படுகொலை இலங்கை அரசியலில் கட்டமைக்கப்பட்டுள்ள முறைமையே காரணமாகின்றது. கட்டமைப்பு ரீதியாக ஈழத்தமிழர்களை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமெனும் அரசியல் சுலோகமே இலங்கையின் அரசியல் இயங்குநிலையின் அடிப்படையாக அமைகின்றது. குறிப்பாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரணாக செயற்படுவதாகவே இலங்கை அரசியல் கட்டமைப்பு காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினை தீர்வைப் பற்றி பேசுவது பாதகமானது எனும் எண்ணமே கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த கால வரலாறுகளும் பாதக விளைவுகளை உறுதி செய்கின்றது. தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வாக அமையாத போதிலும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தினூடாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்துக்குள் தமிழ் மக்களின் மொழி உரிமையை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டதுக்காக, இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பௌத்த பிக்குவால் கொலை செய்யப்பட்டிருந்தார். அதேவேளை பண்டா-செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமலே பௌத்த பிக்குகளின் போராட்டத்தால் முன்னரே கிளித்தெறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறனதொரு அனுபவம் இலங்கை அரசியலில் ஈழத்தமிழர்கள் முழுமையாக தவிர்க்கப்படுவதனையே உறுதி செய்கின்றது. தவிர்க்கப்படும் கட்டமைப்புக்குள் ஈழத்தமிழர்கள் இணைந்து பயணிக்க முயலுவது ஏமாற்றத்தை ஏற்று பயணிப்பதாகவே அமையும். கடந்த காலங்களில் தென்னிலங்கை வேட்பாளர்களோடு எவ்வித ஒப்பந்தங்களுமின்றி ஆதரவளித்து தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், தம் மீதான கட்டமைப்புரீதியான இனப்படுகொலைக்கும் மறைமுக ஆதரவையே வழங்கியுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களமிக்குமாறு தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இதயத்தாலான ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்தனர். இக்காலப்பகுதியிலேயே முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த துறவி ஒருவர் ஆக்கிரமிப்பு விவகாரம் இடம்பெற்றது. தமிழ் மக்களின் மரபுரிமையான வழிபாட்டுரிமைக்கு நெருக்கடி ஏற்பட்டது. தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற அரசாங்க தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுக்க முயலவில்லை. இது மறுதலையாக தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு ஆதரவை வழங்கியுள்ளது. 

மூன்றாவது, அரகலயாவின் அறுவடையை பெற முயலும் அரசியல் கட்சிகள் அரகலயவின் வெற்றிக்கு பின்னாலுள்ள இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கைக்கு ஆதரவான கருத்தியலை வெளியிட மறுப்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். அரகலயவை கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ச்சியாக பேணும் கருவியாகவே மாற்றியமைத்துள்ளனர். அரகலயாவினை முற்போக்கினாதாகவும் அதனூடாக தென்னிலங்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காட்ட முயலுவது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பாதுகாக்கும் உத்தியாகவே காணப்படுகின்றது. அரகலயவில் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தாமைக்கு சர்வதேச ரீதியாக இராணுவத்திற்கு ஏற்கனவே காணப்பட்ட நெருக்கடியே காரணமாகும். 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையில் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளேயாகும். சர்வதேச அரங்கில் 2009ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை உறுதிப்படுத்தப்படாத போதிலும், இலங்கை இராணுவத்தின் முக்கிய தளபதிகளுக்கு அமெரிக்க போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்வது தடை விதித்துள்ளமை இனப்படுகொலை குற்றச்சாட்டின் பகுதியாகவே காணப்படுகின்றது. இத்தகைய நெருக்கடிகளினாலேயே கோத்தபாய ராஜபக்ஷh அரகலய மீது எவ்விதமான இராணுவ ஈடுபாட்டையும் பயன்படுத்தியிருக்கவில்லை. இப்பின்னணியில் அரகலயவின் வெற்றி என்பது ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. எனினும் அரகலயா ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அரகலய அரங்கில் மே-18 முள்ளிவாய்க்கால் துயரம் அனுஷ;டிக்கப்பட்டாலும், அதனை இனப்படுகொலையாக அங்கீகரிக்க தயாரில்லை. அத்துடன் அரகலய வெற்றியை தமதாக்க முயலும் அரசியல் கட்சியினர் எவரும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது பிழை என்று கூட சொல்ல தயாரில்லை. ராஜபக்ஷhக்கள் நேரடியான இனப்படுகொலை குற்றவாளிகளெனில் ஏனைய தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதன் ஆதரவாளர்களாகவே செயற்பட்டுள்ளனர்.

இவ்வாறாகவே தென்னிலங்கையின் அரசியல் முழுமையாக கட்டமைப்பட்டரீதியில் இனப்படுகொலையின் பங்காளிகளாகவே காணப்படுகின்றார்கள். தென்னிலங்கை அரசியலுடன் தமிழ்த்தேசிய அரசியல் வெளிப்படுத்தும் இணக்கம் தம் மீதான இனப்படுகொலையை தாமே ஆதரித்து வருவதாகவே அமைகின்றது. இதுவரை காலமும் இனப்படுகொலை சார்ந்த புரிதலின்றி, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் தமிழ் மக்களும் ஆதரவளித்து வந்துள்ள துயர செய்தியே ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்ததனூடாக பதிவு செய்துள்ளனர். இத்தகைய நிலையை மாற்றியமைக்கவும், தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்தவும் தமிழ்ப்பொதுவேட்பாளரே தந்திரோபாயமான அரசியல் நகர்வாக காணப்படுகின்றது. தொடர்ச்சியான ஏமாற்றம் மற்றும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் பிளவுகளால் தமிழ்த்தேசியம் சிதைக்கப்பட்டுள்ள தோற்றமே வெளிப்படுத்தப்படுகின்றது. இது தமிழ் மக்களின் பேரம் பேசுமாற்றலை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது. கடந்த காலங்களில் தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசத்திற்கு விஜயம் செய்வதையே எதிர்த்து கறுப்புக்கொடி காட்டி போராடிய அரசியல் போய், தமிழர் தாயகத்தின் அதிக விருப்பு வாக்குகளை தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெறும் அவலம் மாறியுள்ளது. இதன் பின்னால் தமிழ்த்தேசியத்தின் அவநம்பிக்கை அரசியலே காரணமாகின்றது. இவற்றை சீர்செய்வதற்கு தமிழ் மக்களின் திரட்சியையும் ஆணைiயும் வலுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய ஆணையை திரளாக வெளிப்படத்துவதனூடாக தேசியம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் தமிழ்த்தேசிய இருப்பை பாதுகாக்கவும் ஏதுவாக அமையும்.

எனவே, ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை எதிர்ப்பது என்பது, இனப்படுகொலையை மேற்கொள்ளும் அரசாங்க கட்டமைப்பை நிராகரிப்பதாவே அமையக்கூடியதாகும். இப்பின்னணியில் தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களை நிரகரித்து, தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை மக்கள் ஆணையாக முன்னிறுத்தி ஈழத்தமிழர்கள் பொதுவேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் வலுப்படுத்துவதே பொருத்தமானதாகும். இதனூடாக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாளிகளை நிரகாரிப்பதுடன் தமிழ் மக்களின் ஆணையை பொது அரங்கில் திரட்டவும் பகிரங்கப்படுத்தவும் ஏதுவாக அமையும். ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பது இனப்படுகொலையாளிகளை நிரகாரிப்பதாக அமைகின்ற போதிலும், தமிழ் மக்களின் எதிர்ப்பு தென்னிலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போகின்றார். தமிழ் மக்கள் பகிஷ;கரிப்பதனூடாக எவ்வித நெருக்கடியுமின்றி இயல்பாக அளிக்கப்பட்ட வாக்குகளில் அறுதிப்பெரும்பான்மை முதலாவது தெரிவிலேயே கிடைத்துவிடும். எனினும் தமிழ் மக்கள் பொதுவேட்பாளரை நிறுத்துவதனூடாக ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்க இரண்டாம் மூன்றாம் தெரிவுகளை கணக்கிட வேண்டிய தேவை ஏற்படும். இதனூடாக தமிழ் மக்களின் பலம் நிருபீக்கப்பட்டு, தமிழ் மக்களின் ஆணையும் பேசுபொருளாகும் வல்லமையை பெறுகின்றது. இதனூடாக சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசியமும் வலுப்பெற ஏதுவாகின்றது. தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது தமிழ் மக்களின் தந்திரோபாய அரசியலாக அமையக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-