ஈழத்தமிழரசியலில் சம்பந்தரின் தோல்வியடைந்த தலைமைஎதிர்கால தலைமைகளுக்கு படிப்பினையை வழங்குமா? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜீன்-30அன்று தனது 91வது வயதில் மரணித்துள்ளார். தமிழர் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவம் கருதி அதன் தலைவருக்கு, தென்னிலங்கை மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர். எனினும் தமிழ் மக்களிடையே நேரான மற்றும் எதிரான செய்திகள் பொதுவெளியிலே நிறைந்து காணப்படுகிறது. கட்சி மோதல்களாவும், மனிதநேய பண்புசார் வாதங்களாகவுமே இரா.சம்பந்தனின் மரணம் ஈழத்தமிழரசியலில் உரையாடலை பெற்றுள்ளது. எனினும், ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஓர் பகுதியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் இரா.சம்பந்தனின் பங்களிப்பு முதன்மை பெறுகின்றது. அதனை கட்சி மோதலாகவும், மனிதநேய உரையாடலாகவும் மட்டுப்படுத்திவிட இயலாது. அது ஈழத்தமிழர்களின் அரசியலை கட்டமைக்கப்போவதில்லை. இக்கட்டுரை தமிழ்த்தேசிய அரசியலில் சம்பந்தனின் தலைமைத்துவ இயல்பை மதிப்பிடுவதனூடாக எதிர்கால தலைமைகளுக்கான படிப்பினையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனுக்கான இரங்கலில் அவரது தலைமைத்துவம் யாவராலும் குறிப்பிட்டு சொல்லப்படும் விடயமாக காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களுக்கு அப்பால் இலங்கையின் தமிழ் மொழி பேசும் சமுகங்களின் அரசியல் பிரதிநிதிகளான மலையக தலைவர்கள் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் தமிழ் மொழி பேசும் சமுகங்களின் தலைவராக இரா.சம்பந்தனை புகழ்ந்துள்ளார்கள். இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், 'தமிழ் தேசிய இனத்தின் தானை தளபதியை இழந்து நிற்கிறோம். ஆவர் முழு தமிழ்பேசும் சமுகங்களின் தானை தளபதி என்று கூறினாலும் அது மிகையாகாது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமுகங்கள் அனைத்தும், மலையக தமிழராக இருக்கட்டும் முஸ்லீம்களாக இருக்கட்டும் எல்லோருக்கும் ஒருசேர பேசிய ஒரு தலைவராக நாங்கள் அண்ணன் சம்பந்தனை காண்கிறோம்' எனத்தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செந்தில் தொண்டமான், 'அவர் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (வுNயு) பிரதிநிதி தலைவர் மாத்திரம் இல்லை. அவர் இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் ஒரு தலைவராக தான் இருந்தார். அவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இழப்பு ஈடுசெய்ய முடியாது.' எனத்தெரிவித்திருந்தார்.

உள்ளூர் அரசியல்வாதிகளின் இரங்கல் செய்திகளுடன் பொருந்தக்கூடிய வகையிலேயே பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளிடமிருந்தும் மறைந்த சம்பந்தனுக்கு இரங்கல் செய்திகள் வந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் இரங்கல் செய்தியில், 'இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்காக அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் பின்பற்றியதாகவும்' எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க், 'சிறுபான்மையினரின் சம உரிமைகளுக்கான அவரது வாதங்கள் அனைத்து இலங்கை பிரஜைகளுக்குமான பரந்த மனித உரிமைகளை மேம்படுத்த உதவிபுரிந்ததுடன் ஒற்றுமையை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்ததாக' சம்பந்தனின் செயற்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.

இரங்கல் செய்திகள் சம்பந்தனின் தலைமைத்துவத்தை புகழுகின்ற போதிலும், நடைமுறையில் விமர்சனங்களும் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. விடுதலைக்காக போராடும் ஓர் தேசிய இனத்தின் தலைமையை வழங்கியிருந்த, ஆளுமையின் மறைவிற்கான இரங்கலை வெற்று புகழ்ச்சிகளால் கட்டமைத்திட முடியாது. அரசியலில் புகழ்ச்சிகள், துரோகங்கள், ஏமாற்றுகள் தவிர்க்க முடியாத இயல்பாக அமையலாம். இது வளர்ச்சியடைந்த அரசியலை பகிரும் தேசங்களுக்கு பொருத்தமாக அமையலாம். எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தில் கடந்த காலம் பற்றிய அறிவு தெளிவானதாக அமைய வேண்டும். புகழ்ச்சிகளுக்குள் சுருங்குகையில், எதிர்கால தலைமைகளுக்கும் அதுவே படிப்பினையாய் அமைய கூடியதாகும். அரசியல் நாரீகம் மற்றும் மனிதநேயம் என்ற சொல்லாடலுக்குள் புகழ்ச்சிகளை நியாயப்படுத்தலாம். எனினும் தெளிவான பார்வையை உரிமைக்காக போராடும் தேசிய இனம் கொண்டிருக்கவில்லையாயின் அதன் எதிர்காலம் கடந்தகால தவறுகளின் தொடர்ச்சியிலேயே கட்டமைக்கக்கூடியதாக அமையும். இது தேசிய இனத்தின் விடுதலையை சிதைக்கக்கூடியதாகும். 

நல்லதொரு தலைமையினூடாகவே விடுதலை போராட்டங்கள் அத்தேசிய இனத்தின் நலனுக்குள் கட்டமைக்கக்கூடியதாக அமையும். தமிழ்தேசியத்தின் தந்தையாக புகழாரம் சூடப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் தமிழ்த்தேசியத்தின் தலைவராக என்றும் மதிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் தேசிய நலனை கட்டுறுதியுடன் பேணியமையாலேயே அத்தகைய புகழுரைகளை மக்கள் மனங்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த பின்னணியிலே மறைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கான இரங்கல் என்பது பொய்மைகளை கடந்த மெய்மைகளை அலசுவதாக அமைய வேண்டும். அதனூடாகவே தமிழ்த்தேசியத்திற்கான எதிர்காலத்தை சீராக கட்டமைக்கக்கூடியதாக அமையும்.

முதலாவது, எஸ்.ஜே.வி.செல்வநாயகமே இறுதியாக தமிழ் பேசும் மக்களுக்கான கூட்டிணைந்த தலைமையை வழங்குவதற்கான பொறிமுறைகளை வினைத்திறனாக செயற்படுத்தியிருந்தார். எனினும் செல்வநாயகத்தின் காலத்திலேயே அச்செயற்பாடு தொடர இயலாத நிலைக்கு நகர்ந்திருந்தது. 1949ஆம் ஆண்டு செல்வநாயகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறியமை, மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமை சட்டம் தொடர்பிலான முரண்பாடாகவே அமைகின்றது. தொடர்ச்சியாக மலையக மக்களுக்கான செல்வநாயகத்தின் அரசியல் பணி கேள்விக்குரியதாக அமைந்திருந்தாலும், 1972ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கத்தில் மலையக தமிழர்களின் அரசியலை முதன்மைப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரசை செல்வநாயகம் ஒன்றிணைத்திருந்தார். எனினும் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழீழ சுதந்திர நாட்டு கோரிக்கையை கொள்கையாக வடிவமைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக பரிணமிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியிருந்தது.  மேலும், 1981 வரையில் தமிழ் மொழியை பேசுபவர்களாக முஸ்லீம் சமுகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வடக்கு-கிழக்குக்குள் தமிழ் கட்சிகளே வழங்கி இருந்தது. தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து எழுச்சியடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திலும் ஆரம்ப கட்டங்களில் முஸ்லீம் சமுகத்தை சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். முஸ்லீம் சமுகத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கான ஆதரவை வழங்கி இருந்தது. முஸ்லீம் தலைவரான எம்.எச்.எம். தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை முஸ்லீம் பிரச்சினையாக கருதவில்லை. 1981ஆம் ஆண்டு அஷ;ரப் தலைமையிலான முஸ்லீம் காங்கிரஸின் உருவாக்கமே முஸ்லீம்களுக்கான தனியானதொரு அரசியல் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் முஸ்லீம் தமிழர்களிலிருந்து வேறுபட்ட சமுகமாகவே செயற்பட்டு வருகின்றனர். இரா.சம்பந்தன் முஸ்லீம்களுடனான ஐக்கியத்திற்கான முயற்சியை 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் வெளிப்படுத்தியிருந்தார். சம்பந்தன் தனது உயர்ந்தபட்ச விட்டுக்கொடுப்பு எனும் கொள்கையில் 2012ஆம் கிழக்கு மாகாண சபையை முஸ்லீம் காங்கிரஸிற்கு தாரைவார்த்து கொடுத்திருந்தார். 2012 ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இரண்டாவது உயர்ந்தபட்ச ஆசனங்களை (11) பெற்றிருந்தது. இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மூன்றாவது நிலையில் 7 ஆசனங்களை பெற்றிருந்தது. ஆட்சியதிகாரத்திற்கு 19 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸிம் இணைந்து செயற்பட்டனர். எவ்வித ஒப்பந்தங்களுக்கும் செய்யாது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முதலிரண்டு வருடங்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லீம் காங்கிரஸிற்கு கூட்டமைப்பு வழங்கியிருந்தது. எனினும் முஸ்லீம் காங்கிரஸ் முதல் அரை பருவம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனும், இறுதி அரை பருவம் இலங்கை சுதந்திர கட்சி கூட்டணியுடனும் சேர்ந்து ஆட்சியமைத்து முதலமைச்சர் பதவியை தக்கவைத்தது. முஸ்லீம்களுடன் ஐக்கியத்தை வெளிப்படுத்த முயன்ற சம்பந்தன் முஸ்லீம் காங்கிரஸால் ஏமாற்றப்பட்ட நிலையே உருவாகியது. தற்போது முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், 'சம்பந்;தன் அனைத்து தமிழ் பேசும் மக்களின் தளபதியாக செயற்பட்டார்' எனும் இரங்கல் உரையில் சம்பந்தனின் முயற்சியை தாங்கள் தோற்கடித்தை மறக்க முயலுகின்றார்.

இரண்டாவது, தலைமையானது ஒருங்கிணைப்பினூடாக தனது பலத்தை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும். தமிழ் தேசத்தின் திரட்சியின் தேவை கருதி கடந்த காலங்களின் தமிழ் தேசிய தலைமைகள் பல விட்டுக்கொடுப்புகளுடன் ஒருங்கிணைப்பை உருவாக்கியிருந்தன. தமிழரசுக்கட்சியின் ஸ்தபாக தலைவர் செல்வநாயகம் மக்கள் செல்வாக்கில் உயர்வாக இருந்த காலப்பகுதியிலேயே, தனது போட்டியாளர்களிடையே ஒருங்கிணைவை உருவாக்கும் நோக்கில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டிருந்தார். அதனூடாகவே தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஒன்றிணைந்து 1972ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கம் பெற்றது. அன்றைய காலப்பகுதியில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலம் பிரதான அரசியல் போட்டியாளர்களாக இருந்தார்கள். செல்வநாயகம் தமிழர்களின் ஐக்கியத்தின் தேவையை வலியுறுத்தி ஜி.ஜி.பொன்னம்பலத்தை வீடு தேடி சென்று சந்தித்து ஐக்கியத்தை உருவாக்க ஆதாரமாக செயற்பட்டிருந்தார். அவ்வாறானதொரு பிரதிபலிப்பே 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் காணப்பட்டது. அரசியல் கட்சிகளாக பரிணமித்த போராட்ட இயக்கங்கள், அரச இயந்திரத்துடன் இணைந்து செயலாற்றிய தமிழர் விரோத போக்குகளை தமிழீழ விடுதலைப்புலிகள் கடுமையாக எதிர்த்திருந்தனர். எனினும் 2001ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் தமிழ் மக்களின் ஐக்கியம் உணரப்பட்ட போது, கடந்த காலங்களில் துரோகிகளான அடையாளப்படுத்தியவர்களையும் மன்னித்து தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாகுவதை விடுதலைப்புலிகள் ஆதரித்திருந்தனர். இந்த பின்னணியிலேயே விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. எனினும் ஒன்றிணைத்து வழங்கப்பட்டதொரு கட்டமைப்பினையே இரா.சம்பந்தனால் தொடர்ச்சியாக பாதுகாத்திருக்க முடியவில்லை. தனிக்கட்சி மற்றும் தனிஆளுமை ஆதிக்கங்களால் 2010இலிருந்து பிளவுபட ஆரம்பித்து, 2023ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழமையாக சிதைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, தமிழரசுக்கட்சி தனியாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் குறிப்பாக கடந்த காலங்களில் ஆயுத போராட்ட வரலாற்றை பகிரும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரிலும் வேட்பு மனு தாக்கலை செய்திருந்தது. இது சம்பந்தனின் ஒருங்கிணைப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்தியது.

மூன்றாவது, சம்பந்தனின் தலைமைத்துவ ஒருங்கிணைப்பின் பலவீனம் தமிழரசுக்கட்சியின் பிரச்சினை நீதிமன்றத்தை நாடிய போது மேலும் விமர்சனத்தை உருவாக்கி இருந்தது. 75 வருட வரலாற்றை பகிரும் தமிழ் அரசுக்கட்சியின் தற்போதைய தலைவராக மாவை சேனாதிராசா காணப்படுகின்ற போதிலும், பெருந் தலைவராக இரா.சம்பந்தனே காணப்பட்டார். தமிழரசுக்கட்சியின் முடிவுகள் சம்பந்தனின் தீர்மானமாகவே வெளியில் வந்தது. எனினும் 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி எதிர்கொண்டிருந்த உட்கட்சி தேர்தலை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனால் கட்டுப்படுத்தியிருக்க முடியவில்லை. தேர்தலை மையப்படுத்தி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை அறிந்து, தலைமைத்துவ போட்டியாளர்களான சிறிதரன், சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனை அழைத்து சம்பந்தன் பேசிய போதிலும், தேர்தலற்ற தீர்க்கமான முடிவை எடுக்க முடியவில்லை. சம்பந்தனின் கோரிக்கையை மீறியே சுமந்திரன் மற்றும் சிறிதரன் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ போட்டியை எதிர்கொண்டிருந்தனர். போட்டியில் சிறிதரன் வெற்றி பெற்ற போதிலும், தேர்தல் நியாயமற்றது என நீதிமன்றம் வரை தமிழரசுக்கட்சியின் உட்கட்சி மோதல் பரிணமித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் பிரச்சனைகள், எதிர்காலத்தில் பிளவுபடுவதற்கான தனித்துவமான சாத்தியக்கூறுடன் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவரின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. தமிழரசுக்கட்சி கடந்த 75 வருடங்களில் உட்கட்சி தேர்தலுக்குள் சென்றிருக்கவில்லை. எனினும் கட்சி தலைமைத்துவ மாற்றங்களை ஜனநாயக தன்மையையே பேணியே வந்திருந்தது. கட்சி நேரடிப் போட்டியைத் தவிர்க்கும் நடைமுறையைக் கடைப்பிடித்து, அதற்குப் பதிலாக ஒருமனதாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தது. செல்வநாயகம் ஸ்தாhக தலைவராக தனது முதல் இரண்டு பதவிக் காலங்களுக்குப் பிறகு வன்னியசிங்கம், நாகநாதன், ராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் சுழற்சி முறையில் கட்சித் தலைவர்களாக பதவி வகித்தனர். 1973ஆம் ஆண்டு அன்றைய வட்டுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை ஆகியோர் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தீர்மானித்தனர். இந்த மோதல் கட்சியில் விரிசல் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது. செல்வா தலையிட்டு இராஜதுரையை போட்டியில் இருந்து விலகும்படி வற்புறுத்தினார். அது தேர்தலை தவிர்த்ததுடன், கட்சியின் ஒருங்கிணைப்பையும் பாதுகாத்திருந்தது. எனினும் சம்பந்தனின் மரணத்தின் போது தமிழரசுக்கட்சி நீதிமன்ற வழக்கில் இழுபறியிலிருப்பது, அவரது தலைமைத்துவத்தையே கேள்விக்குட்படுத்துகின்றது.

எனவே, சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் வழங்கிய தலைமைப்பகுதியை தோல்வியுடனேயே நிறைவு செய்துள்ளார் என்பதே யதார்த்தமான புரிதலாகும். சம்பந்தனால் தமிழர்களின் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டவர்களாலேயே அவருக்கான ஓய்வு நிர்ப்பந்திக்கப்பட்ட வரலாறும் பதியவாகியது. குறிப்பாக, இன்று சம்பந்தனின் மரணத்தை வைத்து தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட போவதாக போலி அரசியல் செய்ய முற்படும் எம்.ஏ.சுமந்திரனே, சம்பந்தனின் மூப்பை காரணங்காட்டி அவருடைய ஓய்வையும் வலியுறுத்தியிருந்தார். ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பத்தின் தொடர்ச்சியாக அமைய வேண்டுமாயின் முடிவு சரியாக பரிசீலிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் அரசியலில் சம்பந்தனின் ஐம்பதாண்டு அரசியல் வகிபாகம் தவிர்க்க முடியாதது. எனவே, அதனை கலப்படமின்றி புகழுரைக்குள் சுருக்காது அலசுவது தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானதாகும். ஜேர்மனிய தத்துவஞானி இம்மானுவேல் கான்ட்டின் ஆழமான அவதானிப்பான, 'மனிதகுலத்தின் வளைந்த மரத்திலிருந்து, நேரான காரியம் எப்பொழுதும் உருவாக்கப்படவில்லை' என்பது தமிழரசியலுக்கு சமகாலத்தில் பொருத்தமான கருத்தியலாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-