கலாநிதி ஆறு.திருமுருகன் மீதான பொய்ப்பிரச்சாரமும் அறமற்ற ஊடகத்தின் தமிழ்த்தேசிய சிதைப்பு! -ஐ.வி.மகாசேனன்-
ஜனநாயக சமுகத்தினை கட்டமைப்பதில் ஊடகம் பெறுமதியானதொரு பகுதியாக அமைகின்றது. கடந்த காலங்களில் ஈழத்து அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை முன்னிறுத்தி பல ஊடகவியலாளர்கள் செயற்பட்டுள்ளனர். அவர்களது குருதிகளிலேயே இன்று பல ஊடக நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றும் அக்குருதிகளின் பின்புலத்திலேயே இயங்குகின்றது. எனினும் சில ஊடக முதலாளிகள் தமது வியாபார நலன்களுக்குள், ஊடகவியலாளர்களின் குருதிகளில் வளர்ந்த ஊடக நிறுவனங்களை சிதைக்க முயலுகின்றனர். அவ்வாறானதொரு நிகழ்வாகவே, சிவபூமி எனும் அமைப்பினூடாக சமய மற்றும் சமுக அறப்பணிகளை மேற்கொண்டுவரும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு ஊடகமொன்று முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டு அமைகின்றது. கலாநிதி ஆறு. திருமுருகன் சிவபூமி அமைப்பின் தலைவர் எனும் பொதுமுகத்தை தாண்டி தமிழ் தேசியத்தின் நிறுவன உருவாக்கிகளில் தனியான அடையாளத்தை பெறுகின்றார். அவர் தொடர்பில் ஆதரமற்ற குற்றச்சாட்டை அச்சு ஊடகம் முதன்மைப்படுத்துவது, தமிழ் சமுகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ள நிறுவன உருவாக்கியின் தமிழ்த்தேசிய செயற்பாட்டிற்கு பெருந்தடையாக அமையக்கூடியதாகும். இக்கட்டுரை ஊடக அறமற்ற செயற்பாடு ஏற்படுத்தும் தாக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூலை-04அன்று யாழ்ப்பாணத்தின் அச்சு ஊடகமொன்று, 'மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு! ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்து மூடல்! வடக்கு ஆளுநர் பணிப்புரை!'என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தியில், 'சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு. திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நடாத்தப்பட்டுவரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும் இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது' என மேலும் குறிப்பிட்டிருந்தது. இது பொதுப்பரப்பில் பெரும் சலனத்தை உருவாக்கியிருந்தது. இச்செய்தியை மறுத்திருந்த தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கம், 'தெல்லிப்பளை மகளிர் இல்லத்தை மூடுமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு விடுத்துள்ளதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது. குறித்த மகளிர் இல்லம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது' என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. தெல்லிப்பளை மகளிர் இல்ல பழைய மாணவிகள் ஆளுநரை சந்தித்த போது, 'மகளிர் இல்லத்தை மூடுமாறு நான் உத்தரவிடவில்லை' என ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு தனது விசாரணை அறிக்கையில், 'தெல்லிப்பளை மகளிர் இல்லத்தில் முறைகேடுகள் எதுவும் இல்லை' என தெரியப்படுத்தியுள்ளது.
குறித்த அச்சு ஊடகம் தனிப்பட்ட பகைமையின் வெளிப்பாடாகவே பழிவாங்கும் நோக்குடன் தவறான செய்தியை சித்தரித்துள்ளதாக கலாநிதி ஆறு திருமுருகன் நஷ;டஈடு கோரியுள்ளார். தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறும் அத்துடன் 300மில்லியனை நஷ;டஈடாக செலுத்த வேண்டும் என குறித்த அச்சு ஊடக பணிப்பாளர்களுக்கு சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஊடாக ஆறு. திருமுருகன் கேள்வி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், 'மேற்படி முகவரியில் தங்கள் நிறுவனம் அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர் தலைவராக கடமையாற்றும் சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும் குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்பதனாலும் அவர் மீதுள்ள குரோதத்தின் காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர் கருதுகின்றார்' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளின் தொகுப்பில் கலாநிதி ஆறு. திருமுருகன் மீது குறித்த அச்சு ஊடகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தனிநபர் தாக்குலாகவும், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ள போலிச்செய்தி எனும் சந்தேகங்களையே உறுதி செய்கின்றது. இதனை தெளிவாக விளங்கி கொள்ளுதல் அவசியமாகின்றது.
முதலாவது, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் தலைவராக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி. அனந்தசயனன் அவர்களே செயற்படுகின்றார். துர்க்காபுரம் மகளிர் இல்லம் 1988ஆம் ஆண்டு அப்போதைய தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத் தலைவர் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஆலய நிர்வாக சபைத்தலைவராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் மகளிர் இல்லத்திற்கு ஆண் பிரம்மச்சாரியான தான் அதிபாராக இருப்பது பொருத்தமற்றதென முடிவெடுத்திருந்தார். இந்த பின்னணியிலேயே பிறிதொரு முன்னாள் அதிபர் மகளிர் இல்ல தலைவராக நியமித்து, அவர்களூடு மகளிர் இல்ல பணிகளை முன்னெடுத்தார். ஆறு.திருமுருகன் அவர்கள் தலைமையில் இயங்காத ஒரு மகளிர் இல்ல செயற்பாடு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதன் தலைப்பில் ஆறு. திருமுருகன் அவர்களது பெயரை பிரதானமான குறித்த செய்தியில் வலிந்து இடப்பட்டுள்ளது. இது தனிநபர் தாக்குதலை அப்பட்டமாக உறுதி செய்கின்றது.
இரண்டாவது, குறித்த செய்தியில் இரு இல்லங்கள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது' என செய்தியிடப்பட்டிருந்தது. மேலதிக செய்தியிலும், 'மற்றைய சிறுவர் இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது என்றவாறே தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியின் எப்பகுதியிலும் மற்றைய இல்லத்தின் பெயர் முகவரி ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. துர்க்காபுரம் இல்லம் தொடர்பில் குற்றச்சாட்டை முழுமைப்படுத்துகின்ற போதிலும், செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறுவர் இல்லம் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வழங்கியிருக்கவில்லை. இது திட்டமிட்டு கலாநிதி ஆறு. திருமுருகனை மாத்திரம் இலக்கு வைத்து செய்தி புணையப்பட்டுள்ளதையே ஆதாரப்படுத்துகிறது.
மூன்றாவது, குறித்த அச்சு ஊடகத்தின் நிலப்பரப்பு குறித்த காணியாளர்களால் கலாநிதி ஆறு. திருமுருகனுடைய சிவபூமி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில், குறித்த அச்சு ஊடகம் இயங்கும் பலகோடி பெறுமதியான வீடு மற்றும் காணி குறித்த அச்சு ஊடக முதலாளியால் வாடகை முறையில் பெறப்பட்டிருந்தது. போர் முடிவுற்றதன் பின்னர் காணி உரிமையாளர்கள் அக்காணியை மீளக்கோரிய போது அவர்களிடம் பாரப்படுத்தியிருக்கவில்லை. இந்த பின்னணியில் அக்குடும்பத்தினர் விரயமாக போகக்கூடிய சொத்து, சமுக சேவைக்கு போகட்டும் என்ற நோக்கில் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். எனவே குறித்த காணியை தமது சிவபூமி அறக்கட்டளையின் அறப்பணி தேவைக்காக பெற்றுக்கொள்வதற்கான முனைப்பை சிவபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையிலும் சிவபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பலகோடி மதிப்புள்ள காணியொன்றை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையுடன் இணைந்து கருவள சிகிச்சை நிலையத்திற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே சிவபூமி அறக்கட்டளை தலைவர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தன்னிடமுள்ள ஊடக பலத்தை பயன்படுத்தி பொய்யான செய்தியை உருவாக்கியுள்ளார்.
இத்தகைய பொய்யாக கட்டமைக்கப்பட்டுள்ள செய்தியை ஊடக அறத்துக்கு புறம்பான செயலெனும் கண்டனங்களுடன் கடந்துவிட முடியாது. பொய் செய்தியாக்கம் ஆறு. திருமுருகன் எனும் தனி மனிதனை மாத்திரம் களங்கப்படுத்துவது இல்லை. கலாநிதி ஆறு. திருமுருகனின் செயற்பாடு போருக்கு பின்னரான தமிழ்த்தேசிய அரசியலை மெல்ல கட்டுறுதிப்படுத்தும் ஒரு பகுதியை நிரப்பீடு செய்கிறது. ஊடகங்களின் அறமின்மை மற்றும் சமுக பொறுப்பற்ற செயல் தமிழ் சமுகத்தை பாதிக்கும் தன்மையை ஆழமாக விளக்க வேண்டிய அவசியப்பாடு காணப்படுகின்றது.
முதலாவது, சமகாலத்தில் தமிழ் பரப்பில் நம்பிக்கையான சமூக தலைவர்கள் பற்றாக்குறையாகவே உள்ளனர். தமிழ் மக்கள் அரசியல்ரீதியாக நீண்ட ஏமாற்றங்களுடன் தொடர்வதனால், சுயநலமற்று செயற்பட முன்வரும் சமூக தலைவர்களையும் சந்தேக மனநிலையுடனேயே தமிழ் மக்கள் அணுகும் நிலை காணப்படுகின்றது. எனினும் கலாநிதி ஆறு. திருமுருகன் போன்ற ஒரு சிலர் மீதே தாயகமும் புலமும் ஒருங்கிணைந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றது. சிவபூமி அறக்கட்டளையூடாக 18 ஆண்டுகளை கடந்து மேற்கொள்ளும் அறப்பணி காரணமாகவே தொடர்ந்து கொடையாளிகளும் நம்பிக்கையுடன் இணைந்து பயணிக்கின்றார்கள். ஈழத் தமிழ் பரப்பில் குறிப்பிட்ட நாளை ஒதுக்கி யாரும் வேலையை முடிப்பதில்லை. ஏதோ காரணங்களுக்குள் இழுபறிக்குள்ளேயே நகரக்கூடியதாக காணப்படும். எனினும் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் ஆரம்பிக்கும் சமுக பணிகளில் வேலைகள் ஆரம்பிக்கும் தினத்திலேயே மக்களிற்கு கையளிக்கும் தினத்தை முன்னறிவிப்பதுடன் குறித்த தினத்தில் அதனை கையளிக்கும் வழக்கத்தை மரபாக கொண்டுள்ளார். இம்மரபுக்கு பின்னால் அவர் மீது சமுகம் கொண்டுள்ள நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் கலாநிதி ஆறு.திருமுருகனின் செயற்பாடுமே காரணமாகின்றது. இவ்வாறாக சமுக நம்பிக்கையை பெற்றவர்கள் மீது கண்மூடித்தனமாக களங்கத்தை விதைக்க முனைவது தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அவநம்பிக்கையுடனும் யாவரையும் சந்தேகத்துடன் மாத்திரமே அணுகும் நிலையை தோற்றுவிக்க கூடியதாகும். இது தமிழ் மக்களின் கூட்டுறவு வாழ்க்கையை பாதிப்படைய செய்யும்.
இரண்டாவது, கலாநிதி ஆறு. திருமுருகனின் சமுகப்பணி தமிழ்த்தேசிய அரசியலை செப்பனிடுவதாகும். சிவபூமி அறக்கட்டளையின் செயற்பாடுகள் தனித்து வடக்கிலோ, கிழக்கிலோ மட்டுப்படுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் வாழும் இலங்கையின் சகல பாகங்களிலும் சிவபூமி அறக்கட்டளையின் சமுக பணி விரைந்து காணப்படுகின்றது. அத்துடன் சிவபூமி அறக்கட்டளையின் சமயப்பணிகளும் தமிழ் பண்பாட்டை மரபை பாதுகாப்பதாகவே அமையக்கூடியதாகும். வடக்கு கிழக்கில் கருங்கற்களில் பதிகங்கள் பொதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள திருவாசக அரண்மனை, கந்தபுராண அரண்மனை மற்றும் திருமந்திர அரண்மனை என்பன தமிழை தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் கூறாகவே அமைகின்றது. அத்துடன் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளில் முதியோர் இல்லங்களும், மனநல அபிவிருத்தி பாடசாலைகளும், இலவச மருத்துவ இல்லங்களும், தங்கும் மடங்களும், அறநெறி பாடசாலைகளும் உருவாக்கி பசித்தோருக்கு உணவளிக்கும் பணியையும் சிவபூமி ஒருங்கே நெறிப்படுத்தி வருகின்றது. சமயத்தின் பெயரால் மெல்ல தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கும் வியூகத்தையே சிவபூமி கட்டமைத்து வருகின்றது. இதனால் தமிழ்த்தேசிய எதிர் நிலை செயற்பாட்டாளர்களால் பல நெருக்கடிகளையும் பல செயற்பாடுகளில் கலாநிதி ஆறு. திருமுருகன் தனித்து எதிர்கொண்டே பயணித்து வருகின்றார். குறிப்பாக யாழ்ப்பாண நுழைவாயிலில் நாவற்குழியில் உருவாக்கப்பட்டுள்ள நூதணசாலையில் ஈழத்தின் தமிழ் வேந்தர்கள் அனைவருக்கும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சிலை திறப்பும் பேராசிரியர்களை கொண்டே நடாத்தப்பட்டிருந்தது. இதனை மையப்படுத்தி பலதடவை இலங்கை இராணுவ புலனாய்வாளர்களின் நெருக்குவாரத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். தமிழ்த்தேசியத்தை மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் தமிழ் அரசியல்வாதிகளை தாண்டி, அமைதியான முறையில் கலாநிதி ஆறு. திருமுருகன் தமிழ்த்தேசிய இருப்பை பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மூன்றாவது, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை விட்டு வெளியேறியதற்கு பின்னால் மலையக மக்களின் பிரச்சினைகளை ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான காங்கிரஸ் சீராக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டே ஆகும். அதன் பின்னர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் தமிழரசுக்கட்சியினர் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகியிருந்தார்கள் என்பதிலும் விமர்சனமே காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே மலையக தமிழ் மக்கள் தனித்து தேசியத்தை உரையாடவும் ஆரம்பித்துள்ளனர். எனினும் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் அறப்பணி மலையகத் தமிழர்களை வடக்கு-கிழக்கு தமிழர்களுடன் ஒன்றிணைத்து அணுகுவதாகவே அமைந்துள்ளது. கண்டி ஹலகா பிரதேசத்தில் சிவபூமி அறநெறி பாடசாலை ஒழுங்கமைத்துள்ளதுடன் அபயம் இலவச மருத்துவ சேவைகளும் இடம்பெறுகின்றது. இது விரைவில் மலையகத்தின் ஏனைய இடங்களுக்கும் விஷ;தரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது. மேலும், கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களுடைய பிறந்தநாளில் வழங்கப்படும் இளம் ஆற்றலாளர் விருதின் முதலாம் ஆண்டு விருதை மலையக தமிழ் விரிவுரையாளர் ஒருவரே பெற்றுக்கொண்டிருந்தார். வடக்கு-கிழக்கு தமிழர்களுடன் மலையக தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் இதயசுத்தியுடன் மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறான சூழலில் மலையகத்தை முன்வைத்து கலாநிதி ஆறு. திருமுருகன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பது மலையக-வடக்கு-கிழக்கு தமிழர் உறவையே பாதிக்கக்கூடியதாகும்.
ஆதாரமற்ற வகையில் செய்தியை வெளியிட்டிருந்த அச்சு ஊடகம் மற்றும் அதன் நிறுவன முதலாளிக்கு பாரிய சமுக பொறுப்பு காணப்படுகின்றது. ஊடக நிறுவன முதலாளி என்பதனை கடந்து கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிதித்துவத்தையும் வழங்கியுள்ளார். எனவே சமூகத்தை முரண்பாட்டுக்குள் நகர்த்தாது சமுக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய சமுக பொறுப்பும் குறித்த ஊடக நிறுவன முதலாளிக்கு காணப்படுகின்றது. எனினும் அக்குறித்த ஊடக நிறுவன முதலாளி தனது தனிப்பட்ட பகைமையை பழிதீர்ப்பதற்காக ஊடகத்தை பயன்படுத்தி பொய்யான செய்தியை கட்டமைத்தமை அருவருக்கத்தக்க செயலாகும். இது ஊடக முதலாளியின் கடந்த கால பின்புலங்களின் தொடர்ச்சியான அருவருக்கத்தக்க வாழ்க்கையின் நீடிப்பாகவே அமைகின்றது. குறிப்பாக சப்ரா எனும் நிதி நிறுவன மோசடி, பினாமி பெயரிலான சொத்து குவிப்பு என அழுக்கான பக்கங்கள் நீண்டு கொண்டே செல்கின்றது. அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கிய காலப்பகுதியில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் தனது மகளின் பிறந்தநாள் நிகழ்விற்கு ஜனாதிபதியை அழைத்து மகிழ்ந்திருந்தார்கள். இத்தகைய சமுக பொறுப்பற்ற பக்கங்களே கடந்த காலங்களிலும் குறித்த ஊடக நிறுவன முதலாளியின் பதிவாக அமைகின்றது. இத்தகையவர்களிடமிருந்து அறத்தையும் சமுக பொறுப்பையும் எதிர்பார்க்க இயலாது என்பதே நிதர்சனமாகும்.
எனவே, ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய ஊடக ஆற்றலை தமது சுயநலன்களுக்காக மலினப்படுத்தும் ஊடகங்களையும், ஊடக முதலாளிகளையும் மக்கள் புறமொதுக்குவதே எதிர்காலங்களில் இவ்வாறான செயல்களை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறையாகும். கடந்த காலங்களில் மக்கள் திரட்சியை குழப்ப ஏற்படுத்தி முயற்சிகளை தொடர்ந்தே எள்ளெண்ணெய் பத்திரிகை, மற்றும் பறவைகளின் பெயரால் ஊடக முதலாளி மக்களால் எள்ளி நகையாடப்பட்டிருந்தார். மேலும், இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். எனினும் தொடர்ச்சியாக மக்களின் எண்ணங்களை புறந்தள்ளி, தமது எண்ணங்களை மக்களிடம் விதைக்க முயலுவார்களாயில் எதிர்காலத்தில் குறித்த ஊடகம் முழமையாக செயலிழந்து செல்லக்கூடிய நிலையே காணப்படுகின்றது. தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது அவசியமாகும். தகுந்த ஆதாரங்களுடன் நியாயமான முறையில் தவறுகளை சுட்டிக்காட்டுவதே ஊடகத்தின் சிறந்த ஜனநாயக பணியாகும். மாறாக சமுக பொறுப்பற்ற வகையிலும், சமுக தலைவர்கள் மீது களங்கத்தை உருவாக்குவதனூடாக அவர்களது சமுக பணியை முடக்கும் வகையில் பொய்யான செய்திகளை கட்டமைப்பது தமிழர் தேசம் தொடர்பான கரிசனையற்ற நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.
Comments
Post a Comment