பண்பாட்டு தேசியத்தின் சிதைப்பு தமிழ்த்தேசியத்தை கேள்விக்குட்படுத்தக்கூடியது! -ஐ.வி.மகாசேனன்-
தேசியம் அரசியல் விவதாங்களாகவே தமிழ் அரசியல் பரப்பில் அதிகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேசியம் பெயர்ப்பலகைகளாகவே அரசியல் கட்சிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. மாறாக தமிழ்த்தேசியத்தின் உள்ளடக்கங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழர் தயாகக்கோட்பாட்டின் இருப்பு, தமிழர் பண்பாட்டு கூறுகளின் இருப்பு மற்றும் அனைத்தையும் ஒன்றிணைத்த தமிழ் மக்களின் திரட்சி என்பன தமிழ்த்தேசிய பரப்பில் கேள்விக்குறியாகவே அமைகின்றது. தமிழர் தாயக கோட்பாட்டின் சிதைவு மற்றும் தமிழ் மக்களின் திரட்சியின்மை தொடர்பிலே ஒப்பீட்டடிப்படையில் வாதப்பிரதிவாதங்கள் எழுப்பட்டுள்ளது. எனினும் தமிழர் பண்பாட்டு கூறுகளின் இருப்பு தொடர்பில் ஒப்பீட்டளவில் பாரிய விவாதங்கள் உருவாக்கப்படுவதில்லை. இதன் விளைவாய் தமிழ்த்தேசியத்தின் ஓர் பகுதியான பண்பாட்டு கூறுகளின் இருப்பு எதிரிகளால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. தமிழர்களும் தெளிவின்றி பண்பாட்டு அழிப்பில் துணைபோகும் போக்கு காணப்படுகிறது. இக்கட்டுரை தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்த பண்பாட்டு கூறுகளின் இருப்பின் தேவையை வலியுறுத்துவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய பரப்பில் பண்பாட்டு சிதைவுகள் தாரளமாக அரச இயந்திரத்தால் திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தமிழ் மக்களும் பண்பாட்டு சிதைவின் விளைவுகளை புரியாதவர்களாய் ஏற்றுக்கொண்டு செல்கிறார்கள். ஈழத்தமிழ் பரப்பில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டங்களின் வீச்சின் குறைவு சிறந்த உதாரணமாகும். முன்னைய காலங்களில் அரச விடுமுறையாக வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. நவாலியூர் சோமசுந்தர புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..' எனத்தொடங்கும் சிறுவர் பாடல் ஆடிப்பிறப்பு தமிழர் பண்பாட்டு விழுமியங்களுடன் கொண்டாடிய சிறப்பை வெளிப்படுத்துகிறது. எனினும் இன்றைய தலைமுறையினரிடம் ஆடிப்பிறப்பு பற்றிய போதிய விழிப்பு காணப்படுவதில்லை. இவ்வாறு பல பண்பாட்டு விழுமியங்களை தமிழ் சமுகம் இழந்து வருகின்றது. இது தொடர்பாக தமிழ் அரசியல் தரப்பில் போதிய ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நெறிப்படுத்தப்படுவதில்லை. ஒரு சில தன்னார்வ செயற்பாட்டாளர்களே சமுக இயக்கமாகவும், தனியன்களாகவும் தமிழ் பண்பாட்டை பேணும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அரசியல் தேசியத்திற்கு அடிப்படையாய் பண்பாட்டு தேசியமே அமைகின்றது. இலங்கை சுதந்திர வரலாறும் அதன்வழியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் காலனித்துவ கால தேசியவாத இயக்கங்கள் அடிப்படையில் பண்பாட்டை மையப்படுத்தியே பரிணமித்திருந்தது. பின்னாளிலேயே இலங்கை தேசியவாதமாகவும், இலங்கை தேசியவாதத்துக்குள் காணப்பட்ட முரண்பாட்டால் உபதேசியவாதங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை காலனித்துவ வரலாற்றில் உருவாக்கப்பட்ட மது ஒழிப்பு இயக்கம், மத மறுமலர்ச்சி இயக்கம் என்பன பண்பாட்டு தேசியவாத அடிப்படையிலானதாகும். இதன்வழியேயே இலங்கை தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டது. எனினும் சுதந்திர இலங்கையில் அரச ஆதரவுடனான சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசியவாதம் பண்பாட்டு தேசியவாதத்தை பொருட்படுத்தாது அடிப்படையிலேயே அரசியல் தேசியவாதமாகவே அடையாளப்படுத்தப்பட்டது. தமிழ்த்தேசியவாதத்தை நிறுவனமயப்படுத்தி ஒழுங்குபடுத்திய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அரசியல் தலைவராக தமிழ்த்தேசியவாதத்தை அரசியல் தேசியவாதமாகவே வடிவமைத்துள்ளார். அடிப்படையில் தமிழ் மக்களின் பண்பாடு சிதைக்கப்பட்ட போதே தமிழ்த்தேசியவாதம் எழுச்சியுற்றது. குறிப்பாக 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா போன்ற குடியேற்ற திட்டங்களூடாக தமிழ் மக்களின் பண்பாட்டு நிலதொடர்ச்சி அழிப்பு; 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தினூடாக தமிழ் மொழி புறக்கணிப்பு; 1970ஆம் ஆண்டு கல்வி தரப்படுத்தல் சட்டம் தமிழ் மக்களின் கல்வி பாரம்பரியம் சிதைக்கப்பட்டது. இவ்வாறான பண்பாட்டு சிதைவுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பையே, செல்வநாயகம் தமிழ்த்தேசியமாக நிறுவனமயப்படுத்தினார். எனினும் தமிழ்த்தேசியத்தினை நேரடியாக அரசியல் தேசியமாக நிறுவனமயப்படுத்தினார்களேயன்றி, பண்பாட்டு தேசியம் தொடர்பில் போதிய கவனம் செலுத்தியிருக்கவில்லை.
ஒரு சுதந்திர தேசிய அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களாகவே 'அரசியல் தேசியவாதம்' புலமைத்துவ தளத்தில் வரையறுக்கப்படுகிறது. செல்வநாயகம் தேசிய அரசை நிறுவும் முனைப்பில் தமிழ்த்தேசியவாதத்தை அடையாளப்படுத்தாத போதிலும், அரசுக்குள் ஓர் நிறுவன அலகாக அரசியல் அதிகாரங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே தமிழ்த்தேசிய உரையாடல் காணப்பட்டது. தமிழ் அரசியல் பரப்பின் மூத்த ஆய்வாரள் மு.திருநாவுக்கரசு அவர்களும் தமிழ் அரசியல் செயற்பாட்டில் பண்பாட்டு கரிசணையின் வறுமையை சுட்டிக்காட்டியுள்ளார். 'ஆயுதப் போராட்ட தலைமைத்துவம் அல்லாத பொன்னம்பலம் காலம், செல்வநாயகம் காலம், அமிர்தலிங்கம் காலம் என்ற இந்த மூன்று காலங்களையும் எடுத்துக் கொண்டால் தலைமைத்துவ மட்டங்களில் மேற்படி கலை இலக்கியபண்பாடு பற்றிய சிந்தனைகள் குறிப்பிடக்கூடிய அளவிற்கு காணப்படவில்லை. அரசியலைப் பற்றி இவர்கள் பேசிய அளவிற்குப் பொருத்தமாக கலை இலக்கிய பண்பாட்டுப் பணிகள் பற்றி இவர்கள் சிந்திக்கவோ, செயற்படவோ இல்லை.' எனக்குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய வரலாற்றில் தமிழ்த்தேசியவாதத்தை வலிமைப்படுத்தி செயற்பட்ட இயக்க வரலாற்றில் பண்பாட்டு தேசியவாதம் பகுதியளவில் கரிசணை செலுத்தப்பட்டது. குறிப்பாக போராளிகள் கலை இலக்கிய படைப்புக்களிலும், பண்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டனர். உணவுப் பழக்க வழக்கம், விளையாட்டு என்பன தொடர்பான உணர்வும் கூடவே இத்துடன் இணைந்திருந்தது. விடுதலைப் புலிகளுக்கு அப்பால் குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இக்கால கட்டத்தில் அறிவியல் கலை இலக்கியம் பண்பாடு சார்ந்த விடயங்களில் உணர்வுபூர்வமான பங்களிப்புக்களை ஆற்றினர். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட மௌனிப்புக்கு பின்னர் மீள அரசியல் கட்சிகளின் நெறியாள்கைக்குள் தமிழ்த்தேசிய அரசியலில் பண்பாட்டு தேசியம் கவனமற்று போயுள்ளது.
வரலாற்றில், புத்திஜீவிகள் மத்தியில் தோன்றிய பண்பாட்டு தேசியவாத இயக்கங்கள் பொதுவாக அரசியல் தேசியவாதத்திற்கு முந்தியவை அல்லது அதனுடன் இணைந்து தேசிய மொழி, இலக்கியம் மற்றும் கலைகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சுய உதவியை ஊக்குவிக்கும் இன-வரலாற்று புத்துயிர் வடிவத்தை எடுக்கின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான தமிழரசியல் பரப்பில் பண்பாட்டு தேசியத்தின் விழுமியங்கள் சிதைக்கப்பட்ட நிலையில், அதன் விளைவுகள் எதிரான தாக்கங்களையே உருவாக்கி உள்ளது. தமிழ் சமுகத்திடையே பொருளாதார தேவைகளை மையப்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகள் தேசிய அரசியலுக்கு வெளியே செல்கிறது. கந்தபுராண கலாச்சார தேசம் போதை கலாச்சார தேசமாக மாறி வருகிறது. தமிழர் மரபுவழி நிலப்பண்பாட்டை புரிந்துகொள்ளாதவர்களாய் இளையோர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயருகின்றார்கள். தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் அரசியல் தலைமைகள் முழுமையாக அரசியல் அளவுகளுடனேயே மட்டுப்பட்டுள்ளார்கள். சிவில் சமுக மட்டத்திலும் தமிழ் மக்கள் போதிய கூட்டிணைவு இன்மையால் பண்பாட்டு தேசியவாதம் முழுமையாக தவிர்க்கப்படும் நிலையே காணப்படுகின்றது. பகுதியளவில் ஒரு சில சிவில் சமுக இயக்கங்களும், தனியன்களும் பண்பாட்டை மையப்படுத்தி செயற்படுகின்ற போதிலும், அதன் பண்பாட்டு தேசியம் பற்றிய பெறுமதி தமிழ் பரப்பில் போதிய வெளிச்சத்தை பெறவில்லை. பண்பாட்டு தேசியவாதம் என்பது ஒரு பினாமி அரசியலாகவும், சமூக ரீதியாக பிற்போக்குத்தனமாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு மறைந்துபோகும் ஒரு நிலையற்ற நிகழ்வாகவும் அடிக்கடி நிராகரிக்கப்படுவதனால் அது தொடர்பான ஆழ்ந்த பார்வைகள் புறக்கணிக்கப்படுகிறது. இது பண்பாட்டு தேசியவாதத்தை முன்னிறுத்திய இயக்கங்களின் இலக்குகள் மற்றும் முக்கியத்துவத்தை தவறாகப் பிரதிபலிக்கிறது.
இந்த பின்னணியிலேயே தமிழ் பரப்பில் தனியன்களாக செயற்படும் ஒரு சில பண்பாட்டு தேசியவாதிகளும் உரிய அங்கீகாரத்தை பெறுவதில்லை. எனினும் தமிழ்த்தேசியவாதத்தை முடக்க முற்படும் எதிரிகள், அரசியல் தேசியத்தின் ஆதாரம் பண்பாட்டு தேசியம் என்பதை உணர்ந்து, பண்பாட்டு தேசியவாதிகளை முடக்கும் செயல்களை நுணுக்கமாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஒன்று, அண்மையில் யாழ்ப்பாணத்தில் விவாத பொருளை உருவாக்கியிருந்த சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் மீதான குற்றச்சாட்டும் அது தொடர்பான வாதமும் தமிழர் பண்பாட்டை கேள்விக்குட்படுத்தும் செயலாகவே அமைகின்றது. இவை தமிழ் தேசியவாதத்தையும் கேள்விக்குட்படுத்தக்கூடியது. கலாநிதி ஆறு. திருமுருகன் தமிழ் அரசியல் கட்சிகளை போன்று தேசிய பெயர்ப்பலகையை சூடிக்கொள்ளவில்லை. எனினும் சிவபூமி அறக்கட்டளையூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தமிழர் பண்பாட்டின் அரணாகவே அமைகின்றது. நாவற்குழி திருவாசக அரண்மனை மற்றும் கொக்கட்டிச்சோலை திருமந்திர அரண்மனை என்பன சைவ சமய இறை பாடல்களாக அமைகின்ற போதிலும், அடிப்படையில் இரண்டும் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் இலக்கியங்களாகும். திருவாசகம் மதங்களை மொழிகளை கடந்து பயணிக்கும் தமிழ் இலக்கியம் ஆகும். கீழைத்தேய காலனித்துவ மேலைத்தேய அறிஞர் ஜி.யூ.போப் தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். அவ்வாறே சிவபூமி அறக்கட்டளையால் நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கந்தபுராண ஆச்சிரமம், நாவற்குழியில் அமைந்துள்ள அரும்பொருட் காட்சியகம், முதியோர் இல்லங்கள் மற்றும் மனவள அபிவிருத்தி பாடசாலை என தமிழர் பண்பாடடியலை பேணும் நிறுவன பட்டியல் நீண்டது. கலாநிதி ஆறு. திருமுருகன் சைவ சமய அடையாளத்தை சூடியுள்ள போதிலும் தமிழர் பண்பாட்டு தேசியவாதியாக செயற்பட்டு வருகின்றார். அவரது செயற்பாட்டை தடைசெய்யும் வகையில் அவர் மீது அவதூறை பரப்பி இடையூறு விளைவிப்பது, தமிழ்த்தேசத்தில் அரிதாக காணப்படும் பண்பாட்டு தேசியவாதிகளை குழப்புவதாகவே அமையக்கூடியதாகும். குற்றச்சாட்டுக்களை முன்வோப்போர் நேர்மையாகவும் நியாயமாகவும் செயற்படுவது அவசியமானதாகும்.
இரண்டு, யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலை மையப்படுத்தி வைத்தியர் அர்ச்சுனனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு வடக்கு-கிழக்கு வைத்திய துறையை முழுமையாக கலங்கப்படுத்துவதாக அமைகின்றது. தமிழர் பண்பாட்டில் வைத்தியத்துறைக்கு மகோன்னதமான முக்கியத்துவம் காணப்படுகின்றது. நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த யாழ்ப்பாணத் தமிழ் அரசர்களால் நிறுவப்பட்ட கோயில்களும் குளங்களும் அவர்களது சேவையை, பொதுப்பணியை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் அவர்களது மருத்துவ சேவைக்குச் சான்றாக அவர்களால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்த நாயன்மார்கட்டு சித்த வைத்தியசாலை சான்றாக விளங்குகின்றது. யாழ் இராச்சியம் நிலவிய காலத்தில் அரசர் ஆட்சியின் போது அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சிறப்பாக இயங்கி வந்த நாயன்மார்கட்டு வைத்தியசாலை பண்டைய இலங்கைத் தமிழரின் பண்பாட்டின், வளத்தின், ஆளுமையின், நாகரிகத்தின் சிறப்பின் வெளிப்பாடாக அமைகின்றது. வெளியுலகத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் அரசின் இருப்பையும் வளத்தையும் தெளிவுபடுத்தி நிற்கின்றது. ஆங்கிலேய தேசாதிபதி மனிங், சேர். பொன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் தந்தையார் போன்றோரும் அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை அங்கிருந்த ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. சுதந்திரத்திற்கு பின்னரான நவீன இலங்கையிலும் யாழ்ப்பாண வைத்திய பண்பாடு தமிழர் பண்பாட்டை பேணுவதாகவே அமைந்தது. போர்க்கால நெருக்கடிக்குள் வைத்தியசாலைகளையும் தம்மோடு கொண்டு நகர்ந்து நோயாளிகளின் உயிரை பாதுகாப்பதில் முழுவீச்சாக செயற்பட்ட தமிழ் வைத்தியர்கள் முழு இலங்கையிலும் இன்று நிரவி உள்ளார்கள். வைத்திய சேவையின் வியாபார போக்கு, ஊழல் மற்றும் இதர குற்றச்சாட்டுக்கள் முழுமையாக நிராகரிக்க கூடியது இல்லை. எனினும் வடக்கு-கிழக்கின் முழு வைத்தியத்துறையை மலினப்படுத்தும் வகையிலான குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அத்துடன் இதுவும் ஒருவகையிலான தமிழ் பண்பாட்டுக்கு எதிரான போர் உத்தியாக எதிரிகளால் பயன்படுத்தக்கூடியது. இதனை வினைத்திறனாக கையாள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
தமிழ் அரசியல் பரப்பில் கவனிக்கப்படாத பண்பாட்டு தேசியம், சர்வதேச அரசியல் பரப்பில் விடுதலைக்காக போரடிய பல தேசிய இனங்களின் விடுதலையில் ஆழமான செல்வாக்கை செலுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, கறுப்பின விடுதலை இயக்கத்தில் பண்பாட்டு தேசியவாதம் முக்கிய பங்கு வகித்தது. கறுப்பின மக்கள் தாங்கள் யார் என்பதில் பெருமிதம் கொள்வதற்கான ஒரு வழியாக இது அமைந்தது. 1970களின் சகாப்தத்தில், கறுப்பின ஆர்வலரான மார்கஸ் கார்வே, 'கருப்பு அழகாக இருக்கிறது' என்று பிரகடனப்படுத்திய போது, தன்னைப் பற்றிய பெருமை எண்ணம் இருந்தது. கறுப்பின மக்கள் தங்களுக்குள்ளேயே அழகைக் காண இது ஒரு வழியாக இருந்தது. நீண்ட காலமாக, அவர்களின் இயற்கை அம்சங்கள் தாழ்ந்தவை என்று கூறப்பட்டது. அது அவர்களுக்கு கறுப்பாக இருப்பதில் பெருமையாக இருந்தது. கறுப்பின மக்கள் வெள்ளையின ஆதிக்க சமூகத்திலிருந்து பிரிந்து தங்கள் தூய்மையான வடிவங்களில் தங்களை ஏற்றுக்கொள்வதில் இருந்து உண்மையான விடுதலை தொடங்கியது. இது பண்பாட்டு தேசியவாதத்தை இயக்கத்தின் செயற்பாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. பண்பாட்டு தேசியவாதமே கறுப்பின விடுதலைக்கான நடைமுறையாக இருந்தது.
எனவே, தமிழ் அரசியல் பரப்பு சிதைக்கப்படும் பண்பாட்டு தேசியத்தில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. அத்திவாரமின்றி எந்தவொரு கட்டிடத்தையும் நிலையாக கட்டியெழுப்ப முடியாது. அரசியல் தேசியவாத்தின் நிலைப்புக்கு பண்பாட்டு தேசியவதாத்தை உறுதிப்படுத்தல் அவசியமாகின்றது. ஓர் இனத்தை மற்றைய இனங்களிடமிருந்து வேறுபிரித்து காட்டும் தனித்துவமான வாழ்வியல் முறைமையே தேசியமாகும். தேசியத்தின் அடிப்படை வேர்களில் ஒன்றாகவே பண்பாடு அமைகின்றது. இதனாலேயே ஓர் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் பண்பாட்டை சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் இது தொடர்பில் தெளிவை பெறுதல் அவசியமாகும். தேசியம் என்பது அரசியல்வாதிகளிடமல்ல. அது மக்களிடம்தான் உள்ளது. மக்கள் விழிப்படைவதனூடாகவே தமிழ்த்தேசிய பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளையும் நெறிப்படுத்த இயலும். ஜுலை-17அன்று ஆடிப்பிறப்பு நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், 'தமிழ் மக்களின் பண்பாடு சிதைக்கப்பட்டு அதன் தனித்துவத்தை இழந்துகொண்டிருக்கின்றது. பண்பாட்டை உள்வாங்காமல் தேசியம் முழுமைபெறாது. அது உள்ளீடற்ற கொழுக்கட்டை போன்றது' எனச்சுட்டிக்காட்டியுள்ளார். இதுவே நிதர்சனமாகும்.
Comments
Post a Comment