சஜித் பிரேமதாசா போர்க்குற்ற இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள போதிலும், தென்னிலங்கை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களுடனேயே நகருகின்றது. தமிழ் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய முனைப்பு ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான மக்கள் பொதுச்சபையின் ஒன்றிணைவில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு எனும் கட்டமைப்புக்கூடாக முன்னர்த்த இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பு என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு சில நகர்ப்புறங்களில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கியிருந்தனர். தமிழரசுகட்சி ஒரு உறுதியான முடிவை வெளிப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எவ்வித முடிவையும் அறிவிக்காத நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தலில் பொதுக்குழுவில் அதிக வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் போன்றோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றார்கள். மாறாக, தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவான சமிக்ஞையே வெளிப்படுத்தி வருகின்றார். தென்னிலங்கை வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து தம்மை தேசியவாதிகளாக வெளிப்படுத்துவதிலேயே முழுவீச்சாக செயற்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசாவின் சிங்கள தேசியவாத செயற்பாட்டில் போர்க்கால இராணுவத்தினருக்கான ஆதரவு நிலைப்பாட்டை தொகுப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 

சஜித் பிரேமதாச 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகின்றார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார். எனினும், 41.99மூ வாக்குகளை பெற்று தோல்வியடைந்திருந்தார். ராஜபக்ஷ எதிர்ப்புவாதம் எனும் தமிழ் மக்களின் ஜனாதிபதி தேர்தல் கொள்கையை சாதகமாக கொண்டு, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதசா தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று கொண்டார். மேலும், ராஜபக்ஷ அணி முதன்மைப்படுத்திய இஸ்லாமோபோபிய பிரச்சாரங்களாலும் சிறுபான்மை தேசிய இனங்களின் பெரும்பான்மையான ஆதரவை சஜித் பிரேமதாசாவே பெற்றுக்கொண்டிருந்தார். எனினும் தேசிய பாதுகாப்பு மற்றும் பௌத்த பேரினவாத அலையூடாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தார். மறுதலையாக சஜித் பிரேமதாச சிறுபான்மை தேசிய இனங்களின் பாதுகாவலனாக செயற்பட்டாரா என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது. சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகளும் தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் போர்க்குற்ற இராணுவ தரப்பினருக்கான ஆதரவும், பௌத்தத்திற்கான பாதுகாப்பு பிரச்சாரங்களையும் இணைத்ததாகவே காணப்பட்டிருந்தது. எனினும் ஒப்பீட்டளவில் கோத்தபாய ராஜபக்ஷhவின் நிலை தென்னிலங்கை மக்களை ஈர்த்ததாக அமைய பெற்றுள்ளது.

கடந்தகால படிப்பினையினூடாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தியை இராணுவ முகாந்திரமாக மாற்றி வருகின்றார். கடந்த காலங்களில் போர்க்குற்ற இராணுவத்திற்கான பாதுகாப்பு அரணாகவும் முகாந்திரமாகவும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே செயற்பட்டிருந்தது. இப்பின்னணியில் ராஜபக்ஷhக்களினூடாக பொதுஜன பெரமுனவிற்குள் போர் வெற்றி முடக்கப்பட்டது. எனினும், சஜித் பிரேமதாசா போர்கால இராணுவ பிரமுகர்களை ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒன்றிணைப்பதனூடாக போர் வெற்றியை பகிர முற்படுகின்றார். போர் வெற்றியை பகிர்வதனூடாக போர்க்குற்றத்தையும் சஜித் பிரேமதாசா பகிர தயாராக உள்ளார்.

ஒன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் தவிசாளர் சரத் பொன்சேகா போர்க்கால இராணுவ தளபதியாக செயற்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் சரத் பொன்சேகாவின் இரத்தக்கறைகளை கழுவிய போதிலும், சரத் பொன்சேகாவின் போர் வெற்றி புகழாரமும் மறுதலையாக போர்க்குற்றமும் நீங்கிவிட போவதில்லை. சமகாலத்தில் உள்கட்சி முரண்பாட்டால் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பிரச்சாரமாக சரத் பொன்சேகாவே காணப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ தேசிய பாதுகாப்பை முன்னிறுத்திய பிரச்சாரத்தில், 2009ஆம் ஆண்டு போர் வெற்றியை முதன்மைப்படுத்தியிருந்தார். அதற்கு சமாந்தரமாகவே சஜித் பிரேமதாசா 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இராணுவ தளபதியாக செயற்பட்டிருந்த சரத் பொன்சேகாவை தன்னுடைய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தலைவரான நியமிப்பதாக உறுதியளித்திருந்தார். இதனூடாக பொதுஜன பெரமுனவின் போர் வெற்றி கோசத்துக்கான பகிர்வை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்து வைத்தது.

இரண்டு, முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சி உறுப்புரிமை மற்றும் நியமனக் கடிதத்தை பெப்ரவரி-23, 2024அன்று பெற்றுக்கொண்டார். லியனகே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் தாக்குதலின் போது இராணுவத்தின் அதிரடிப்படை-3இன் தலைவராக இருந்தார். அதிரடிப்படை-3 மோதலின் இறுதி வாரங்களில் ஈடுபட்டது என்று ஆயுத மோதலின் இறுதிக் கட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அந்த இறுதி வாரங்களில் பீரங்கித் தாக்குதலால் நேரடியாகத் தாக்கப்பட்ட வள்ளிபுனம் மருத்துவமனை குறித்தும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

மூன்று, பிரேமதாசவிடமிருந்து தனது அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் ரத்னபிரிய பாண்டு ஐக்கிய மக்கள் சக்தயில் இணைந்து கொண்ட மற்றொரு போர்க்கால இராணுவ வீரர் ஆவார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேசிய ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவின் தலைவராக பாண்டு நியமிக்கப்பட்டுள்ளார். பாண்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் (CSD) இணைக் கட்டளை அதிகாரியாகச் செல்வதற்கு முன்னர், இலங்கையின் சிறப்புப் படையின் படைத் தளபதியாக இருந்தார். சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய ஊர்க்காவல் படையில் இருந்து உருவானது. இது இலங்கை அரசாங்கத்தால் வட-கிழக்கு எல்லையோர கிராமங்களில் நடத்தப்படும் தன்னார்வ துணை இராணுவ அமைப்பாகும், அங்கு தமிழர் ஆயுத எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய உளவுத்துறையை வழங்க உள்ளூர்வாசிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். 2017இல் அடையாளம் கொள்கை மற்றும் ஆராய்ச்சி மையம் (ACPR) வெளியிட்ட அறிக்கையானது, வன்னியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியான இராணுவமயமாக்கலின் தாக்கத்தை குறிப்பிட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பாண்டு அரசியலுக்கு பிரவேசித்ததுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

நான்கு, தமிழ் இனப்படுகொலையின் போது இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்த மற்றொரு அதிகாரியும்  போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக பலமுறை மறுத்தவருமான முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவையும் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்வாங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை வரவேற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, '20வது இலங்கை இராணுவத்தின் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, மிருகத்தனமான புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த கால மனிதாபிமான நடவடிக்கைக்கு தலைமை தாங்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். இன்று சமகி ஜன பலவேகயவில் இணைந்தார்' என பதிவு செய்திருந்தது. 2008 இல், தயா ரத்நாயக்க, இலங்கைப் படைகளுக்கு தலைமை தாங்கியதால், 'கிழக்கு முனையின் பெரும்பகுதிக்கு பொறுப்பான குங்-ஹோ (பரபெ-hழ) (மிகுந்த உற்சாகம் அல்லது வைராக்கியம்) இராணுவ பிரிகேடியர்' என்று விவரிக்கப்பட்டார்.

ஐந்து, இலங்கையின் 14வது கடற்படைத் தளபதியான தயா சண்டகிரியையும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைக்கப்பட்டுள்ளார். சண்டகிரி மூன்று தசாப்தகால யுத்தத்தில் அளித்துள்ள பங்களிப்பு காரணமாகவே 2001, ஜனவரி-1அன்று கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். மேலும், ஓய்வின் பின்னர் 2015, நவம்பர்-09அன்று சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார். போர்க்காலத்தில் 2003ஆம் ஆண்டு பெர்லினில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலப்பகுதியில், மூன்று கடற்புலிகள் கடலில் தற்கொலை செய்து கொண்டு மரணித்த சம்பவத்தில் கடற்படை தளபதியாக சண்டகிரி தொடர்புபடுகின்றார். சஜித் பிரேமதாசா, சண்டகிரியிடம் உள்ள கடற்படை நிபுணத்துவம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் கடல் மற்றும் கடற்படை நடைமுறைகள் பற்றிய ஆலோசகராக நியமித்துள்ளார்.

ஆறு, 2016ஆம் அண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை பாதுகாப்புப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் இராணுவ வீரர்களின் குழுவிற்கான (ரணவிரு பலகாய) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ; சேனநாயக்க போர்க்காலத்தில் மாத்திரமின்றி போருக்கு பின்னரான காலப்பகுதியில் இராணுவமயமாக்கல் செயற்பாட்டிற்கு முன்னணியிலிருந்து செயற்பட்டுளார். 1981இல் பட்டியலிடப்பட்ட பின்னர், அவர் பதவிகளில் உயர்ந்து இலங்கை இராணுவ சிறப்புப் படைப் படைப்பிரிவில் சேர்ந்தார். இது உளவுத்துறை மற்றும் பிற இரகசிய நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டது. 1995களில் சமாதானத்திற்கான யுத்தம் ஒரு தீர்க்கமான திருப்பத்தை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கை இராணுவத்திற்கு நீண்ட தூர உளவு ரோந்து யோசனையை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய 3வது சிறப்புப் படைப் பிரிவின் கட்டளைக்கு சேனநாயக்க சென்றதாக இலங்கை இராணுவ இணையத்தளம் ஒன்று கூறுகிறது. இலங்கையின் நீண்ட தூர உளவுப் படையினர், படுகொலைகள் மற்றும் தமிழ் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இராணுவ தளபதியாக வடக்கு-கிழக்கு மக்களுக்கு கடுமையான இராணுவ எச்சரிக்கைகளை விடுத்தார். 2018ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, 'தமிழ் மக்களுக்கு வழங்கிய வழங்கல்களை இராணுவம் மீளப் பெற்றுக்கொள்ள முடிந்தது' என்று பகிரங்கமாக கூறியிருந்தார். 'இந்த வீடுகள் மற்றும் நிலங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவது போல், நாங்கள் அதை மீண்டும் எடுக்க முடியும்,' என தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் கூட்டத்தினரிடம் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்தார். மகேஷ; சேனநாயக்க தனது தீவிர சிங்கள தேசியவாதத்திற்கு மேலதிகமாக, இலங்கையின் இராணுவமயமாக்கலை உறுதியாக ஆதரிப்பவராக இருந்து வருகிறார்.

எனவே, அரசியல் கட்சியை போர்க்குற்ற இராணுவ முகாந்திரமாக மாற்றும் சஜித் பிரேமதாசாவிடம் ஈழத்தமிழர்கள் எவ்வடிப்படையில் இராணுவத்தின் இனப்படுகொலைக்கான நீதியை கோர முடியும் என்பதை தென்னிலங்கையை ஆதரிக்க முற்படும் தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவுபடுத்த வேண்டும். ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளான இராணுவத்தினர் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தினரால் காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வு, வடக்கு-கிழக்கிலிலுந்து இராணுவ வெளியேற்றம் என்பன இராணுவம் சார்ந்த பிரச்சினையாகவே அமைகின்றது. அவ்இராணுவத்தினருக்கு அரண் அளிக்கும் சஜித் பிரேமதாசா ஈழத்தமிழர்களினை வேரறுக்கக்கூடிய சாத்தானாகவே காணப்படுகின்றார். இச்சாத்தானை ஆதரித்து தமிழ் பரப்பில் பிரச்சாரம் செய்யக்கூடிய தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களை அழிக்க நினைக்கும் சாத்தான்களாகவே காணப்படுவார்கள். இத்தகைய எதிரி மற்றும் துரோக சாத்தன்களை அடையாளங்காண்பதும் புறமொதுக்குவதுமே ஈழத்தமிழரசியலை பலப்படுத்தக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-