தமிழரசியல்வாதிகள் கடந்கால அனுபவங்களிலிருந்து படிப்பினையை பெறத் தவறியுள்ளார்களா? -ஐ.வி.மகாசேனன்-
'உனது சொந்த அனுபவங்களில் இருந்துதான் நீ படிப்பினையை பெற வேண்டுமென்றால், அதற்கு ஒன்றும் உன் ஆயுட் காலம் பெரிதானதல்ல. எனவே படிப்பினைகளை பிறரது அனுபத்திலிருந்து பெற்றுக்கொள்'
-இந்தியப் பேரரசின் இராஜதந்திரி சாணக்கியர்-
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தால், ஈழத்தமிழர்களிடமும் அரசியல் தெரிவு தொடர்பில் குழப்பகரமான அரசியல் நிலைமைகளே காணப்படுகின்றது. வழமைக்கு மாறாக சுயேட்சை குழுக்கள், அரசியல் புதுமுகங்கள் யாவும் ஈழத்தமிழரசியலில் பிரதான பேசுபொருளாகியுள்ளது. ஈழத்தமிழர்கள் கற்றோர் சமுகம் என்றும், உயர் கலாசாரத்தை பேணுகின்ற சமுகம் என்றெல்லாம் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட விம்பங்கள், சமகாலத்தில் அரசியல் பிரச்சாரங்களில் உடைத்தெறியப்படுவதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சமுகவலைத்தள சகாப்தமும் அதற்கு உரம் அளிப்பதாக அமைகிறது. ஈழத்தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல், சமுக குழப்பங்களின் பின்னணியில் பாரம்பரிய அரசியலின் தோல்வியும் ஏமாற்றங்களும் அடிப்படையினதாகும். எனினும் பாரம்பரிய அரசியல் தரப்பினர், தமது தோல்வியை உணராத நிலைமைகளே வெளிப்படுகின்றது. தமிழரசு கட்சியினர் அரசாங்க கட்சிகளுடன் இணக்கத்தை வெளிப்படுத்துவதும், அமைச்சினை பெறுவது தொடர்பான உரையாடல்களை முன்வைப்பதும் அதனையே உணர்த்துகின்றது. இக்கட்டுரை ஈழத்தமிழரசியல் தரப்பினரின் கடந்தகால இணக்க அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் வெளிவிவகார அமைச்சை பெற உள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து தென்னிலங்கையில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியிருந்தது. 'இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம்.ஏ.சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா?' என உதய கம்மன்பில தெரிவித்தார். உதய கம்மன்பிலவின் கருத்தின் உள்ளீடுகள் அப்பட்டமான பேரினவாத அரசியல் நலனை கொண்டது என்பதையே வெளிப்படுத்துகின்றது. இது தொடர்பில் தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது.
உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள் வந்துள்ளது. ஆரம்பத்தில், 'ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப்பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில், 'நாங்கள் அமைச்சுப்பதவிகளை ஏற்பதாக இருந்தால் நல்லாட்சி எனத் தங்களை அழைத்துக்கொண்ட ஆட்சிக்காலத்தில் எதிர்த்தரப்பிலிருந்து நாங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கினோம். ஆப்போதே நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெற்றிருக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தேசிய மக்கள் சக்தியினருக்கு மாத்திரமே வழங்கப்படுமென குறிப்பிட்டிருந்தார்.
தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவி எடுப்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கை அரசியலிலேயே, உதய கம்மன்பிலவின் பேரினவாத நலன் சார்ந்த கருத்துக்களால் உருவாக்கப்பட்டதாகும். ஈழத்தமிழர் அரசியலில் இது நீண்ட கால பேசுபொருளாகும். ஈழத்தமிழர் அரசியலை தொடர்ச்சியாக பின்தொடர்பவர்கள், உதய கம்மன்பிலவின் இனவாத கருத்துக்கு முன்பாகவே, ம.ஆ.சுமந்திரன் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலினூடாக பாராளுமன்றத்திற்கு சென்றால் அமைச்சுப்பதவிகளை பெறக்கூடிய வாய்ப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளனர். ம.ஆ.சுமந்திரன் பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவி எடுக்கக்கூடியதற்கான நியாயப்பாடுகளை தெரிவித்துள்ளார். 'நான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் மக்களின் எதிர்பார்ப்பும் அமைச்சுப் பதவிகள் பெறவேண்டும் என்பதாகவே இருந்தது. முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது. ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்றபோது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில்தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்' என்றவாறு பல சந்தர்ப்பங்களில் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலிருந்து ம.ஆ.சுமந்திரன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதே இங்கு வெளிப்படையான உண்மையாகும். 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலேயே, அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை எடுக்க வேண்டும் என்ற கருத்தாடல்களை ம.ஆ.சுமந்திரன் முன்னிறுத்தி உரையாடியிருந்தார். 2020 பொதுத்தேர்தலில் ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றிருந்தது. ராஜபக்சாக்களுடன் கூட்டுச்சேர்வது தமிழரசுக்கட்சிக்கான அஸ்தமனம் என்பது பொதுவான விளக்கமாகும். அதேவேளை 2022இல் உருவாக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடனேயே இயங்கியமையால், தமிழரசுக்கட்சியினால் கூட்டுச்சேர முடியவில்லை என்பதுவே நிதர்சனமானதாகும். 2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அல்லது ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் தமிழ் மக்கள் இடையே மென்போக்கு எண்ணங்கள் காணப்படுகின்றது. எனவே இச்சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை எடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சுப்பதவிகளை எடுத்துக்கொள்வது, தமிழ் மக்களின் அரசியல்-சமுக-பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமானது என்ற வாதத்தையே, அமைச்சுப்பதவிக்கு ஆதரவுத்தளத்தில் இயங்குபவர்களின் கருத்தாக அமைகின்றது. ம.ஆ.சுமந்திரன், 'முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக - கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் இராஜிநாமா செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண் கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக்கு கிடையவே கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. ஏனெனில் காலங்கள் மாறும். நிலைமைகள் மாறும். ஆகையினால் அதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தால் அதனையும் நாங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு ஆகும்' எனத்தெரிவித்திருந்தார்.
கடந்தகாலங்களில் அமைச்சுப்பதவிகளை பெற்று, குறிப்பாக தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவி பெற்று ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்தார்களா என்பது தொடர்பில் வரலாற்று திரிபின்றி அறிந்து கொள்ளல் அவசியமாகும்.
1965ஆம் ஆண்டு டட்லி அரசாங்கம் ஏழு தரப்பு கூட்டணியாகவே ஆட்சியதிகாரத்தை பெற்றிருந்தது. இதில் இலங்கை தமிழரசுக்கட்சியும் முக்கிய பங்காளியாக இணைந்திருந்தது. சமஷ;டி கட்சி என அழைக்கப்பட்ட தமிழரசுக்கட்சி மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டு டட்லி-செல்வா ஒப்பந்தத்தை மேற்கொண்டு கூட்டடில் இணைந்திருந்தது. தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை, முருகேசன் திருச்செல்வத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மன்றாடியார் நாயகமான முருகேசன் திருச்செல்வம் நேரடித் தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. ஆனால், டட்லி-செல்வா ஒப்பந்தம் உருவாகக் காரணமானவர்களில் முக்கியமானவர். ஆகவே, அவரை தமிழரசுக்கட்சியின் சிபார்சில் செனட் சபைக்கு நியமனம் செய்ததுடன், அவரை அமைச்சராக நியமிக்கவும் டட்லி சேனநாயக்க இணங்கினார். மு.திருச்செல்வம் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே சா.ஜே.வே.செல்வநாயகத்தின் கோரிக்கையாக இருந்தது. உள்நாட்டலுவல்கள் அமைச்சராக திருச்செல்வம் இருந்தால், உள்ளக நிர்வாகம் அவரின் கீழ் இருக்கும், இது அதிகாரப்பரவலாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதே இவ்வமைச்சைக் கோரியமைக்கு காரணம் என சா.ஜே.வே செல்வநாயகத்தின் வாழ்க்கைச்சரிதை நூலில், அந்நூலை எழுதிய அவரது மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். ஆனால், டட்லி சேனநாயக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சை வழங்கத் தயாராக இருக்கவில்லை. டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் முக்கிய அதிகாரப் பரவலாக்கல் முன்மொழிவான மாவட்ட சபைகளை உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அடுத்தபடியாக பொறுப்புக்கொண்ட உள்ளூராட்சி அமைச்சை திருச்செல்வத்துக்;கு வழங்க டட்லி சேனநாயக்க சம்மதித்தார். தமிழரசுக்கட்சியும் ஏற்றுக்கொண்டது.
டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் காரணகர்த்தா என்ற வகையில், ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு மு.திருச்செல்வத்தின் தோள்களில் இருந்தது. முதல்படியாக தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேலைகளை எம்.திருச்செல்வம் தொடங்கினார். பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் 1966ஆம் ஆண்டில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் இதுவொரு முழுமையான வெற்றியாக அமையவில்லை. வடக்கு-கிழக்குக்கு அப்பாலுள்ள தமிழ் மக்களுக்கு இவ்விசேட ஏற்பாடு எத்தகைய தீர்வையும் வழங்கவில்லை. அதுதொடர்பில் முறைப்பட்டவர்களுக்கு சிங்களம் கற்க காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்களத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்றவாறே அமைச்சர் மு.திருச்செல்வம் குறிப்பிட்டதாக 'தமிழ்த்தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்' என்ற தனது நூலில் வி.நவரட்ணம் குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்கட்சி அமைச்சு பதவியை கொண்டிருந்த காலப்பகுதியிலேயே சிங்களம் கற்காமையால் அரச உத்தியோகத்தர்களான பத்மநாதன், சுரேந்திரநாதன் மற்றும் குலமணி ஆகிய மூவரும் வேலையை இழந்தனர். தமிழரசுக்கட்சியின் அமைச்சுப்பதவியால் குறைந்தபட்சம் தமிழர்களின் அரச வேலையைக்கூட பாதுகாக்க முடியவில்லை.
டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் பிரதான பகுதியான மாவட்ட சபை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஆளுங்கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இணக்கமின்மையால், அரசாங்கத்தின் ஆயுட் காலம் ஒன்றரை வருடங்கள் மீதமிருக்கையில், 1968ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்க மாவட்ட சபை முயற்சிகளை நிராகரித்திருந்தார். எனினும் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி அமைச்சுப் பதவியினூடாக அபிவிருத்தி திட்டங்களை செய்வதாகக்கூறிக்கொண்டு அமைச்சுப்பதவியை தொடர்ந்திருந்தனர். எனினும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்ட திருகோணேஸ்வரர் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனம் செய்யும் தீர்மானத்தைக்கூட தமிழரசுக்கட்சியால் நிறைவேற்றியிருக்க முடியவில்லை. மாறாக தம்மங்கடுவ நாயக்க தேரரான மங்கலே தர்மகீர்த்தி ஸ்ரீதமஸ்கஸாரே ஸ்ரீசுமேதங்கார என்ற பௌத்த பிக்குவின் தலையீட்டால், அமைச்சரின் தீர்மானத்தை ஒத்திவைக்குமாறு பிரதமர் பணித்திருந்தார்.
திருக்கோணேஸ்வரர் விவகாரம், தமிழ் மக்களிடைய தமிழரசுக்கட்சி தொடர்பில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. இதன் பின்னணயில் 1968 நவம்பரில் மு.திருச்செல்வம் அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்தார். 1969 ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சி வரிசையிலிருந்து மாறி, எதிர்க்கட்சி வரிசையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்தார்கள். எனினும் 1970 மார்ச் அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடியும் வரையில், 'விமர்சனத்துக்குட்பட்ட ஆதரவு' என்ற பெயர்ப்பலகையில் தமிழரசுக்கட்சி அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. காலனித்துவ விடுதலையின் பின்னர் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் அரசாங்ககங்கள் முழுமையான ஆயுட் காலத்தை அனுபவித்ததில்லை. டட்லி அரசாங்கத்தின் முழுமையான ஆயுட்காலம் தமிழரசுக்கட்சியின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு செல்வநாயகத்திடம், 'நீங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்?' என்று டட்லி சேனநாயக்க கேட்டதாக ஏ.ஜே.வில்ஸன் தனது நூலில் குறிப்பிடுகிறார். அந்த ஆபத்தை செல்வநாயகம் உணர்ந்திருந்ததால் அரசாங்கத்துக்கான ஆதரவை தமிழரசுக் கட்சி தொடர்ந்து வழங்கச் சம்மதித்தது என ஏ.ஜே.வில்ஸன் குறிப்பிடுகிறார்.
இங்கு டட்லி பாதுகாத்த ஜனநாயகம் கேள்விக்குரியதாகும். தேசிய அரசாங்கத்தில் இணைவு மற்றும் அமைச்சர் பதவி ஏற்பு என்பவற்றினூடாக தமிழரசுக்கட்சி சாதித்தது என்ன என்பதும் கேள்விக்குரியதாகும். அமைச்சர் அந்தஸ்தில் தமிழரசுக்கட்சியால் நிறைவேற்றக்கூடியதாக இருந்த உயர்ந்தபட்ச ஏற்பாடு வடக்கு-கிழக்கு நிர்வாக மொழியாக தமிழ் மொழியையும் ஏற்றுக்கொண்டதாக மாத்திரமே அமைகின்றது. இதுவும் வடக்கு-கிழக்குக்கு அப்பால் வாழும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக அமையவில்லை. எனினும் பதிலீடாக தமிழரசுக்கட்சி டட்லி அரசாங்கம் முழுமையான காலம் ஆட்சியிலிருக்க ஆளுந்தரப்பாகவும் எதிர்த்தரப்பு என்ற போர்வையிலும் ஆதரவளித்திருந்தார்கள். டட்லி-செல்வா கூட்டின் பயனாளியாக டட்லி மாத்திரமே காணப்பட்டிருந்தார். சமஷ;டியிலிருந்து கீழிறங்கி மாவட்ட சபையை ஏற்றுக்கொண்டு, அனைத்து விட்டுக்கொடுப்புகளுடன் அரசாங்கத்தின் முழு ஆயுட்காலத்தை பாதுகாத்திருந்த செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி தமிழ் மக்களிடம் நம்பிக்கையையே இழந்திருந்தார்கள். 1970ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டமையும், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கத்திற்கான தேவைப்பாடும் இதன் தொடர்ச்சியாகவே அமைகின்றது.
'உனது சொந்த அனுபவங்களில் இருந்துதான் நீ படிப்பினையை பெற வேண்டுமென்றால், அதற்கு ஒன்றும் உன் ஆயுட் காலம் பெரிதானதல்ல. எனவே படிப்பினைகளை பிறரது அனுபத்திலிருந்து பெற்றுக்கொள்' என்ற இந்தியப் பேரரசின் இராஜதந்திரி சாணக்கியனின் கூற்றை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தசாப்தங்களுக்கும் புதிதாக வரும் ஈழத்தமிழர் அரசியல் பிரதிநிதிகள் தென்னிலங்கையிடம் இணக்கத்தை வெளிப்பாட்டி ஏமாறுவது வரலாறாகவே அமைகின்றது. சேர்.பொன்.அருணாச்சலம் முதல் ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன் என்று எந்தவொரு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இவ்ஒழுங்கிற்கு விதிவிலக்காக செயற்பட்டிருக்கவில்லை.
ம.ஆ.சுமந்திரனின் கடந்த 15ஆண்டு கால அரசியலில் நீண்ட காலம் ரணில் விக்கிரமசிங்காவை தமிழ் மக்களின் மீட்பராக சித்தரித்து வந்தார். 2015-2019 தேசிய அரசாங்க காலப்பகுதியில் ரணில் அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாதுகாப்பதற்கு தலைகீழாக நின்று செயற்பட்டிருந்தார். எனினும் 2022-2024ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக இருக்கையில், ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றுவதாக சுமந்திரன் ஊடலை வெளிப்படுத்தியிருந்தார். அதே சுமந்திரன் 2024 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், '2005 தேர்தலில் தமிழ் மக்கள் புறக்கணிப்பினூடாக ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்தது தொடர்பில் கவலைப்படுவதாக' நீலிக்கண்ணீர் உரையாற்றியிருந்தார். 2024 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியின் இறுதி நேரங்களில் சுமந்திரன், ஜே.வி.பி மற்றும் அநுரகுமர திசநாயக்கவின் கடந்தகால பேரினவாத செயற்பாடுகளுக்கு வெள்ளையடிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டிருந்தார். குறிப்பாக ஜே.வி.பி-யின் வடக்கு-கிழக்கு மாகாண பிரிப்பை, ஜே.வி.பி-யின் ஓரிரு கட்சி உறுப்பினர்களின் செயற்பாடாக பல அரங்களில் சுமந்திரன் விவாதித்திருந்தார். தற்போதும் ஜே.வி.பி-யின் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான முரணான நிலைப்பாட்டை, வெறுமனவே எச்சரிக்கை தொனியில், மயிலிறகு வருடலாகவே கருத்துரைத்துள்ளார். இது சுமந்திரனின் எதிர்கால அரசியலுக்கான முன்னகர்வாகவே ஈழத்தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஜே.வி.பி-யின் கருத்துகளை விமர்சிக்கும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனின் கருத்துக்களையும் புரிந்து கொள்வதில் தமிழ் மக்கள் தெளிவான பகுத்தறிவு சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அமைச்சரவை கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிமல் ரத்நாயக்கவின் பதிவுக்குப் பதிலளித்த எம். ஏ. சுமந்திரன், 'தேசிய மக்கள் சக்தி இன்று வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை 'ஒழிப்போம்' என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்கும் வாக்குறுதியை நீங்கள் உங்களது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் சொல்லவில்லை. இந்தச் சட்டத்தை ஒழிப்போமென உங்களது கட்சி அறுதிபடத் தீர்மானித்த பல நிகழ்வுகளிலே நானே கலந்து கொண்டு, பேசியுமிருக்கிறேன். இப்போது வழுக்கத் தொடங்கிவிட்டீர்கள்!' எனக் குறிப்பிட்டிருந்தார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மயிலிறகில் வருடும் கருத்தாகவே அமைகின்றது. ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், 'தென்னிலங்கையின் மாற்றத்தோடு தமிழர்கள் சேர்ந்து பயணிக்க வேண்டும்' என அநுரகுமர திசநாயக்க அப்பட்டமாக வெளிப்படுத்திய பேரினவாத கருத்தியலை பூசி மெழுகி பாதுகாத்த செயற்பாட்டையே ஒரு மாதங்களுக்கு முன்னர் சுமந்திரன் செய்திருந்தார். தற்போது பாராளுமன்றத் தேர்தலில் நேரடி வேட்பாளராக வாக்குப் போட்டியில் ஈடுபடுகையில், ஜே.வி.பி-யின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு தனக்கான வாக்கை உறுதிப்படுத்த முற்படும் இயல்பான அரசியல் செயற்பாடாகவே சுமந்திரனின் கருத்தை நோக்க வேண்டியுள்ளது. ஜே.வி.பி பற்றிய எண்ணத்தை தெளிவாக கொண்டிருக்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகள், ஜே.வி.பி-யின் இனவாத செயற்பாட்டினை பாதுகாத்திருக்க மாட்டார்கள். இன்றும் ஜே.வி.பி-யின் இனவாத செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள அல்லது வெளிப்படுத்தாத நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்வது, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்கலாம் என்பது மடமைத்தனமான வாதமாகும். வரலாறும் அதனையே உணர்த்தி நிற்கின்றது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 'மாற்றம்' போலி பிரச்சாரமாக காணப்படுகையில், தேசிய இன விடுதலைக்காக போராடும் தரப்பினர், உண்மையை மக்களுக்கு எடுத்துரைப்பவர்களாக அமைய வேண்டும். எனினும் தமிழ் அரசியல்வாதிகளும் போலியான மாற்றம் என்பதிலேயே தமது பிரச்சாரங்களையும் கட்டமைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில், 'அடையாளம் மாறாத அரசியல் மாற்றம்' என்றவாறு குறிப்பிட்டுள்ளனர். இது ஒருவகையில் தென்னிலங்கையின் ஜே.வி.பி கூறும் அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது. இது மறைமுகமாக தமிழ் மக்களை தென்னிலங்கைக்குள் கரைக்கும் செயலாகவே அமைகின்றது.
Comments
Post a Comment