வடக்கில் தமிழரசுக்கட்சியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் யார்? -ஐ.வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு முக்கியமானதொரு களமென, அரசியல்வாதிகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் மீள மீள சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அது சார்ந்த மாற்றம் பற்றிய அலையின் விம்பமும் ஈழத்தமிழர் அரசியலிலும் தவறான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல்கள் அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல அரசியல்வாதிகள் தமது அரசியல் வாக்கு வங்கிகளை பலப்படுத்தும் நோக்குடனேயே முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தார்கள். இதில் தென்னிலங்கையின் மாற்றம் சார்ந்த போலியான விம்பங்களையும் பிரச்சாரத்துக்குள் உள்வாங்கியிருந்தார்கள். இவ்வாறான குழப்பமான அரசியல் எதார்த்தம், தமிழ் மக்கள் தென்னிலங்கையின் அரசியல் சூழலுக்குள் கரைந்து செல்லும் நிலைமைகளைஉருவாக்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் அதனையே வெளிப்படுத்தியுள்ளது. தென்னிலங்கை அரசியல் கட்சியான ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி வடக்கு மற்றும் கிழக்கில் கணிசமான வாக்கினையும் ஆசனத்தையும் பெற்றுள்ளார்கள். இக்கட்டுரை தமிழ் அரசியலின் தோல்விக்கான பொறுப்புக்கூறலை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியலில், வடக்கு-கிழக்கு மரபுவழி தாயகமாக தனியானதொரு அரசியல் ஒழுங்கு தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்துள்ளது. 1931ஆம் ஆண்டு இலங்கையில் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதலே தேர்தல் அரசியலிலும், தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட்டு வந்துள்ளது. ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான சமஷ்டி கட்சி (பின்னர் தமிழரசுக்கட்சி என அடையாளப்படுத்தப்பட்டது),  1970களுக்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, 2001களுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றவாறே வடக்கு-கிழக்கு அரசியல் ஒழுங்குபடுத்தப்பட்டு வந்துள்ளது. அதேவேளை காலத்துக்கு காலம் தென்னிலங்கையின் பிரதிநிதி ஒருவர் நிலைத்திருப்பதும் எதார்த்தம். மகேஸ்வரன், அங்கயன் போன்றோர் அவ்வரிசையிலேயே காணப்படுகின்றார்கள். இதனைவிட சில சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பயணங்கள் தடைப்பட்ட போதிலும், சுயேட்சை குழுக்களாக வடக்கு-கிழக்கின் தனித்துவமான அரசியல் இயக்கங்களே ஆதிக்கம் செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் தமிழ் மக்கள் தமது தனித்துவத்தை 2024ஆம் ஆண்டு தேர்தலில் இழந்துள்ளார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழும் ஒப்பீட்டடிப்படையில் இனக்கலப்பற்ற யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி போனஸ் உள்ளடங்கலாக மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. இதனைவிட சர்ச்சைகள் நிரம்பிய வைத்தியர் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது. தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் வன்னித் தேர்தல் தொகுதியிலும் கணிசமான வீழ்ச்சியே காணப்படுகின்றது. முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சி அதிகூடிய வாக்கினை பெற்ற போதிலும், மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுமே அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளன. முழுமையான வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒவ்வொரு ஆசனங்கள் பெற்றிருந்தன.

கிழக்கு மாகாணமே பகுதியளவில் தமிழ்த்தேசியத்தின் இருப்பை தனித்துவத்தை பாதுகாத்துள்ளது எனலாம். திருகோணமலையில் தமிழர்களின் ஒரு ஆசனம் மீளவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. மேலும் கடந்த முறை அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்த போதிலும், இம்முறை தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளில் கிழக்கு மாகாணம் கனிசமான அளவு தமிழ்த்தேசியத்திற்கான ஆசனத்தை பலப்படுத்தியுள்ளது. 

வடக்கில் தென்னிலங்கையின் அரசியலுக்குள் ஒன்றிணைந்தமையை, வெறுமனவே தமிழ் மக்களின் அரசியல் அறிவற்ற செயலாக நிந்தித்து செல்ல முடியாது. சாதாரண பொது மக்கள் கோட்பாட்டு ரீதியாக சிந்திக்கபோவதில்லை. தமது சுயநலன்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான பாமர சிந்தனையே காணப்படும். எனினும் 2009ஆம் ஆண்டு யுக மாற்றத்திற்கு பின்னரான பதினைந்து ஆண்டு கால அரசியலில் தமிழ் மக்கள் வாய்ப்புக்களை கொடுத்துள்ளதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளார்கள். எனினும், தனிப்பட்ட அரசியல் நலன்களுக்குள் பயணிக்கும் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் எச்சரிக்கையை மறுசீராய்வு செய்ய தவறியுள்ளார்கள். அதன் விளைவாகவே 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் அரசியலையே முழுமையாக நிராகரித்துள்ளார்கள். இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகின்றது.

முதலாவது, கடந்த பொதுத்தேர்தலிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு, தமிழ்த்தேசிய அரசியலிற்கான எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது. பொதுத்தேர்தலின் முடிவின் பின்னர் பல அரசியல் அவதானிகளும் பலவீனங்களை சுட்டிக்காட்டியிருந்தார்கள். குறிப்பாக தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனின் எதேச்சதிகாரம் பல தரப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற போர்வையில் அவரால் தான்தோன்றித்தனமாக முன்வைத்த தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கருத்துகள் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வவுனியாவில் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் மீது வீழ்ச்சிக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. எனினும் அது தொடர்ச்சியாக செயலாக்கம் பெறவில்லை. அடுத்த அடுத்த கூட்டங்களில் வேறு வேறு ஆட்கள் மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. அவ்வாறே தமிழ்த்தேசியகூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களிடையே ஊடகப் பேச்சாளரை மாற்றுவதற்கான அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டது. எனினும் இரா.சம்பந்தனின் சுகயீனத்தை காரணங்காட்டி அதுவும் செயலாக்கத்தை பெற்றிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் தமது பலவீனத்தை மறுசீரமைக்க தவறியதன் விளைவாகவே, இந்தத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. மேலும் குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனனும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது, தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவுகள் தமிழ் மக்களிடையே அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பை உருவாக்கியிருந்தது. இதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கும், தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டு தலைவராக வினையாற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனிற்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிளவு 2010 ஆம் ஆண்டு முதல் அடையாளப்படுத்தப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இரா.சம்பந்தனின் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை சுட்டிக்காட்டி வெளியேறி இருந்தது. எனினும் 2015இல் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் 2022இல் தமிழரசுக்கட்சி வெளியேற்றம் ம.ஆ.சுமந்திரனின் எதேச்சதிகாரம் மீதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவ்வாறே கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியிலிருந்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் மற்றும் சசிகலா ரவிராஜ் போன்றவர்கள் முதல் தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் கொழும்பு கிளைத் தலைவர் தவராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் மகளீர் அணி தலைவிகள், இளைஞரணி செயற்பாட்டாளர்கள் எனப் பலரின் வெளியேற்றம் அடிப்படையில் சுமந்திரனின் எதேச்சதிகார செயற்பாடுகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து பலர் வெளியேறியுள்ளதுடன், தமிழரசுக்கட்சி இன்று தலைமைத்துவ போட்டியினால் நீதிமன்ற வழக்கில் காணப்படுகின்றது. இவ்வழக்கின் பின்னணியிலும் சுமந்திரனின் விருப்பம் சந்தேகிக்கப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வழக் தொடுத்துள்ள தமிழரசுக்கட்சி உறுப்பினர், சுமந்திரனின் ஆழமான விசுவாசியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழலில், கடந்த காலங்களைப் போலல்லாது தமிழரசுக்கட்சி நடுநிலைமையுடன் குற்றச்சாட்டுக்களை விசாரித்து, உரிய தண்டனைகளை அமுல்படுத்துவதனூடாகவே, எதிர்காலத்தில் கட்சியை பாதுகாக்க முடியும். தற்போது வடக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் கிழக்கிலும் ஏற்படலாம்.

மூன்றாவது, வடக்கில் தமிழரசுக்கட்சியின் பின்னடைவு என்பது, சுமந்திரனின் எதேச்சதிகாரம் மற்றும் தமிழ்த்தேசியம் நீக்கம் மீதான அரசியலின் எதிர்ப்பின் வெளிப்பாடாகவே விபரிக்கப்படுகிறது. சுமந்திரன் மீதான குற்றச்சாட்டை கட்சி மறுசீராய்வு செய்ய தவறிய நிலையில், வடக்கில் முழுமையாக தமிழரசுக்கட்சி பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு உள்ளேயே வடக்கிலும் கிழக்கிலும் வேறுபட்ட எண்ணங்களுக்குள்ளேயே செயல்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக கிழக்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சுமந்திரனின் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். மாறாக வடக்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சுமந்திரன் ஆதரவு அணியாகவே செயற்பட்டு வந்துள்ளனர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான தேர்தலிலும் அது வெளிப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஸ்ரீதரன், கிழக்கு மாகாண பொது சபை உறுப்பினர்களின் பெருவாரியான வாக்குகளாலேயே வெற்றி பெற்றிருந்தார். வடக்கு மாகாண பொது சபை உறுப்பினர்கள் பெருவாரியாக சுமந்திரனுக்கே வாக்களித்து இருந்தார்கள். இது தமிழரசு கட்சியில் வடக்கு மாகாணத்தில் சுமந்திரனின் ஆதரவு எதேச்சதிகாரத்தை சுட்டிக்காட்டுகின்றது. எனவே வடக்கில் தமிழரசுக் கட்சியின் பின்னடைவு என்பது முற்று முழுதாக சுமந்திரனுக்கு எதிரான அரசியலின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றது.

நான்காவது, தென்னிலங்கையுடன் தமிழ் மக்கள் நேரடியாக ஒருங்கிணைந்து போகக்கூடிய சூழமைவை உருவாக்கியதில் எம்.ஏ.சுமந்திரனின் கடந்த கால செயற்பாடுகளும், பிரச்சார நடவடிக்கைகளில் தெரிவித்த கருத்துக்களும் முதன்மையானதாக காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தென்னிலங்கை வேட்பாளர்களையும் கட்சிகளையும் நல்லாட்சி வித்தகர்களாகவும், தமிழ் மக்கள் மீது நலன் கொண்டவர்களாகவும் சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியினர் காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடித்து சிங்கள வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும் என்பதில் சுமந்திரன் முழுவீச்சாக செயற்பட்டிருந்தார். இவ்வாறான செயற்பாடுகளே தமிழ் மக்களை தென்னிலங்கையுடன் ஒருங்கிணைத்தது. மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க,தெற்கின் மாற்றத்தோடு, வடக்கும் இணைந்து பயணிக்க வேண்டும்என்று கூறிய இனவாத கருத்தின், இனவாத தன்மையை சுமந்திரன் மறுத்திருந்தார். அநுரகுமார திசநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி மீது பெரிய விம்பத்தினை உருவாக்கி இருந்தார். அதன் பலனையே 2024 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி பொதுத் தேர்தல் கால பிரச்சாரங்களில், தமிழரசு கட்சி அமைச்சுப் பதவி பெற்று பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பாக உரையாடி இருந்தது. இவ்வாறான உரையாடல்கள் தென்னிலங்கை கட்சிகளையும் தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைப்பதாகவே காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணிகளே தமிழ் மக்கள் நேரடியாக தென்னிலங்கை வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்களை உருவாக்க வழி ஏற்படுத்தி இருக்கலாம். 

எனவே, தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கில் தமிழரசுக் கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்புக்கூறுவதே தார்மீக ஒழுக்கமாகும். இதுவே தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடியதாகும். பொதுத்தேர்தல் காலப்பகுதியில் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,தோல்வியடைந்த பின் தேசியப்பட்டியலில் செல்லப் போவதில்லைஎன உறுதியளித்திருந்தார். இது ஆரோக்கியமான முன்னறிவிப்பாகும். இதுவே தேர்தல் சனநாயத்தின் உயரிய தார்மீக ஒழுக்கமாகும். மக்கள் ஆணை இழந்த பின்னர், தேசியப் பட்டியல் எனும் வழிமுறையால் உள்நுழைவது, மக்கள் ஆணையை உதாசீனப்படுத்தும் செயலாகும். மக்கள் ஆணையை மதித்து நடக்கும் சுமந்திரன், வடக்கின் தமிழரசுக் கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்புக்கூறும் தார்மீக ஒழுக்கத்தையும் பின்பற்றுவது தமிழரசுக்கட்சியை வலுப்படுத்தக்கூடியதாக அமையும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-