சிரியாவில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் ஆட்சியும் மேற்கு நாடுகளின் ஒருங்கிணைவும்! -ஐ.வி.மகாசேனன்-

அரசியலை தார்மீக ஒழுக்கமாக சிந்திப்பது தவறானதொரு பார்வையாகும். இது வெறுமனவே நலன்களை மையப்படுத்திய சுழலிலேயே இயங்குகின்றது. தார்மீக அடிப்படையில் விவாதிக்கப்படும் மாயையான ஒழுங்கமைப்பும் ஒருவகையில் நலனை ஈடேற்றி கொள்வதற்கான தந்திரோபாயமாகவே அமைகின்றது. இனப்படுகொலை பேரழிவிலிருந்து கட்டமைக்கப்பட்ட இஸ்ரேல் தேசம் தான், சமகாலத்தின் பலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையை கட்டமைத்து விட்டுள்ளது. தார்மீகம் மீது கட்டமைக்கப்பட்டுள்ள போலியான அரசியல் விம்பம் உடையும் வகையிலான அரசியல் நிகழ்வுகள் வரலாறுதோறும் ஏதொவொரு வகையில் இடம்பெற்றுக்கொண்டே தான் உள்ளது. அவற்றை சரியாக புரிந்து கொள்ளும் தரப்பினரே வெற்றிகரமான அரசியலை வழிநடத்தி செல்கின்றார்கள். சிரியாவின் அபு முகமது அல்-ஜோலனி என அறியப்பட்ட அஹ்மத் அல்-ஷாரா தலைமையிலன ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான ஆட்சியாளர்களை நோக்கி சர்வதேச இராஜதந்திரிகள் நகர்வது, போலியான விம்ப உடைவின் ஒரு சான்றாகவே அமைகின்றது. சர்வதேச பயங்கரவாதிகளுடன் சர்வதேச இராஜதந்திரிகள் கைகுலுக்கி வருகின்றார்கள். இக்கட்டுரை சிரியாவின் புதிய ஆட்சியில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளின் ஒருங்கிணைப்பை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

சிரிய உள்நாட்டுப் போர் 2024இன் இறுதியில் திடீரென மீளுருக்கொண்டு, விரைவாக ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பில் கடந்த வாரங்களில் இப்பகுதியில் ஆழமாக உரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள அஹ்மத் அல்-ஷாரா தலைமையிலன ஹயாத் தஹ்ரிர் அல்-ஷhம் தலைமையிலான கிளர்ச்சிக்குழு அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். இது புதிய ஆட்சியாளர்கள் உலக ஒழுங்கில் ஒருங்கிணைவதில் சவாலுக்குரிய விடயமாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அமெரிக்க எதிர்ப்பு அல்-சதாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷhம் கிளர்ச்சிக்குழுவின் மீது மென்பார்வையை உருவாக்கியுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான சிரியாவின் இடைக்கால அரசாங்கம் பிராந்திய மற்றும் சர்வதேச அரச இராஜதந்திரிகளோடு இராஜுக சந்திப்புக்களை முடுக்கி விட்டுள்ளார்கள்.

முதலாவது, பிராந்திய மட்டத்திலான உறவை பலப்படுத்துவதில் சிரிய இடைக்கால அரசாங்கம் உயர்வீச்சாக செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவு வழங்கிய பிராந்திய அரசுகளுடனான இராஜுக உறவை முன்னெடுப்பதனூடாக, தமது அரசாங்கத்துக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றார்கள். சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அசாத் ஹசன் அல்-ஷிபானி பிராந்திய உறவை பலப்படுத்தும் முனைப்பில் சவுதி அரேபியா மற்றும் கத்தாருக்கு ஜனவரி முதல் வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அசாத் ஹசன் அல்-ஷிபானி சிரியாவின் வெளியுறவு அமைச்சராக தனது முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக ஜனவரி-01(2025) அன்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்தார். தொடர்ந்து ஜனவரி-05அன்று அவர் கத்தாருக்கு விஜயம் செய்திருந்த சிரியாவின் வெளியுறவு அமைச்சர், கத்தாரின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றும் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியைச் சந்தித்தார். இச்சந்திப்புக்கள், 'தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கும் ஒரு வரைபடத்தை ஷிபானி விவரித்ததாக' சிரிய தரப்பு தெரிவித்துள்ளது. சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான், 'அல்-ஷிபானி உடனான சந்திப்பில் அதன் அரசியல் மாற்றத்தை எவ்வாறு சிறப்பாக ஆதரிப்பது என்று விவாதித்ததாக' எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை இந்த விவாதங்களில் உள்ளடங்குவதாக கத்தார் தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டானுக்கு செல்ல ஷிபானி திட்டமிட்டுள்ளார். 'ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்கவும், சிரியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் உள்ளதாக' எக்ஸ் தளத்தில் ஷிபானி பதிவிட்டுள்ளார். 

இரண்டாவது, ஐரோப்பா கண்டத்திலிருந்தும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான சிரியாவின் இடைக்கால அரசாங்கத்திற்கான அங்கீகாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர்-08அன்று அசாத் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே பிரிட்டிஷ் அதிகாரிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவுடன் தொடர்பு கொண்டனர். பயங்காரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பரிசீலிப்பதாக நம்பிக்கை வெளியிட்டிருந்தது. பிரான்ஸ் ஒரு தூதுக்குழுவை டமாஸ்கஸுக்கு அனுப்பியது. மற்றும் சிரிய தலைநகரில் தங்கள் தூதரகத்தை மீண்டும் திறக்க தயாராகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் அதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, ஜனவரி-03அன்று ஷைபானி, ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்களான அன்னலெனா பேர்பாக் மற்றும் ஜீன்-நோயல் பாரோட் ஆகியோரை சிரியாவில் வரவேற்றிருந்தார். அவர்கள் இருவரும் அசாத்தின் வெளியேற்றத்திற்குப் பிறகு சிரியாவிற்குச் சென்றுள்ள மிக உயர்ந்த ஐரோப்பிய அதிகாரிகளாகும். இவர்கள் சிரியாவின் அரச தலைவரும் கிளர்ச்சிக்குழுவின் தலைவருமான அஹ்மத் அல்-ஷாராவுடனும் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்கள். சிரியாவில் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது என்று உயர்மட்ட பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் இராஜதந்திரிகள் சிரிய விஜயத்தில் எடுத்துரைத்தார்கள். அதேவேளை நம்பிக்கையீனங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பாரோட், 'இது அனைத்து சிரியர்களின் அபிலாசைகளையும் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் இது ஒரு பலவீனமான நம்பிக்கை' எனக் குறிப்பிட்டிருந்தார். ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பேர்பாக் ஒரு அறிக்கையில், 'அல்-கொய்தாவின் சிரிய கிளையில் வேரூன்றியுள்ளது மற்றும் பல அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ர்வுளு பற்றி சந்தேகம் இருந்தாலும், இந்த முக்கியமான குறுக்கு வழியில் சிரிய மக்களுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளது. 

மூன்றாவது, சிரிய இடைக்கால அரசாங்கம், மீட்பு முயற்சிகளுக்கான ஆதரவு மற்றும் முதலீடுகளைப் பெற பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கிறது. இது வெறுமனவே பிராந்திய கூட்டு என்பதற்குள் சுருங்கவில்லை. பிராந்திய அரசுகளின் அங்கீகாரத்தின் மூலம் அமெரிக்காவின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவே முனைப்புடன் செயற்படுகின்றது. சிரிய வெளியுறவு அமைச்சரின் பிராந்திய அரசுகளுக்கான பயணமும் சந்திப்புக்களும் ஒரு வகையில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவே பிரதிபலிக்கப்படுகின்றது. சவுதி அரேபியா மற்றும் கட்டார் அரசாங்கங்கள் பெருமளவில் அமெரிக்காவின் பினாமி அரசியலையே முன்னெடுத்து வருகின்றார்கள். குறிப்பாக பிராந்திய அரசுகளுடனான சந்திப்புக்கு பின்னரான ஊடக சந்திப்புக்களில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற சிரியாவின் அழைப்பையே சிரிய வெளியுறவு அமைச்சர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 'அசாத் ஆட்சி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், சிரியாவின் மீட்சிக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்குத் தடையாக உள்ளது' என ஷிபானி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், அமெரிக்காவும் மென்போக்கான சமிக்ஞைகளையே வெளிப்படுத்தியுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் உடன் உரையாடலைத் தொடங்குவதாக, அமெரிக்கா வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் இறுதியில் அமெரிக்காவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான உதவி செயலாளர் பார்பரா லீப் சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். இது ஒருவகையில் சிரியாவின் புதிய தலைவர் மற்றும் கிளர்ச்சிக்குழு தலைவர் அல்-ஷாராவின் தலைக்கு விதிக்கப்பட்ட 10 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசை அமெரிக்கா ரத்து செய்வதையே குறிக்கிறது. இவ்விஜயத்தில் பார்பரா லீப், அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளார். 'சிரிய அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பிரதிநிதித்துவமாகவும், இன மற்றும் மத சிறுபான்மையினரையும் மதிக்க வேண்டும். பழைய ஆட்சியின் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். புதிய சிரியா பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராட வேண்டும் மற்றும் அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தாத ஒரு நல்ல நாடாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்ற செய்தியை வழங்கி இருந்தார். இது அதிகார ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தியல் நிலைப்படுத்தலில் ஒரு பரிணாமத்தை வெளிப்படுத்துகின்றார்.

நான்காவது, பயங்கரவாத சாயலை தவிர்க்கும் முனைப்பிலானதாகவே சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் போக்கு காணப்படுகின்றது. கடந்தகால ஜிஹாதி செயற்பாட்டு காலப்பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட அடையாளங்களை மாற்றும் செயற்பாட்டை முதன்மைப்படுத்தியுள்ளது. சிரியாவின் புதிய ஆட்சித் தலைவர் ஜோலனி, சலாபி-ஜிஹாதி உருவத்திலிருந்து சர்வதேச சமூகம் இறுதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக பரிணாம வளர்ச்சியடைகின்றார். இது அவரது அடையாளம் மற்றும் பிரச்சாரத்தில் மூலோபாய மற்றும் குறியீட்டு மாற்றங்களால் குறிக்கப்படுகிறது. ஜோலனி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு சிரியாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், அஹ்மத் அல்-ஷாரா என்ற பெயருடன் கையொப்பமிடப்பட்ட செய்தியை வழங்கினர். ஜிஹாதி அடையாளத்துடன் பொருந்திய ஜோலனி என்ற காரணப்பெயரை தவிர்த்திருந்தார். இந்த அடையாள மாற்றம் அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு மற்றும் அல்-நுஸ்ரா ஆகியவையுடன் பிணைக்கப்பட்ட பெயரைக் களைந்து, அவர் இனி அதே நபர் அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்தில் குறிப்பிடத்தக்க மக்கள் தொடர்பு முயற்சியாகும். அத்துடன் இவ்அடையாள மாற்றம் ஒருவகையில் மேற்காசியாவில் அமெரிக்காவின் கரமாக செயற்படும் இஸ்ரேலுக்கு இணக்கமான செய்தியை வழங்குவதாக அமைகின்றது. 'அல்-ஜோலானி' என்பது சிரியாவின் தென்மேற்கு மூலையில் உள்ள பீடபூமியான கோலன் ஹைட்ஸ் பற்றிய குறிப்பு ஆகும். இது 1967இல் சிரியாவிலிருந்து கைப்பற்றப்பட்ட பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கான அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக 1981இல் இஸ்ரேலால் இணைக்கப்பட்டது. இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட சிரிய பகுதியிலேயே அல்-ஷாரா சொந்த நிலத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காரணப்பெயரை தவிர்த்துள்ளமை இஸ்ரேல் மீதான அவரது நிலைப்பாட்டு மாற்றத்தையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறே கொள்கையளவிலும் அரசியல் உரையாடல்களிலும் பாரிய மாறுதல்களை வெளிப்படுத்தியுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவை இல்லாது செய்து சிரிய இராணுவமாக மாற்றுவது தொடர்பிலும் உரையாடப்படுகின்றது. அதிகார ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தியல் நிலைப்படுத்தலில் ஒரு பரிணாமத்தை சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.

எனவே, சிரியாவின் புதிய ஆட்சி மீது அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் மென்போக்கான சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தை நிராகரித்தது போன்றதான செயலொழுங்கை தொடரவில்லை. மாறாக எச்சரிக்கை எனும் விம்பத்தினூடாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவை ஏற்றுக்கொள்ளும் நிலைமைகளே காணப்படுகின்றது. கிளர்ச்சிக்குழுவின் கடந்த கால வரலாற்றின் முன்அனுபவத்தில், மத சிறுபான்மையினரையும் பெண்களையும் எப்படி நடத்தும் என்ற அச்சத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஐரோப்பிய நாடுகள் சிரியாவுடன் அசாத் தூக்கியெறியப்பட்டதில் இருந்து எச்சரிக்கை விம்பங்களுடன் தொடர்பு கொள்கின்றன. இது சிரியாவின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் மேற்கு ஆசியாவில் பெரிய அரசுகளின் நலன்சார் போட்டியையுமே குறித்து நிற்கின்றது. சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷhர் அல்-சதாத், ஈரான் மற்றும் ரஷ்சியாவுடன் நெருக்கமான கூட்டுறவை பேணி வந்தார். புதிய ஆட்சி சதாத் ஆட்சியை கவிழ்த்துள்ள நிலையில், சிரிய மீதான ரஷ்சியா-ஈரான் கூட்டணியின் செறிவை தளர்த்தி, அமெரிக்க தலைமையிலான கூட்டணி ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒழுங்கையே சிரியாவின் பிராந்திய மற்றும் சர்வதேச இராஜீக நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றது.








Comments

Popular posts from this blog

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-