போலியான விளம்பர அரசியலில் மூழ்கியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்! -ஐ.வி.மகாசேனன்-

அரசியல் என்பது நலன்சார் விளையாட்டாகவே அமைகின்றது. இவ்நலன் தேசியத்தின் அடிப்படையிலோ அல்லது தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அடிப்படையிலோ கட்டமைக்கப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலன்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றது. விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் விடுதலைக்கான இயல்பை கொண்டிருக்க தவறியுள்ளது என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. அதனடிப்படையிலேயே 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட வேட்பாளர்களின் தோல்வியினூடாக உறுதி செய்யப்பட்டது. எனினும் அரசியல்வாதிகள் தோல்வி சார்ந்த தெளிவான படிப்பினையை உள்வாங்க தவறியுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய முலாமிற்குள் போலியான விம்பங்களையே கட்டமைக்கின்றார்கள். கடந்தவாரம் தமிழக அரசின் ஏற்பாட்டிலான அயலக தமிழர் தின விழாவில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நடத்தையும் போலி விம்பங்களின் தொடர்ச்சியையே தக்கவைத்துள்ளது. இக்கட்டுரை தமிழக அரசின் அயலக தமிழர் தின நிகழ்வில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் திணித்துள்ள போலியான விளம்பரங்களை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் ஏற்பாட்டில் ஜனவரி 11 மற்றும் 12ஆம் திகதிகளில் சென்னையில் அயலக தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. 2022ஆம் ஆண்டு முதல் தமிழக அரசினால் ஷதமிழ் வெல்லும்' எனும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் தின விழா சென்னையில் மாநாடாக நடாத்தப்படுகின்றது. இந்த விழாவில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா, துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 60இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பட்டோர் பங்கேற்கின்றனர். நான்காவது ஆண்டாக 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வில் 1000இற்கும் மேற்பட்டோர் நாடு கடந்து சர்வதேச பங்காளர்களாக பங்குபற்றியிருந்தார்கள். இரண்டு நாள் நிகழ்வில் முதல் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பட்டியில் இலங்கையை சேர்ந்த வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இரண்டாம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பட்டியில் இலங்கையை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் அழைப்பிதழில் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

தமிழக அரசின் அயலக தமிழர் தின மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களை தவிர்த்து இலங்கை அரசியல் தரப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அயலக தமிழர் தின நிகழ்வு தொடர்பிலான இரா.சாணக்கியனின் சமுகவலைத்தளப் (Facebook) பதிவு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அப்பதிவில், 'இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த மு.க. ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் அவரே அவரது தொலைபேசியில் எம்மை செல்பி எடுத்துக் கொண்டார்' எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டதாகவே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் ஆகியோரது சமுகவலைத்தள பதிவுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

சிறப்பு விருந்தினராக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைப்பிதழில் இணைக்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் உள்ளக முரண்பாட்டை தமிழகம் வரையில் காவிச்செல்லும் ஒரு நிகழ்வாகவே இரா.சாணக்கியன் மற்றும் ம.ஆ.சுமந்திரனின் விளம்பரங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இரா.சாணக்கியன் மற்றும் ம.ஆ.சுமந்திரனின் விளம்பரங்கள் போலிகள் மற்றும் மிதமிஞ்சிய வர்ணிப்புக்களை கொண்டுள்ளதாகவே அமைகின்றது. இப்பத்தி எழுத்தாளரும் அயலக தமிழர் தின நிகழ்வில் பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார். அவ்அனுபவத்தை இப்பத்தியில் பகிர்வதனூடாக, இரா.சாணக்கியன் மற்றும் ம.ஆ.சுமந்திரன் ஆகியோரின் விளம்பரங்களின் நிஜத்தை மக்களின் பகுப்பாய்வு எண்ணங்களுக்கு விடப்படுகின்றது.

ஒன்று, இணையத்தில் அயலக தமிழர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கான பதிவினை மேற்கொண்டு அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்வது திறந்த பொறிமுறையாகும். அதில் பதிவு செய்பவர்களை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை விருந்தினர்களாகவே வரவேற்றிருந்தது. குறிப்பாக பயணச்சீட்டு தவிர்ந்த அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. சென்னை விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையத்திலிருந்து வரவேற்று சென்று, தங்குமிட வசதிகளை செய்து தந்திருந்தார்கள். இப்பின்னணியில் சென்னைக்கு வெளியே இருந்து வருகை தந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் தமிழக அரசின் அழைப்பின் விருந்தினர்களாவே உள்வாங்கப்பட்டிருந்தார்கள். ஏழத்தாழ 500இற்கும் குறைவில்லாத வகையில் விருந்தினர்கள் தமிழக அரசினால் வரவேற்கப்பட்டுள்ளார்கள். அவ் ஐந்நூறுகளிற்கு குறைவில்லாத விருந்தினர்களில் மூவராகவே இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ம.ஆ.சுமந்திரனும் தமிழக அரசினால் வரவேற்கப்பட்டுள்ளார்கள் என்பதே எதார்த்தமானதாகும்.

இரண்டு, ஜனவரி-12அன்று அயலக தமிழர் தின நிகழ்வினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கியிருந்தார். நிகழ்வின் இறுதியில், தமிழக முதலமைச்சர் பார்வையாளர் அரங்கில் வருகையாளர்களிற்கு நடுவே சென்று, அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கலந்துகொண்ட பார்வையாளர்கள் செல்பி எடுக்க முயன்ற போது, முதலமைச்சர் அவர்களின் தொலைபேசியை பெற்று, இணைந்து செல்பி எடுத்து கொடுத்தார். ஏறத்தாழ கலந்துகொண்ட 1500இற்கும் குறைவில்லாத பார்வையாளர்களையும் அருகில் சென்று சந்தித்ததுடன், விரும்பி தொலைபேசி நீட்டியவர்களுடன் மறுப்பின்றி செல்பியும் எடுத்துக்கொண்டார். அவ்வரிசையில் நெருக்குப்பட்டுத்தான் இரா.சாணக்கியன் தனது தொலைபேசியை தமிழக முதலமைச்சரிடம் கொடுத்து, ம.ஆ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதனும் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார்கள். ஜனவரி-12அன்று அயலக தமிழர் தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் ஏறத்தாழ 1000இற்கும் குறையாத செல்பி புகைப்படங்களில் ஒன்றாக இரா.சாணக்கியனின் சமுகவலைத்தள பதிவு புகைப்படமும் காணப்படுகின்றது.

ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது தார்மீக அடிப்படையில், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தை அடிப்படை கொள்கையாக வரித்துக்கொண்டதாக அமைவதே அவசியமானதாகும். எனினும் ஈழத்தமிழர்களின் அரசியல் தரப்பினர் அவ்வாறானதொரு இயல்பை கொண்டிருக்கவில்லை.

போலிகளைக்கொண்டே தமிழ்த்தேசிய அரசியலை தமிழ் அரசியல் கட்சிகள் வடிவமைத்துள்ளனர். அதன் விளைவாகவே தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களிடமிருந்து விலகிச் செல்லும் போக்கினை 2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ்த்தேசியம் என்பதை வெறுமனவே தேர்தல் பிரச்சார சொல்லாகவே தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். மாறாக தமிழ்த் தேசியத்தை வாழ்வியல் கருத்தியலாக நடைமுறைப்படுத்த தவறியிருந்தார்கள். தேசியம் என்பது அடிப்படையில் உணர்வுடன் ஒருங்கிணைவதாக அமைவதனால், போலியான விம்பங்களின் மீது உணர்வை திணிப்பதனூடாகவே வாக்கு அரசியலை தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்தார்கள். தமிழ் மக்களின் வாழ்வியல் இருப்புடன் இணைந்த அடிப்படைத் தேவைகளை பொருட்படுத்த தவறியிருந்தார்கள். இந்த பின்னணியிலேயே 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்கள். எனினும் கடந்த கால படிப்பினையை உள்வாங்க தவறியுள்ளார்கள். தொடர்ச்சியாக போலியான விளம்பரங்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதிலேயே முனைப்பாக உள்ளார்கள். அயலக தமிழர் தின நிகழ்வை மையப்படுத்தி இரா.சாணக்கியன் மற்றும் ம.ஆ.சுமந்திரன் மேற்கொண்டுள்ள போலி விளம்பரங்கள் அத்தகைய அரசியல் தொடர்ச்சியையே உறுதி செய்கின்றது. 

இது கடந்த கால அவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஜயங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்களை சந்திப்பதாகவும், ஈழத்தமிழர் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உரையாடுவதாகவும் தங்கள் சமுகவலைத்தளங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இதன் நம்பகத்தன்மையும் அயலக தமிழர் தின நிகழ்வில் உடைக்கப்பட்டுள்ள போலி விம்பத்தின் பின்னர் சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரசாங்க தலைவர்கள் (ஜனாதிபதி/ பிரதமர்) கூட பொது மக்களுடன் இயல்பாக பழகும் நிலைமைகளே காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகளில் கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூட்டோ கலந்து கொண்டவை கடந்த காலங்களில் செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலைமைகளில் தமிழ் அரசியல்வாதிகள் அமெரிக்க-ஐரோப்பிய பயணங்களின் போது வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சாதாரண சந்திப்புக்கள் இலகுவானதாகும். வெறுமனவே புகைப்படங்களிற்காக அச்சந்திப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார்களா என்ற பொதுசந்தேகமே பொதுவெளியில் உருவாகியுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் சீரழிவான அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடு தமிழகம் வரையில் நீட்டப்பட்டுள்ளமையையே அயலக தமிழர் தின நிகழ்வை மையப்படுத்தி எழுந்துள்ள சச்சரவு உறுதி செய்கின்றது. யுத்தம் இயல்பாக சமுக சீரழிவை ஏற்படுத்துவது எதார்த்தமானதாகும். எனினும் ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னர் திட்டமிட்ட வகையில் சீரழிப்பு யுத்தம் ஒன்று ஈழத்தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஈழத்தமிழர்கள் மீதான சீரழிப்பு யுத்தம் வெறுமனவே தென்னிலங்கை அரச இயந்திரத்தால் மாத்திரம் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாலும் தெரிந்தும் தெரியாமலும் திட்டமிட்ட வகையில் சீரழிப்பு யுத்தத்தை மேற்கொள்வதுடன் துணைபோகும் நிலைமைகளும் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகவே தமிழ்ப் பரப்பில் உறுதியானதொரு தமிழ் அரசியல் கட்சியை இனங்காணமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ் மக்களின் திரட்சியை வெளிப்படுத்திய கூட்டணிகள் பிளவுபட்டு, இன்று பாராம்பரிய அரசியல் கட்சியும் அணிகளாக பிளவுபடும் நிலைமைகளே காணப்படுகின்றது. அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு தமிழகத்துக்கான ஈழத் தமிழ் அரசியல்வாதிகளின் படையெடுப்பும் போலி விளம்பரங்களும் அணிசார் போட்டி அரசியல் எதார்த்தத்தையே உறுதி செய்துள்ளது. இது ஈழத்தமிழ் அரசியல் சீரழிவை தமிழகம் வரை இழுத்து சென்றுள்ளது. 

மேலும்,  தேசிய விடுதலைக்காக பேராடிய போராட வேண்டிய தேசிய இனத்தின் இலக்கை பொருளாதார பக்கத்திற்கு மாத்திரம் திசைதிருப்பியதுடன், தமிழ் மக்களை உள்ளார்ந்த சிந்தனையற்றவர்களாய் போலி விளம்பர அரசியலுக்குள் நகர்த்தியமையில் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளுமே பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் அநுர அலையின் தொடர்ச்சியான தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும், சமுகவலைத்தள ஆதிக்கத்தை மையப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றியும் கிழக்கில் இரா.சாணக்கியனின் வெற்றியும் போலி விளம்பர அரசியலினதும், பொருளாதார நாட்டம் சார்ந்த திசை திருப்பலினதும் விளைவிலானதாகவே அமைகின்றது. அதன் தொடர்ச்சியாகவே போலி விளம்பரத்தையும் மக்களை ஏமாற்றும் அரசியலையும் தமிழ் அரசியல்வாதிகள் பாதுகாக்க விரும்புகின்றனர். அதனையே அயலக தமிழர் தின நிகழ்வில் பொய்யான செய்திகளில் உறுதி செய்துள்ளனர்.

எனவே, ஈழத்தமிழ் அரசியல்வாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனின் போலியான அரசியல் விளம்பரம், தமிழ் மக்களை அவர்கள் முட்டாள்களாகவே கருதுகின்றார்கள் என்ற செய்தியையே உறுதி செய்கின்றது. தமிழகத்துடன் ஈழத்தமிழர்கள் நெருக்கமான உறவை பேணுகின்றார்கள். வடக்கு-கிழக்கில் பெரும்பாலான வீடுகளின் தொலைக்காட்சிகளை இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளே நிரப்பியுள்ளது. இலங்கை அரசியல் செய்திகள் தெரியாத சாமானியர்களிடமும் தமிழக அரசியல் நடப்புகள் தெரியும் களச்சூழலே காணப்படுகின்றது. இவ்வாறானதொரு சூழலில் தமிழகத்தின் முதல்வர் கலந்து கொள்ளும் பிரதான நிகழ்ச்சியொன்றை தமது எண்ணங்களுக்குள் பொய்யாகக்கூறி தமிழ் மக்களை ஏமாற்றலாம் எனும் எண்ணம், தமிழ் மக்கள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள எண்ணங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. அயலக தமிழர் தின நிகழ்வுகளில் பங்கேற்பது தமிழக முதல்வரோடு சந்திப்புக்களை மேற்கொள்வது ஆரோக்கியமான அரசியல் செயற்பாடாகும். எனினும் போலியாக விளம்பரப்படுத்துவதும்; சமானியர்களுடன் நெருக்குவாரப்பட்டு சந்தித்து, செல்பி எடுப்பதற்கு முண்டியடிப்பதும் வாக்களித்த ஈழத்தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகவே அமைகின்றது.


Comments

Popular posts from this blog

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-