தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-

தேர்தல் காலங்களை பொருத்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடல்களும் விவாதங்களும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. இவ்வாறான ஒழுங்கின் தொடர்ச்சியாகவே பீரிஸ்-நீலன் தீர்வுப்பொதி, 13பிளஸ், ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு என்பன விவாதிக்கப்பட்டது. அத்தகைய உரையாடல்களின் இறுதி விளைவு தென்னிலங்கை அரசாங்கங்கள் தமது பதவி காலத்தில் ஈழத்தமிழ் தலைமைகளையும் சர்வதேசத்தையும் தங்கள் வரையறைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதாகவே அமைகின்றது. குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடலும் விவாதமும் பீரிஸ்-நீலன் தீர்வுப்பொதியை மையப்படுத்தியே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக்காலப்பகுதியில் 13பிளஸ் மற்றும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு என்பவற்றுக்குள்ளே உரையாடல் மட்டுப்படுத்தப்பட்டது. அவற்றின் செயலாக்கங்கள் பூச்சியங்களாகவே அமைந்துள்ளது. அறிக்கைகளாகவும் நிராகரிப்புகளாகவும் மாத்திரமே பதிவாகியுள்ளது. சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பிரேரிப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த காலங்களிலிருந்து மாறுபட்ட விதத்தில் தனியொரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2ஃ3 பெரும்பான்மையையும் பெற்றுள்ளது. இது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான அதிக எதிர்பார்ப்பை பொதுத்தளத்தில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை புதிய அரசியலமைப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உள்ளடக்கங்களின் கருத்தாக்கம் மிகக் குறைவானதாகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்க உருவாக்கத்தின் பின்னரான கடந்த 100 நாட்களிலும் புதிய அரசியலமைப்புக்கான எத்தகையதொரு வழித்தடத்தையும் கண்டறியமுடியவில்லை. மாறாக சிதறடிக்கப்பட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் தரப்பினரே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தொடர்ச்சியாக விவாதித்து வருகின்றனர். அதிலும் கட்சிகளிடையே முரணான கருத்துக்களும் ஆழமாக காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடந்த காலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முதன்மைப்படுத்தியுள்ளார்கள். அதற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு ஒத்துழைப்பை வலியுறுத்தி உரையாடல் களத்தையும் திறந்துள்ளார். மாறாக தமிழரசுக்கட்சியின் மக்களால் தோற்கடிப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2015-2019 தேசிய அரசாங்க காலப்பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணங்கிச் சென்ற ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை மீள்சுழற்சிக்கு கொண்டு வருவதற்கான உரையாடல்களையே முன்னெடுத்து வருகின்றார். எம்.ஏ.சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழரசுக்கட்சியின் பலவீனமான தலைமைத்துவ ஆளுமைகளால், தமிழரசுக்கட்சியின் தீர்மானமிக்க செயலாக்க தலைவராக எம்.ஏ.சுமந்திரனே தொடர்கின்றார். ஆதலால் தமிழரசுக்கட்சி ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபுடன் இணங்கிச் செல்லும் நிலைமைகளே காணப்படுகின்றது. தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டமும், ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபும் அடிப்படையில் முரணான தீர்வு திட்டங்களாகும். அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழரசுக்கட்சி ஆகிய இருதரப்பும் மற்றைய தரப்பின் தீர்வு திட்டங்களை நிராகரிப்பதாகவே அமைகின்றது. விதிவிலக்காக தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தலைவரும், தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தமிழ் மக்கள் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு ஒத்துழைப்புக்கு இணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார். எனினும் தமிழரசுக்கட்சியாக இத்தகைய இணக்கத்தை உருவாக்கக்கூடிய ஆளுமை சிவஞானம் சிறிதரனிடம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் வலுவான சந்தேகங்களே பொதுவெளியில் காணப்படுகின்றது. முடிவு நம்பிக்கையீனமானதாகவே அமைகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த புதிய அரசியலமைப்புக்கான விவாதத்தில் ஒரு பங்காளிகளான தமிழ்த்தரப்பு உள்ளக முரண்பாடுகளுடன் விவாதத்தை திறந்துள்ளது. எனினும் தீர்வை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசாங்க தரப்பிடமிருந்து இதுவரை எவ்வித சாதகமான எதிர்வினைகளையும் அடையாளங் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினையை ஏற்றுக்கொள்வதாகவோ உரையாடல் களத்தை திறக்க மறுக்கின்றார்கள். எனினும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான இணக்கத்தை ஒருசில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனை நுணுக்கமான அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி ஒரு பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் நான்கில் ஷஅபிமானமிக்க வாழ்க்கை – நிலை தளராத நாடு' என்ற தலைப்பின் ஒரு பகுதியாக ஷபுதிய அரசியலமைப்பு - இலங்கை தேசிய ஓருங்கிணைப்பு' எனும் பகுதி உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இது கடந்த கால பிரதான அரசியல் தரப்புக்களின் ஷஅரசியலமைப்பு மாற்றம்' பற்றிய உரையாடலிலிருந்து வேறுபடுவதாக அமைகின்றது. கடந்த காலங்களில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த பொதியை கொண்டதாகவே அரசியலமைப்பு மாற்றங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது. எனினும் சமகால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாற்றத்தில் தேசிய இனப்பிரச்சினை என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. மாறாக அரசியல் நிர்வாக கட்டமைப்பு மாற்றத்தை முதன்மைப்படுத்திய அரசியலமைப்பு மாற்றத்தையே பிரேரிக்கின்றது. குறிப்பாக இலங்கையின் நிறைவேற்றுத்துறை முறைமை நீக்கம், அமைச்சரவையின் மட்டுப்பாடுகள், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைக் கட்டுப்பாடுகள், இலங்கையர்களுக்கான மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் (அதிலும் சிறுவர், பெண்கள் உரிமை என இலங்கைக்கு பொதுவான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளது) போன்ற விடயங்களே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்திய தீர்வுப் பொதியென எவையும் விசேடமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 'தேசியத்துவங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும் மத ரீதியான குரோதத்தையும் ஏற்படுத்தாத ஆண் - பெண் பால்நிலை அல்லது வேறு விடயங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமை ஆகிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாக மொழிச்சுதந்திரத்தை உறுதி செய்தல்' என்பதே குறைந்தபட்சம் இனப்பிரச்சினையுடன் தொடர்புறும் விடயமாக அமைகின்றது.

இரண்டாவது, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தேசிய இனப்பிரச்சினை சார்ந்த உரையாடல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்திருந்தது. வடக்கு-கிழக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களிலும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை முன்னிறுத்தியதாகவே பிரச்சார உள்ளடக்கங்கள் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதியாக அநுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போதும், 'மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான உறுதிப்பாடு, இராணுவம் மற்றும் அரச இயந்திரத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்ளின் நிலங்கள் மீள ஒப்படைப்பதற்கான உறுதிப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளை புத்துயிர் பெறுதல்' போன்ற விடயங்களையே முதன்மைப்படுத்தியிருந்தார். மாறாக யாவற்றினதும் சீர்குலைவிற்கும் அடிப்படையான தேசிய இனப்பிரச்சினையை ஜனாதிபதி  ஏற்றுக்கொள்ளாத நிலைமையே உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய போக்கிலேயே தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் ஊடக சந்திப்புக்களும் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விடயங்களில் இலங்கை அரசியல் நிர்வாக மாற்றங்களையே முதன்மைப்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசியலமைப்பு மாற்றம் பற்றிய உரையாடல்களில் வெறுமனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியே உரையாடல்களை வழங்குகின்றார்கள். அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பினூடாகவே உறுதிப்படுத்தப்படும் என்ற விடயங்களையே தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள். குறிப்பாக செப்டெம்பர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திசநாயக்கவின் பதவிப்பிரமாண நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, 'இந்த நாட்டின் கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை நீங்கள் இன்று தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இனிமேல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் இருக்க மாட்டார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இல்லாதொழிக்கும் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கின்றோம்' எனக்குறிப்பிட்டிருந்தார். ஹந்துன்நெத்தி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான அரசியல் இயக்கமான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் செய்தியாளர் சந்திப்புக்களில் புதிய அரசியலமைப்பு பற்றிய விடயங்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியும் மக்கள் தீர்ப்பு பற்றியுமே குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது, தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கான பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை என்பது இலங்கையின் அரசியல்-பொருளாதார நிர்வாக மாற்றத்திற்கானது என்ற உரையாடலே முதன்மையானதாக அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் உடனடி பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 159 இடங்களை வென்றது. மற்ற கட்சிகளை நம்பாமல் புதிய அரசியலமைப்பை இயற்றுவது உட்பட மிகப்பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள அனுமதித்தது. ஆனால் இத்தனைய அனுமதி பொருளாதார மீட்புக்கானது என்ற அடிப்படையிலேயே தென்னிலங்கை நிபுணர்களின் கருத்துக்கள் அமைகின்றது. இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான சுகேஸ்வர சேனாதிரா சபன் செய்திகளில் (Sapan News), 'தேசிய மக்கள் சக்தியின் தளம் கடந்த கால பாரம்பரிய அரசியல் அனுசரணையிலிருந்து வெளியேறி, இலங்கையின் சமீபத்திய அரசியல் உரையாடலில் ஆதிக்கம் செலுத்திய பொருளாதார சமத்துவமின்மை மற்றும் ஊழல் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்துகிறது' எனக்குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் அரசியல் பொருளாதார நிபுணர் தேவக குணவர்தன அல் ஜசீராவிடம் 'அரசியல்வாதிகளை ஊழலுக்குப் பொறுப்பேற்கச் செய்வது உட்பட, அமைப்பு மாற்றம் குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால் பொருளாதாரப் பாதையைப் பற்றி ஒரு பெரிய விவாதம் நடக்கிறது. நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் பேரழிவிற்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அதே வேளையில், கடன் பொறியில் இருந்து இலங்கை விடுபட முடியுமா என்பதே கேள்வி' என்றவாறு குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கை நிபுணர்களின் கருத்து தென்னிலங்கை பொதுவெளியின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீதான தென்னிலங்கையின் எதிர்பார்ப்பு பொருளாதார ஈடேற்றமாகவே அமைகின்றது. 

எனவே, தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளும் மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஆணையும் தேசிய இனப்பிரச்சினையை ஒரு பகுதியாகக் கூட கொண்டிருக்கவில்லை என்பதுவே நிதர்சனமாகும். இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருந்த பொருளாதார நெருக்கடியை வெறுமனவே கடந்த கால அரசியல் நிர்வாக சீர்கேடாக பிரச்சாரப்படுத்தியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மாறாக பொருளாதார பிரச்சினையின் அடிப்படை இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஆழமாக பொதிந்துள்ள தேசிய இனப்பிரச்சினையிலிருந்தே கட்டமைக்கப்பட்டது என்ற நிதர்சனத்தை பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள இயலாத பாராம்பரிய பேரினவாத அரசியல் கலாசாரத்தின் தொடர்ச்சியாகவே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு நிலையானதாக அமையப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை பிரேரிக்கும் ஷஅபிமானமிக்க வாழ்க்கை – நிலை தளராத நாடு' எனும் அத்தியாய தலைப்பின் நிலை தளராத நாட்டை உறுதிப்படுத்த தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அடிப்படையானதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் திருமணம் செய்யாத மனைவியை ஏற்றுக்கொள்வதா? விவாகரத்து செய்வதா? என்ற விவாதங்களுக்கு சமாந்தரமாக, வீட்டு பெரியவர்கள் திருமணத்துக்கான ஏற்பாட்டை செய்யக்கூடிய சூழலை நெருக்கடியை உருவாக்குவதே இன்றைய தேவையாக அமைகின்றது.

Comments

Popular posts from this blog

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-