அயலக தமிழர்தின அரசியல் வாய்ப்புக்களும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

ஈழத் தமிழர் அரசியலில் வெளியுறவு கொள்கை என்பது பெருமளவு பூச்சியமாகவே அமைகின்றது. உள்ளக அரசியலிலேலேயே தெளிவான அணுகுமுறையை கொண்டிராத போது, வெளியுறவை பற்றி சிந்திப்பது பயனற்றதே ஆகும். எனிலும் உள்ளக அரசியலைப் போல வெளியுறவை கையாள்வது, எதிர்காலத்தையும் நெருக்கடிக்கு தள்ளக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றது. ‘உதவி செய்யாவிடினும் பரவாயில்லை; உபத்திரம் செய்யக்கூடாதெனும்’ உரையாடல் பொதுவில் காணப்படுகின்றது. அது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமானதாகும். ஈழத்தமிழர் அரசியல்வாதிகளின் ஆளுமைக்குள் தமிழ்த்தேசிய அரசியலினை முன்னேற்றகரமாக நகர்த்த முடியாவிடினும், அதனை அழிக்காது இருப்பதே சமகாலத்தின் தேவைப்பாடாகும். கடந்தவாரம் இப்பகுதியில் இந்தியாவின் தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவை மையப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட போலி விளம்பரம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இன்னொரு தளத்தில் போலி விளம்பரம் தேர்தல் ஆசனத்தை மையப்படுத்திய போட்டியாக அமையலாம். தேர்தலை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இவ்இயல்பு எதார்த்தமானதாகும். மறுதளத்தில் அயலக தமிழர் தின விழாவில் போட்டி போட்டு பங்கேற்பதனூடாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நலன்களையும் சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இக்கட்டுரை அயலக தமிழர் தின விழாவில் ஈழத்தமிழர்கள் பெறக்கூடிய நலன்களை சுட்டிக்காட்டுவதாகவும், அரசியல்வாதிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டவற்றை இனங்காண்பதாகவுமே உருவாக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு தமிழக அரசினால் அயலக தமிழர் தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இலங்கையிலிருந்து அரச தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமாந்தரமாக தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும் சிறப்பு விருந்தினர்களாக தொடர்ச்சியாக அழைக்கப்பட்டு வருகின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். தமிழரசுக்கட்சியின் தோல்வியுற்ற பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான ம.ஆ.சுமந்திரனின் கருத்துக்களும் அதனையே உறுதி செய்கின்றன. 2022ஆம் ஆண்டு முதலாவதாக நிகழ்நிலையில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் ம.ஆ.சுமந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டுள்ளார். 2023ஆம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற இரண்டாம் இரண்டாம் வருட நிகழ்விலும் ம.ஆ.சுமந்திரனே சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வு முதல் முறையாக தமிழகத்தில் நேரடி பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தது. மூன்றாவது வருடம் 2024 ஆம் ஆண்டு நிகழ்வில் மட்டக்களப்பு பபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சிறப்பு அதிதியாக பங்குபற்றியிருந்தார். இவ்வரிசையிலேயே 2025 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார். கடந்த காலங்களில் அயலக தமிழர் தின நிழ்வில் தமது பங்குபற்றல் தொடர்பில் சுமந்திரன் ஊடக செய்திகளில் பெருமைப்பட்டிருந்தார். சிறப்பு அதிதி அழைப்பும், மேடைக் கௌரவிப்பும் ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைமை பூர்த்தி செய்ய போதுமானதா என்ற எண்ணங்களிலிருந்து, தமிழ் அரசியல்வாதிகள் அயலகத் தமிழர் தின விழாவை எவ்வாறு அணுகி உள்ளார்கள் என்பதை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

முதலாவது, தமிழக அரசினால் 2022ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படும் அயலக தமிழர் தின விழாவின் தார்ப்பரியத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதான நிலையை பெறுகின்றது.  2012ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தால் (தி.மு.க) 2022ஆம் ஆண்டு வரையில் வெற்றி பெறமுடியவில்லை. இவ்நீண்ட தோல்விகளுக்கு பின்னால், 2006-2009ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் தி.மு.க ஆட்சியின் மெத்தனப்போக்கு மீதான விமர்சனமும் காரணமாகிறது. தமிழக வரலாறு மற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில் உலகத் தமிழர்களின் அரண் என்ற விம்பத்தை கட்டமைத்து வந்துள்ளது. ஈழ விடுதலையின் ஆயுதப்போராட்ட ஆரம்ப காலப்பகுதிகளிலும், தமிழகம் போராட்டக்குழுக்களுக்கு அரணாகவே செயற்பட்டுள்ளது. எனினும் 2009களில் தி.மு.க ஈழத்தமிழர்களை பாதுகாக்க தவறியது பிரதான குற்றச்சாட்டாக அமைகின்றது. இக்குற்றச்சாட்டை களைவதும், தி.மு.க ஆட்சிக்கு உலக தமிழர்களின் அங்கிகாரத்தை உறுதிப்படுத்துவதும் அவசியமான தேவைப்பாடாக அமைகின்றது. இப்பின்னணியிலேயே 2022ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க அயலக தமிழர்களை இலக்கு வைத்த அணுகுமுறையை ஆரம்பித்திருந்தது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் அயலக தமிழர் நலன் மற்றும் தமிழர் மறுவாழ்வுத்துறை எனும் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. ஜனவரி-12ஆம் திகதியை அயலக தமிழர் தினமாக அறிவித்துள்ளது. இதனூடாக தமிழகத்திற்கும் உலகத் தமிழர்களிற்குமிடையிலான பிணைப்பை அறுவடை செய்வதனூடாக, கடந்த தி.மு.க ஆட்சி மீதான ஈழத்தமிழர் சார்ந்த கறையை துடைக்கும் அணுகுமுறையைநெறிப்படுத்தி வருகின்றது.

இரண்டாவது, தி.மு.க அரசாங்கத்தின் அயலக தமிழரை இலக்கு வைத்துள்ள செயற்பாடுகள் முழுமையாக, அவர்களுக்கு சாதகமான விளைவையே உருவாக்கியுள்ளது. அரசியல்ரீதியாக தி.மு.க.வின் கடந்த கால விமர்சனங்கள் உலக தமிழ் அரங்கில் தவிர்க்கப்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அயலக தமிழர் தின விழாவில் தி.மு.க அரசாங்கத்தின் அழைப்பை பெருமையாக பார்ப்பதும் அதனையே உறுதி செய்கின்றது. மறுதளத்தில் உலகத்தமிழர்களின் தாயகமாக தமிழகத்தை விம்பப்படுத்தி, உலகத்தமிழர்களின் பொருளாதார முதலீட்டை தமிழகத்திற்குள் உள்வாங்கும் செயற்பாட்டிலும் அயலக தமிழர் சார்ந்த தி.மு.க அரசாங்கத்தின் அணுகுமுறை வெற்றி பெற்றுள்ளது. வருடாந்தம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவின் ஒரு பகுதியாக வர்த்தக முதலீட்டை மையப்படுத்திய கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்படுகின்றது. இதில் வருடந்தோறும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் ஈழத்தமிழ் புலம்பெயர் முதலாளிகளும் தமிழகத்தில் முதலீட்டை குவித்து வருகின்றார்கள். 2025ஆம் ஆண்டு அயலக தமிழர் தின விழா பற்றிய தமிழக அரசின் செய்திக் குறிப்பில், “இந்த நிகழ்வில் 26 வெளிநாட்டு வாங்குநர்கள் மற்றும் 226 இந்திய விற்பனையாளர்கள் (இதில் 82 முதல் முறை ஏற்றுமதியாளர்கள் அடங்குவர்) பங்கேற்றனர். இந்த சந்திப்பில் உலகளாவிய தமிழர்களுக்கு ரூ.70 கோடிக்கும் மேலான பொருளாதார வாய்ப்புகளை கொண்ட 43 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது, ஈழத்தமிழர்கள் அரசியலின் தாக்கமும் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள அயலக தமிழர் தின விழாவில், ஈழத்தமிழர்களின் நிலை பலவீனப்பட்டுள்ளமையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் தமிழக மைதானங்களில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் விளையாடுவதிலேயே சிரமமான நிலை காணப்பட்டது. தமிழக அரசே சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, “இலங்கை வீரர்கள் அல்லது போட்டி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு போட்டியையும் சென்னையில் நடத்தக்கூடாது” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்து, தமிழகத்தில் தென்னிலங்கையை நிராகரிக்கும் சூழ்நிலை காணப்பட்டது. எனினும் சமகாலத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் அரசாயல் தீர்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லாத போதும், தென்னிலங்கை தொடர்பான தமிழகத்தின் அணுகுமுறையும் பார்வையும் மாறி உள்ளது. வருடாவருடம் அயலக தமிழர்தின விழாவில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு சமாந்தரமாக தென்னிலங்கை அரசாங்கத்தின் தமிழ்ப்பிரதிநிதிகளும் சிறப்பு அதிதியாக அழைக்கப்படுகின்றார்கள். 2025ஆம் ஆண்டு அயலக தமிழர் தின விழாவில் இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனும் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அமைச்சர் என்ற பதவி நிலையின் பிரகாரம் தென்னிலங்கை அமைச்சர் முன்வரிசையிலும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் பின்வரிசையிலும் அமர்த்தப்பட்டார். இது தென்னிலங்கை அரசாங்கம் தமிழக அரசுடன் நெருங்குவதையும், தமிழ்த்தேசிய அரசியல் புறமொதுக்கப்படும் நிலைமைகளையே பொதுவில் ஏற்படுத்துகிறது.

நான்காவது, ஈழத்தமிழரசியல் பிரதிநிதிகள் தம் சமுகத்தின் வலிமையை தமிழக அரசுடன் தந்திரோபாயமாக பயன்படுத்த தவறி வருகின்றார்கள். 2025ஆம் ஆண்டு அயலக தமிழர் தின நிகழ்வின் சிறப்பு அதிதி அழைப்பு என்பது, வெறுமனவே மேடை கௌரவிப்பு மாத்திரமாகவே அமைகின்றது. குறைந்தபட்சம் மேடையில் சிறப்பு உரைகளோ அல்லது தமிழக முதல்வருடன் தேநீர் விருந்து சந்திப்பு என்று எத்தகைய சிறப்பு அதிதிக்கான சிறப்பு நியமங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தில் தமிழக  ஆதரவே வரலாற்றில் பிரதானமாக இருந்துள்ளது. குறிப்பாக 2009களுக்கு முன்னர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசாங்கமும், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு முன்னணியான ஆதரவை வழங்கியுள்ளது. 1985ஆம் ஆண்டு, ‘தமிழீழம்தான் தீர்வு என்பதை உலக நாடுகளுக்கும் உணர்த்துவது; தமிழீழப் போராளிகளுக்கு உதவுதல்; மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்கச்செய்வது’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ‘டெசோ’ எனும் `தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை' (Tamil Eelam Supporting Organisation - TESO) உருவாக்கினார்கள். எனினும் சமகாலத்தில் தமிழகம் ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்திலிருந்து விலகி செல்வதில் ஈழத்தமிழ் அரசியல் அணுகுமுறையின் பலவீனங்களும் மையக் காரணமாகும். குறைந்தபட்சம் தமிழக அரசின் அழைப்பில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலாவது, ஈழத்தமிழர்களின் இன்றைய எதார்த்த நிலையையும் தமிழக அரசின் ஆதரவையும் திரட்டக்கூடிய தந்திரோபாய அணுகுமுறைகளை செயற்படுத்த தவறியுள்ளார்கள். கடந்த நான்கு ஆண்டுகள் நிகழ்வில் இரண்டாம் ஆண்டு நிகழ்வில் யாழ்ப்பாணதை அடையாளப்படுத்தும் யாழ் பொறிக்கப்பட்ட நினைவு பரிசையும், மூன்றாம் ஆண்டு நிகழ்வில் மட்டக்களப்பை அடையாளப்படுத்தும் மீன்பாடி பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசையும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளமையே உயர்ந்தபட்ச வெற்றியாக ஊடகங்களில் பெருமிதப்படுகின்றார்கள்.

ஐந்தாவது, தமிழ் அரசியல்வாதிகள் தமிழக அரசின் அழைப்பை விளம்பரப்படுத்துவதனூடாக மக்களிடம் தம்மை உயர்வாக விம்பப்படுத்த முயலுகின்றார்கள். மாறாக பயணங்களை வினைத்திறனாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பயன்படுத்தும் எத்தகைய திட்டத்தையும் கொண்டிருப்பதில்லை. அயலக தமிழர் தினம் வெறுமனவே தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்களுக்கான தொடர்புகளோடு சுருங்குவதில்லை. உலகத் தமிழர்கள் தமிழகத்தை மையப்படுத்தி ஒன்றிணைகின்றார்கள். அமெரிக்கா, கனடா, அவஸ்ரேலியா, ஐரோப்பா, மலேசியா, பப்புவா நியு கினியா என பரந்துபட்ட தமிழர்கள் ஒருங்குசேருகின்றார்கள். அந்நாடுகளின் தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலதரப்பட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். ஈழத்தமிழர்களிள் விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச தமிழ் அரசியல் ஆதரவை திரட்டுவதற்கு அயலக தமிழர் தின நிகழ்வுகளும் சந்திப்புக்களும் சிறந்த களமாக அமைகின்றது. கடந்த நான்கு வருடங்களாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிறப்பு அதிதிகளாக கலந்து வருகின்றார்கள். 2025ஆம் ஆண்டு போட்டி போட்டு சென்றிருந்தார்கள். குறைந்தபட்சம் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்ட செய்திகளையாவது பிற சமுகத்திடம் கடத்தினார்களா என்பதில் எதிரான பதில்களே கிடைக்கப் பெறுகிறது.

ஆறாவது, நிகழ்விற்கு செல்லும் தமிழ் அரசியல்வாதிகள், நிகழ்வு அரங்கிற்கு வெளியே எந்தவொரு அரசியல் செயற்பாட்டையும் முன்னெடுக்க விருப்பமற்றவர்களாகவே உள்ளார்கள். குறைந்தபட்சம் தமிழகத்தில் அகதிகளாக வாழும் தமது மக்களை சந்திக்க கூட நேரம் ஒதுக்காத நிலைமைகளையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அயலக தமிழர் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தமிழகத்தில் வாழும் அகதிகளை சந்தித்து உரையாடியதாக செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்கள். அது வெறுமனவே ஈழத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக அயலக தமிழர் தின நிகழ்வு அரங்கிற்கு தேடிச்சென்ற ஒரு சிலரையே சந்தித்து உரையாடி இருந்தார்கள். மாறாக அவர்களுடைய முகாம்களிற்கு சென்று மக்கள் குறைகளை தேவைகளை கேட்டறிய தயாராக இருக்கவில்லை. நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு அகதி தமது முகாமிற்கு வருகை தருமாறு சிவஞானம் சிறிதரனிடம் அழைப்பு விடுத்தார். நிகழ்வு நடைபெறும் அரங்கிலிருந்து அகதி முகாம் வெறுமனவே 22கி.மீ தூரமே இருப்பதாகவும் தெரியப்படுத்தினார். எனினும் சிறிதரன் முகாமிற்கு செல்ல மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் தான் கடந்த காலங்களில் 2014ஆம் ஆண்டு முகாமிற்கு சென்றதாவும் தெரிவித்திருந்தார். வாக்களிக்கும் மக்களிடமே ஐந்தாண்டு இடைவெளியில் தேர்தல் காலத்தில் செல்லும் தேர்தல் நலன் சார் அரசியல்வாதிகளிடம், வாக்கற்ற மக்களிடம் செல்ல வேண்டுமென எதிர்பார்ப்பது எதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதாகும்.

எனவே, தமிழகத்தின் அயலக தமிழர் தின நிகழ்வை தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கான அங்கிகாரமாக விளம்பர யுக்தியாகவே பார்க்கின்றார்கள். மாறாக அதில் ஈழத்தமிழர் அரசியல் சார்ந்து ஆழமாக பொதிந்துள்ள அரசியலை உள்வாங்க தவறுகின்றார்கள். தேர்தலை மையப்படுத்தி இயங்கும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தம்மை விளம்பரப்படுத்துவது எதார்த்தமானதேயாகும். அதற்கு அப்பால் குறைந்தபட்சமேனும் தமது வாக்காளர்கள் நலன்களையும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்திருப்பார்களாயின் தமிழ் அரசியல்வாதிகள் குறைந்தபட்சமேனும் தமிழ் மக்கள் நலனை அயலக தமிழர் தின விழாவை மையப்படுத்திய களத்தில் கையாண்டிருப்பார்கள். எனினும் தமிழ் அரசியல்வாதிகளிடம் துளியும் தமிழ் மக்களின் நலனில் அக்கறையிமையையே நடப்பு நிகழ்வுகள் உறுதிசெய்கின்றன. இக்கட்டுரை வெறுமனவே நடந்து முடிந்ததை அறிக்கையிடுவதாக அமையப்போவதில்லை. அயலக தமிழர் தின விழா தொடர்ச்சியானதாகும். அதன் அடிப்படை அரசியலும் நிலையானதாகும். 2026ஆம் ஆண்டும் அயலக தமிழர் தின நிகழ்விற்கு ஏதொவொரு தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறப்பு அதிதியாக அழைக்கப்படுவார். எதிர்காலத்திலாவது அரசியல் களத்தை பயன்படுத்த வேண்டும்; மக்கள் அவதானிக்கிறார்கள் என்ற செய்தியை வழங்குவதே இக்கட்டுரையின் பயனாக அமையும்.

Comments

Popular posts from this blog

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-