பலவீனமான போராட்டங்களால் தமிழ் மக்களின் போராட்ட மனநிலை சிதைக்கப்படுகிறது! -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியலில் ஜனநாயக வழிப்போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஆயுதமாக மாறியுள்ளது. உலக அரசியலிலும் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல், பயங்கரவாதத்தின் பெயரால் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்தது. அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 'இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை' என்பது ஜனநாயக வழிப் போராட்டத்திற்கு உரமளிப்பதாக அமைந்திருந்தது. எனினும் கடந்த 16 ஆண்டு கால இடைவெளியில் இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வகையிலான வினைத்திறனான போராட்டங்களை தொடர்ச்சியாக பின்பற்ற தவறியுள்ளார்கள். விதிவிலக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏறத்தாழ 3000 நாட்களை கடந்ததாக அமைகின்றது. எனினும் பிறரை தூண்டக்கூடிய வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலோ காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பரிணமிக்க தவறியுள்ளது. அதற்கான வழிகாட்டலையோ அல்லது நெறிப்படுத்தலையோ தமிழ் அரசியல் பிரிதிநிதிகளும் வழங்க விரும்பியிருக்கவில்லை....