அமெரிக்க வரிவிதிப்பு கொள்கையும் இந்திய-சீனா கூட்டாண்மையும் ஆசிய நூற்றாண்டை வேகப்படுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா உச்சநிலை பெற்ற காலத்தில் புதிய உலக ஒழுங்குக்கான உரையாடல், குறிப்பாக ஆசிய நூற்றாண்டுக்கான வாய்ப்புக்கள் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது. சீனா சார்ந்த பொருளாதார வளர்ச்சி பிரதான நிலையை பெற்றிருந்தது. எனினும், இந்திய – சீன முரண்பாடு ஆசிய நூற்றாண்டினை நோக்கிய உலக ஒழுங்கின் மாற்றத்தின் இடைத்தடங்கலாக விவாதங்களும் காணப்பட்டது. பின்னாட்களில் ரஷ;சிய-உக்ரைன் போர் மற்றும் காசா யுத்தத்தில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடுகள் வன்சக்தி ஊடாக அமெரிக்கா தனது மேலான்மையை பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. சமகாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைள் மீள ஆசிய நூற்றாண்டுக்கான விவாதத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கை சீன-இந்திய-ரஷ்சியா ஆகிய நாடுகளிடையே தவிர்க்க இயலாத இணைப்பை உருவாக்கும் தூண்டலாகவும் அமைகின்றது. இக்கட்டுரை அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கையால் தூண்டப்படும் இந்திய-சீன உறவின் ஸ்திரத்தன்மையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1924ஆம் ஆண்டில், ஜேர்மன் இராஜதந்திரி கார்ல் ஹவுஷோபர் (Karl Haushofer) 'பசிபிக் யுகம்' (Pacific age) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். ஹவுஷோபர் அடுத்த உலகளாவிய சக்திகளாக ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உருவாவதை எதிர்பார்த்தார். 'நம் கண்களுக்கு முன்பாக ஒரு மாபெரும் இடம் விரிவடைந்து வருகிறது. அதில் சக்திகள் குவிந்து வருகின்றன. அட்லாண்டிக் யுகத்தின் வாரிசு, மிகையான மத்தியதரைக் கடல் மற்றும் ஐரோப்பிய சகாப்தமாக, அவை பசுபிக் யுகத்தின் விடியலுக்காகக் காத்திருக்கின்றன' எனக்குறிப்பிட்டிருந்தார். ஆசிய நூற்றாண்டு என்ற சொல் 1980களில் இருந்து வருகிறது. சீனத் தலைவர் டெங் சியாவோபிங்கிற்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு டெங், 'சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் அடுத்த நூற்றாண்டு ஆசியா மற்றும் பசிபிக் நூற்றாண்டாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்' எனக்கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க காங்கிரஸிலும் இந்திய மற்றும் சீனாவின் எழுச்சியூடாக ஆசிய நூற்றாண்டுக்கான வாய்ப்பு 1980களில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில், அமெரிக்காவின் 'இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் தந்திரோபாயம்' ஒரு வகையில் காங்கிரஸின் எதிர்வுகூறலை வெற்றி கொள்வதற்கான மூலோபாயமாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் விவாதிக்கப்பட்டது.

1980களில் இருந்து ஆசிய நூற்றாண்டு பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வரிசையில் இரண்டாம் நிலையுடன் சீனாவின் இரட்டை இலக்க வளர்ச்சியின் தசாப்தம் மற்றும் இந்தியாவின் அசுர வேக வளர்ச்சியும் பொருளாதார வரிசையில் நான்காம் நிலைக்கான உயர்வு என்பன ஆசிய நூற்றாண்டு பற்றிய தேடலை ஆய்வாளர்களிடம் ஊக்குவித்துள்ளது. அதேவேளை இந்திய-சீன அதிகாரத்துவ போட்டி மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான 'வெற்றி-தோல்வி தந்திரோபாய' (Zero-Sum Strategy) நகர்வு பற்றிய விவாதங்கள் ஆசியா நூற்றாண்டை கேள்விக்குட்படுத்துபவையாகவே காணப்பட்டது. எனினும் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அதை அண்மித்து ஏற்பட்டுள்ள உரையாடல்களும் 'வெற்றி-வெற்றி தந்திரோபாயம்' (Win-Win Strategy) ஊடாக சீனா மற்றும் இந்தியா இணைந்து ஆசிய நூற்றாண்டை பகிர்வது தொடர்பான எண்ணங்களை இரு நாட்டு இராஜதந்திர உரையாடல்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சீன இராஜதந்திரிகள் மட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து வளர்ச்சியை பகிருவது தொடர்பான எண்ணங்களை பொது உரையாடல்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக 2025-ஏப்ரலில் இலண்டனில் நடைபெற்ற லண்டனில் நடைபெற்ற வெளியுறவுக் கொள்கை வட்டமேசைக் கூட்டத்தில், ஒரு முக்கிய சீன அறிவுஜீவி, 'இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவின் உயர்ந்து வரும் அந்தஸ்தை சீனாவின் சொந்த உலகளாவிய வல்லரசு அபிலாஷைகளுக்கு அச்சுறுத்தலாக சீனத் தலைமை கருதவில்லை' என்று தெளிவுபடுத்தினார். அதற்கு பதிலாக, 'ஒரு ஆசிய நூற்றாண்டு உண்மையிலேயே நிறைவேறவும், மேற்கத்திய சக்தி கட்டமைப்புகளின் காலனித்துவ நீக்கம் ஒரு முடிக்கப்பட்ட வணிகமாக இருக்கவும், இந்தியாவும் சமகாலத்தில் ஒரு உலகளாவிய வல்லரசாக உயர வேண்டியது அவசியம்' என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். இதைத் தழுவிய கருத்தை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சீன வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுடனான உறவுகள் பற்றிய கருத்துக்களில், 'ட்ராகனும் யானையும் ஒன்றாக நடனமாட வேண்டும்' என்பதை மீள மீள வலியுறுத்தி வருகின்றது. இந்த மறுமலர்ச்சியடைந்த அகன்ற ஆசியவாத (Pan-Asianist) சொற்பொழிவு சர்வதேச ஒழுங்கில் ஆசியாவின் சரியான இடத்தை மீட்டெடுக்கும் காலனித்துவத்திற்குப் பிந்தைய ஏக்கத்துடன் இணைகின்றது. எனினும் இது சீனா விதிகளை தீர்மானிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அச்சத்துடனேயே இந்தியா நிதானித்து வந்திருந்தது. 

எனினும் ட்ரம்பின் புதிய வரிக்கொள்கை குறிப்பாக இந்தியா மீதான 50சதவீத வரிவிதிப்பு, இந்தியாவை சீனா மற்றும் ரஷ்சியா ஆகிய நாடுகளின் கூட்டாண்மைக்குள் இறுக்கமாக இணைக்க தூண்டியுள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் இடையே உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ இந்தியா மீதான வரிவிதிப்பு பற்றி தெளிவுபடுத்துகையில், 'அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளால் தடைசெய்யப்பட்ட ரஷ்சியாவின் கச்சா எண்ணெயை சுத்திகரித்து இந்தியா அதிக மதிப்பில் ஏற்றுமதி செய்வதன் மூலம், மாஸ்கோவிற்கு மிகவும் தேவையான டொலர்களை இந்தியா திறம்பட வழங்குகின்றது. இந்தியா ரஷ்சிய எண்ணெய்க்கான உலகளாவிய தீர்வு இல்லமாக செயல்படுகிறது' எனக் குற்றம் சாட்டியுள்ளார். பனிப்போர் சொல்லாட்சியை எதிரொலிக்கும் மொழியில் நவாரோ, 'இந்தியா அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாக நடத்தப்பட விரும்பினால், அது அப்படி செயல்படத் தொடங்க வேண்டும்' என எச்சரித்துள்ளார். இவ்எச்சரிப்பு தொனிகள் இந்தியாவை சீண்டுவதாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் இந்திய-சீன பிராந்திய முரண்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, ஆசிய நூற்றாண்டின் அறுவடையை தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்காக அமெரிக்கா இந்தியாவை பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவின் இந்தியாவுடனான மூலோபாய ரீதியான நட்புறவு அப்பண்பிலானதாகவே அமைகின்றது. மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் வளர்ந்து வரும் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு எதிர் எடையாகவே தமது கொள்கை வகுப்பில் வரையறுத்துள்ளார்கள். வளர்ந்து வரும் சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு அரணாக ஆதரிப்பதில் தீவிரமாக இருந்தால், இந்தியா என்ன வழங்க முடியும் என்பது குறித்து அவர்கள் மிகவும் யதார்த்தமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டிருந்தனர். சீனாவிற்கு எதிராக மேற்கு நாடுகளுடன் இந்தியாவின் இணக்கத்தின் அளவு, அதன் வெளியுறவுக் கொள்கையில் மூலோபாய சுயாட்சிக்கான இந்தியாவின் சித்தாந்த விருப்பத்தாலும், அதன் தொழில்துறை வளர்ச்சிக்கான கூறுகள் மற்றும் மூலப்பொருட்களின் சப்ளையராக சீனாவை இந்தியா சார்ந்திருப்பதிலிருந்து எழும் நடைமுறை மற்றும் பொருளாதாரக் கருத்தாய்வுகளாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மைக் காலங்களில் ரஷ்சியா-உக்ரைன் போர் மற்றும் காசா போர்களில் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் எண்ணங்களிலிருந்து இந்தியா முரண்பட்டு சுயாதீனமானமாக செயற்பட்டிருந்தது. இவை அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களிடையே இந்தியா மீதான எதிர்பார்ப்புக்கள் குழப்பமடைய காரணமாகியது. ட்ரம்பின் வரிவிதிப்பு மாத்திரமின்றி பைடன் நிர்வாகத்திலிருந்து அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடையே இந்தியா தொடர்பான எதிர்பார்ப்புகள் முரண்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்காவின் இடைவெளியை, அமெரிக்கா பயன்படுத்திய முரண்பாட்டை சாதகமாக்கி கொள்ளும் நுட்பத்துடனேயே, சீனா இந்தியாவுடனான தனது உறவினை சீரமைக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய-சீன எல்லை முரண்பாடு சார்ந்து சீனா தளர்வு நிலையை முன்னகர்த்தி ஒரு ஒப்பந்தத்திற்கு நகர்ந்தது முதல் சீனாவின் இந்திய உறவினை இயல்பாக்கும் செயல்முறை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ட்ரம்பின் நடவடிக்கைகள் அதனை துரிதப்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

அமெரிக்க வரிவிதிப்பு சச்சரவுகளுக்கு மத்தியில், இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் ஜீ (Wang Yi) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார். இச்சந்திப்பில் வாங் ஜீ, 'இந்தியாவும் சீனாவும் எதிரிகளாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் ஆதரவை வழங்க வேண்டும்' என்பதையும் வலியுறுத்தினார். எஸ்.ஜெய்சங்கர், 'இந்தியாவும் சீனாவும் எங்கள் உறவுகளில் ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்து முன்னேற முயற்சிப்பதாக' குறிப்பிட்டிருந்தார். இதுவொரு வகையில் இரு தரப்பும் இணைந்து பயணிப்பதற்கான தேவை உணரப்படுவதனையே உணர்த்துகின்றது. இதன் நிலைபேணுகை ஆசிய நூற்றாண்டை ஊக்குவிப்பதாகவே சர்வதேச அரசியல் அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆசிய நூற்றாண்டு பற்றிய விவாதங்கள் பொதுவாக ஆசியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வலிமையை மையமாகக் கொண்டுள்ளன. சமகாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மற்றும் அதுசார்ந்து மீளெழுச்சி பெற்றுள்ள ஆசிய நூற்றாண்டு விவாதமும் பொருளாதார காரணியை மையப்படுத்தியதாகவே அமைகின்றது.

அதேவேளை இந்திய-சீன கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் மத்தியிலும் இந்திய-சீன உறவை வடிவமைப்பது தொடர்பான கருத்துக்கள் சமகாலத்தில் மேலோங்கி வருகின்றது. சமகாலத்தில் டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பும் அதுசார்ந்த அமெரிக்க இராஜதந்திரிகளின் உரையாடல்களும் காலனித்துவ மனநிலையை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது என்ற பார்வை இந்திய கொள்கை வகுப்பாளர்களை சீண்டியுள்ளது. அதேவேளை ட்ரம்புக்கு முன்னரான பைடன் அரசாங்க காலப்பகுதியிலும் கனடா இந்தியா மீது வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க கனடாவிற்கு ஆதரவளித்திருந்தது. இதுவொரு வகையில் வடபூகோள பிராந்தியவாத மேலான்மையை குறிக்கும் செயலாகவே இந்திய கொள்கை வகுப்பாளர்களால் அணுகப்படுகின்றது. இத்தகைய முரண்பாட்டு நிலைகள் இந்திய கொள்கை வகுப்பாளரை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்த்த காரணமாகின்றது. இந்திய வெளியுறவுக் கொள்கை அதிகாரி ஒருவர் நேர்காணல் ஒன்றில், 'இந்தியாவிற்கு இருத்தலியல் அச்சுறுத்தல் சீனாவிலிருந்து அல்ல, மேற்கத்திய நாடுகளிடமிருந்து வரும்' என்ற செய்தியை வழங்கியிருந்தார். மேலும் 'மேற்கில் உள்ள சொந்த நலன்கள் சீனா-இந்தியா பதட்டங்களை கொதிநிலையில் வைத்திருக்க ஆர்வமாக உள்ளன' என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். மற்றொரு முன்னாள் அதிகாரி மேற்கு நாடுகளுடனான இந்தியாவின் கடினமான உறவுகள் சீனாவுடனான பதட்டங்களைத் தணிப்பதில் ஒரு காரணியாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.  'அமெரிக்காவுடனான இந்தியாவின் தற்போதைய உறவுகள் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஊக்கியாக இருந்து வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள பொருளாதார அச்சுறுத்தல் இந்திய-சீன எல்லைத்தகராறு எனும் கோட்டிலும் பெரியதாக உணரப்படுகின்ற சூழலிலேயே, இந்திய-சீனா கூட்டுச்செயற்பாடுகளை பற்றி உரையாடலும் விரைவடைந்துள்ளது. இது ஆசியா நூற்றாண்டை துரிதப்படுத்தும் வாய்ப்பாகவும் அவதானிக்கப்படுகின்றது. எனினும் உலகின் பார்வையில் சீனா-இந்தியா உறவு நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒரு பிராந்திய தகராறின் குறுகிய பார்வையிலேயே காணப்படுகின்றது. ஜூன்-2020இல் அவர்களின் பகிரப்பட்ட எல்லையில் ஏற்பட்ட மோதல்கள் அந்தக் கருத்தை வலுப்படுத்த பெரிதும் உதவியது. அக்டோபர்-2024இல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு எல்லை ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இது இருதரப்பு உறவில் 'பாதுகாப்புத் தடுப்புகளை' நிறுவுவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், இருதரப்பு உறவின் அடிப்படையான தவறுகள் மாறாமல் உள்ளன. இந்தப் பின்னணியிலேயே 2025ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற சந்தேகங்களும் சர்வதேச அரசியல் அவதானிகளிடம் காணப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் மோதல்கள் மற்றும்  முரண்பாடுகள் ஏற்படும் அபாயத்தை தள்ளுபடி செய்ய முடியாதது என்ற சந்தேகங்களையே பேணுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவிலான மோதல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் நீடித்த நல்லிணக்கத்துக்கான சூழலும் அடையாளம் காண முடியாததாகவே காணப்படுகின்றது. இவ்வாறன பின்னணியில் அமெரிக்காவினால் வரையப்பட்டுள்ள பொருளாதார அச்சுறுத்தல் எனும் பெருங்கோடு பிராந்திய தகராறு எனும் சிறுகோட்டை அழிப்பதிலேயே ஆசிய நூற்றாண்டின் கனவும் இருப்பும் பலப்படும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-