தமிழரசு கட்சியின் தனியாதிக்கத்தை நிராகரிப்போர் கூட்டான போராட்டத்தை ஒருங்கிணைப்பார்களா! -ஐ.வி.மகாசேனன்-

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அரசியல் கோரிக்கைகளை பலமாக வெளிப்படுத்துவதும், உள்ளூர் - பிராந்திய – சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதும் அவசியமான முன்நிபந்தனையாகும். அரசியல் கோரிக்கைகள் மலினப்படுகையில், தேசிய இன விடுதலைப் போராட்ட முன்நிகழ்வுகளும் நீர்த்துப்போகும் வரலாற்றினையே சர்வதேச அரசியலில் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் துருக்கி குர்துக்களின் ஆயுதப் போராட்டக்குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) ஆயுதக்களைவும் பின்வாங்கலும் எடுத்துக்காட்டாக அமைகின்றது. பி.கே.கே தலைவர் அப்துல்லா ஒகலன் 1999ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், துருக்கி குர்துக்களின் அரசியல் கோரிக்கைகளும் மெல்ல மெல்ல மலினப்பட ஆரம்பித்தது. அதன் உயர்ந்தபட்ச விளைவாக 2025இல் குர்துக்களின் விடுதலைப் போராட்டம் முழுமையாக நீர்த்துப்போகும் நிலைக்கு நகர்ந்துள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் 2009களுக்கு பிற்பட பெருமளவில் வலிமையான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துவதும் தக்கவைப்பதுவும் அரிதாகவே காணப்படுகின்றது. உள்ளகரீதியிலான முரண்பாடுகளால், குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் நலன்சார் சுய போட்டிகளினால் தமிழ் மக்களின் விடுதலைக் கோரிக்கைகள் மலினப்படும் அபாய நிலையையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை ஜனநாயக வழி போராட்டங்களினூடாக பலப்படுத்த வேண்டிய தேவையை அடையாளங்காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆகஸ்ட்-18அன்று தமிழ் மக்களின் பெரிய கட்சியாக, குறிப்பாக ஒப்பீட்;டளவில் அதிகளவு அரசியல் பிரதிநிதித்துவத்தை (30-35 சதவீதம்) வெளிப்படுத்தும் தமிழரசுக்கட்சி ஹர்த்தால் அல்லது கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்திருந்தது. எனினும் இவ்அழைப்பு ஏனைய அரசியல் கட்சிகளாலும் சிவில் சமுகங்களாலும் பெருமளவில் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக மதியம் 12 மணி வரையில் அடையாளமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஹர்த்தாலும் பெரும் நகரங்களில் பாதியளவில் நிராகரிக்கப்பட்டதுடன், கிராமங்களில் முழுமையாக நிராகரிக்கப்பட்ட நிலைமைகளையே செய்திகள் வெளிப்படுத்தியிருந்தது. தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அழைப்பு நிராகரிப்புக்கான காரணங்களாக, ஏனைய அரசியல் கட்சிகளுடனோ அல்லது சிவில் சமுகங்களுடனேயோ எவ்வித கலந்துரையாடலுமின்றி தமிழரசுக்கட்சியின் ஒரு சிலரின் மேலான்மையை உறுதி செய்வதற்கான குறித்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவின்மையை வெளிப்படுத்திய அறிக்கையும், யாழ்ப்பாண மாநாகர சபை மேயர் - யாழ்ப்பாண வர்த்தக சங்க உறுப்பினர் சந்திப்பு காணொளி செய்திகள் அக்குற்றச்சாட்டை பகிரங்கமான சுட்டிக்காட்டியிருந்தன. 

கடந்த வாரம் இப்பத்தியிலும் மக்களின் அரசியல் கோரிக்கைகளை மக்கள் திரட்சியூடாக வெளிப்படுத்த முடியாத போராட்டங்களின் பலவீனமான விளைவுகளே விபரிக்கப்பட்டிருந்தது. அத்தகையதொரு விளைவினையே தமிழரசுக்கட்சியின் ஒருசிலரின் நலனுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஹர்த்தால் அழைப்பும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் பகுதியளவில் தமிழரசுக்கட்சியின் ஒரு சிலரின் மேலான்மையை நிராகரிப்பதற்காகவே தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அழைப்பை நிராகரித்திருந்தார்கள். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை அதனை தெளிவாகவும் அடையாளப்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செய்தியில், 'நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும். அதன்பின்னரே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் நிர்வாக முடக்கலுக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும். இது எதுவும் இல்லாமல் ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை' எனத் தெளிவுபடுத்தியிருந்தது. தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் போராட்டத்தில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட 'இராணுவமயமாக்கல் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளுகின்ற' போதிலும், போராட்டத்தை ஒழுங்குபடுத்துபவர்களின் மறைகர நோக்கமான 'கூட்டுச்செயற்பாடற்ற நிலையில் தமது மேலாண்மையை உறுதி செய்வதை நிரகாரிப்பதாகவே' ஹர்த்தாலை ஆதரிக்காதவர்களின் கருத்துக்கள் காணப்படுகின்றது.

இலக்கங்களினை முதன்மைப்படுத்தும் அரசியலில், தமிழரசுக்கட்சியினை தமிழ் மக்களின் பெரிய கட்சியாகவும், தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அழைப்பை தமிழ் மக்கள் பெருமளவில் நிராகரித்துள்ளமையால், ஹர்த்தாலின் அரசியல் கோரிக்கைகளை பலவீனப்படுத்தும் பிரச்சாரமொன்றை தென்னிலங்கை நகர்த்தியுள்ளது. ஆகஸ்ட்-19அன்று பாராளுமன்ற விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 'வடக்கு-கிழக்கில் தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அழைப்பை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளமையை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாடாகவும், அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும்' தெரிவித்திருந்தார்கள். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், 'அரசாங்கம் மக்களுடன் இருக்கின்றது. மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். அரசாங்கத்தின் பலமும் அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையில் இருக்கின்ற பாரிய ஆதரவும்  இந்த ஹர்த்தால்  மூலம் வெளிப்பட்டுள்ளது' எனக்குறிப்பிட்டிருந்தார். மக்களின் கூட்டுப்பலத்தோடு அரசியல் போராட்டங்களை உருவாக்காது, தனிமனிதர்களின் விருப்புக்குள் மற்றும் நலனுக்குள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியலை நகர்த்துகையில், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மலினப்படுத்தப்படும் அவலம் தொடர் கதையாகவே அமையக்கூடியதாகும். இது ஆரம்பம் இல்லை. இராணுவமயமக்கலுக்கு எதிரான ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்த தரப்பினரே, கடந்த காலங்களில் இலங்கை அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக சுதந்திரமற்ற நிலையை வெளிப்படுத்தும் 'இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாள் போராட்டமாக' ஒருசில கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் போராடுகையில் அதனை மலினப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது 2009களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் உள்ளக முரண்பாடுகளுக்குள்ளாலும் ஒருசிலரின் சுயநல அரசியல் விருப்புக்குள்ளாலும் மலினப்படும் அவலத்தையே உறுதி செய்கின்றது.

உள்ளக முரண்பாடுகளுக்குள்ளால் தமிழ்த்தேசிய கோரிக்கைகளை மலினப்படுத்துவது ஈழத்தமிழர்களின் சாபக்கேடாகவே அமைகின்றது. இதுவொரு வகையில் தமிழ்த்தேசியத்தை மறுப்பவர்கள் அல்லது அதனை சிதைக்க நினைப்பவர்களின் வீரியமாக செயற்படுமளவிற்கு தமிழ்த்தேசியத்தை பாதுகாப்பவர்களாவும், அதற்காக உழைப்பதாகவும் கருதும் தரப்பினரின் செயற்பாட்டு வீச்சு போதாமையின் வெளிப்பாடாகவும் கருதலாம். பத்தி எழுத்தாளரின் ஆசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் தலைவர் கலாநிதி தி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டு அணுகுமுறை பற்றி விரிவுரை காலப்பகுதியில் உரையாடிய விடயம் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக அமையும். 'தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் முழுநேர அரசியல் செயற்பாட்டாளர்களாக காணப்படுகின்றார்கள். எனினும் தமிழ்த் தேசியத்தை தெரிவிப்பவர்கள் பகுதிநேர அரசியல் செயற்பாட்டாளர்களாகவே காணப்படுகின்றார்கள்.' இது தமிழ்த்தேசிய அரசியல் நகர்வு தொடர்பான பொருத்தமான பார்வையை வெளிப்படுத்துகின்றது. ஹர்த்தால் போராட்டத்தை மேற்கொண்டவர்களின் மறைகர நோக்குகள் தொடர்பில் எதிர் விமர்சனங்கள் காணப்படுகின்றது. அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தமிழ்த்தேசிய திரட்சியை அழிக்கும் செயலாகும். எனினும் தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் போராட்டம் பகிரங்கமாக வெளிப்படுத்திய இராணுவமயமாக்கல் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தை மக்கள்மயப்படுத்த கட்சியின் உள்ளூராட்சி மட்டங்கள் வரை இயக்கிய அணுகுமுறைகள் ஏனைய தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினையாகும்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் ஊடகவியலாளர், 'முல்லைத்தீவு முத்தையட்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டதை கண்டித்து தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அழைப்பை குற்றஞ்சாட்டி நிராகரிக்கின்ற போதிலும், ஏனையவர்கள் யாரும் இதுவரை எவ்வித போராட்டத்தையும் நகர்த்தவில்லை' என்ற கேள்வி எழுப்புகின்றார். இது தமிழ் மக்களிடம் பரந்துள்ள கேள்வியாகும். எனினும் இதற்கு பதிலளித்துள்ள செல்வராசா கஜேந்திரன், 'இராணுவமயமாக்கலை கடந்த காலங்களில் ஊக்குவித்த சுமந்திரன் போராட இயலாது. தாங்கள் மற்றும் சிவில் சமுகங்களே போராட முடியும்' என்றவாறு கருத்துரைத்துள்ளதாகவே நேர்காணல் செய்துள்ளவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை போராடாமையை தவறாக ஏற்றுக்கொண்டு எதிர்காலங்களிலாவது அதனை சீர்செய்வோம் என்ற கருத்தினை வெளிப்படுத்த தவறியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மீதுள்ள பரவலான பொதுமக்களின் விமர்சனமும் இத்தகைய நிலைப்பாடு சார்ந்தே அமைகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழரசுக்கட்சியை எதிர்த்து பேசி மாத்திரமே அரசியல் செய்வோம் என்ற நிலையிலேயே உள்ளார்கள். இவர்கள் தமிழ் மக்களின் ஆளுந்தரப்பாக மாறி எதிர்த்தரப்பு அரசியலுக்கு மாற்றாக செயற்பாட்டு அரசியலை செய்யும் திறனுடையவர்களா என்பதில் தமிழ் மக்களுக்கு சந்தேகங்களே காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியினரும் கடந்த காலங்களில் யாவற்றையும் எதிர்த்து விமர்சித்து அரசியல் செய்த பழக்கத்தில் 2024ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியுள்ள போதிலும் ஒரு வருடங்களை அண்மிக்கின்ற போதிலும் செயற்பாட்டு அரசியலை மிஞ்சி எதிர்க்கட்சிகளின் கடந்த காலங்களை விமர்சிப்பதாகவே பெருமளவில் அரசியல் நகருகின்றது. இத்தகையதொரு அரசியல் வடிவத்தையே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

தமிழ் மக்களிடமிருந்து ஜனநாயக வழி போராட்டத்திற்கு உயரளவிலான தேவை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடுவது போன்று 2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின்னர் உலக ஒழுங்கில் ஆயுதப் போராட்டங்கள் பயங்கரவாதத்தின் பெயரால் நசுக்கப்படுவதும் மாறாக ஜனநாயகத்திற்கான போர் என்ற போர்வையில் ஜனநாயக போராட்டங்களுக்கான ஆதரவு அதிகரிக்கப்பட்டும் வருகின்றது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் மிகவும் புலப்படும் அடையாளமாக அரசியல் போராட்டங்கள் மாறிவிட்டன. மேலும் அவை சிறப்பு கவனத்திற்கும் ஆதரவிற்கும் தகுதியானவையாக நோக்கப்படுகின்றது. குடிமக்கள் தங்கள் அரசியல் உரிமைகளுக்காகப் பகிரங்கமாக வாதிடலாமா அல்லது தேர்ந்தெடுக்கப்படாத அல்லது ஊழல் நிறைந்த அரசாங்கங்களின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமா என்பது குறித்த உலகளாவிய போட்டி நிகழ்நேரத்தில் தீர்மானிக்கப்படுகிறது. அரபு வசந்தம் முதல் இலங்கையில் அரகலய வரை அதற்கான சான்றுகளாகவே அமைகின்றது. மேற்காசியாவில் குர்துக்களில் ஆயுதக்களைவும் பின்வாங்கலும் இவ்உலக ஒழுங்கின் போக்கிலும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது. 

2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌணிக்கப்பட்டு முழுமையாக ஜனநாயக அரசியலுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஜனநாயக அரசியலில் ஐந்து வருட இடைவெளியில் இடம்பெறும் தேர்தல்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதனூடாக மாத்திரம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தேசிய இனம் விடுதலையை அடைந்துவிடப் போவதில்லை. தொடரச்சியாக தமது அரசியல் கோரிக்கைகளை கூட்டாக முன்னிறுத்தி போராட வேண்டிய தேவை காணப்படுகின்றது. எழுக தமிழ்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடைபயண பேரணிகள் என்ற ஒரு சில போராட்டங்களை தாண்டி கடந்த பதினைந்து ஆண்டுகள் தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளை தொடர்ச்சியான உரக்க குரலெழுப்பக்கூடிய களத்தை ஈழத்தமிழரசியலில் அரசியல் கட்சிகளோ அல்லது சிவில் சமுக தரப்பினரோ உருவாக்கியிருக்கவில்லை. மாறாக அரசியல் கட்சிகள் தமது தேர்தல் நலன்களை முன்னிறுத்தி ஆங்காங்கே சில போராட்டங்களை தனித்து செய்கின்றார்கள். அரசியல் கட்சிகள் தேர்தல் நலன்களை முன்னிறுத்தியாவது கூட்டாக பலமாக போராடுவார்களாயின், அது தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உரமாக அமையக்கூடியதாகும். எனினும் தனியன்களாக தமிழ்த்தேசியத்தின் திரட்சியை சிதைப்பதாகவும், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை மலினப்படுத்துவதாகவுமே அரசியல் கட்சிகளின போராட்டங்கள் அமைவது தமிழினத்தின் சாபமாகும்.

எனவே, தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அறிவிப்பு அதனிடமிருந்த எதேச்சதிகார இயல்பால் மக்களால் நிராகரிக்கப்பட்டதும், அரசியல் கட்சிகள் சிவில் தரப்புகள் ஆதரவளிக்காமையும் ஏற்புடையதாகும். எனினும் தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்த 'இராணுவமயமாக்கலுக்கான எதிர்ப்பு' என்ற இலக்கை நோக்கி பயணிப்பது ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் முதன்மை பணியாக அமைகின்றது. இராணுவமயமாக்கல் எதிர்ப்பு முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்தோடு சுருங்குவதில்லை. அது உடனடி காரணமாக அமையலாம். செம்மணி மனிதப் புதைகுழி, தையிட்டி விகாரை போன்ற ஆக்கிரமிப்புக்கள், தமிழர் நிலங்களில் இராணுவ முகாம்கள், நாட்டுக்குள்ளேயே தமிழ் மக்களின் அகதி வாழ்க்கை எனப்பல ஒடுக்குமுறை நிகழ்வுகள் இராணுவமயமாக்கல் சார்ந்ததாகவே அமைகின்றது. அவை யாவற்றையும் முன்னிறுத்தி தமிழர் தரப்பு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஏற்கனவே ஐ.நா மனித உரிமையாளரின் முன்அறிக்கையில் இலங்கையின் புதிய அரசாங்கத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை தமிழரசுக்கட்சியின் எதேச்சதிகாரத்துக்கு எதிரான தமிழ் மக்களின் ஹர்த்தாலுக்கான அணுகுமுறையை தேசிய மக்கள் சக்தியினர் தம் மீதான நம்பிக்கையாக பிரச்சாரம் செய்கின்றார்கள். இவற்றை மறுதலிக்க தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை உரத்து சொல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனை தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் தரப்பும் கூட்டாக செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. ஓர் அரங்கில் கூடி கடிதம் எழுதுவதற்கு அப்பால், ஓர் திடலில் மக்களை கூட்டி அரசியல் கோரிக்கையை வெளிப்படுத்தும் ஜனநாயக பொறிமுறைக்கு தமிழ் அரசியல் தரப்பு நகர வேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-