செம்மணி மனிதப் புதைகுழியை திசைதிருப்பும் தென்னிலங்கையும் மௌனிக்கும் தமிழ் தரப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

உலகின் அழகிய தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கைத்தீவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடர்ச்சியான அகழ்வில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோரின் என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைத் தீவின் அழகில், ஒரு பகுதி மக்களின் கண்ணீர் கவனத்தைப்பெற தவறுகின்றது. இலங்கைத் தீவு, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றின் மூலமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாகவே வடக்கில் செம்மணியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகள் சாட்சியங்களாகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்படுகொலையை மறுத்துவரும் நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி அவலம் தொடர்பிலான கருத்தை தவிர்த்து வருகின்றது. மறுமுனையில் கடந்த கால தென்னிலங்கை அரசாங்க பிரதிநிதிகள், தமது குற்றங்களை மூடி மறைப்பதற்காக செம்மணி மனிதப்புதைகுழியை இறந்த உடல்களை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக பிரச்சாரப்படுத்துகின்றார்கள். இது செம்மணி மனிதப்புதைகுழி சாட்சியம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் தொடர்பில் தென்னிலங்கை அச்சம் கொள்வதனையே வெளிப்படுத்துகின்றது. எனினும் ஈழத்தமிழர்கள், செம்மணி மனிதப்புதைகுழியின் விளைவுகள் தொடர்பில் போதிய அரசியல் தெளிவை கொண்டிருக்கவில்லை என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றது. இக்கட்டுரை செம்மணி மனிதப் புதைகுழியை திசைதிருப்பும் தென்னிலங்கையின் அரசியலுக்கான, ஈழத்தமிழ் அரசியலின் எதிர்வினைவுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூலை-31அன்று தரவுகளின்படி, செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்டம் மற்றும் 26ஆம் நாள் அகழ்வுகளில், இதுவரை 118 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்படும் நிலையில், சர்வதேச கவனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் (ஐஊது), 'சர்வதேச சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, செம்மணிப் புதைகுழி குறித்து சர்வதேச மேற்பார்வை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட விசாரணையை' வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி-சித்துப்பதி கூட்டுப் புதைகுழித் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கையில், 'அகழ்வாராய்ச்சி செயல்முறை உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு அவசியமான, ஆரம்ப படியாகும் என்று ஐஊது கருதுகிறது. மேலும் அனைத்து தோண்டியெடுக்கும் மற்றும் விசாரணை செயல்முறைகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்க நடத்தப்படுவதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது' என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை-30அன்று இலங்கைக்கான சுவிஸ் தூதர் சிரி வால்ட், செம்மணி தளங்களுக்கு ஒரு குழுவை வழிநடத்தினார். அங்கு அவர்கள் தடயவியல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அகழ்வாராய்ச்சி செயல்முறையை கவனித்தனர்.

தென்னிலங்கையின் அரசாங்கம் மற்றும் கடந்த கால அரசாங்கங்கள் (சமகால எதிர்க்கட்சியினர்) என யாவரும் செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை திசைதிருப்பும் செயற்பாடுகளிலேயே முனைப்பாக உள்ளார்கள். அரசாங்கம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளில் வளப்பற்றாக்குறை மற்றும் பொருளாதார பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மெத்தனப்போக்கினையே கையாண்டு வருகின்றது. தரை ஊடுருவும் ரேடார் (GPR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம், தளத்தில் பரந்த அளவிலான சோதனை (Scan) முயற்சிகளுக்குத் தடையாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூலம் சோதனை உபகரணங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரை ஊடுருவும் ரேடார் செயல்பாடுகள் இப்போது ஆகஸ்ட்-04 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகளில் அறிய முடிகின்றது. மேலும் கடந்த கால தென்னிலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் செம்மணி மனித புதைகுழி வெளிப்படுத்தும் இனப்படுகொலைக்கான சான்றாதாரத்தை மறுதலித்து வருகின்றனர். குறிப்பாக செம்மணி மனித புதைக்குழி கண்டறியப்பட்டுள்ள 'செம்மணி-சித்துப்பதி' இந்து மயானம் என்ற அடிப்படையில், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் என்புத்தொகுதிகள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவை என்றவாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

சைவ சமய மரபுகளில் குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவதாயினும், செம்மணியின் கடந்த கால வரலாறும், நூற்றுக்கு மேற்பட்ட என்புத்தொகுதிகளின் கண்டுபிடிப்பும் கூட்டு மனிதப்புதைகுழிக்கான சான்றுகளையே உயரளவில் உறுதிப்படுத்துகின்றது. 2025ஆம் ஆண்டிலிருந்து செம்மணிக்கான மனிதப்புதைகுழிக்கான வரலாறு ஆரம்பிக்கப்படுவதில்லை. உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களின்படி 1996ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் அவரைத் தேடிச்சென்ற உறவினர்களின் கூட்டுப்படுகொலை செம்மணி மனிதப்புதைகுழியின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட சான்றாகின்றது. தொடர்ச்சியாக கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை கொலையில் தொடர்புடைய இலங்கை இராணுவ வீரர் ஒருவர் 1998ஆம் ஆண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, செம்மணிப் புதைகுழித் தளம் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தது. கிருஷாந்தி படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவத்தினர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ஷ ஒப்புதல் வாக்குமூலத்தில், 'மேலதிகாரிகளால் இரவில் அனுப்பப்படும் உடல்கள் செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு முன்னூறு முதல் நானூறு வரையான புதைகுழிகளை என்னால் காண்பிக்க முடியும்' எனக்குறிப்பிட்டிருந்தார். சோமரத்ன ராஜபக்ஷவுடன் மற்றுமொரு குற்றவாளியான  ஏ.எம். பெரேராவும் தனது வாக்கு மூலத்தில் மனிதப்புதைகுழி விவகாரத்தை ஒப்புக்கொண்டிருந்தார். ஒரே புதைகுழியில் மட்டும்  25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன என பல தகவல்களையும் தெரிவித்திருந்தார்கள். எனினும் அன்றைய அரசாங்கத்தின் மெத்தனப்போக்கால் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன. மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இராணுவத்தின் உயர்நிலை பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அன்றிலிருந்து செம்மணி, கட்டாயமாக காணாமல் போதல்கள் உட்பட, கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் இலங்கையின் நீண்டகால மரபின் சக்திவாய்ந்த மற்றும் வேதனையான அடையாளமாக இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையிலேயே 2025ஆம் ஆண்டு செம்மணி-சித்துப்பதி இந்து மயான புனரமைப்பு செயற்பாடுகளில் விபத்தாகவே மீள என்புத்தொகுதிகள் கண்டறியப்பட்டது. ஏறத்தாழ மூன்று தசாப்த இடைவெளியில் செம்மணி மனித புதைக்குழி மீள சான்றாதரத்துடன் அகழப்படும் நிலை காணப்படுகின்றது. இதனை கண்மூடித்தனமாக இந்து மயானம் என்ற அடிப்படையில் முறையான நல்லடக்கம் செய்யப்பட்ட என்புத்தொகுதிகளே கண்டறியப்படுவதாக தென்னிலங்கை அரசியல் தரப்பினர் பிரச்சாரப்படுத்துவது தமிழ் மக்களினை மீள ஏமாற்றுவதற்கான தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே அவதானிக்க வேண்டி உள்ளது. 

அதேவேளை ஈழத்தமிழ் அரசியல் தரப்பிடமிருந்தும் செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதிக் கோரிக்கைகள் போதிய உத்வேகத்தை பெறவில்லை. செம்மணி அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் தமிழ் அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் சபைகளை அமைப்பதில் அதிக கவனத்தை குவித்திருந்தார்கள். தற்போது செப்டெம்பர் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்காக 2022ஆம் ஆண்டின் தொடர்ச்சியான கடிதம் வரைவதிலும், கட்சி அரசியல் போட்டியிலுமேயே முனைப்பாக காணப்படுகின்றார்கள். மாறாக இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக மாறியுள்ள என்புத்தொகுதிகளை உரிய முறையில் ஆய்வுக்குட்படுத்தி காணமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதிலும், இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் மக்கள் திரட்சி அரசியலையும் அவதானிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது தன்னார்வ இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் மக்கள் செயல் எனும் அமைப்பினூடாக 'அணையா விளக்கு' எனும் பெயரில் மக்கள் திரட்சி மற்றும் விழிப்பூட்டல் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக மூன்று நாள் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. எனினும் அணையா விளக்கு போராட்டமும் ஈழத்தமிழ் அரசியல் போராட்ட மரபாகிய 'குமிழ்முனை' இயல்பையே ஒத்திருந்தது. திடீரென ஊதி பெரிதாகி சடுதியாக இல்லாமல் போய்விட்டது. அணையா விளக்கின் தொடர்ச்சியை அவதானிக்க முடியவில்லை. அவர்கள் தமது போராட்டத்தை ஆவணப்படுத்தும் 'அணையா விளக்கு நினைவு தூபியை' உருவாக்குவதிலேயே ஆர்வத்தை குவித்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மக்கள் செயல் அமைப்பு செயற்பாட்டாளர்கள் ஒரு சிலரின் சமூகவலைத்தள பதிவுகள் அதனையே வெளிப்படுத்துகின்றது.

வரலாறு முழுவதும், மனிதகுலத்தின் படுகொலைகள், இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் விரிவான பதிவின் நீடித்த அடையாளங்களாக மனித புதைகுழிகள் செயல்பட்டுள்ளன. இதன் விளைவாக அவை குறிப்பிடத்தக்க ஆதார மதிப்பைக் கொண்டுள்ளன. சமீபத்திய தசாப்தங்களில், இத்தகைய புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி லத்தீன் அமெரிக்காவில் காணாமல் போனவர்கள் மற்றும் ருவாண்டா, கம்போடியா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களை அம்பலப்படுத்தியது. மிக சமீபத்தில், சூடான், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிள் இனப்படுகொலையை நிரூபித்துள்ளன. போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றில் ராட்கோ மிலாடிக் மற்றும் ராடோவன் கராட்சிக் ஆகியோர் குற்றவாளிகள் என்று முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணைகளில் சமீபத்தில் மனிதப் புதைகுழிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. மனித புதைகுழிகளில் இருந்து தடயவியல் சான்றுகள், குறிப்பாக 2013ஆம் ஆண்டு டொமாசிகா கல்லறை அகழ்வாராய்ச்சிகள், ஸ்ரெப்ரெனிகாவிலிருந்து போஸ்னியாக் (போஸ்னிய முஸ்லிம்) மக்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதிலும் முறையாக அகற்றுவதிலும் ஆயுதப்படைகளின் ஈடுபாட்டை நிரூபிப்பதில் கருவியாக இருந்தன. சட்டப்பூர்வக் கண்ணோட்டத்தில், மனிதப் புதைகுழிகளை அகழ்வாராய்ச்சி செய்வது புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் கட்டாயமாக காணாமல் போனவர்களின் எச்சங்களா அல்லது நீதித்துறைக்கு வெளியே மரணதண்டனைகள், சித்திரவதை, உடல்களை இழிவுபடுத்துதல் அல்லது பட்டினி போன்ற சட்டவிரோத செயல்களின் விளைவாக இறந்தார்களா என்பதைத் தீர்மானிக்க அகழ்வாராய்ச்சி உதவும். இந்தச் சூழலில், மனிதப் புதைகுழிகள் குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் அவை மொத்த மனித உரிமை மீறல்களுக்கான சான்றுகளின் களஞ்சியங்களாகச் செயல்படுகின்றன. மனிதப் புதைகுழிகள் அரச இயந்திரத்தினால் மேற்கொள்ளப்படுவதனால், இனவழிப்பு பிரச்சாரங்களில் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை மாற்றுவதற்கான சான்றுகளும் சர்வதேச அனுபவத்தில் அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணைகளில், 'இன அழிப்பு பிரச்சாரங்களின் போது, குற்றவாளிகள் பல்வேறு இடங்களிலிருந்து உடல்களை கொண்டு சென்றதாகவும், அவர்கள் செய்த குற்றங்களை மறைக்க உதவும் குறிப்பிட்ட அடக்கம் செய்யப்பட்ட இடங்களை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததாகவும், இந்த இடங்களில் இடிபாடுகள், குப்பைக் கிடங்குகள், குகைகள் அல்லது கல்லறைகள் அடங்கும்' என விசாரணைகள் வெளிப்படுத்தின. இவ்சர்வதேச அனுபவங்களின் பின்னணியிலேயே செம்மணி மனிதப்புதைகுழி முக்கியத்துவத்தையும் இனப்படுகொலைக்கான சாட்சியாகவும் நகர்த்த ஈழத்தமிழர்கள் முனைய வேண்டும்.

எனவே, செம்மணி மனிதப்புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் பிரதான ஆதாரம் என்பதில் தென்னிலங்கை தெளிவான விளக்கத்தை கொண்டுள்ளது. ஆதலாலேயே தென்னிலங்கையின் அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களும் கூட்டாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை கிடப்பில் போட அல்லது திசைதிருப்ப முனைகின்றார்கள். எனினும் இனப்படுகொலை நீதிக்காக கூட்டாக செயற்பட வேண்டிய தமிழ்த் தரப்பு தன்முனைப்பிலும் கட்சி அரசியல் போட்டியிலும் மோதிக் கொண்டுள்ளார்கள். அண்மையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பில் தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூகங்கள், செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் அவர்கள் கடிதங்களை கடந்து மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் மக்களை அணிதிரட்ட வேண்டிய தேவைப்பாட்டை விபரித்திருந்தார். மேலும் சர்வதேச அனுவத்தில் மனிதப்புதைகுழியின் முக்கியத்துவத்தை கையாளக்கூடிய வழிமுறைகளையும் விபரித்திருந்தார். தனது அரசியல் கட்டுரையிலும் இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ் தரப்பு ஒருங்கிணைந்து செம்மணி மனிதப் புதைகுழியை இனப்படுகொலைக்கான சான்றாக கையாளும் உத்தியை பற்றி சிந்தித்து செயற்பட மறுப்பது தமிழினத்தின் சாபமாகவே அமைகின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-