தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும் தமிழரசுக்கட்சியின் நிராகரிப்புக்களும்! -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர், ஈழத்தமிழர்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாக அலையும் அவலம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குரிய தற்காலிக தீர்வாக தமிழ் மக்களிற்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் தமிழ்க் கட்சிகளிடையே கூட்டுத் தன்மையை உருவாக்குவதற்கான செயற்பாடுகளும் பல கட்டமாக தமிழ் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பலராலும் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தூய்மைவாத பிரச்சாரம் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரின் நிலையற்ற தன்மை என பல காரணங்களை குறித்து கூட்டு முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைந்தது. இந்நிலையின் தொடர்ச்சியாய் தமிழ்ப் பொதுவேட்பாளரில் கட்சிகளால் ஏற்பட்ட ஏமாற்றங்களை தொடர்ந்து சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பெருமளவில் ஒதுங்கு நிலைக்கு சென்றுள்ளார்கள். அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தூய்மைவாத பிரச்சாரங்களை களைந்து கூட்டு முயற்சிக்கான முனைப்புக்களை நகர்த்தி வருகின்றார்கள். எனினும் கட்சி நலனை மையப்படுத்திய ஈழத்தமிழரசியலில் முழுமையான கூட்டு சாத்தியமற்றதாக அமைகின்றது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாற்றத்தையும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கூட்டுக்கான வாய்ப்புக்களையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்-04 திகதியிடப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு ஈழத்தமிழ் தரப்பு சார்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளும், பரவலான வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களும் மற்றும் மதகுருமார்களும் கையெழுத்திட்டுள்ளனர். மறுநாள் ஆகஸ்ட்-05 திகதியிடப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடமிருந்தும் குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். குறித்த கடிதம் எழுதுவதற்கான கூட்டுச் செயற்பாடுகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே ஒருங்கிணைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு சிவில் சமுக செயற்பாட்டாளர்களால் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய கடிதம் அமையப் பெறுகின்றது. எனினும் இம்முறை ஒருங்கிணைப்பிலிருந்து சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் ஒதுங்கிக் கொள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதனை நெறிப்படுத்தியிருந்தது.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் கணிசமான மாற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ்க்கட்சிகளிடையே கூட்டிணைவை உருவாக்குவதிலும், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை பகிருவதன் மூலம் கூட்டிணைவை உருவாக்கும் முயற்சிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார். இம்மாற்றம் ஆரோக்கியமானதாகும். வரவேற்கக்கூடியதாகும். கடந்த காலங்களில் அதிக தூய்மைவாத பிரச்சாரங்களால் கூட்டு முயற்சிகளுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தடையாக காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளிடையேயான கூட்டுமுயற்சி அனுபவத்தை பகிர்வது பொருத்தமாக அமையும். குறிப்பாக அக்கூட்டுமுயற்சியின் இறுதியில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய 13அம்ச கோரிக்கை வரைபு ஒன்று உருவாக்கப்பட்டது. இவ்வரைபு உருவாக்கத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஈடுபாடு உயர்வாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் 14வது விடயமாக, 'கடந்த ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் இடைக்கால ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிக்கிறோம்' என்ற விடயத்தை உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்த போது, அது தேவையற்றது என ஏனைய கட்சிகள் நிராகரித்திருந்தனர். குறித்த 13 அம்ச கோரிக்கையில் முதலாவதாக, 'புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசிய இனப்பிரப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்' என்பதாகவே உள்ளடக்கப்பட்டது. ஒற்றையாட்சியை நிராகரிப்பது தொடர்பிலும் தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ;டி கோரிக்கை தெளிவாக முதல் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட போதிலும், ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை நிராகரிக்கும் கோரிக்கை இன்மையால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அக்கூட்டு முயற்சியிலிருந்து வெளியேறியிருந்தார்கள்.
இவ்வாறே 2010ஆம் ஆண்டு முதல் சிவில் சமுக செயற்பாட்டாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பல கூட்டு முயற்சிகளும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தூய்மைவாதத்தாலும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. இச்சந்தர்ப்பங்களில், 'மேலோட்டமான பார்வையுடன் அல்லது பிழையான பார்வையுடனோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்பகளுக்காகவோ கண்மூடித்தனமான தூய்மைவாத கண்னோட்டத்தை கையில் எடுத்து ஒடுக்கப்படும் பக்க அணியை பலப்படுத்தப தவறும் ஒருவன் அல்லது பிளவுபடுத்தும் ஒருவன் திட்டவட்டமாக ஒடுக்கும் பக்க அணிக்கு சேவை செய்பவன் ஆவான்' என்ற எச்சரிக்கையை ஈழத்தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கியுள்ளார். எனினும் அன்றைய காலங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமது செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் வைப்பவர்கள் மீதும், தாம் எதிரியாய் அடையாளப்படுத்துபவர்களையும் இலகுவாக மலினப்படுத்தப்பட்ட கருத்துக்களை முன்வைத்து நகர்ந்துள்ளனர். குறிப்பாக மிக அண்மையில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கியிருந்த வடக்கு-கிழக்கு சிவில் சமுக கூட்டிணைவு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை இந்தியாவின் புலனாய்வுத் துறை இயக்குவதாக கடுமையாக பிரச்சாரம் செய்திருந்தனர். எனினும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தோல்வி அல்லது வீழ்ச்சியின் பின் கடந்த காலங்களில் நிந்தித்தவர்களுடனேயே கூட்டணிகளை உருவாக்கி உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொண்டதுடன், சபைகளையும் உருவாக்கியுள்ளார்கள். கடந்த காலத்தில் இவர்கள் எதிராளிகள் தொடர்பில் வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் நிந்தனைகள் சமகாலத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான பழிவாங்கும் பிரச்சாரமாகவும் அமைகின்றது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டிணைவு காலந்தாழ்த்தியதாயினும், கூட்டிணைவுசார் தீர்மானமும் அதற்கான விட்டுக்கொடுப்புக்களும் வரவேற்கத்தக்க அரசியல் நகர்வாகும். இதற்கான பலனை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளிலும் பல குறிப்பிடத்தக்க சபைகளை கைப்பற்றி ஆட்சி அமைத்ததிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனினும் சமகாலத்தில் தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக தனிநபர் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி கூட்டு முயற்சிகளை நிராகரித்து செல்வது, தமிழரசுக்கட்சியின் தமிழ் மக்கள் அரசியல் தொடர்பில் சந்தேகங்களையே குவிக்கின்றது. அண்மைக்காலங்களில் குறிப்பாக 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்னர் பகிரங்கமாகவே தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழத் தலைவர் சிறிதரன் அவர்கள் தமிழரசுக்கட்சியில் நிலவும் தனிநபர் மேலாதிக்கம் பற்றி குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்து வருகின்றார். மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், கட்சி முடிவாக மக்களால் தோற்கடிப்பட்ட அவர்குற்றஞ்சாட்டும் தனிநபர் மேலாதிக்க முடிவுகளுக்கே இணங்கி போகின்றார். இதுவொரு வகையில் தமிழரசுக்கட்சி தமிழ் மக்கள் அரசியலிலிருந்து விலகி செல்லும் போக்கையே உறுதி செய்கின்றது. இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாய் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளே காணப்படுகிறார்கள். மக்கள் வாக்குகளால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டு, கட்சிக்கு அடிபணிந்து செல்வது தமிழ் மக்களை ஏமாற்றும் பழிச்செயலாகவே அமைகின்றது. இங்கு சிறிதரன், குற்றஞ்சாட்டும் சுமந்திரனை விட பெருங் குற்றவாளியாக உள்ளார் என்பதே நிதர்சனமாகும்.
தமிழரசுக்கட்சி குறிப்பிட்ட தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே பெரும்பான்மை ஆசனங்களை நடந்து முடிந்த பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெற்ற நிலையில் தம்மை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கனவுலகில் வாழும் நிலையில் உள்ளனர். அவ்ஏகபிரதிநிதித்துவம் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலிலிருந்து வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது. 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கணிசமான வாக்கு சதவீதத்தையும் ஆசனங்களையும் பெற்றிருந்தது. எனினும் வாக்கு தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட பரப்புக்குள் குவிக்கப்பட்டது. எனினும் 2024 பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் கணிசமான வாக்கு சதவீதம் மற்றும் பாராளுமன்ற ஆசனத்தை தென்னிலங்கையின் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது. இது தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் மீதான அவநம்பிக்கையையே உறுதி செய்கின்றது. தமிழ்த்தேசிய பரப்பில் தென்னிலங்கை கட்சி ஒன்று அதிகூடிய ஆசனங்களை பெறுவதில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் யாவும் பொறுப்பாளிகள் ஆயினும் அதன் பிரதான வகிபாகத்தை தமிழரசுக் கட்சியே பெற்றுக்கொள்கின்றது. வடக்கு-கிழக்கு முகம், நீண்ட பாரம்பரியம் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குகையில் வீட்டுச்சின்னத்தை முதன்மைப்படுத்தியமை போன்ற காரணங்களின் செல்வாக்கினாலேயே ஒப்பீட்டளவில் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே பெரும்பான்மை ஆசனத்தை தக்க வைத்துள்ளது. எனினும் 2004ஆம் ஆண்டு 21 ஆசனங்களை பெற்றிருந்த வீட்டுச்சின்னம் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 08 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்எதார்த்த மதிப்பீடு தமிழரசுக்கட்சி தோல்வியடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது என்ற எதார்த்த புரிதலையே உருவாக்குகின்றது. இவ்தோல்விக்கு பின்னால் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கமும் அதன் தொடர்ச்சியாய் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு சில தனிநபர்களின் மேலாதிக்கமுமே காரணமாகும். இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் முகமாகவே தொடர்ச்சியாக தமிழரசுக்கட்சி தனிநபர் மேலாதிக்கத்துக்கள் சுழன்று கூட்டு முயற்சிகளை நிராகிக்கும் செயற்பாட்டையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டில் தமிழ்க்கட்சிகள் கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தல், உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே சபைகளை பகிர்தல் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கூட்டாக கடிதம் அனுப்புதல் போன்ற தமிழ் மக்களின் அரசியலை முன்னிறுத்திய செயற்பாடுகளுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்ட அனைத்து கூட்டு முயற்சிகளையும் தமிழரசுக்கட்சி நிராகரித்தே வருகின்றது. இதில் கட்சிகளிடையேயான கட்சி அரசியல் நலன்களும் ஒரு காரணமாக அமைகின்றது. குறிப்பாக இரு தரப்பிலுமே கட்சி நலன்கள் செறிந்து காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய கூட்டிணைவுக்கான மாற்றம் என்பது 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தோல்வி அல்லது வீழ்ச்சியே ஏற்படுத்தியிருந்தது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக பல சந்தர்ப்ப கூட்டு முயற்சிகளை தூய்மைவாத பிரச்சாரத்தால் நிராகரித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், பொதுத்தேர்தல் தோல்விக்கு பின்னர் வலிந்து கூட்டுக்களுக்கு செல்வது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் மிதமாக தேர்தல் அரசியல் நலன் காணப்படுவதனையே உறுதி செய்கின்றது. எனினும் இவ்தேர்தல் அரசியல் நலன் தமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை உருவாக்குகையில் அதனை தமிழ் மக்கள் பயன்படுத்தி செல்வதில் தவறில்லை. மறுமுனையில் தமிழரசுக்கட்சி முன்னிறுத்தும் கட்சி நலன் தமிழ் மக்களின் நலனுக்கான கூட்டையே புறமொதுக்குகிறது. இது எதிரிக்கு சேவகம் செய்யும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடாகவே அமைகின்றது.
எனவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டுக்கான முயற்சியில் தேர்தல் நலன் காணப்படினும், அது தமிழ் மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டுமாயின், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டு தளத்துக்கு நகர வேண்டிய தேவை காணப்படுகின்றது. கூட்டு உருவாக்கத்தினூடாக கூடிக் கதைப்பதனூடகவோ அல்லது கூட்டு அறிக்கை வாசிப்பதனூடாகவோ அல்லது கூட்டு கடிதம் அனுப்புவதனூடாவோ தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தியடைந்து விடப்போவதில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டாளிகள் தொடர்பில் கடந்த கால கறைகள் மற்றும் தோல்வி முகங்கள் செறிந்து காணப்படுகின்றது. அவர்களுடனான கூட்டில் செயற்பாடற்கு மௌனித்து காணப்படுவது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கடந்த கால தூய்மைவாத பிரச்சாரங்களையும் கூட்டாளிகளின் கறைகள் மேவி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் அழித்து செல்லக்கூடிய அபாயங்களே காணப்படுகின்றது. தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் போதிய கவனத்தை உள்வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்ந்த கூட்டணியிடம் தற்போது வடக்கு-கிழக்கு தொகுதிகள் யாவும் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் காணப்படுகின்றார்கள். அவர்களூடாக மக்களின் உள்ளார்ந்த விடயங்கள் கையாளப்பட வேண்டும். அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலை கையாளும் அணுகுமுறைகளை தொடர வேண்டும். இத்தகைய செயற்பாட்டு அரசியலே தேர்தல் நலனை முன்னிறுத்தி இணைந்துள்ள கூட்டினை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள ஏதுவான வாய்ப்பாகும். அல்லது மக்களுடன் ஒருங்கிணையாத கூட்டு தேர்தலில் தோல்வியடைகையில் மேலும் கூட்டு சிதறடிக்கப்படும் நிலைமைகளே உருவாகும்.
தமிழ் மக்கள் மத்தியில் தற்போது வரைக்கும் தமிழரசு கட்சி என்பது அவர்களின் உணர்வு பூர்வமான அங்கமாக காணப்படுகின்றது இதனாலயே தமிழரசுகட்சி எந்த விதமான கூட்டு முயற்சிக்கும் செல்லாமல் மேலாதிக்க தன்மையை கொண்டு காணப்படுகின்றனர். எந்த தேர்தலிலும் மக்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்படுகின்றது.
ReplyDelete