ரணில் விக்கிரமசிங்கவின் கைதும்-பிணையும் உள்ளக நீதிப்பொறிமுறையின் பலவீனமும்! -ஐ.வி.மகாசேனன்-
கடந்த வாரம் இலங்கை அரசியலில் மீளவும் ரணில் விக்கிரமசிங்க பிரதான தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். இலங்கை மாத்திரமின்றி சர்வதேச செய்திகளிலும் முதன்மையாக அமைந்திருந்தது. சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் நிறைவேற்றுத்துறை ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார். ஒருவகையில் இவ்சீர்திருத்தத்தின் பின்னணியிலும், கைது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான விசாரணைக் குழு உருவாக்கத்திலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்து செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இக்கைது தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகளிடையே கூட்டுச்செயற்பாட்டை ஊக்குவித்துள்ளதுடன், ஆளுந்தரப்பு இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எனினும் குறைந்தபட்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியை ஒரு நாள் கூட சிறைக்குள் அனுப்பமுடியவில்லை என்ற விமர்சனமும் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் நீதிப்பொறிமுறை உள்ளக நீதிப்பொறிமுறையின் உறுதிப்பாட்டை சமரசம் செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகின்றதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு சில நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் தொடர் கதையாகவே நீள்கின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட பின்னர், மார்ச் மற்றும் செப்டெம்பருக்கு முன்னைய மாதங்களில் மாத்திரம் இலங்கையின் பொறுப்புக்கூறல்-நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தக்கூடிய சட்ட திருத்தங்கள் மற்றும் அலுவலகங்களை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதுண்டு. அவற்றின் நிலைப்புத்தன்மை மற்றும் செயற்பாடு மார்ச் மற்றும் செப்டெம்பர் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவுற்ற பின்னர் கேள்விக்குறியாகவே அமைவதுண்டு. கடந்த காலங்களில் காணமலாக்கப்பட்டோருக்கான அலுவலக சட்டம் மற்றும் அலுவலக உருவாக்கங்கள் மற்றும் இழப்பீட்டு நீதி சட்டம் உருவாக்கம் என்பன வலுவான சான்றாக அமைகின்றது. அவ்வரிசையிலேயே ஆகஸ்ட்-22அன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஊழல் குற்றச்சாட்டு கைதும் அவதானிக்கப்படுகின்றது.
செப்டெம்பர்-08அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான முன்செயலில் (ஆங்கில விளக்கத்தில் 'Home Work' புரியக்கூடியதாக இருக்கும்) ஒன்றாகவே ரணில் விக்கிரமசிங்கவின் கைது அவதானிக்கப்படுகின்றது. நீண்டகாலமாக இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதற்கான கோரிக்கை சர்வதேச தளத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரும் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான ஆக்கபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கவில்லை. ஆகஸ்ட் நடுப்பகுதியிலும் பயங்கரவாத தடைச்சட்த்தின் கீழ் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் ஏழு மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கான முன்செயலின் ஒருபகுதியாக 'செப்டெம்பர் மாத தொடக்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதற்கான வர்த்தககமானி அறிவித்தல் வெளியிடப்படும்' என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகஸ்ட்-22அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஒரு வருட ஆட்சியில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எவ்வித காத்திரமான செய்திகளையும் வழங்காத இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, தனது ஒரு வருட ஆட்சிக்காலப்பகுதி நிறைவு கொண்டாட்டங்களை செப்டெம்பர்-01அன்று யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை தொடங்கி ஆரம்பித்து வைக்க உள்ளார். யாவுமே ஏதொவொரு வகையில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரை கையாளும் நோக்கில், தென்னிலங்கை ஈழத்தமிழர்களை தமது கரிசணைக்குள் உள்வாங்குவதை சர்வதேச அரங்கிற்கு ஒப்பனை செய்வதாகவே அமைகின்றது. இந்த வகையிலேயே ரணில் விக்கிரமசிங்கவின் கைதும் உள்ளக பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே நோக்கப்படுகின்றது.
முதலாவது, ரணில் விக்கிரமசிங்க மீது தொடுத்துள்ள வழக்கு பலவீனமானதாக காணப்படுகின்றது. 2023ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தனிப்பட்ட பயணத்திற்காக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, 2023-செப்டம்பரில் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயங்களிலிருந்து திரும்பும்போது ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட மாற்றுப்பாதையை மையமாகக் கொண்டுள்ளது. வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்ள அவர் ஐக்கிய இராச்சியத்தில் நின்றதாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். தங்குமிடம், வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்காக சுமார் 160இலட்சம் (1.6கோடி) அரசு நிதி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 'ஜனாதிபதி அரசு நிதியின் பாதுகாவலர், அவற்றின் உரிமையாளர் அல்ல' என்று வாதிட்டார். இப்பின்னணியிலேயே ஜனாதிபதி காலப்பகுதியில் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அரச சொத்துப் பயன்பாடு ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டாக அமைகின்றது. இதுவொரு வகையில் இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட சட்ட மீறலாகவே அமைகின்றது. விதியை கடந்த மீறலாகவும் அவதானிக்கலாம். இக்குற்றச்சாட்டுக்கு ஒத்த கருமங்களை நடப்பு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவிலும் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது. அநுரகுமார திசநாயக்க ஜே.வி.பிஃஎன்.பி.பி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அல்லது அனுராதபுரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும்போது பாதுகாப்பு இல்லாமல் தனது சொந்த வாகனத்தில் பயணிக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. மேலும் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் நாடு முழுவதும் தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை அநுரகுமார திசநாயக்க வழிநடத்தியிருந்தார். நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அவரது தேர்தல் தொடர்பான பயணத்திற்கான செலவு பொதுமக்களின் வரிப்பணத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. சொந்த கட்சி அலுவல்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ கடமையாகக் கருத முடியுமா? இல்லையாயின் அதற்கான செலவீனங்களை ஜே.வி.பி அல்லது என்.பி.பி அல்லது அநுரகுமார திசநாயக்க வழங்கியுள்ளார்களா என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தகைய அனுபவங்களில் ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டும், கைதும் வழக்குகளும் மிகவும் பலவீனமான ஒரு பொறிமுறையாகவே அமைகின்றது.
இரண்டாவது, குறைந்தபட்ச அழுத்தங்களைக் கொண்ட மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பிரச்சாரமான ஊழலற்ற நிர்வாகம் என்பதையே முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமையை ரணிலின் கைதும் பிணையும் உறுதி செய்கின்றது. ஆகஸ்ட்-22அன்று ஊழல் குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்றைய தினமே கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம். ஜாமீன் வழங்குவதற்கு எந்த சிறப்பு காரணங்களும் இல்லை என்று வலியுறுத்தினார். இலங்கை சட்டம் Public Property Act, No. 12 of 1982-இன் பிரகாரம், 'பொதுச் சொத்து அல்லது அரச நிதி தொடர்பான மோசடி, குறிப்பாக ரூ. 25,000ஐ மீறும் அளவில் ஏற்பட்டால், அது பிணை வழங்க முடிய இயலாத குற்றமாக (Non-Bailable Offence) ஆக கருதப்படும். இத்தகைய வழக்குகளில், நீதிமன்றம் 'விதிவிலக்கான சூழ்நிலைகள்' இருந்தால் மட்டுமே பிணை வழங்கலாம். இந்நிலையில் கொழும்புக் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, ரணில் விக்கிரமசிங்கவை குறைந்தபட்சம் ஆகஸ்ட்-26 வரை தடுப்புக் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார். எனினும் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே ரணில் விக்கிரமசிங்க தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். மறுநாள் நீரிழப்பு மற்றும் இரத்தம் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டதாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்றத்தில் நீண்ட நேரம் தண்ணீர் கிடைக்காமல் இருந்ததாலும், தற்காலிக மின்சாரம் தடைப்பட்டதாலும் இது ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க தீவிர சிகிச்சையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தார். இத்தகைய பின்னணியிலேயே ஆகஸ்ட்-22அன்று மறுக்கப்பட்ட பிணை, ஆகஸ்ட்-26அன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் ஒரு சில மணிநேரங்கள் கூட பிணையற்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்குள் அனுப்ப முடியவில்லை. தொடர்ச்சியாக குளிரூட்டப்பட்ட அறையில் வீட்டு உணவினை பெற்று ஒருவகையில் இயல்பாக சொகுசுடன் அரச நிதியில் ஆகஸ்ட்-22 முதல் ஆகஸ்ட்-26 வரையான நான்கு நாட்களும் ரணில் விக்கிரமசிங்க இருந்தார் என்பதே எதார்த்தமானதர்கும்.
மூன்றாவது, குறைந்தபட்ச ஊழல் வழக்குகளில் கூட உள்ளக நீதிப்பொறிமுறைக்குள் அரச உயரதிகளை தண்டிக்க முடியாது என்பதனையே ரணில் விக்கிரமசிங்க வழக்கு உறுதி செய்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் என்பது முழுமையாக ஊழலுக்கு எதிரான பிரச்சாரமாகவே அiமைகின்றது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் அநுரகுமார திசநாயக்கவின் மேடைகளில் பல அடுக்கு கோவைகள் ஊழல் சாட்சியங்களாக தெரிவிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னரான பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் ஊழலுக்கு எதிரான ஆட்சியதிகாரத்தை அமைத்துக்கொள்ளலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரமாக காணப்பட்டது. இப்பின்னணியில் ஜனாதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையானது முழுமையாக ஊழலுக்கு எதிரானதாகவே அமைகின்றது. எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்த போதிலும், சிறைக்குள் தடுத்து வைத்து விசாரிக்க முடியாமை அரச உயரதிகாரிகளை தண்டிப்பதில் உள்ள சவால்களையே விளக்குகின்றது. இது எதிர்க்கட்சிகள் பலப்பட வாய்ப்பை வழங்குகின்றது. அதுமாத்திரமன்றி அரச திணைக்கள அதிகாரிகளும் கடந்த கால அரச உயதிகாரிகளுக்கு தொடர்ந்து விசுவாசமாக செயற்படும் நிலைமைகளையே வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனாவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இது ரணில் விக்கிரமசிங்காவிற்கான ஆதரவாளர்களை திரட்ட சாதகமான சூழலை உருவாக்கியது. இது எதிர்க்கட்சிகளை பலப்படுத்துவதுடன் அரசாங்கத்துக்கான நெருக்குவாரத்தை உருவாக்குவதாகவே அமைந்தது.
நான்காவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையான ஊழல் நிர்வாகத்தையே இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையால் சீர்செய்ய முடியாத நிலையில், இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசியலில் கடந்தகால இனவிரோத செயற்பாடுகளுக்கு உள்ளக நீதிப்பொறிமுறையால் நீதி வழங்கும் என்பது கற்பனையானது என்பதையே ரணில் விக்கிரமசிங்கவின் கைதும் பிணையும் அதுசார் நிகழ்வுகளும் விளக்குகின்றது. ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த வதைமுகாம் மற்றும் 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. பட்டலந்த வதைமுகாம், 1983இன வன்முறை போன்றவற்றுக்காக ரணில் விக்கிரமசிங்கவை சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் தெரிவித்தார். எனினும் அவை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நீதி விசாரணையையும் கொள்கைரீதியாக ஆரம்பிக்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இனப்படுகொலை இனவன்முறைக்கான குற்றங்களை விசாரிப்பதில் கொள்கைரீதியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதி அளித்திருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆணை பெற்ற ஊழலுக்கு எதிராகவே உறுதியாக செயற்பாட்டை முன்னெடுக்க இயலாத நிலையில், கொள்கை இணக்கமற்ற இனப்படுகொலைக்கு உள்ளக நீதிப்பொறிமுறைக்குள் நீதியைப் பெறலாம் என்பதை சர்வதேசத்துக்கு காண்பிக்க பிரச்சாரப்படுத்த முயலுவது தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதாகவே அமைகின்றது.
எனவே, ரணில் விக்கிரமசிங்கவின் கைது சட்டத்திற்கு முன் அனைவரும் சமன் எனும் நாடகத்தை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கான முன்செயலாக இலங்கை செய்துள்ளதையும் அதில் தோல்வியடைந்துள்ளதையுமே உறுதி செய்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பின்னரான நிகழ்வுகளும் பிணையும் இலங்கையின் உள்ளகப் பொறிமுறையில் முன்னாள் இந்நாள் அரச உயரதிகாரிகள் தனித்துவமான விசேட நிலையை பெறுகின்றார்கள் என்பதையே உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட்-22அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதையும், நீதிமன்றம் தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பித்தமையையும் பொறுப்புக்கூறலின் உயர் சாட்சியமாகவே அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. ஆதரவாளர்களும் பூரிப்படைந்தனர். இலங்கையில் அதிகாரம் மிக்கவர்கள் அரிதாகவே சட்ட விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில் இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பொறுப்புக்கூறல் என்றே பூரிப்பானார்கள். எனினும் அரசியல் நிகழ்வுகளுக்கு உள்ளே காணப்படும் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் தொடர் சம்பவங்களாலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. அது பெருமளவில் பொதுமக்கள் பார்வையில் தவிர்க்கப்படுகின்றது. தனி ஒருவன் எனும் தென்னிந்திய சினிமாவில் கூறுவது போல் 'செய்தி வாசிக்கையில் முதலாம் பக்க செய்திக்கும் நான்காம் பக்க செய்திக்கும் இடையிலான தொடர்பை அறிய வேண்டும்.' ரணில் கைதுக்கு பின்னரான தொடர்ச்சியான நிகழ்வுகளும் ஆகஸ்ட்-26 பிணையும் இலங்கையின் உள்ளப் பொறிமுறையின் பலவீனத்தையே உறுதி செய்கின்றது. இதனை ஈழத்தமிழர்கள் சரிவர புரிந்து விளங்குவதும் விளக்குவதும் அவசியமாகின்றது.
Comments
Post a Comment