பலவீனமான போராட்டங்களால் தமிழ் மக்களின் போராட்ட மனநிலை சிதைக்கப்படுகிறது! -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியலில் ஜனநாயக வழிப்போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஆயுதமாக மாறியுள்ளது. உலக அரசியலிலும் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல், பயங்கரவாதத்தின் பெயரால் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்தது. அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 'இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை' என்பது ஜனநாயக வழிப் போராட்டத்திற்கு உரமளிப்பதாக அமைந்திருந்தது. எனினும் கடந்த 16 ஆண்டு கால இடைவெளியில் இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வகையிலான வினைத்திறனான போராட்டங்களை தொடர்ச்சியாக பின்பற்ற தவறியுள்ளார்கள். விதிவிலக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏறத்தாழ 3000 நாட்களை கடந்ததாக அமைகின்றது. எனினும் பிறரை தூண்டக்கூடிய வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலோ காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பரிணமிக்க தவறியுள்ளது. அதற்கான வழிகாட்டலையோ அல்லது நெறிப்படுத்தலையோ தமிழ் அரசியல் பிரிதிநிதிகளும் வழங்க விரும்பியிருக்கவில்லை. பெரும்பாலும் அரசியல் பிரதிநிதிகள் போராட்டங்களை தமது சுயநல தேவைகளுக்கான களமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்நிலையிலேயே தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரின் ஹர்த்தால் பற்றிய அறிவிப்பு பொதுவிமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழ் அரசியலில் போராட்டத்திற்கான தேவையையும் வழிமுறையையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்-09ஆம் திகதி முல்லைத்தீவில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு முத்தையான்காடு குளத்தில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜ் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'தமிழர் தாயகத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் ம.ஆ.சுமந்திரன் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுமையான ஹர்த்தால் போராட்டத்துக்கான அழைப்பை கடந்த வாரம் அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் ஆகஸ்ட்-15அன்று ஹர்த்தால் போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலாய பெருந்திருவிழா காரணமாக ஆகஸ்ட்-18 போராட்ட திகதி மாற்றப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களும் ஹர்த்தால் போராட்டத்துக்கான ஆதரவை கோரியுள்ளார்கள். சி.வி.கே சிவஞானம் ஊடக சந்திப்பில், 'மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதாலேயே முல்லைத்தீவு சம்பவம் போன்று பல தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு வடக்கு, கிழக்கில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். சிலருக்கு அசௌரியங்கள் இருக்கலாம். ஆனால், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டும் விதமாக இந்தக் ஹர்த்தால் அமைய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் போராட்டத்தின் நோக்கமாக குறிப்பிடப்படும் 'தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்' என்பது தமிழர்கள் திரட்சியாக வலியுறுத்தப்பட வேண்டிய விடயமாகவே அமைகின்றது. அத்துடன் இனப்படுகொலையை எதிர்கொண்டு விடுதலைக்காக போராடும் தேசிய இனம் தொடர்ச்சியான போராட்டங்களால் தமது கோரிக்கைகளை மற்றும் எதிர்ப்புக்களை வலுவாக வெளிப்படுத்துவதும் அவசியமாகின்றது. ஈழத்தமிழர் அரசியல் பரப்பின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரவு அவர்கள், 'விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது?' என்ற தலைப்பிலான கட்டுரையில் 2009களுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் பற்றிய பதிவில், 'உன்னை நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமேயாயினுங்கூட நீ சத்தமிட வேண்டும். ஒரு பச்சைக் குழந்தைகூட தன்னருகே யாரும் துணைக்கில்லை என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும். இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழர்கள் கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாய் போராடாதிருக்கும் நிலையில் உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது; வெளிநாடுகளும் பாராது. உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின் நீ கை தூக்க வேண்டும். ஆதலாற் களத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே உள்ளும், புறமும் கவனத்தை ஈர்த்துப் போர் கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும்' என வலியுறுத்தியுள்ளார். இந்நிதர்சனமான பார்வையை களையக்கூடிய அல்லது மறுசீரமைக்கக்கூடிய உத்தியை தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் போராட்ட அழைப்பு கொண்டிருக்கவில்லை என்பதுவே பொதுவிமர்சனமாக அமைகின்றது.
ஹர்த்தால் அல்லது பொது முடக்கம் அல்லது கதவடைப்பு அல்லது வேலை நிறுத்தம் என்பதனால் அடையாளங் காணப்படும் போராட்டம் ஒருவகையில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டத்தின் ஒருவகை உள்ளடக்கமாகவே அமைகின்றது. பிரித்தானியர்கள் நாகரீகமானவர்கள் பிறர் வருத்தத்தில் இரங்குவார்கள் என்ற வாதங்களை கடந்து, வேலை நிறுத்தத்தினூடாக பிரித்தானியா இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிலக்கரி, இரும்பு மற்றும் பருத்தி போன்றவற்றை பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் காலனித்துவத்தின் பிரதான இலக்காகிய பொருளாதார தேவை பெரும் நெருக்கடிக்குள் நகர்ந்தது. இதனூடாக பிரித்தானிய அரசாங்கமும் இடர்பாடுகளை எதிர்கொண்டது. இவ்வாறான பின்னணியிலேயே காலனித்துவ காலத்தில், இற்றைக்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவுக்கு எதிரான மகாத்மா காந்தி தலைமையிலான முடக்கம் வெற்றி பெற்றிருந்தது. எனினும் ஹர்த்தால் போராட்டங்கள் நிலைத்திருக்கவில்லை. வேலைநிறுத்த போராட்டங்களை உயர்ந்தபட்சம் ஒரு வார காலப்பகுதிக்குள்ளேயே மகாத்மா காந்தியினாலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் நெறிப்படுத்தக் கூடியதாக இருந்தது. நாட்கள் அதிகரிக்கையில் போராட்டக்காரர்கள் பொருளாதார தேவை கருதி தொய்ந்து போகக்கூடிய வாய்ப்புக்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் அடையாளங் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் மகாத்மா காந்தி வெறுமனவே வேலைநிறுத்தப் போராட்டங்களை தனித்து செய்வதில்லை. உண்ணாவிரத போராட்டம், நடைபயணம் போன்ற பிற வகையான போராட்டங்களுடன் இணைந்ததாகவே வேலைநிறுத்த போராட்டங்களும் இந்திய சுதந்திர போராட்டத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. காந்தியின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் குறிப்பிடும் அறிஞர்கள், 'வன்முறையற்ற ஒத்துழையாமை இயக்க செயற்பாட்டின் முன்னோடியாகவே' விளக்குகின்றார்கள்.
ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் ஹர்த்தால் பற்றிய அறிவிப்புக்கள் மிதமிஞ்சி சலிப்பை உருவாக்கும் சூழ்நிலையிலேயே காணப்படுகின்றது. எதிர்ப்பின் அல்லது கண்டனத்தின் வெளிப்பாடு என்பது ஹர்த்தால் போராட்டத்தினூடாக மாத்திரமே என்பதாகவே ஈழத்தமிழ் அரசியலில் போராட்ட வழிமுறை சுருங்கி உள்ளது. ஹர்த்தால் போராட்டங்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் அடையாள போராட்டமாகவும் அமைந்துவிடுகின்றது. மறுநாள் பத்திரிகை செய்திகளுக்காக காலை 11.00 மணி வரையில் நகர்ப்புற கடைகளை மூடிவைப்பதாகவும், நகரத்துக்கு வெளியே இயல்பு நிலையில் நாளாந்த வேலைகள் நடைபெறுவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது ஹர்த்தாலின் அடிப்படையை உள்வாங்காமல் ஈழத்தமிழ் அரசியலில் ஹர்த்தால் போராட்டங்களை அறிவிப்பதன் விளைவிலானதாகவே அமைகின்றது. ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் இறந்துவிட்டால் அடாத்தாக கதவடைப்பு மேற்கொள்வதால் மக்கள் அல்லல்படுவதற்கு ஒத்ததாகவே ஈழத்தமிழ் பரப்பில் இடம்பெறும் ஹர்த்தால்களின் பிரதிபலிப்பும் அமைகின்றது.
வடக்கு-கிழக்கு எட்டு மாவட்டங்களில் ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாத்திரமே பெருமளவில் தமிழ்க் குடிசனத்தை கொண்டுள்ள மாவட்டங்களாகும். மிகுதி அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம் மற்றும் சிங்கள குடிசனமும் கணிசமாக வாழ்கின்றார்கள். அம்பாறை பெருமளவில் சிங்கள குடிசனத்தை கொண்ட மாவட்டமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் வடக்கு-கிழக்கில் முழுமையான வேலை நிறுத்தம் சாத்தியப்படுத்தக்கூடியதாக அமையுமா என்ற கேள்வி காணப்படுகின்றது. அத்துடன் சாத்தியப்படுத்தக்கூடியதாக அமையினும் அதன் விளைவுசார் கேள்விகளும் காணப்படுகின்றது. வடக்கு-கிழக்கில் இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார வருமானத்தை வழங்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் எதுவும் காணப்படவில்லை. இந்நிலையில் வேலைநிறுத்தத்தால் எதிர்ப்பை எதிர்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய நெருக்கீடுகள் மற்றும் அழுத்தங்கள் தொடர்பில் கேள்விகள் காணப்படுகின்றது. நெருக்கீடுகள் மற்றும் அழுத்தங்கள்ளற்ற சூழலில் இலங்கை அரசாங்கம் எதிர்வினையாற்ற வேண்டிய தேவை காணப்படவில்லை. குறிப்பாக இறுதி யுத்த காலப்பகுதியில் நீண்ட காலங்கள் வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியான அடாத்தான பொதுமுடக்கங்களை இலங்கை அரசாங்கமே மேற்கொண்டிருந்தது. தமது பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள தமிழ் மக்களே பொது முடக்கத்தை நீக்க கோரிக்கை விடுத்தார்கள். பொது முடக்கத்தை மீறி சென்றவர்கள் இராணுவத்தால் தாக்கப்பட்ட வரலாறுகளும் காணப்படுகின்றது. வடக்கு-கிழக்கில் வேலை நிறுத்தத்தினால், அன்றாட வேலைகளினூடாக தமது பொருளாதார தேவைகளை ஈடேற்றிக்கொள்ளும் தமிழ் மக்களே பாதிப்பிற்குள்ளாகின்றார்கள். கடந்த காலங்களில் ஹர்த்தால் அறிவிப்பும் வேலைநிறுத்தங்களும் இத்தகைய அனுபவங்களையே உருவாக்கியுள்ளது.
சமகாலம் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறுவதனால் சர்வதேசத்திற்கு, 'வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவமயமாக்கலால் இழைக்கப்பட்ட சமீபத்திய அநீதியை வெளிப்படுத்துவதற்கு' போராட்டம் உகந்ததாக அமையும். எனினும் ஹர்த்தால் அறிவித்து விட்டு வீட்டுக்குள் முடங்கி கிடப்பதனால் போதிய எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடியதாக அமையப் போவதில்லை. குறைந்தபட்சம் பெருந்திரளான பேரணிகளையாவது ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு ஹர்த்தால் அறிவிப்பாளர்களிடம் காணப்படுகின்றது. காலனித்துவத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தில் ஏனைய போராட்டங்களுடன் ஒருங்கிணைந்ததாகவே ஹர்த்தால் போராட்டத்தையும் காந்தி நெறிப்படுத்தியிருந்தார். எனினும் ஈழத்தமிழ் அரசியலில் தோல்வியடைந்தவர்கள் தமது அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்கான ஓர் இலகுவான போராட்டக்களமாகவே ஹர்த்தால் அறிவிப்பை பயன்படுத்துகின்றார்கள். ஓர் ஊடக அறிவிப்பு மற்றும் எட்டு மாவட்ட வர்த்தக சங்ககங்களுடன் உரையாடல் என்பதாகவே ஹர்த்தாலுக்கான முன்னாயர்த்தங்கள் அமைகின்றது. இவற்றை காவுவதற்கு சில தமிழ் ஊடகங்களும், பத்திரிகை ஆசிரியர்களும் விலைபேசப்பட்டுள்ளார்கள். நிலையான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பற்றி போராட்டத்துக்கான முன்னாயர்த்தத்திலும் போராட்டத்திலும் உள்வாங்கப்படவில்லை.
போராட்டங்கள் சார்ந்து தமிழரசுக்கட்சிக்கு நீண்ட தனித்துவமான பாரம்பரிய வரலாறுகள் காணப்படுகின்றது. தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிரான காலி முகத்திடல் போராட்டம், சிங்கள 'ஸ்ரீ' எதிர்ப்பு போராட்டம் என 1980களுக்கு முன்னரான வரலாற்றில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர்கள் மற்றும் ஆரம்பகால தொண்டர்கள் ஓர் தேசிய இன விடுதலைப் போரட்டத்துக்கான ஓர்மத்துடன் கட்சியை வழிப்படுத்தினார்கள். அவர்கள் உருவாக்கிய அத்திவாரத்தினூடாகவே இன்றுவரை தமிழரசுக்கட்சி பலமான வடக்கு-கிழக்கு முகம் கொண்ட கட்சியாக நிலைபெற காரணமாகின்றது. இப்பத்தி எழுத்தாளரின் முன்னைய கட்டுரைகளில் 'இரும்பு மனிதன் நாகலிங்கம்' மாவட்டச் செயலக நிர்வாக முடக்க போராட்டத்தில் வெளிப்படுத்திய தற்துணிவான செயல் விபரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அரசியல் தலைமைகள் தமிழரசுக்கட்சியில் வெற்றிடமாகவே உள்ளது என்ற ஆதங்கமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமகாலத்திலும் தமிழரசுக்கட்சியே தமிழ் மக்களின் பெரிய கட்சி என தம்பட்டம் அடித்து ஏனையோரின் ஒற்றுமை முயற்சிகளுக்கு தடையாக உள்ள தமிழரசுக்கட்சியின் நிர்வாகிகள் மக்கள் திரட்சி போராட்டத்தினூடாக தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் பலப்படுத்தக்கூடியதாக அமையும். மாறாக ஒப்பீட்டளவில் நேரிய விளைவுகளற்ற வேலைநிறுத்த அறிவிப்புக்கள் மூலம் தமிழ் மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது 'பெரிய கட்சி' என்ற பெயர்ப்பலகைக்கு பொருத்தமற்ற செயலாக அமைகின்றது.
எனவே, தமிழரசுக்கட்சியின் ஹர்த்தால் அறிவிப்பு முன்னொரு காலத்தில் ம.ஆ.சுமந்திரன் ஏனையோரின் போராட்டங்களை விமர்சித்தது போல், 'மக்களால் நிராகரிக்கப்பபட்டவர்களின் போராட்டமாகவே' பார்க்கப்படுகின்றது. மக்களால் நிராகரிக்கப்பட்வர்கள், மக்கள் நிராகரிப்புக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து, அதனை சீர்செய்து மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் மனங்களை வெல்ல முயல்வதும் வெல்வதும் புறந்தள்ளக்கூடிய விடயமல்ல. வரவேற்கத்தக்கதாகவே அமைகின்றது. எனினும் வெறுமனவே கண்துடைப்பு செயற்பாடுகளூடாக மீள மக்களை ஏமாற்றி மக்கள் மனங்களை வெல்ல முயல்வது தொடர்ச்சியான நிராகரிப்புக்கே வழிகோலும். இது அவரை மாத்திரமன்றி அவர் சார்ந்த அமைப்பையுமே சிதைக்கக்கூடியதாக அமையும். ஈழத்தமிழரசியலில் சமகால நடைமுறை ஜனநாயக வழி போராட்டம் சார்ந்ததாகவே அமைகின்றது. ஹிட்லரின் யூதப் படுகொலையில் உயிர் பிழைத்த எலி வீசல் எதிர்ப்பு போராட்டம் பற்றிய பதிவில், 'அநீதியைத் தடுக்க நாம் சக்தியற்றவர்களாக இருக்கும் நேரங்கள் இருக்கலாம். ஆனால் நாம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தவறும் நேரங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது' எனக்குறிப்பிடுகின்றார். ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான சமூகமாய் இனப்படுகொலைக்கான நீதியை கோரும் சமுகமாய் தொடர்ந்து வலுவான குரலெழுப்ப வேண்டியவர்களாக உள்ளார்கள். பலவீனமான போராட்டங்களால் தமிழ் மக்களின் போராட்ட மனநிலைகளை சிதைக்காது, பலமான திரட்சியை ஏற்படுத்தக்கூடிய போராட்டங்களை தமிழ் மக்களிடையே ஒருங்கிணைப்பதே காலத்தின் தேவையாகும்.
Comments
Post a Comment