இலங்கையை சூழ்ந்துள்ள இயற்கையின் சீற்றம்! -ஐ.வி.மகாசேனன்-
இயற்கையின் கோர தாண்டவம் முழு இலங்கைத் தீவையும் பெரும் அழிவுகரமான பாதைக்குள் நகர்த்தியுள்ளது. இலங்கையின் தீவுசார் புவியியல் அமைப்பு வருடா வருட பருவ கால மழைக்காலப்பகுதியில் தாழமுக்கம், மினி சூறாவளி, மழைவீச்சு அதிகரிப்பு, வெள்ளம், மண்சரிவு, உயிரிழப்பு, இடப்பெயர்வு என்பன நிலையான பதிவாக அமைகின்றது. அவற்றில் இழப்பு வீச்சுகள் குறைவாகவே அமைந்துள்ளன. எனினும் 2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை 'தித்வா' (Ditwah) சூறாவளியாக சீற்றம் கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டதுடன், பெருமளவானோர் காணாமலாக்கப்பட்டதுடன், தீவு முழுவதும் பெருமளவான சொத்து சேதங்களை ஏற்படுத்தி நாட்டை ஸ்தம்பிக்க செய்துள்ளது. நாடு மெல்ல பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் தோற்றத்தை காண்பிக்கையில் மறுபடி இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்வை தித்வா சூறாவளி உருவாக்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் என தென்னாசிய நாடுகள் பேரிடர் முகாமைத்துவத்தில் இலங்கையுடன் கைகோர்த்துள்ளது. இக்கட்டுரை தித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளையும் மீட...