2025ஆம் ஆண்டு உலகளாவிய போராட்டங்களும் Gen-Z சமுகம் ஏற்படுத்தியுள்ள நிலையற்ற மாற்றங்களும்! -ஐ.வி.மகாசேனன்-
சமகாலத்தில் தமிழ்ப்பரப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் தாக்கத்தில் ‘தற்குறி’ என்ற வசைபாடல் இளந்தலைைமுறையினர் மீது விரவி காணப்படுகின்றது. பெரும்பாலும் 2000இற்கு பின்பு பிறந்தவர்களை சமுகம் பற்றிய போதிய அறிவும் அக்கறையுமற்றவர்கள் என்ற தொனியிலேயே தற்குறிகள் என்ற வசைபாடல்கள் காணப்படுகின்றது. அதே பருவத்தினர் ‘Gen-Z போராட்டக்காரர்கள்’, ‘Gen-Z புரட்சியாளர்கள்’ என சமுக மாற்றத்தின் பிரதான பங்களிகளாக கொண்டாடும் சூழலொன்று சர்வதேச பரப்பில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் ஆரம்ப படிமங்கள் தென்னாசியாவில் குறிப்பாக 2022ஆம் ஆண்டு அரகலயவை மையப்படுத்திய இலங்கையின் போராட்ட சூழலே அடையாளப்படுத்தப்படுகின்றது. 2025ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் நெருக்குவாரங்களுக்கு பின்னால் முதன்மையான விவாதமாக Gen-Z ('Generation-Z’ தோராயமாக 1997-2012களுக்கு இடையில் பிறந்தோர்) என்ற சொல்லாடல் பரவலாக காணப்பட்டுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு எதிர்ப்பு போராட்டங்களை வடிவமைப்பதில் Gen-Z இயக்கத்தின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
Gen-Z பருவத்தினரின் அரசியல் போராட்டங்கள் பற்றிய செய்திகள், 2024ஆம் ஆண்டு ஜூலையில் பங்களாதேக்ஷின் பிரதமர் க்ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமும் ஆட்சி மாற்றத்தினையும் தொடர்ந்தே பிரதான அரசியல் உரையாடலை பெற்றது. அதன் பின்பே பங்களாதேக்ஷ் போராட்டத்தை ஒத்த இயல்புகளைக் கொண்ட இலங்கையின் 2022ஆம் அண்டு அரகலயவிலும் Gen-Z தாக்கங்கள் பொதுமையாக விவாதிக்கப்பட ஆரம்பமாகியது. எனினும் இவை கடந்த ஆண்டுகளில் மட்டுப்படுத்தப்பட்ட கவனத்தையே உள்வாங்கியிருந்தது. 2025ஆம் ஆண்டு கென்யா முதல் மெக்ஸிகோ வரையில் உலகின் பல பாகங்களில் இடம்பெற்ற போராட்டங்களிலும் Gen-Z பருவத்தினர் பிரதான சக்திகளாகவும் போராட்டத்தின் தலைமையையும் வழங்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் இளையோர் மற்றும் மாணவர்களின் வகிபாகம் பிரதானமாக காணப்படுவது பொதுவான இயல்பாகும். எனினும் இன்றைய இளையோர், குறிப்பாக இணைய தொழில்நுட்ப சமுக வலைத்தள யுகத்தின் பின்னரான Gen-Z பருவத்தினரின் சமுக அக்கறை மற்றும் விழிப்புனர்வுகள் தொடர்பில் பரவலாக எதிர் விமர்சனங்களே காணப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே Gen-Z பருவத்தினர் சமுக மாற்றத்திற்கான குரலெழுப்புவதும் போராடுவதும் மைய உரையாடலை அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என கண்டங்கள் யாவற்றிலும் ஏதொவொரு பகுதியில் Gen-Z பருவத்தினர்கள் வீதிகளில் இறங்கி, இரகசியமாக புரட்சிகளை ஏற்பாடு செய்து, வேரூன்றிய ஆட்சியாளர்களை அரியணையிலிருந்து அகற்றி வருகின்றனர். அல்லது அரசியல் நெருக்குவாரத்தை உருவாக்கி வருகின்றார்கள். எழுச்சிகளில் ஈடுபட்டவர்களில் பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இது போராட்டங்களின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டும் குறிகாட்டியாகவே அமைகின்றது. 2024ஆம் ஆண்டில் வங்காளதேசம் மற்றும் கென்யாவில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் தாக்கம் 2025ஆம் ஆண்டிலும் தொடர்கின்றது. இவற்றைவிட இந்த ஆண்டில் இந்தோனேசியா, மடகாஸ்கர், மெக்சிகோ, மொராக்கோ, நேபாளம், பெரு, பிலிப்பைன்ஸ் மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. ஒவ்வொரு போராட்டத்திற்கும் அதன் சொந்த உள்நாட்டு காரணங்கள் இருந்தாலும் ஊழல், வாழ்க்கைச் செலவு நெருக்கடிகள் மற்றும் பரவலான பொருளாதார அதிருப்தி ஆகியவற்றின் கலவையின் மீதான ஆழ்ந்த பொது கோபத்தாலேயே இவை அனைத்தும் தூண்டப்பட்டுள்ளன.
பல நாடுகளில் உள்ள இளைஞர் போராட்டக்காரர்கள் பொருளாதார சமத்துவமின்மையை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசு ஆதரவு தன்னலக்குழுக்கள் உட்பட அரசியல் மற்றும் பொருளாதார உயரடுக்கினருக்கு அரசு வழங்கும் வீட்டுவசதி, உதவித்தொகை மற்றும் பிற சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றது. மறுபக்கம் அரசுடன் தொடர்பில்லாத சாதாரண குடிமக்கள் அதிக வாழ்க்கைச் செலவை சுமப்பதுடன், பொருளாதார வாய்ப்பு இல்லாததால் அவதிப்படும் நிலைமைகளும் காணப்படுகின்றது. உதாரணமாக இந்தோனேசியா மற்றும் நேபாளத்தில் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற இளையோர் எதிர்ப்பு போராட்டம் அரசு ஆதரவாளர்களுக்கு குவிக்கப்பட்ட சலுகைகளை எதிர்ப்பதாகவே அமைந்திருந்தது. ஊழல் மற்றும் அரசாங்க அலட்சியத்தால் ஏற்படும் மோசமான உள்கட்டமைப்பு மேலாண்மையை முன்னிறுத்தியும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இளையோர் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ள வங்களாதேசம், பிலிப்பைன்ஸ், மடகஸ்கார், இந்தோனேசியா, பெரு, மொராக்கோ, நேபாளம், மெக்சிகோ மற்றும் கென்யா ஆகிய நாடுகள் 'V-Dem' நிறுவன 2024 அரசியல் ஊழல் குறியீட்டு மதிப்பெண்ணில் முன்னணியில் உள்ள நாடுகளாகும். மொராக்கோவில், மருத்துவமனை ஒன்றில் எட்டு பெண்கள் பிரசவத்தின்போது இறந்ததை அடுத்து, பிரதமர் அஜீஸ் அகன்னூச் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். பொது சுகாதார வளங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக 2030ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்ப்பந்து தொடருக்காக மொராக்கோ அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலவிட்டதாக குற்றம் சாட்டினர்.
இளையோர் போராட்டத்தின் காரணங்கள் பொதுமைப் பண்பை பகிருகின்ற போதிலும் முடிவுகள் கலவையாகவே அமைந்துள்ளது. ஒரு சில நாடுகளில் ஆட்சி மாற்றங்களையும், இன்னும் சில நாடுகளில் அரசியல் சீர்திருத்தங்களுடனும் முடிவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு பலத்தைப் பயன்படுத்துதல் மூலம் போராட்டங்கள் முடக்கப்பட்டும் உள்ளது. அதேவேளை இளையோர் போராட்டத்தின் அறுவடைகள் பல தரப்புக்களால் கடன் வாங்கப்பட்டுள்ள பொதுமையும் சமகால இளையோர் போராட்ட விளைவுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அக்டோபர்-14அன்று, மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா பல வார போராட்டங்களுக்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஒரு இராணுவ அரசாங்கத்தால் மாற்றப்பட்டார். இது மாற்றத்தைக் கோரி வரும் இளையோர் போராட்டம் பிற வன்முறை சக்திகளால் கைப்பற்றப்படும் சந்தர்ப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தலைவர்கள் வீழ்ந்த ஒரே நாடு மடகாஸ்கர் அல்ல. நேபாளம் மற்றும் பெருவும் தங்கள் ஆட்சியாளர்களை நிராகரித்துள்ளன. நேபாளம் ஒரு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளது. அதேவேளை மார்ச் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட நேபாளப் பிரதமர் ஒலி மூன்றாவது முறையாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பின்புலங்களில் போராட்டத்தின் பின்னரான புதிய அல்லது சீர்திருத்தப்பட்ட அரசாங்கங்கள் போராட்டக்காரர்களின் அடிப்படை கவலைகளை நிவர்த்தி செய்யும் நீடித்த சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘நாம் எரித்தால்: மாபெரும் போராட்டங்களின் தசாப்தமும் காணாமல் போன புரட்சியும்’ (If We Burn : The Mass Protest Decade and the Missing Revolution) என்ற புத்தகத்தில், பத்திரிகையாளர் வின்சென்ட் பெவின்ஸ் 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தைப் பற்றிய ஒரு நிதானமான அனுபவத்தை வழங்குகிறார். இது எதிர்கால ஆர்வலர்களுக்கு ஒரு எச்சரிக்கைக் கதையாகவும் அமைகின்றது. அந்;த தசாப்தத்தில், முன்னெப்போதையும் விட அதிகமான போராட்டங்களைக் கண்டதாக பெவின்ஸ் வாதிடுகிறார். ஆனால் இந்த வெகுஜன அணிதிரட்டல்கள் பெரும்பாலும் தங்கள் இலக்குகளை அடையத் தவறிவிட்ட. மேலும் பல எதிர் புரட்சிகளை ஊக்குவித்தன என்ற எச்சரிக்கையையும் வழங்குகின்றார். பெவின்ஸின் பிரதான உதாரணம் பிரேசில் ஆகும். அங்கு அவர் ஒரு வெளிநாட்டு நிருபராக பணியாற்றியுள்ளார். 2010களின் முற்பகுதியில், இளம் இடதுசாரி ஆர்வலர்கள் பொதுப் போக்குவரத்தில் கட்டண உயர்வை எதிர்த்தனர் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியை அதன் முற்போக்கான திட்டத்திற்கு ஏற்ப வாழத் தூண்டினர். இருப்பினும், இந்த அதிருப்தியை வலதுசாரிகளிடமிருந்து நிதியுதவி பெற்ற சக்திகள் இறுதியில் கைப்பற்றின. ஏனெனில் இளம் பிரேசிலியர்கள் ஒரு சுதந்திரவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தினர். இடதுசாரி எதிர்ப்பாளர்களின் சொல்லாட்சி மற்றும் அழகியல் சிலவற்றை நகலெடுத்தனர். வலதுசாரிகள் 2016இல் ஜனாதிபதி தில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்வதிலும் வெற்றி பெற்றனர். ரூசெப்பை பதவியில் இருந்து நீக்கியதை ஆதரித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், பிரேசிலின் இராணுவ சர்வாதிகாரத்தின் போது ரூசெப்பை சித்திரவதை செய்த அதே கர்னலுக்கு தனது வாக்குகளை அர்ப்பணித்தார். அந்த சட்டமன்ற உறுப்பினரின் பெயர் ஜெய்ர் போல்சனாரோ. மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஜனாதிபதி பதவிக்கு ஏறினார். இலட்சியவாத இடதுசாரி எதிர்ப்பிலிருந்து போல்சனாரோவின் தீவிர வலதுசாரி ஆட்சி வரையிலான இந்தப் பாதை போராட்டத்தின் அடித்தளம் கட்டமைக்கப்பட வேண்டியதை விளக்குகிறது. போராட்டங்கள் அல்லது சமுக இயக்கங்கள் விடயங்களை அசைக்க முடியும். ஆனால் அவை நன்கு கட்டமைக்கப்பட்டு மாற்றத்திற்கான நீண்டகால உத்திகளைப் பின்பற்றாவிட்டால், அவை உருவாக்கும் வெற்றிடம் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவர்களால் நிரப்பப்படும். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறப்பாக நிதியளிக்கப்படுகிறார்கள். இவ்வாறான நிதியளிப்பினூடாக கட்டமைக்கப்படும் அமைப்பு அல்லது நபர் மக்களின் நலன்களுக்கு புறத்தே நிதியளிப்பவர்களின் நலன்களுக்குள் கரைந்து போகக்கூடியவர்களாகும்.
சமகால Gen-Z இயக்க போராட்டங்களும் உடனடி தேநீர் (Instant Coffe) வடிவத்திலேயே காணப்படுகின்றது. விரைவாக உருவாகி சுவைக்கப்பட்டு கடந்து செல்லப்படுகின்றது. விளைவுகள் சார்ந்து சரியான மதிப்பீடுகளும், எதிர்கால நிலைத்திருப்புக்கள் பற்றிய ஆர்வங்களும் அற்ற சூழலே அவதானிக்கப்படுகின்றது. இந்தப்பின்னணியிலேயே சில பார்வையாளர்கள் இந்த புதிய அலை செயல்பாட்டை, நிறுவப்பட்ட ஜனநாயகங்களின் எதிர்காலத்திற்கு பொருத்தமற்றது என்று நிராகரிக்க முற்படுகின்றார்கள். எனினும் நிரகரிப்பு தவறானதாகும். Gen-Z போராட்டத்தின் வடிவமும் ஆர்வமும் இன்றைய சமுக சூழலில் இளையோர் அரசியல் பிரதிபலிப்பாகும். சமூக ஊடகங்களின் பரவலால் ஓரளவுக்கு உந்தப்பட்ட அரசியல் துருவமுனைப்பு, ஒரே வயதுடைய மக்களிடையே கூட தவறான கோடுகளைத் திறந்திருக்கும் ஒரு காலத்திலேயே வாழ்கிறோம். அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் தென் கொரியாவில் சமூகவியலாளர்கள் சமகால ஆண்களும் பெண்களும் தங்கள் அரசியல் விருப்பங்களில் பெருகிய முறையில் வேறுபடுவதைக் கண்டறிந்துள்ளனர். இத்தகைய வேறுபாடுகளுக்குள்ளேயே, இத்தகைய வேறுபாடுகளை உருவாக்கும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய போராட்டத்தை Gen-Z பருவத்தினர் பரிசோதிப்பது முன்னேற்றகரமானதாகும். மிகப்பெரிய அளவில் மாறுபட்ட மக்கள் குழுக்களை ஒரே அரசியல் வகைக்குள் இணைக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டி உள்ளது. இந்த பின்னணியிலேயே போராட்டத்தின் விளைவுகள் பற்றிய நிலைத்திருப்பை பாதுகாக்கக்சூடிய வகையிலான உறுதியான கட்டமைப்பை போராட்டக்காரர்களால் உருவாக்க முடியவில்லை. போராட்டங்கள் பெரும் எடுப்பில் கூடிக் கலைவதாகவே அமைகின்றது.
Gen-Z போராட்டங்கள் நிலையான விளைவுகளை கொண்டிராத போதிலும், அதனால் ஏற்படுத்தப்படும் தற்காலிக மாறுதல்கள் கவர்ச்சிகரமான வடிவத்தை பெறுவதனால், ஒன்று, இரண்டாகி இன்று பலதாகி உள்ளது. இது 2026இல் மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்களே அடையாளப்படுத்தப்படுகின்றது. 2026ஆம் ஆண்டை எதிர்நோக்கி, ப்ளூம்பெர்க் பொருளாதாரத்தின் (Bloomberg Economics) மாதிரி எத்தியோப்பியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, அங்கோலா, குவாத்தமாலா, காங்கோ குடியரசு மற்றும் மலேசியா ஆகியவற்றை உள்நாட்டு அமைதியின்மை அதிக ஆபத்தில் உள்ள நாடுகளாகக் குறிக்கிறது. கண்காணிக்கப்பட்ட 157 நாடுகளில், இந்த ஆறு நாடுகள் ஜனவரி மாதத்திலிருந்து அமைதியின்மை அபாயத்தில் வேகமாக அதிகரித்துள்ளன. மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகரித்து வரும் இஸ்லாமியவாதம் மற்றும் அவரது கூட்டணிக்குள் உள்ள பிளவுகள், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த பொதுமக்களின் விரக்தியால் அதிகரித்த பிரச்சினைகள் ஆகியவற்றால் அதிகரித்து வரும் அபாயங்களை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், தேர்தல்களில் ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவுகள் பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறியாக விளக்கப்படுகின்றன. அன்வாரும் இளைஞர்களின் ஆபத்தை ஒப்புக்கொள்வதாக கருத்துரைத்துள்ளார்.
எனவே, 2025இல் அதிகரித்துள்ள உலகளாவிய போராட்டங்களில் Gen-Z பருவத்தினரின் தாக்கம் எதிர்காலங்களிலும் தொடரக்கூடிய எதார்த்தங்களையே சர்வதேச அரசியல் பொருளாதார சூழலில் புலமையாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இளைய தலைமுறையினர் மாற்றத்தைக் கோருகிறார்கள். மேலும் சீர்திருத்தத்தின் சாத்தியக்கூறுகளில் ஒரு அடிப்படை நம்பிக்கையை வெளிப்படுத்தும் வழிகளில் அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கோரிய புரட்சிகள் விரும்பிய முடிவுகளைத் தரவில்லை என்றால் எத்தகைய எதிர்காலம் வடிவமைக்கப்பட போகின்றது என்பதிலேயே கேள்விகள் காணப்படுகின்றது. உண்மையான மாற்றத்திற்குத் தேவையான புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க சமூக ஊடகங்களால் இயக்கப்படும் போராட்டம் சில நேரங்களில் போதுமானதாக இருக்காது என்பதையே Gen-Z போராட்டங்களின் உறுதியற்ற விளைவுகள் வெளிப்படுத்துகின்றது. இதனையே பத்திரிகையாளர் வின்சென்ட் பெவின்ஸ் 2010-2020 போராட்ட இயல்பை முன்விளக்கி நிலையான அடித்தளமற்ற போராட்டங்களின் விளைவுகளின் திசைதிருப்பங்களையும் குறிப்பிட்டுள்ளார். Gen-Z இயக்கமும் இவ்வாறே தொடரின் கால ஓட்டத்தில் போராட்டம் மீதான வெறுப்புணர்வு மற்றும் தேக்கநிலையே எளிதில் ஏற்படலாம்.

Comments
Post a Comment