தமிழ்த்தேசிய பேரவையின் தமிழக விஜயம் தமிழக-ஈழத்தமிழ் அரசியல் உறவை புதுப்பிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

ஈழத்தமிழ் அரசியலில் இராஜதந்திரத்தின் தேவைப்பாடு பற்றி பல சந்தர்ப்பங்களில் அறிவியல் மட்டத்தில் உரையாடப்பட்டு வந்துள்ளது. எனினும் இராஜந்திர செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகளால், அறிவியல் மட்ட உரையாடல் உரையாடல்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. குறிப்பாக இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் பாக்குநீரிணையும், அது கூறாக்கும் நிலத்தொடர்ச்சியில் வாழும் தமிழக-ஈழத்தமிழர் பண்பாட்டு உறவும், பிராந்திய அரசாகிய இந்தியாவின் நிலையும் பிரதானமான அரசியல் மூலமாக காணப்படுகின்றது. இம்மூலங்களை புரிந்து கொள்வதும், அதனூடாக வழித்தடங்களை அடையாளங் காண்பதனூடாகவுமே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்ட முடியும். நிலையான தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை அங்கிகரிப்பதாகும். இவ்வழித்தடம் தொடர்பில் நீண்டகாலமாக ஈழத்தமிழ் அரசியல் அறிவியல் தளத்தில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டு இறுதியிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய பேரவையின் தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்-17அன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர், பிரச்சார செயலாளர் மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளடலங்களாக தமிழ்த்தேசிய பேரவையினர் தமிழகம் சென்றுள்ளார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளடலங்களாக தமிழக அரசியல் கட்சிகளுடன் தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திக்க திட்டமிட்டு பயணத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இச்சந்திப்புக்களில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஏக்கிய இராச்சிய வரைபுக்கு எதிரான தமிழக அரசியல் தரப்புக்களின் ஆதரவு திரட்டலே முதன்மையானதாக காணப்படுகிறது. டிசம்பர்-18அன்று தமிழக முதல்வருடனான சந்திப்புக்கு பின்னரான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மூன்று விடயங்களை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். 'ஒன்று, இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியிலேயே தமிழர் நிலங்கள் இலங்கை அரச எந்திரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் வாழ்வுரிமை சிதைக்கப்படுகிறது. இது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒற்றையாட்சி கூறின் பலவீனமே ஆகும். அது மாற்றப்பட வேண்டும். இரண்டு, தேசிய மக்கள் சக்தியின் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைபு நிராகரிக்கப்பட்டு,  சமஷ;டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழக அரசு இந்நிய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மூன்று, தமிழக-ஈழத்தமிழ் மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணத் தமிழக அரசு தலையிட வேண்டும்' எனும் கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனையும் தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்தித்து தமது அரசியல் கோரிக்கை கடிதத்தையும் கையளித்தனர்.

கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இந்தியா தொடர்பில் கடும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்திருந்தது. இன்று தமிழ்த்தேசியப் பேரவையாக, 'தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க பிராந்திய அரசாகிய இந்தியாவின் ஆதரவு தேவைப்படுவதும்; இந்திய மத்திய அரசின் ஆதரவை திரட்ட தமிழக அரசியல் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம் எனும் நோக்கில் செயலாற்ற முனைந்துள்ளது.'' இம்மாற்றம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிரிகளால், போட்டி அரசியல் நலன் சார்ந்த குறுகிய நிலைப்பாட்டுக்குள் விமர்சிக்கப்படுகின்றது. எனினும் ஈழத்தில் தமிழ்த்தேசியத்தின் நிலையான இருப்பை பாதுகாத்துக் கொள்ள இவ்வழித்தடம் அவசியமானதாகும். இதனை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.

முதலாவது, புவிசார் அரசியலில் தமிழக-ஈழத்தமிழ் உறவு பலமான அடிப்படையை வழங்குகின்றது. இலங்கையின் வடிவத்தை குறிப்பாக தீவாக கட்டமைப்பதில் பாக்கு நீரிணை முதன்மையான கருவியாக உள்ளது. மேற்கே அரபிக் கடலையும் கிழக்கே வங்கக் கடலையும் தொடுத்து இந்தியாவுடன் பிணைந்து காணப்படும் பாக்கு நீரிணையின் பிரிப்பினாலேயே இலங்கை தீவாகவும், ஒரு நாடாகவும், ஓர் அரசாகவும் உள்ளது. இந்தப் பாக்கு நீரிணை இல்லையேல் இந்தியாவின் ஒரு நிலத் தொடராய் இலங்கை இருந்திருக்க முடியும். அப்படி ஒரு நிலத் தொடராய் இலங்கை இருந்திருந்தால் இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு வரை பௌத்தம் அழிந்தொழிந்தது போல் இலங்கையிலும் பௌத்தம் அழிந்தொழிந்து இருக்கும். இவ்வாறான நோக்குநிலையிலேயே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் தமிழக-ஈழத்தமிழர் பண்பாட்டு உறவு சார்ந்து, சிங்கள பொளத்த பேரினவாதத்திற்கு ஏற்பட்ட அச்சம் சார்ந்து எழுந்ததாகும். இதுவே இலங்கையின் பௌத்த பேரினவாத கருத்தியலைப் பாதுகாக்கும் மகாவம்ச மனோநிலையின் உருவாக்கமும் ஆகும். தமிழக-ஈழத்தமிழ் பண்பாட்டு உறவின் ஒருங்கு சேர்க்கையின் பலம் தொடர்பில் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் காணப்படும் தெளிவு ஈழத்தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் துளிர்விட்ட காலத்திலானயினும், அது எழுச்சியடைந்த காலத்திலாயினும் இந்தியாவில் தமிழகத்தின் ஆதரவே அதனைப் பலப்படுத்தியது. இதனை முன்னிறுத்தியே ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றின் மூத்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு, 'பாக்கு நீரிணை வழியாக இந்திய அரசையும் தமிழகத்தையும் போராட்டத்திற்கான வழி வாய்க்கால் ஆகவும், அடைகாக்கும் கூடாகவும், அரணாகவும் சிங்கள தரப்பினர் பார்க்கின்றனர். தமிழகத்திலிருந்து தமிழீழப் போராளிகளும், ஈழப் போராட்டம் பெரிதும் அன்னியப் பட்டிருந்த காலத்தில், தமிழகம் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக, பின்புலமாக இல்லாமல் போன ஒரு காலத்தில்தான் தங்களால் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடிந்ததாக சிங்கள தரப்பு கணிக்கிறது' என்பதை தனது கட்டுரைகளிலும் உரைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். இப்பின்னணியில், தமிழக-ஈழத்தமிழ் உறவு பலப்படுவது ஈழத்தமிழ் அரசியலிற்கு பலமானதாகும். எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னர் ஈழத்தமிழர்-தமிழக உறவை சீர்செய்வதற்கான முன்முனைப்பை எடுப்பதற்கு ஈழத்தமிழ் அரசியல் தரப்பிற்கு பதினாறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

இரண்டு, இலங்கையில் இந்தியாவின் தலையீடும் கரிசணையும் உயர்வானதாகும். இலங்கை, இந்தியா எனும் உபகண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய தீவாக இந்த தலையீடும் கரிசணையும் தவிர்க்க முடியாததுமாகும். கடந்த காலங்களில் இந்திய எதிர்ப்புவாதத்தை தமது முதன்மையான அரசியல் கொள்கையாக பிரச்சாரப்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), இலங்கையின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியாவுடன் இணக்கமான உறவினையே வெளிப்படுத்தியிருந்தார்கள். 2024-பெப்ரவரியில் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி குழுவினரின் இந்திய விஜயமும், 2024-டிசம்பரில் அநுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதியாக இந்தியாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயமும் இலங்கைத்தீவிற்கு இந்தியாவின் முக்கியத்துவத்தையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறான முன்அனுபவங்களில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது ஈழத்தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு என்பது இந்தியாவின் தலையீட்டிலேயே சாத்தியப்படக்கூடியதாகும். அதேவேளை இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை' (Neighborhood First Policy) அரசுகளுக்கு முக்கியத்துவமளிப்பதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இதுவொரு வகையில் ஆசியாவில் எழுச்சியடைந்து வரும் சீனாவின் அரசு மைய 'வெற்றி-வெற்றி தந்திரோபயத்திற்கு' (Win-Win Strategy) பதிலாக வடிவமைக்கப்பட்டதாகும். அதேவேளை அரசுகளை மையப்படுத்திய வெளியுறவுக்கொள்கை பனிப்போரின் பின் பின்னான உலகலாவிய பொருளாதார நலன்களை மையப்படுத்திய உலக யதார்த்தமாகவும் அமைகின்றது. பிராந்திய அரசாகிய இந்தியாவும் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன. இந்நிலையில் அரசற்ற ஈழத்தமிழ் மக்களுக்கான பலத்தை இந்திய அரசின் நலன்சார் அரசியலுக்குள் கட்டமைப்பதற்கான வழித்தடம் அரைகுறை அரசாகிய தமிழகத்தின் வழித்தடத்திலேயே காணப்படுகின்றது.

மூன்றாவது, தமிழ் மக்கள் அரசற்ற தரப்பாகும். அரசற்ற ஒரு தேசிய இனம், அரசுகளைக் கொண்ட ஏனைய அனைத்து சக்திகளுடன் மோதும் போது பெரிதும் பாதிக்கப்படக் கூடியதாகும். தமிழ் மக்களிடம் காணப்படும் குறைந்தபட்ச அரச வடிவத்தினுள் மற்றும் அதிகாரத்தினுள் காணப்படும் கட்டமைப்பாக தமிழகமே காணப்படுகின்றது. இந்தப்பின்னணியிலேயே தமிழக அரசும் தன்னை தமிழ் மக்களின் பாதுகாவலான சித்தரிக்க முயலுகின்றது. குறிப்பாக தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் என்பது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வருடா வருடம் ஜனவரி 11 மற்றும் 12ஆம் திகதிகளில் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிதறுண்டு வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான அயலக தமிழர் தினத்தையும் ஒழுங்கமைத்து வருகின்றார்கள். இப்பின்னணியில் அரசற்ற தேசிய இனமாக இலங்கைத் தீவுக்குள் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர்களுக்கான அரணாக தமிழகத்தை பயன்படுத்தக்கூடிய பொறிமுறை ஈழத்தமிழரசியல் தரப்பிடம் காணப்பட வேண்டும். குறிப்பாக பாக்கு நீரிணையால் பிளவுபட்ட பண்பாட்டு தொடர்ச்சியை பேணும் உறவுகளாக ஈழத்தமிழ் மற்றும் தமிழகம் காணப்பட்டாலும், இந்திய அரசின் கீழ் இறைமையற்ற ஒரு மாநில அரசு அதிகாரமாகவே தமிழகம் இருப்பதால் அதனால் இந்திய அரசை மீறிச் செயல்பட முடியாது. எனவே, அரசற்ற தேசிய இனமாக இருக்கும் ஈழத் தமிழ் தரப்பினர் அதிக புத்திசாலித்தனத்துடனும், அதிக இராஜதந்திர மெருகுடனும், பெரிதும் யதார்த்த பூர்வமாக நடைமுறை சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும். தமிழக கட்சிகளின் கூட்டு ஆதரவு தமிழக மக்களை திரட்டுவதாக அமைய வேண்டும். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தமிழக மக்கள் திரட்சியே, இந்திய மத்திய அரசின் நலன் சார் விளையாட்டில் ஈழத்தமிழர் கரிசணையை இணைக்கக்கூடியதாக அமையும்.

நான்காவது, அரசியலில் காலம் முக்கியமானதாகும். தமிழ் அறிஞர் வள்ளுவர் முதல் சமகால மேற்கத்தேய இராஜதந்திர நிபுணர்கள் வரையில் காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியலில் இந்தியா பற்றிய நிலைப்பாட்டு மாற்றம் கால தாமதமாயினும், சமகாலத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பொருத்தமானதாகும். அதேவேளை ஈழத்தமிழ் அரசியல் நலனை தமிழக மற்றும் இந்திய மத்திய அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்துவதற்கான காலமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை தக்கவைத்து கொள்வற்கு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி உள்ளடலங்களான எதிர்க்கட்சிகளும் மும்மரமான அரசியல் நிகழ்ச்சிநிரலை ஒழுங்கமைத்து வருகின்றனர். மத்திய அரசில் ஆட்சியதிகாரத்தை கொண்டுள்ள பாரதீய ஜனதா கட்சியும் தென்னிந்தியாவில் தமது பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அரசியலை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றார்கள். இக்காலப்பகுதியில் தமிழகத்தில் ஈழத்தமிழர் அரசியலை முன்னெடுப்பதும் ஆதரவு திரட்டுவதும் இயல்பானதாகும். தமிழக அரசியல் பிரச்சாரத்தில் ஈழத்தமிழர் அரசியலும் ஓர் மையமான விடயமாகும். இம்மைய விடயத்தை தமிழக அரசியல் கட்சிக்குள் தம் விருப்புக்குள் உரையாடுவதை கடந்து, ஈழத்தமிழர் தங்களது பிரதான பிரச்சினையை முன்னிறுத்தி தமிழக கட்சிகளுடன் உரையாடுவது பொருத்தமானதாகும். இது தமிழக கட்சிகளின் ஈழம் பற்றிய உரையாடலில் ஈழத்தமிழர்களின் சமகால பிரதான விடயம் முதன்மைப்படும். 

எனவே, தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழகத்துக்கான விஜயமும், பாரபட்சமற்ற வகையில் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பும் பாராட்டதக்கதும் வரவேற்கத்தக்கதுமான முன்முயற்சியாகும். இதனை முழுமையாக குற்றம் குறைகளாக முன்னிறுத்தி நிராகரிப்பது, விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியலுக்கு ஒவ்வாததாகும். இப்பயணம் முழுமையான நிறைவான பயணம் எனக்கூறிவிட முடியாது. எனினும் முன்முயற்சியாக வரவேற்பதனூடாகவே, தொடர்ச்சியான செயற்பாடுகளை சுட்டிக்காட்டவோ அல்லது நெறிப்படுத்தவோ கூடியதாக இருக்கும். பதினாறு ஆண்டுகள் பெரும் இடைவெளியில் காணப்பட்டிருந்த தமிழக-ஈழத்தமிழ் அரசியல் சந்திப்பை தமிழ்த்தேசியப் பேரவை ஆரம்பித்து வைத்துள்ளது. இச்சந்திப்புகள் தொடர்ச்சியானதாகவும் அதேவேளை விரிவாக்கமடைவதாகவும் அமைய வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு வெகுவிரைவில் தமிழக சிவில் சமுகத்தினருடனான சந்திப்பாக விரிவடைய வேண்டும். கடந்த காலங்களில் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு பின்னால் வீரியமான சிவில் சமுக செயற்பாடுகளே முதன்மையானதாக காணப்பட்டது. தமிழக-ஈழத்தமிழ் சந்திப்புக்களின் விரிவாக்கத்திற்கான முதற்படியாக தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழக விஜயம் அமையுமாயினேயே, இவ்விஜயம் ஆக்கபூர்வமானதாக அமையக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-