தமிழ்த்தேசியப் பேரவையின் கூட்டாட்சி கோரிக்கையும் தமிழக கட்சிகளின் இனப்படுகொலை நீதி கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் இந்தியாவின் தாக்கம் நிலையானது. இந்தியா எதிர்ப்புவாதத்தை பிரதான கொள்கைகளில் ஒன்றாக கட்டமைத்து வளர்ச்சியடைந்த ஜே.வி.பியின் தலைவர் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அண்மையில் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், 'இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அண்டை நாடாகும். இது சுமார் 24 கி.மீ கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் எங்களுக்கு நாகரிக தொடர்பு உள்ளது. இலங்கையின் வாழ்க்கையின் எந்த அம்சமும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை என்பது அரிது' எனப் பதிலளித்துள்ளார். இதுவே எதார்த்தமானதாகும். இவ்எதார்த்தத்தை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் புரிந்து கொள்வதினை தவிர்த்து வருகின்றார்கள். தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றும் வந்துள்ளார்கள். புரிந்து கொண்டதாய் காட்டிக்கொண்டவர்களும், இந்தியாவின் நலன்களுக்குள் சரணாகதி அரசியலையே மேற்கொண்டிருந்தார்கள். சமகாலத்தில் இந்நிலையில் அரிதான மாற்றத்தை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்த்தேசியப் பேரவை இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை ஏற்றுக்கொண்டு, அதேவேளை ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவிற்கான வழியை புரிந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை முன்னிறுத்திய உரையாடலை ஆரம்பித்துள்ளார்கள். இது இந்தியாவில் தமிழகத்தில் ஒருசில அரசியல் கட்சிகளிடமும், ஈழத்தமிழ் புலம்பெயர் அமைப்புக்களிடமும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரம் இப்பத்தியில் தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழக பயணத்தின் முக்கியத்துவம் உரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக ஈழத்தமிழர் அரசியலில் இந்தியாவினதும் தமிழகத்தினதும் புவிசார் மற்றும் பண்பாட்டு தொடர்புகள் விளக்கப்பட்டது. இவ்வாரம் அதன் தொடர்ச்சியாகவே தமிழ்த்தேசியப் பேரவை தமிழக கட்சிகளுடன் மேற்கொள்ளும் உள்ளடக்கத்தின் விமர்சனங்களும் அரசியல் பெறுமதியும் தேடவேண்டி உள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழகப் பயணமும் உரையாடலும் ஏற்படுத்தியுள்ள அரசியல் வெளியை தேடுவதாகவே அமைகிறது.
தமிழ்த்தேசியப் பேரவை தமிழகத்தில் முன்வைத்துள்ள, 'தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி' கோரிக்கை ஈழத்தமிழ் புலம்பெயர் அமைப்புக்களிடமும், ஒருசில தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புக்களிடமும் எதிர் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்த்தேசியப் பேரவையின் இந்திய விஜயத்தை தொடர்ந்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையில் இருக்கும் அரசு முற்றிலும் ஈழத் தமிழர்களை ஒடுக்கும் திட்டம் கொண்டதாகும். அதுமட்டுமல்ல, இந்திய அரசுக்கும் எதிரானதாகும். கடந்தகால இந்த வரலாற்றினை எண்ணிப்பார்க்க வேண்டும். உலக நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பம் அறிந்தும், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பம் அறிந்தும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களின் ஒரு குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க செயல்படுவது பேரழிவை ஏற்படுத்திவிடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி வெளியிட்ட அறிக்கையில், 'கூட்டாட்சி கேட்பது தமிழீழக் கோரிக்கையைக்கைவிடுவதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனவழிப்புக்குப் பன்னாட்டுப் புலனாய்வின் வழி நீதி கோராமால் கூட்டாட்சி உட்பட எந்த அரசியல் தீர்வை முன்வைத்தாலும் உருப்படியான முன்னேற்றம் காண இயலாது எனக் கருதுகிறோம். நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டி இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் தீர்வுக்கான கோரிக்கைக்கு முன்னதாக வலியுறுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்' என்றவாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழகத்துக்கான அரசியல் கோரிக்கை தொடர்பில் எதிர்ப்புக்களையும் குறைகளையும் முன்வைத்தோர், கடந்த காலங்களில் ஈழத்தமிழர் விடுதலைப் போரட்டத்திலும் தமிழ்ப் போராளிகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்கள். அத்துடன் தொடர்ச்சியாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தை அரவணைத்து வைத்திருப்பதில் பெரும் பங்களித்திருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பழ.நெடுமாறன், 2009ஆம் ஆண்டு இறுதிப்போர் வரையில் இந்தியாவின் தடா, பொடா மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டால் பல தடவைகள் தடுப்புக் காவலில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். மேலும் கொளத்தூர் தா.செ.மணி பல ஈழ அகதிகளுக்கு எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி முழுமையான ஆதரவுகளை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார். இத்தகையோரின் கருத்துகள் நிராகரிக்கப்பட முடியாதவையாகும். எனினும் இதன் அரசியல் பெறுமதியை அணுகுவது அவசியமாகும்.
முதலாவது, தமிழ்த்தேசியப் பேரவை தமிழகத்தில் கூட்டாட்சி கோரிக்கையை மாத்திரம் முதன்மைப்படுத்தியமை ஒருவகையிலான மதிநுட்ப உரையாடலாகவே கருத்தியலாளர்கள் மத்தியில் அணுகப்படுகின்றது. நடைமுறையில் திராவிட முன்னேற்றக் கழகமே தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் காணப்படுகின்றது. அதேவேளை 2009ஆம் ஆண்டு ஈழப்போரின் இனப்படுகொலை வரலாற்றில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பதிவுகளும் ஏதொவொரு வகையிலான குற்றச்சாட்டு பக்கங்களை கொண்டுள்ளது. இப்பின்னணியிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியாளர்களும் ஈழத்தமிழர் அரசியலை தமிழக அரசியலிலிருந்து தவிர்த்து செல்லும் போக்கை அவதானிக்கக்கூடியதாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தமிழக-இலங்கை உறவு ஈழத்தமிழர்களுக்குள்ளாலேயே ஒருங்கிணைக்கப்பட்டது. எனினும் சமகாலத்தில் அந்நிலைமை மாற்றப்பட்டுள்ளது. தமிழக-இலங்கை உறவு நேரடியாக மலையக அரசியல் தலைவர்களூடாக வடிவமைக்கப்படுகின்றது. இதில் இலங்கை மற்றும் தமிழக ஆட்சியாளர்களின் விருப்பும் காணப்படுகின்றது. தமிழக ஆட்சியாளர்களுடனான மலையக அரசியல் தலைவர்களின் சந்திப்புக்கள் மற்றும் தமிழக அரசினால் முன்னெடுக்கப்படும் அயலக தமிழர் தின விழாவில் மலையக அரசியல் தலைவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தமிழக ஆட்சியாளர்கள் இலங்கையுடனான உறவில் மலையகத்துக்க வழங்கும் விசேட கவனத்தை அறியலாம். அதேவேளை தமிழக தலைவர்களுடனான சந்திப்புக்களுக்கு இலங்கைப் பிரதிநிதிகளாவும் மலையக அரசியல்வாதிகளே இலங்கை அரசாங்கத்தாலும் முதன்மைப்படுத்தப்படுகின்றனர். அண்மையில் தமிழகத்தின் டித்வா புயல் நிவாரணப் பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மலையகத்தை சேர்ந்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இலங்கை அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறானதொரு தலைகீழ் மாற்றங்கள் ஏற்றபட்டுள்ள காலப்பகுதியில், ஈழத்தமிழர் அரசியல் நலன்கள் தமிழக அரசில்; மீளவும் ஒருங்கிணைக்க வேண்டுமாயின், ஆட்சியாளர்களுக்கு சஞ்சலம் ஏற்படாத வகையிலான சமச்சீராண அணுகுமுறையே பெர்ருத்தமானதாகும். அத்தகையதொரு அணுகுமுறையாகவே கூட்டாட்சி கோரிக்கையும் அவதானிக்கப்படுகின்றது.
இரண்டாவது, அரசியலில் தந்திரமான அணுகுமுறையே மூலோபாய உறவுகளை கட்டமைக்க அவசிமானதாகும். தமிழக-ஈழத்தமிழ் அரசியலின் கடந்த காலங்கள் வெறுமனவே ஒருபக்க இனிமையான நினைவுகளை மாத்திரம் கொண்டமைந்ததில்லை. இரு பக்கமும் காலத்தின் தேவை கருதி வலி நிறைந்த பக்கங்கள் மற்றும் மனக்குறைகள் காணப்படுகின்றது. இவை மறைக்கப்பட வேண்டியவையோ அல்லது மறக்கப்பட வேண்டியதோ என்ற வாதங்கள் அவசியமில்லை. எனினும் இவற்றை கடந்து சிந்திக்கையிலேயே தமிழக-ஈழத்தமிழர் அரசியல் உறவை தயக்கமின்றி சீராக கட்டமைக்கவும் அதனூடாக ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்திய இந்திய அரசுக்கான பாதையையும் உருவாக்க முடியும். பண்டைய சீன சிந்தனையாளரான கன்பூசியஸ், பரிபூரணத்தை விட குணத்தையும் நெறிமுறை நடத்தையையும் வலியுறுத்தினார். சாதாரண மக்களை இலக்காகக் கொண்ட அவரது போதனைகள், உண்மையான மதிப்பு என்பது குறைபாடற்ற தோற்றங்களில் அல்ல, மாறாக உள்ளடக்கத்திலும் முயற்சியிலும் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. 'குறைபாடு இல்லாத கூழாங்கல்லை விட, குறைபாடுள்ள வைரம் சிறந்தது' என்ற கன்பூசியஸின் மேற்கோள், குறைபாடுகள் பெரும்பாலும் மகத்துவத்துடன் சேர்ந்து வருகின்றன என்பதையும், நம்பகத்தன்மை மற்றும் முயற்சியின் சான்றாகும் என்பதையும் விளக்குகிறது. இது மனிதர்களுக்கிடையான நெறிமுறையான உறவுகளுக்கு மாத்திரமின்றி அரசுகளுக்கு மற்றும் தேசிய இனங்களுக்கிடையிலான நலன் சார்ந்த உறவுகளை சீரமைக்கவும் பயனுடைய மேற்கோளாகும். தமிழக-ஈழத்தமிழ் அரசியல் உறவை சீரமைக்க குறைபாடுகளை மகத்துவத்துடன் ஒருங்கே கணித்து, மகத்துவத்திற்குள்ளால் அவ்உறவை முதன்மைப்படுத்த வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது. தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழக பயணமும் தி.மு.க அரசுடனான உரையாடல்களையும் குறைபாடுள்ள வைரமாகவே அணுக வேண்டும்.
மூன்றாவது, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கடந்த காலங்களில் தமதாய் சுமந்த தமிழக கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் பாரிய பொறுப்பும் கடமையும் காணப்படுகின்றது. அக்கடமையின் காரணமாகவே தமிழ்த் தேசியப் பேரவையின், 'சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சியை மாத்திரம் முதன்மைப்படுத்திய கோரிக்கை' மீது தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இது ஈழத்தமிழர்கள் மீதான தமிழக தலைவர்களின் தொடர்ச்சியான அன்பையே உறுதி செய்கின்றது. எனினும் குறித்த அன்பினூடாக 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கடந்த 16 ஆண்டுகளில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களை சுயமதிப்பு செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழக விஜயத்தின் பின்னர் தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் சில கூட்டாக, 'இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்திற்கு ஐ.நா.மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என அறிக்கை வெளியிட்டுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோரே கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்கள். இவ்அறிக்கை தொடர்ச்சியானதாகும். கடந்த காலங்களிலும் இவ்அரசியல் தலைவர்கள் இவ்வாறான அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளார்கள். இது அவசியமானதுமாகும். அதேவேளை இவ்அரசியல் தலைவர்கள் தமிழக ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை பகிருகின்றவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும். இன்று ஆட்சி அதிகார கூட்டணியில் இருக்கும் இவ்அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை கடந்து செயற்பாட்டு தளத்திற்கு செல்வதே, ஈழத்தமிழர்கள் மீது வைத்துள்ள அன்பை பெறுமதியாக்கும். குறைந்தபட்சம் தமிழக அரசு மீண்டுமொரு தடவை சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இனப்படுகொலை மற்றும் பொதுவாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக முதலமைச்சரை நேரடியாக சந்தித்து கடிதத்தையாவது கொடுக்கலாம். தமிழக அரசின் தலைகீழ் மாற்றத்தை சீர்செய்ய ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழக முதல்வருடன் நிதானமாக பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருவகையிலான அழுத்தத்தை கொடுக்க முயல வேண்டும். இதுவும் அவர்களின் பொறுப்பாகவும் கடமையுமாகவே காணப்படுகின்றது.
எனவே, தமிழ்த்தேசியப் பேரவையின் பயணம் தமிழகத்தில் மீண்டும் ஈழத்தமிழர் அரசியல் நெருக்கடியை கொதிநிலைக்கு தள்ளியுள்ளது. தமிழ்த்தேசியப் பேரவை 'கூட்டாட்சி கோரிக்கைக்குள் சுருங்கியுள்ளது' என ஆதங்கப்படும் தமிழக கட்சிகள், ஈழத்தமிழரின் இனப்படுகொலை நீதிக்கான கோரிக்கையை தமிழக அரசின் தீர்மானத்துக்குள் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பையும் ஏற்றுள்ளார்கள். ஏனெனில் அவர்கள் நடைமுறையில் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் கூட்டணி பங்காளர்கள் ஆகும். இப்பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரவை தவறவிட்ட இனப்படுகொலை நீதிக் கோரிக்கையை தமிழக கட்சிகள் தமிழக அரசுக்குள் ஒருங்கிணைப்பதே பொருத்தமாகும். இதுவே விமர்சனத்திற்கான தீர்வாகவும் அமையும். ஈழத்தமிழ் ஆதரவு தமிழக கட்சிகளுடன் இணக்கத்தை உறவை கொண்டுள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்களும், தமிழ்த்தேசியப் பேரவையின் தமிழக விஜயம் மூலம் மீள தூண்டப்பட்டுள்ள 'இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையில் தமிழக ஈடுபாடு' எனும் தணலை பெரும் தீப்பிழம்பாக மாற்ற தொடர்ந்து செயற்பட வேண்டும். அதேவேளை தமிழ்த்தேசியப் பேரவையும் ஒரு விஜயம், ஒரு உரையாடல் மற்றும் ஒரு அறிக்கை சமர்ப்பிப்புடன் 16 ஆண்டு கால தமிழக-ஈழத்தமிழ் அரசியல் இடைவெளியை நிரப்பிடலாம் என்ற கற்பனைக்கும் செல்லக் கூடாது. தமிழக பயணமும் சந்திப்புக்களும் உரையாடல்களும் தொடர்ச்சியானதாகவும் விரிவடைவதாகவும் அமைய வேண்டும்.

Comments
Post a Comment