தேசிய மக்கள் சக்தியின் ஜனரஞ்சக அரசியல் டித்வா பொருளாதார சூறாவளிக்கு ஈடுகொடுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

கடந்த வாரம் இலங்கை செய்திகளில் டித்வா சூறாவளியின் பேரழிவுகளிலிருந்து இலங்கைத் தீவை மீட்பது தொடர்பான செய்திகளே முதன்மையாக காணப்பட்டது. எதிர்க்கட்சி எதிர் ஆளுங்கட்சி என்ற மோதல்களும் மீட்புப் பணியை மையப்படுத்திய முரண்பாடாகவே அமைந்திருந்தது. குறிப்பாக உடனடி பிரச்சினைக்கான தீர்வுகளே பிரஸ்தாகிக்கப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களை பாதிப்பு பிரதேசத்திலிருந்து மீட்டு நலன்புரி மையங்களில் தங்க வைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் என்பவே முதன்மையான செய்திகளாக காணப்படுகின்றது. அதுவே பேரனர்த்த முகாமைத்துவத்தில் உடனடி தேவையாகவும் அமைகின்றது. பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஆரம்ப உதவிகளும் மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணி சார்ந்தே கட்டமைக்கப்பட்டிருந்தது. அதேவேளை இயற்கைப் பேரனர்த்தம் தொடர் சங்கிலியான விளைவுகளை கொண்டது. அந்த வரிசையில் சுகாதார நெருக்கீடு தொடர்ச்சியானதாகும். சமகாலத்தில் அதனை சீர்செய்வதற்கான ஆதரவை வழங்கும் முனைப்புடனேயே இந்தியா மற்றும் ஜப்பானின் அண்மைய உதவிகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. இரு நாடுகளும் மருத்துவப் பொருட்களையும் வைத்தியர் குழுவையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமதளத்தில் பேரனர்த்தம் ஏற்படுத்தக்கூடிய தொடர் சங்கிலி விளைவில் ஒன்றான பொருளாதார பிரச்சினைகளையும் உள்வாங்க வேண்டியதும் ஆராய வேண்டியதும் அவசியமாகின்றது. அது தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் சிலரும் கருத்துரைத்துள்ளார்கள். இக்கட்டுரை டித்வா சூறாவளி இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்த உள்ள நெருக்கீடுகள் அரசியலில் ஏற்படுத்த உள்ள சவால்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவுகள் பொருளாதாரத்திற்கு அதிக விலை கொடுப்பவையாக அமைகின்றது. அவை நிதி சமநிலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றது. பேரிடருக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை நிவர்த்தி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் வருவாய் இழப்புகள் மற்றும் செலவு அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. இந்த செலவுகள் நேரடியானவையாக காணப்படுகின்றது. அதேவேளை மறைமுக செலவுகளாக வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தின் திறமையின்மை, அழிவு காரணமாக ஏற்படும் உற்பத்தி இழப்புகள் போன்ற பரந்த அளவிலான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும், பேரிடர்களின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அரசாங்கங்கள் நிதிச் சந்தைகளை அணுகுவதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. இது அவற்றின் கடன் நிலைமைகளை மோசமாக்குகின்றன. இத்தகைய அனுபவங்களே பொதுவில் இயற்கை பேரழிவுக்கும் பொருளாதாரத்திற்குமான உறவாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளார்கள். 

இத்தகைய பொதுஅணுகலிலேயே நவம்பர் இறுதியில் இலங்கையை பேரழிவுக்குள் தள்ளியுள்ள டித்வா சூறாவளியின் விளைவுகளை அணுக வேண்டியுள்ளது. சஜித் பண்டாரா எனும் கார்ட்டுனிஸ்ட் இலங்கையின் ஏற்பட்ட சூறாவளியின் தொடர் சங்கிலி விளைவுகள் தொடர்பாக வரைந்துள்ள கார்ட்டுன் செய்தியை இக்கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டு செல்வதும் பொருத்தமானதாக அமையும். டிசம்பர்-02 வரைந்துள்ள கார்ட்டுனில், டித்வா சூறாவளி (Ditwah Cyclone) இலங்கையை கடந்து விட்டது. தொடர் வரிசையில் முறையே சூறாவளியாக சுகாதார பிரச்சினையும் (Health Cyclone), பொருளாதார பிரச்சினையும் (Economic Cyclone) இலங்கையை நோக்கி வருவதாக கார்ட்டுன் வரையப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம் சார் பிரச்சினை தனியான பகுப்பாய்வுக்குள் ஈடுபடுத்த வேண்டியதும் மற்றும் மக்கள் விழிப்புணர்வுக்கு உட்படுத்த வேண்டியதொரு விடயமாகவும் காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மருந்து பொருட்களின் தட்டுப்பாடும் மற்றும் வைத்தியர்களின் வெளியேற்றமும் இலங்கையின் சுகாதாரத்துறையில் பெரும் நெருக்கடியாக காணப்படுகின்றது. இந்நிலையில் இயற்கை பேரழிவு ஏற்படுத்தியுள்ள சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய முழு ஆற்றலை இலங்கையின் சுகாதாரத்துறை கொண்டுள்ளதா என்பதில் ஆழமாக தேடல் அவசியமாகின்றது. எனினும் குறிப்பிடத்தக்க நம்பிக்கையாக பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு சுகாதார தேவையில் ஒப்பீட்டளவில் பலமாக காணப்படுகின்றது.  பாதிக்கப்பட்ட சமூகங்களை உறுதிப்படுத்தவும், நோய் பரவலைத் தடுக்கவும், பேரிடர் நிவாரணப் பணிகள், அவசர சேவைகள் மற்றும் உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசரகால சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள் உள்ளிட்ட உடனடி உதவிகளில் உறுதுணையாக உள்ளார்கள். எனினும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களும் விழிப்புடனும் குறைந்தபட்சம் சுய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

நடைமுறை பிரச்சினைகளின் முக்கியத்துவத்தில், இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய நெருக்கீடுகள் பெரிய உரையாடலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. எனினும் இலங்கைத்தீவு 2022ஆம் ஆண்டு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளியேறவில்லை. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொண்ட கடனை சீர்செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் இயங்கும் பொருளாதார சக்தியாகவே இலங்கை காணப்படுகின்றது. டித்வா நெருக்கடி காலப்பகுதியில், சர்வதேச நாணயத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையான சுமார் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டு வாரங்களுக்குள் இலங்கை விரைவாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவதற்கான திட்டமிடலிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது டித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள நெருக்கடி மேலும் பின்னடைவுக்கு தள்ளக்கூடியதாகும். பொருளாதார நெருக்கடி மறுசீரமைப்பு தற்போது டித்வா சூறாவளிக்கு பின்னர் கீழிறக்கத்துடன் மறுசீரமைப்பை திட்டமிட வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.

முதலாவது, டிசம்பர்-05ஆம் திகதி காலை 6.00 மணி வரையிலான தகவல்களின்படி, டித்வா சூறாவளி அனர்த்தத்தில் 486 பேர் இறந்துள்ளார்கள். 341 பேர் இன்னும் காணவில்லை. இது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளமையையே அடையாளப்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி அரசாங்க தகவல் தொடர்பிலும் பொதுமக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் சில குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் காணப்படுகின்றது. அரசாங்கம் மரண எண்ணிக்கையை குறைவாக செய்தியிடுகின்றது என்ற கருத்தும் காணப்படுகின்றது. எனினும் அனர்த்தத்தின் இழப்பு உயர்வானது என்பது எதார்த்தமானதாகும். சுமார் 275,000 குழந்தைகள் உட்பட 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 54,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏழு மாவட்டங்களில் 215 கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. மேலும் ஒரு வாரங்களுக்கு மேலாக பல பிரதேசங்கள் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் சீர்செய்யப்படாத நிலைமைகளே காணப்படுகின்றது. டிசம்பர்-03 செய்திகளின் பிரகாரம் அனர்த்தத்தில் செயலிழந்த 4,000 மின்மாற்றி கோபுரங்களில், 2,800 சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 247கி.மீ நீளமுள்ள 'A' மற்றும் 'B' தர சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 40 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் இலங்கை அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றது. அதன் திருத்த வேலைகளும் துரிதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் 1500 அரச பேருந்துகளின் சேவைகளின் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பயண முற்பதிவு திகதிகளை மாற்றிக்கொள்ளுமாறான அறிவிப்புக்களை உரிய திணைக்களம் வெளியிட்டிருந்தது. பல புகையிரத பாதைகளும் சேதமாகியுள்ள நிலையில், முழுமையான புகையிரத சேவை சீர்படுத்தல்களுக்கு ஐந்து மாதங்களுக்கு அதிகமாக தேவைப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. டித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள சேதங்களினால் இலங்கைக்கு சுமார் 6-7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான மொத்த பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர். இது நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை விட அதிகமானதாகும்.

இரண்டாவது, பேரிடர் நெருக்கடியின் மீட்புப் பணியில் இலங்கை ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் உடனடி பிரச்சினையை அணுகுவதற்கான முழுஅதிகாரத்தையும் வழங்கியது. நிதி குறித்து தயக்கமின்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டிருந்தார். உடனடி பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ரூ. 1.2 பில்லியனை விடுவித்துள்ளது. அதே நேரத்தில் அவசரத் தேவைகளுக்காக 2025 பட்ஜெட்டில் ரூ. 30 பில்லியனையும் ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் தற்போது தங்கள் வசம் உள்ள அனைத்து நிதிகளையும் பயன்படுத்தவும், தேவைப்பட்டால் கூடுதல் ஒதுக்கீடுகளைப் பெறவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். தாமதங்களைத் தடுக்க புதிய நிர்வாக சுற்றறிக்கை ஒன்றுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிவாரண மையங்களின் நிர்வாகத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் மீட்புப் பணிகளுக்காக 20,500க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவத்துவத்தில் பாதுகாப்பு ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி உள்வாங்கியுள்ளார். இலங்கையின் தொடர்ச்சியான மீட்சி, பல குறிகாட்டிகளில் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், விநியோக இடையூறுகளுக்கு ஆளாகக்கூடியதாகவே உள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மூன்றாவது, ஆண்டின் இறுதி காலாண்டு பொதுவாக நுகர்வோர் தேவை, பணம் அனுப்புதல், சுற்றுலா மற்றும் தொழில்துறை உற்பத்திக்கு ஒரு முக்கியமான காலகட்டமாகும். பண்டிகைக் காலத்திலும் அதிக உணவுப் பணவீக்கம் காணப்படுகிறது. சூறாவளி தொடர்பான அழிவு இந்த பருவகால வடிவங்களுடன் குறுக்கிட்டு, மெதுவான வளர்ச்சிக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. 2024ஆம் ஆண்டில் 3.2 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி வருவாயை ஈட்டித்தந்த சுற்றுலா, தற்போது முடங்கியுள்ளது. சுற்றுலா நடத்துபவர்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர். 'நிலைமைகள் சீராக இருக்கும்போதுதான், நமக்கு இந்தப் பேரழிவு ஏற்படுகிறது. சுற்றுலா முகாமையாளர்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், ஓட்டுநர்கள், படகு நடத்துபவர்கள் மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறிய அளவிலான சுற்றுலா முகாமையாளராக சமன் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.  பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான இலங்கையின் வருவாயிலும் வளர்ச்சிலும் சுற்றுலாத்துறை பிரதான நிலையை பெறுகின்றது. இலங்கை அரசாங்கங்களும் சுற்றுலாத்துறையிலேயே அதிக கரிசணையை வழங்கியிருந்தது. அதனை டித்வா சூறாவளி பெரும் இடருக்குள் தள்ளியுள்ளது. 

நான்காவது, மலையகத்தின் மண்சரிவு அதுசார்ந்த இழப்புக்களும் இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய தூண்களின் ஒன்றான தேயிலை ஏற்றுமதியிலும் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உணரப்படுகின்றது. 2024ஆம் ஆண்டில் இலங்கை 262.12 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்தது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் கிலோவை நிர்ணயித்திருந்தது. 2024ஆம் ஆண்டில், தேயிலை ஏற்றுமதி நாட்டிற்கு 1.43 பில்லியன் டாலர்களை ஈட்டியது. இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டிற்கான இலக்கு 1.5 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, தேயிலை ஏற்றுமதியின் வருவாய் 1.16 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஆனால் தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக 2025ஆம் ஆண்டிற்கான இலக்கை அடைய முடியாத சூழல் உணரப்படுகின்றது. டித்வா சூறாவளி அழிவிலிருந்து மலையகம் மீள்வதற்கான உடனடி வாய்ப்புக்களை இனங்காண முடியவில்லை. அதுமட்டுமன்றி பருவகால மழை தொடர்பான அறிவிப்புக்களும் டிசம்பர் இறுதி வரை மலையகத்தை நெருக்குவார பிரதேசமாகவே அடையாளப்படுத்துகின்றது. இதில் மலையகம் மீண்டு தேயிலை உற்பத்திக்கான மீட்சியை வழங்குவது தொலைதூர இலக்காகவே அமைகின்றது.

ஐந்தாவது, இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய நெருக்கீடுகளை சீர்செய்யும் முனைப்புடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்' (Rebuilding Sri Lanka) எனும் நிதியம் இலங்கையின் பெரு முதலாளிகளின் ஒருங்கிணைப்பில் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிதிய உருவாக்கம் நாடு தற்காலிக பதில்களுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள நிதியம் எத்தகைய வடிவில் மறுகட்டமைப்பு அல்லது மறுசீரமைப்பு செய்யப் போகின்றது என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் தோழர்களிடையேயே சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. நவோமி க்ளீன் எனும் அரசியல் பொருளாதார நிபுணர் 'The Shock Doctrine' எனும் நூலில், பேரழிவு முதலாளித்துவம் தொடர்பான தனது பகுப்பாய்வில் இலங்கையை ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக குறிப்பாக சுனாமிக்கு பின்னரான மீள்கட்டமைப்பு அனுபவத்தை முன்னிறுத்தி அடையாளப்படுத்துகிறார். 'After the Wave: A Second Chance' என்ற அத்தியாயத்தில், கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களை அப்புறப்படுத்தி அந்த நிலங்களை ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் செல்வந்த வர்க்கத்தினருக்கும் வழங்குவதற்கான வாய்ப்பாக சுனாமி எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் வெளிப்படையாகக் காட்டுகிறார். பேரழிவின் நேரத்தில் முதலாளித்துவம் அழிவைத் தன் திட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் என்பதே அப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனுபவங்களின் பின்னணியிலேயே 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் நிதியமும் அணுகப்படுகின்றது. இலங்கை வர்த்தக சபையின் தலைவர் துமிந்த குலன்ஹமுவ தலைமையில் தீவின் மிகப்பெரிய நிறுவனங்களான LOLC, John Keells,  Aitken Spence,  Brandix,  Hayleys மற்றும் Expolanka போன்றவற்றின் முதலாளிகளை கொண்டு இயற்கை பேரனர்த்த மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் முதலாளித்துவத்தின் இயல்புகள் தொடர்பில் காணப்படும் முன்னனுபவங்களையும், இலங்கையின் முன்னனுபவத்தையும் முன்னிறுத்தி சமநிலையற்ற மறுசீரமைப்பையே உருவாக்கக்கூடியது என்ற விமர்சனங்கள் அரசாங்கத்துக்கு எதிராக பொதுவெளியில் காணப்படுகின்றது. குறிப்பாக தங்களை இடதுசாரிகளாக விம்பப்படுத்தும் ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாளித்துவ செயற்பாடு முன்னைய ஆதரவாளர்களிடமிருந்தும் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.

எனவே, கொரோனா விளைவுகள் ஏற்படுத்திய நெருக்கடியின் அறுவடையாகவே 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி கோத்தபாய அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியது. அவ்வாறானதொரு விம்ப பிரதிபலிப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா சூறாவளியின் விளைவுகள் ஏற்படுத்துகின்றதோ என்ற வாதங்களே அரசியல் வெளியில் காணப்படுகின்றது. எதிரணிகளும் அதற்கான முனைப்பையே மேற்கொள்கின்றார்கள். எனினும் அரசாங்கமும் தமது கடந்த உடனடி மற்றும் தற்காலிக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடுவதனூடாகவும் தமது இயல்பான வெகுஜன அரசியலாலும் தமது அரசியல் இருப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சீர்செய்யும் உழைப்பில் ஈடுபடுவதனையே செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை உருவாக்குமா அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஜனரஞ்க அரசியல் ஆட்சியதிகாரத்தை பாதுகாப்பதற்கு போதுமானதா என்பது காலத்தின் கணக்குகளிலேயே தங்கியுள்ளது. 

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-