இலங்கையை சூழ்ந்துள்ள இயற்கையின் சீற்றம்! -ஐ.வி.மகாசேனன்-

இயற்கையின் கோர தாண்டவம் முழு இலங்கைத் தீவையும் பெரும் அழிவுகரமான பாதைக்குள் நகர்த்தியுள்ளது. இலங்கையின் தீவுசார் புவியியல் அமைப்பு வருடா வருட பருவ கால மழைக்காலப்பகுதியில் தாழமுக்கம், மினி சூறாவளி, மழைவீச்சு அதிகரிப்பு, வெள்ளம், மண்சரிவு, உயிரிழப்பு, இடப்பெயர்வு என்பன நிலையான பதிவாக அமைகின்றது. அவற்றில் இழப்பு வீச்சுகள் குறைவாகவே அமைந்துள்ளன. எனினும் 2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை 'தித்வா' (Ditwah) சூறாவளியாக சீற்றம் கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டதுடன், பெருமளவானோர் காணாமலாக்கப்பட்டதுடன், தீவு முழுவதும் பெருமளவான சொத்து சேதங்களை ஏற்படுத்தி நாட்டை ஸ்தம்பிக்க செய்துள்ளது. நாடு மெல்ல பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் தோற்றத்தை காண்பிக்கையில் மறுபடி இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்வை தித்வா சூறாவளி உருவாக்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் என தென்னாசிய நாடுகள் பேரிடர் முகாமைத்துவத்தில் இலங்கையுடன் கைகோர்த்துள்ளது. இக்கட்டுரை தித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளையும் மீட்புப்பணியின் போக்கினையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இருபத்தொராம் நூற்றான்டின் முன் கால்ப் பகுதியில் இலங்கை தொடர்ச்சியாக மாறுபட்ட வடிவங்களில் அழிவுகளையே எதிர்கொண்டு வருகின்றது. சமூக வலைத்தளப் பதிவொன்று மீள்பதிவு செய்வது பொருத்தமாக அமையும். 'யுத்தம், ஈஸ்டர் குண்டு தாக்குதல், கொரோனா, பொருளாதாரா நெருக்கடி வரிசையில் இன்று தித்வா சூறாவளி' எனக்குறிப்பிடப்பட்டது. இதில் 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப் பேரலையும் இணைக்கக்கூடியதாகும். இலங்கைத்தீவு ஒரு நெருக்கடியிலிருந்து சற்றே மீள்ச்சி பெற, வேறொரு நெருக்கடி சரிவை ஏற்படுத்துவதாக அல்லது இழுத்து வீழ்த்துவதாக காணப்படுகின்றது. இதில் இந்து சமய இராமாயண இதிகாச கதையை குறிப்பிட்டு செல்வதும் நம்பிக்கைக்குள் பயணிக்கும் சமூகத்திற்கு சுவாரஸ்ய பதிவாக அமையும். இராமாயண இதிகாசத்தில் இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் ஒன்பது கோள்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் ஆட்சி செய்கையில், சனீஸ்வர பகவான் இலங்கைத் தீவு என்றும் மீழ முடியாத துயரில் மூழ்கும் என சபித்ததாக கிளைக் கதைகள் உண்டு. தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் அடியாக அமையக்கூடியதாகும். இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் சுற்றுலாவை மையப்படுத்தியதாகும். உயிர் அச்சம் உள்ள சூழலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவடையும். அதுமட்டுமன்றி இயற்கை சீற்றம் இலங்கையின் எழிலையும் சுற்றுலாத்தளங்களையும் கடுமையாக சிதைத்துள்ளது. இதனை மீள்நிர்மாணிப்பது இலங்கையின் பொருளாதாரத்திற்காக பெரும் நெருக்கீடு என்பதே எதார்த்தமானதாகும்.

தித்வா சூறாவளி சார்ந்த இயற்கை பேரிடரில், இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிற்றுக்கிழமை (30.11.2025) இரவு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 334 பேர் உயிரிழந்ததாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த 9,98,918 பேர் இந்த தீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவுக்கு உள்ளான பல இடங்கள் இன்னும் பேரிடர் மேலான்மை மையத்தின் பார்வைக்குள் வராதும் காணப்படுகின்றது. குறிப்பாக கொத்மலை, ஹெல்பொட, ஜனுதன ஹம, கதுஹிதுல போன்ற பகுதிகள் கடுமையான நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், நவம்பர்-30 (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் மீட்புக்குழு அப்பிரதேசங்களை சென்றடைந்திருக்கவில்லை என்ற தகவல் சமுகவலைத்தளங்களூடாக முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. மண்சரிவு, வெள்ளப் பெருக்கு என்பவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் இழப்புக்கள் இலக்கங்களாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும் இழப்புகள் இலக்கங்களை கடந்த உருவமான உணர்வான திரட்சியை கொண்டது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க குறிப்பிடுவது போல், 'இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது.' இது இறந்தவர்களுக்கு மட்டுமல்ல இழந்தவர்களுக்கும் பொருந்தும். பேராதனைப் பல்கலைக்கழகம் நேரடியாக பெரும் இடருக்குள் சிக்குண்டது. அங்கு அனர்த்தத்தில் சிக்கிய பிள்ளைகளோடு தொடர்பு ஏற்படுத்த முடியாது ஏனைய இடங்களில் வாழும் பெற்றோர்கள் தவிர்த்தார்கள். அதேவேளை மலையகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பெற்றோர்களின் நிலை அறியாது பரிதவித்திருந்தார்கள். இது உரையாடல்கள் கதைகளை கடந்து சொல்லோணா துயரமாகும்.

இலங்கைத்தீவில் ஓப்பீட்டளவில் யாழ்ப்பாண மாவட்டம் பாதிப்புக்களின் விகிதாசாரத்தை குறைவாக எதிர்கொண்டுள்ளது எனலாம். இதுவொரு வகையில் யாழ்ப்பாணம் மீதான தாழமுக்க தாக்கம் இறுதியாக கடந்து சென்றமையும், ஏனைய இடங்களின் அனுபவத்தினால் முன்கூட்டியே சுதாகரித்து கொண்டமையும் பிரதானமானதாக குறிப்பிடலாம். அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியில் துறைப் பேராசிரியர் நா.பிரதீபராஜவின் காலநிலை அறிவிப்புக்களும் பெருமளவிலான எச்சரிக்கைகளையும் முன்அறிவுப்புக்களையும் ஏற்படுத்தியது. பேராசிரியர் நா.பிரதீபராஜ நீண்டகாலமாகவே காலநிலை அறிவிப்புக்களை முன்கூட்டியே வழங்குவதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பாக தமது தொழில்களை செய்வதற்கான சூழலை தமிழர் பிரதேசங்களில் உறுதிப்படுத்தி வந்துள்ளார். தனது சமுக வலைத்தள பதிவினூடாகவே இவ்அறிவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். எனினும் அரச கட்டமைப்பு பேராசிரியர் நா.பிரதீபராஜவை அங்கீகரிக்கவோ அல்வது சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியுள்ளது என்பதே எதார்த்தமானதாகும். நவம்பர் இறுதியில் இலங்கை பேரிடருக்குள் பயணிக்க போகின்றது என்பதற்கான எச்சரிக்கையையும் பேராசிரியர் நா.பிரதீபராஜ முன்னரே வழங்கியிருந்தார். குறிப்பாக இலங்கைக்கு வருடம் முழுமையாக கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி நவம்பர் இறுதியின் ஒரு வார காலப்பகுதியில் கிடைக்கப்பெற போகின்றது. ஆதலால் குளங்கள் மற்றும் ஆறுகள் நீர் நிரம்பி அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் காணப்படுவதை சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை பேரிடர் மேலாண்மை மையமே மொழிவளவாளர்கள் இன்மையால் பெருவாரியான தகவல்களை சிங்களத்தில் வெளியிடுகiயில், பேராசிரியர் மும்மொழிகளிலும் அபாய எச்சரிக்கையை தரவுகளுடன் வழங்கியிருந்தார். பேராசிரியிரின் தரவுகளை உள்வாங்கி வடக்கு மாகாண ஆளுநர் பேரிடர் மேலாண்மை முகாமைத்துவ பொதுக்கூட்டத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தார். ஆளுநரின் செயற்பாடு பாராட்டிற்குரியதாகும். எனினும் அக்கூட்டத்தின் செய்திகளின் பிரகாரம் அதிகாரிகள் மெத்தனமான கருத்துக்களையே பகிர்ந்துள்ளார்கள். குறிப்பாக குளங்கள் போதிய நீரை சேமிக்கக்கூடிய நிலையில் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்கள். எனினும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குளங்கள் நிரம்பி தனது சேமிப்பு திறனை இழந்து உடைப்பு ஏற்பட்டே பெருமளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் பேரிடர் தீர்மானிக்க முடியாததாயினும், எச்சரிக்கைகளை நிதானமான உள்வாங்குவதும் அது தொடர்பில் கரிசணை காட்டுவதும் இழப்புகளின் அளவை குறைக்கக்கூடியதாக அமைந்திருக்கும் என்பதே எதார்த்தமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒப்பீட்டளவில் அதனை அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது.

இயற்கை பேரிடரின் அழிவுகள் என்பது வெறுமனவே அரச அதிகாரிகளின் அசமந்த போக்குடன் மட்டுப்படுத்த முடியாது. பொது மக்கள் தமது சூழலை எவ்வாறு பயன்படுத்தி கொள்கின்றார்கள் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. பசுமைசார் செயற்பாடுகளில் அதிகம் உரையாடப்படும் கருத்தாடல், இன்று வீடுகள் தோறும் மதில்கள் கட்டப்பட்டுள்ளதால் நீர் வழிந்தோடக்கூடிய சூழமைவு உருவாக்குவதில்லை என்பதாகும். இத்தகைய உரையாடல்களை பலரும் நகைப்புடன் கடந்து செல்வதே எதார்த்தமாகும். எனினும் இதிலோர் உண்மை காணப்படுகின்றது. முன்னைய காலங்களில் வேலிப் பொட்டுகளுக்குள்ளால் நீர் பள்ளம் நோக்கி இயல்பாய் ஓடிச்சேரக்கூடியதாக அமைந்திருந்தது. ஆதலால் நீர் வெள்ளம் வீடுகளுக்குள் கட்டிடங்களுக்கு புகுந்தது என்பது என்றோ ஒர தடைவ அறியும் அசம்பாவிதமாகவே அமைந்தது. எனினும் சமகாலத்தில் கல் மதில் கலாசாரத்தில் வருடா வருடம் வெள்ளம் குடிமனைகளுக்குள்ளும் கட்டிடங்களுக்குள் புகும் செய்தி சர்வசாதாரணமாகியுள்ளதே. இம்முறை வெள்ளம் இன்னும் அழிவுகளை அதிகரித்துள்ளது. கல் மதில் சார் பிரச்சினை அடிப்படையான ஓர் உதாரணமே ஆகும். இவ்எடுத்துக்காட்டுக்கள் நீண்டு கொண்டே செல்லக்கூடியது. குளங்களை மூடி கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளது. வாய்க்கால் மற்றும் குளங்கள் குப்பை மேடுகளாக பயன்படுத்தல். பிளாஸ்ரிக் பாவனை, மரங்களை வெட்டுதல் என மனிதனின் இயற்கை விரோத செயல் நீண்டது. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழத் தவறியுள்ளான் என்ற எதார்த்தமே இயற்கை ஏற்படுத்தும் அழிவுகளில் இனங்காணக்கூடியதாகும். அபிவிருத்தி வளர்ச்சி அவசியமானதாகும். அது மறுதலிக்க முடியாததாகும். எனினும் இயற்கையை காயப்படுத்தி மற்றும் இயற்கையை கருத்திற்கொள்ளாது ஏற்படும் அபிவிருத்திகள் இயற்கையால் அழிக்கப்படுவதாகவே அமையும். அத்தகையதொரு பேரிடர் அழிவையே தித்வா சூறாவளியும் உருவாக்கியுள்ளது.

இயற்கை பேரிடர் ஒருவகையில் போர்க்கால சூழலின் வேகத் தேவையையே மீட்புப்பணியில் ஏற்படுத்துகின்றது. இந்தப்பின்னணியிலேயே இலங்கையில் நீண்ட கால இடைவெளியில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரகலய பதட்டங்களுக்கு பின்னர் அவசர காலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னைய கால அவசார கால சட்டங்கள் பெருமளவு ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கான கருவியாகவே இருந்துள்ளது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட்டமும் பெருமளவில் ஈழத்தமிழர்களையே குறிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அனுபவ அச்சத்தின் மத்தியிலேயே ஜனாதிபதி தனது உரையில், 'இந்த அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும், நமது நாட்டை செயற்திறனுடன் கட்டியெழுப்புவதற்காக அன்றி வேறு எந்த அடக்குமுறை நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை இந்த நாட்டின் பிரஜைகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்' எனக்குறிப்பிட்டிருந்தார். இது கடந்த காலங்களில் அவசரகால சட்டங்கள் அடக்குமுறை கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ள செய்தியுடன் இலங்கை ஜனாதிபதி உடன்படுவதையே உறுதி செய்கின்றது. 

2006-2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பின்னர் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் தமது போட்டியை கடந்து, இலங்கையில் ஒன்றாக பணியாற்றும் சந்தர்ப்பத்தையும் தித்வா சூறாவளி சீற்றம் உருவாக்கியுள்ளது. சமகாலத்தில் எல்லையில் கடும் மோதலை எதிர்கொண்டதுடன், இன்றுவரை நெருக்கடியான மற்றும் பதட்டமான உறவை பகிரும் இந்திய மற்றும் பாகிஸ்தானின் இராணுவ ஹெலிகப்டர்கள் இலங்கையில் மீட்புப் பணியில் செயற்படுகின்றன. அத்துடன் தெற்காசிய பிராந்தியமான நேபாளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்களை அனுப்பியுள்ளது. சர்வதேச பரப்பில் அமெரிக்க, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உடனடி உதவிக்கரம் நீட்டியுள்ளது. இது இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் பிராந்திய சர்வதேச அரசுகளுக்கு இலங்கையின் அமைவிட தேவைப்பாட்டையும் உறுதி செய்கின்றது.  இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) பணியாளர்கள், இந்திய விமானப்படை (IAF) உடன் இணைந்து, போர்க்கால அடிப்படையில் இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் உள்ள இரண்டு சேடக் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளன. 'முதலில் அண்டை நாடு' என்ற உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் 80 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களைக் கொண்ட இரண்டு நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பியதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளையும் இந்தியா வழங்கியுள்ளது. மீண்டும் இலங்கையின் பிராந்தியத்தில் இந்தியா முதன்மையானதும் உடனடியானதும் என்ற செய்தியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் படிப்படியாக இந்தியக் கடற்கரையை நோக்கி நகர்ந்து விட்டது. குறிப்பாக நவம்பர்-29க்கு பின்னர் படிப்படியாக இயற்கை சீற்றம் குறைவடைந்துள்ளது. அதாவது சூறாவளியும் மழைவீழ்ச்சியும் குறைவடைந்துள்ளது. எனினும் அது ஏற்படுத்திய கடுமையான வெள்ளம் மற்றும் அபாயகரமான நிலச்சரிவுகள் உடனடியாக சீர்பெறக்கூடியதல்ல. மழைவீழ்ச்சி குறைவடைந்ததென குளங்கள் மற்றும் ஆறுகளுக்கு பொதுமக்கள் செல்வது மரண எண்ணிக்கையை அதிகரிப்பதாகவே அமையும். இதுதொடர்பில் பொதுமக்களுக்கு சுயவிழிப்பு அவசியமாகும். பொதுமக்களிடம் வேடிக்கை பார்ப்பது இயல்பான குணமாகும். பேரிடர் மீட்புப்பணியில் ஈடுபட்ட இலங்கை விமானப்படையின் ஹெலிகப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் விபத்துக்குள்ளாகி விமானி மரணித்துவிட்டார். இருவர் படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். அக்ஹெலிகப்டர் விபத்துக்கு பின்னால் பொதுமக்களின் வேடிக்கை பார்க்கும் குணமும் விமர்சிக்கப்படுகின்றது. விமானி பாதையில் ஹெலிகப்டரை இறக்க முற்பட்ட போதும், பொதுமக்கள் வேடிக்கை பார்க்க குவிந்தமையால் அதனை தரையிறக்க முடியவில்லை என்ற விமர்சனமும் காணப்படுகின்றது. குளங்கள் யாவும் தமது கொள்ளவை தாண்டியே நீரை சுமந்து கொண்டுள்ளது. உதாரணமாக மாவிலாறு நீர்த்தேக்கம் தாழமுக்கம் கடந்த பின்னர் நவம்பர்-30ஆம் திகதியே கொள்ளவு நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவற்றை வேடிக்கை பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

எனவே, இலங்கையை மூழ்கடித்துள்ள தித்வா சூறாவளியின் சீற்றத்திலிருந்தான மீள் எழுச்சி என்பது தனியன்களாக சிந்திப்பதை கடந்து அரசு, மக்கள் என ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதேவேளை அரசுக்குள் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளும் அரசியல் பாரபட்சம் கடந்து இணைந்து பணியாற்றுவது அவசியமாகும். விதி வலியது. 2005ஆம் சுனாமி மீள் கட்டுமானத்தை முழு இலங்கைத்தீவும் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்ப்புக்காட்டியவர்களே, இன்று அரசாங்க நிலையில் அரசியலைக் கடந்து ஒன்றாய் பணியாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்கள். இதில் அரசியல் பழிவாங்கல் அல்லது விரோதம் காட்டுதல் நம்மை நாம் அழிக்கும் செயலுக்கு ஒப்பானதாகும். மீட்புப்பணியில் ஒன்றாக பயணித்து, மக்களை இயல்பான வாழ்க்கைக்கு நகர்த்திய பின்னரே, அரசாங்கத்தின் பேரிடர் மேலான்மை தொடர்பான அரசியல் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அது அவசியமுமானதாகும். இனியொரு பாரிய இழப்பை சீர்செய்ய இதில் பாடம் கற்று கொள்ள வேண்டும். அது தொடர்பில் விவாதிப்பதும் அவசியமாகின்றது. பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளில் அரசாங்கத்தின் அசமந்தம் ஆராயப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மையை சீர்செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-