இருப்பினை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மலையக – வடக்கு – கிழக்கு தமிழர்கள் ஒருங்குசேர வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் டித்வா புயல் அபத்தங்களும் அதுசார் அரசியல்களும் நிலையானதாக மாறியுள்ளது. மாறாக அதன் அபத்தத்தின் ஆழமான பகுதிகளை ஆராய்வது அல்லது விவாதிப்பது போதிய வெளிச்சத்தை பெறவில்லை. டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் முழு இலங்கைத் தீவைiயும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது நிதர்சனமானதே ஆகும். எனினும் ஒப்பீட்டளவில் மலையகத்தின் பாதிப்பும் உயிரிழப்பும் உயர்வானதாகும். இலங்கை பேரிடர் மேலான்மை நிலையத்தின் தகவல்களின் படி முழு இலங்கைத்தீவிலும் 639 பேர் பேரிடரில் இறந்துள்ளனர். இதில் மலையகத்தில் மாத்திரம் பதுளையில் 90, மொனராகலை 04, கேகாலை 32, மாத்தளை 29, கண்டி 234, நுவரெலியா 89 மற்றும் இரத்தினபுரி 01 என மொத்தமாக 479 பேர் இறந்துள்ளனர். அத்துடன் இதுவரை காணாமல் போனவர்களாக பதிவு செய்;யப்பட்டுள்ள 210 பேரில் மலையக பிரதேசத்தில் மாத்திரம் 194 பேர் பதிவாகியுள்ளார்கள். எனவே மலையக பிரதேசங்களில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மரண எண்ணிக்கை 650ஐ தாண்டி உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இம்மரணங்கள் முதல் முறையானதும் அல்ல. முடிவானதும் அல்ல. வருட வருடம் மலையக பிரதேசங்களின் ஏதொவொரு பகுதியில் பருவ மழைக்காலத்தில் மண்சரிவும் மரணமும் இயல்பாகியுள்ளது. டித்வா புயல் முழு இலங்கைத் தீவையும் நெருக்கடியில் தள்ளியுள்ளமையால், மலையகவாழ் மக்களின் துயரமும் கவனிப்புக்கு வந்துள்ளது. இக்கட்டுரை மலையக மக்களின் பாதுகாப்பான இருப்பைப் பேண மேற்கொள்ளக்கூடிய வழிவகையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவு முழுமையாக பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பீட்டளவில் உயர் வீச்சான இழப்பை மலையகமே எதிர்கொண்டுள்ளது. எனினும் அந்தப் பகுதிகளுக்கான அரசாங்கத்தின் மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப்பணிகள் முழுமையான வீச்சில் எட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளிடம் காணப்படுகின்றது. எதிர்க்கட்சிகளின் அரசியல் நலன்களுக்கு அப்பால் இக்கருத்து கவனத்திற்குரியதாகவே அமைகின்றது. குறிப்பாக நிவாரணப்பணிகளில் அரச உத்தியோகத்தர்கள் இனரீதியான பாரபட்சத்தை வெளிப்படுத்துவதான குற்றச்சாட்டுகளும் செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் நாட்டில் நிலவும் அவசரகாலச்சட்டத்தால் சில குறைகள் பொதுவில் கதைப்பது தவிர்க்கப்படுவதாகவும் செயற்பாட்டாளர் ஒருவர் ஊடக நேர்காணல் ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறன அனுபவங்களின் பின்னணியிலேயே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை வெறுமனவே அரசியல் நலனாக தவிர்த்து போக முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ‘கண்டியிலோ, நாவலப்பிட்டியிலோ நான் எங்கு நடந்தாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பில் சாலைகள் எனக்குப் பின்னால் சரிந்து விழுகின்றன. ஆனால் அரசாங்கத்தின் – நாட்டின் – செயற்பாட்டுத் தடம் அந்தப் பகுதிகளை இன்னும் சரியாக அடையவில்லை என்பதையும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் நிலச்சரிவில் புதைந்து கிடக்கின்றமையையும் நான் காண்கின்றேன்.” என விசனத்துடன் கூறி இருக்கிறார். அதேவேளை மலையக தமிழ் மக்களை மண்சரிவு அழிவுகளிலிருந்து பாதுகாக்க சமதரை நிலங்களில் குடியமர்த்த வேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை வடக்கு-கிழக்கில் மலையக தமிழ் மக்களை குடியமர்த்தும் முன்யோசனைiயும் பிரேரித்துள்ளார். தனது முகநூல் பதிவில், ‘அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் என்ன செய்வது? மாற்று யோசனையாக, ‘வடக்கு – கிழக்கில் குடி யேறி வாழ விருப்பமா?’ என நான் சந்தித்த மலையுச்சியில் வாழும் மக்களைக் கேட்டேன். எனக்கே ஆச்சரியம், அவர்கள் உடனே உடன்பட்டுக் கோசம் போட்டார்கள்!’ என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மொழியால் ஒன்றிணைந்த மலையக மக்களின் பாதுகாப்பான இருப்பு இலங்கையின் வடக்கு-கிழக்கு என்பது நீண்ட காலமாக பிரேரிக்கப்பட்டதுடன் பரிட்சிக்கப்பட்ட விடயமாகவும் காணப்படுகின்றது. 1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை வன்னி பெருநிலப்பரப்பில் குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றது. ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா செல்வதா? இன வன்முறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கைத் தமிழர்களுடன் பாதுகாப்பாக சென்று வாழ்வதா? அல்லது எது நடந்தாலும் பரவாயில்லை மலையகத்திலேயே வாழ்வதா? எனும் தீர்மானங்களில் ஏதாவது ஒன்றை மலையகத் தமிழ் மக்கள் எடுத்தாக வேண்டும் என்ற நிலையிலேயே ஒரு தொகுதியினர் வன்னி பெருநிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டனர். டேவிட் ஐயா, சந்ததியார், டொக்டர் ராஜசுந்தரம் போன்றவர்கள் காந்திய இயக்கம் எனும் இயக்கத்தின் ஊடாகவே இந்த செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தனர். ஈழப்போராட்ட வரலாற்றிலும் மலையகத் தமிழ் உறவுகளின் பங்கும் உயர்வாக அமைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில் டித்வா புயலை தொடர்ந்து மீள்உரையாடலை பெற்றுள்ள மலையக தமிழர்களின் வடக்கு-கிழக்கு குடியேற்றத்தை நியாயமான கருத்தாக அணுகுவது அவசியமாகின்றது.
முதலாவது, சமகாலத்தில் இருப்பு சார்ந்த அச்சுறுத்தில் மலையக தமிழர்களின் சமதரைக்கான விருப்பு கட்டாயமானதாகும். அதனை தீர்க்கமானதாக்கக்கூடிய காலமாகவும் இக்காலப்பகுதி அமைகின்றது. மண்சரிவும் உயிரிழப்பும் மலையக மக்களின் வாழ்வில் நிலையான துயராக காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு பதுளை, கொஸ்லந்தை, மீரியபொத்தை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. ‘100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது’ என அன்றைய பேரிடர் மேலாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீர, ஹல்துமுல்ல கிராமத்தில் உள்ள பேரிடர் இடத்திலிருந்து ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். எனினும் மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும், 12 பேரின் உடலங்கள் மட்டுமே மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 2016ஆம் ஆண்டிலும் கனமழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இலங்கபிடியா மற்றும் புலத்கோ{ஹபிடியா ஆகிய 2 கிராமங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனிடையே, 3 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதில் 200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்திருந்தது. மேலும் பலியானோர் எண்ணிக்கை அரசின் புள்ளிவிவரத்தைவிட கூடுதலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டது. மலையக மக்கள் தொடர்ச்சியாக மண்சரிவினால் தமது உயிர்வாழும் உரிமையை இழக்கின்றார்கள் என்பதுடன், தமது துயரை சீராக பொதுவெளிக்கு கொண்டு செல்லக்கூடிய சூழலும் காணப்படவில்லை. இவ்வாறானதொரு முன்அனுபவங்களிலேயே டித்வா புயலில் ஏற்பட்டுள்ள கரிசணையை தொடர்ந்து மலையக மக்களின் நிலையான பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வினை காண்பது அவசியமாகின்றது.
இரண்டாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணங்கள் மலையக மக்களுக்கு பொருத்தமானதாக அமையுமா? அல்லது அதனை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு மலையக மக்களுக்கு முழுமையாக காணப்படுகின்றதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. வீட்டை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் மற்றும் காணியை இழந்தவர்களுக்கு 50 என வெகுஜன அறிவிப்புக்களை நடப்பு அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட லயக்குடியிருப்புக்களில் வாழும் மலையக மக்கள் முழுமையாக இவ்நிவாரணங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய தகைமை காணப்படுகின்றதா? என்பது சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. குறிப்பாக மனோ கணேசன் அரசாங்கம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சமதரையில் வீடு கட்டி கொடுப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுடன் உரையாடியதை தனது சமுகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘இங்கே இனியும் மண்சரிவு மலைகளில் மக்களை வாழ வைக்க முடியாது. பெருந்தோட்ட மக்களுக்கு சாலையோர சமவெளிகளில் காணி கொடுங்கள். வீடு கட்டி வாழட்டும்’ என்றேன். ‘ஆம். நல்லது. ஆனால், மனோ, காணி எங்கே இருக்கிறது?’ என என்னிடம் திருப்பி கேட்டார்’ எனப்பதிவு செய்துள்ளார். இதுவொரு வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நிலையான தீர்வின்மையையே உறுதி செய்கின்றது. வேறுபட்ட மொழிப்பண்பாடுகளை கொண்ட மக்களை வடக்கு-கிழக்கில் குடியமர்த்துவதனுடாக தேசிய இனப்பிரச்சினை ஆழப்படுத்தும் கொள்கைகளை அரசாங்கங்கள் பின்பற்றியுள்ளது. எனினும் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரே மொழிப்பண்பாட்டை பகிரும் மக்கள் குடியேற்றங்களை அரசாங்கம் செய்ய தயங்குவது இனவிரோத சந்தேகங்களை உருவாக்குகின்றது. மலையக மக்களின் தொடர்ச்சியான பிரச்சினையை பகுப்பாய்வு செய்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும். இல்லையேல் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுவெளியில் முன்வைக்கப்படும் இனப்பாரபட்சத்துடனான நிவாரணப்பணி என்ற குற்றச்சாட்டு மெய்ப்பிப்பதாகவே காணப்படும்.
மூன்றாவது, வடக்கு-கிழக்கில் மலையக தமிழ் மக்களை குடியமர்த்துவது நியாயமான கருத்தாடலாகும். அதற்கான உரித்து மலையகத் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அவர்களை வரவேற்று, அரவணைத்து, இடம் அளித்து, நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு உண்டு. இதுவொரு வகையில் ஒரே மொழிப் பண்பாட்டை பகிரும் இரு சமுகங்களும் தமது கூட்டிணைவு மற்றும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பை பாதுகாப்பதற்கான உத்தியாகவும் அமையக்கூடியதாகும். 1949களில் இலங்கை அரசாங்கம் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையை நீக்கியது. இதன் பின்னணியில் மலையக மற்றும் வடக்கு-கிழக்கு தமிழர்களின் மொழிப்பண்பாட்டு சேர்க்கை தமிழர்களாய் அவர்களை ஒன்றிணைப்பதும் பலப்படுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களுக்கு அச்சுறுத்தலாக கவனிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகை புள்ளிவிபரங்களின் படி இரண்டாவது பெரிய இனவிகிதாசாரத்தை மலையகத் தமிழர்களே (11.72) கொண்டிருந்தார்கள். வடக்கு-கிழக்கு தமிழர்கள் 11.08 சதவீதமாகவும் காணப்பட்டிருந்தார். தமிழ் குடிப்பரம்பல் 24.8 சதவீதமாக காணப்பட்டது. இலங்கையின் சனத்தொகையில் கால்வாசிப் பங்கை தமிழ் மக்கள் கொண்டிருந்தனர். இது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தன்னிச்சையான முடிவுகளை சவால் செய்யக்கூடிய விகிதாசாரமாகவும் காணப்பட்டது. இந்த பின்னணியிலேயே தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் மலையக மக்களின் பிரஜாவுரிமையை நீக்கும் முடிவை டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. இன்று வடக்கு-கிழக்கு தமிழர்கள் 11.2 சதவீதமாகவும், மலையகத்தமிழர்கள் 4.1 சதவீதமாகவும் தமிழ்க் குடிப்பரம்பல் (15.3) வெகுவாக குறைவடைந்துள்ளது. ‘எதிரி பிரிக்க நினைக்கிறானாயின் சேர்வதே பலம்’ என்ற எளிய சமன்பாட்டு புரிதலில் மலையக தமிழர் வடக்கு-கிழக்கில் குடியேறுவதும் அதனை வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் வரவேற்பதும் வழியேற்படுத்தி கொடுப்பதும் அவசியமானதாகும்.
நான்காவது, வடக்கு-கிழக்கில் மலையக மக்களின் குடியேற்றங்கள் அமைப்பது தொடர்பாக மனோ கணேசனின் கருத்தை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் வரவேற்றுள்ளார். ‘மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்’ என தனது சமுக வலைத்தளப் பக்கத்தில் சுமந்திரன் பதிவு செய்துள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும். இவ்விடயத்தை அரசியல் கட்சிகள் பேச்சுக்கு அப்பால் செயலூக்கத்தை நோக்கி நகர்த்த வேண்டும். அரசு குடியேற்றங்களுக்காக காத்திருக்காது, தமிழ் அரசியல் கட்சிகள் மலையக மக்களுக்கு நம்பிக்கையளித்து ஆரம்ப குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும். 1970-80களில் காந்திய இயக்கம் வன்னி பிராந்தியத்தில் தன்னார்வமாக மலையக குடியேற்றங்களை மேற்கொண்டது போன்று சமகாலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழரசுக்கட்சிக்கும் பாரிய கடமை காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் உருவாக்கத்தின் பின்னால் மலையக மக்களின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமை சார் முரண்பாடு காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. மலையக மக்களின் பிரஜாவுரிமை நீக்கத்துக்கு பின்னால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆதரவு சார்ந்த குற்றச்சாட்டு காணப்படுகின்றது. அதனை களைவதற்கான அல்லது பொறுப்புக்கூறலுக்கான நேரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐந்தாவது, வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களும் மற்றும் மலையக சிவில் சமுகங்களும் கூட்டாக தமது சமுகத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கு-கிழக்கிலிருந்து சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு திருமுருகன் அவர்கள் மலையக மக்களுக்கான ஆரம்ப அழைப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளார். ஆறுமுக நாவலர் குருபூசை நிகழ்வில், ‘மலையக தமிழ் மக்களிடம் நாங்கள் நிலம் தருகிறோம். நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கு என்று அவர்களை நாம் கூப்பிட வேண்டும் இதுவே மனித நேயம், இதுவே தர்மமாகும்’ எனும் அழைப்பை ஆறு திருமுருகன் அவர்கள் வழங்கியுள்ளார். கடந்த காலங்களிலும் சிவபூமி அறக்கட்டளையினூடாக இலவச மருத்துவ நிலையம் மற்றும் அறநெறிப்பாடசாலைகளை மலையகத்தில் நடாத்தி வரும் ஆறு திருமுருகன் அவர்களின் அழைப்பு பொதுமையானதாகவும் கனதியானதாகவும் அமையக்கூடியதாகும். இத்தகைய அழைப்பினை மற்றும் அதரவினை வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்கள் வழங்குவதுடன், வடக்கு-கிழக்கிற்கு குடிபெயர்வதனூடாக நிலையான மற்றும் உயிர் அச்சுறுத்தலற்ற நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்ற நம்பிக்கையை மலையக சிவில் சமுகங்களும் தமது மக்களுக்கு வழங்க வேண்டும்.
எனவே, அரசியல் நலன்களுக்கு சமாந்தரமாக மலையக மக்கள் உயிர் அச்சுறுத்தலற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ சமதரை நோக்கி நகர்வது அவசியமாகும். மொழிப்பண்பாடு வேறுபட்ட சூழலில் தொடர்ச்சியாக சமுக முரண்பாட்டுக்குள் வாழ்வதை தவிர்க்க வடக்கு-கிழக்கு நோக்கிய குடிப்பெயர்வு மலையக தமிழர்களுக்கு ஆரோக்கியமானதாகும். அதேவேளை சிங்கள குடியேற்றங்களால் தமது வாழ்விடத்தை தொலைத்து சமுக முரண்பாட்டுக்குள் தள்ளப்படும் வடக்கு-கிழக்கு தமிழர்கள், மலையக தமிழ் குடியேற்றங்களை வரவேற்பதும் ஆதரவளிப்பதும் மொழிப் பண்பாட்டு பலம் அதிகரிக்கும். அதேவேளை சிங்கள குடியேற்ற சமுக முரண்பாடும் ஒப்பீட்டளவில் குறைக்கப்படும். மலையகத் தமிழர் மற்றும் வடக்கு-கிழக்கு தமிழ் சமுகங்களிடம் சில வேற்றுமைகள் மற்றும் அவநம்பிக்கைகள் காணப்படலாம். எனினும் இரு சமுகங்களும் இணைந்து செயற்படுவதனூடாக கிடைக்கப்பெறும் நன்மைகளின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு விட்டுக்கொடுத்து ஒருங்கிணைந்து பயணிப்பது இரு சமுகங்களையும் பாதுகாக்கக்கூடிய உத்தியாக அமைகின்றது. இதனை நெறிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு இரு தரப்பு அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமுகத்திடம் காணப்படுகின்றது. டித்வா புயல் இலங்கைத் தீவுக்கு பேரிடராக பெரும் அழிவுகளை உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், வடக்கு-கிழக்கில் மலையக தமிழ் மக்களின் குடியேற்றம் சாத்தியமாயின், அழிவின் விளைவிலிருந்து கிடைக்கப்பெற்ற பெரும் நன்மையாக அமையும்.
Comments
Post a Comment