பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி தொடருவதற்கான வாய்பு நிலவுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இருபத்தொராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு எனும் கருத்தியல் சர்வதேச அரசியலில் அதிக தாக்கத்தை பெற்றுள்ளது. அதனடிப்படையில் வல்லாதிக்க போட்டி நாடுகளும் ஆசிய நாடுகள் மீதே அதிக பார்வையை குவித்து வருகின்றன. எனினும் ஆசிய நூற்றாண்டை உறுதிப்படுத்தும் காரணிகளில் ஒன்றான இந்து சமுத்திரத்தின் பிராந்திய வலயமான தென்னாசிய நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை பெரும் அச்சுறுத்தலுக்குள் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடியால் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. அமைச்சர்கள் முழுமையாக இராஜினாமா செய்த நிலையில் மூன்று அமைச்சர்களுடன் அதிலும் நிதியமைச்சர் இல்லாத அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் காணப்படுகின்றது. அத்துடன் மக்கள் அரசாங்கத்தை அதிகாரத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இவ்வாறானதொரு அரசியல் பொருளாதார நெருக்கடி சூழலையே பாகிஸ்தானும் எதிர்கொண்டுள்ளது. எனினும் இலங்கையிலிருந்து வேறுபடும் வகையில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளால் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனினும் சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்ட வலுவற்றதாக தெரிவித்த நிலையிலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவிப்பில் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக இம்ரான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கட்டுரை பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதன் சுதந்திர காலப்பகுதியிலிருந்தே அரசியல் ஸ்திரத்தன்மையில் பெரும் அச்சுறுத்தலையே எதிர்கொண்டு வந்துள்ளது. 1958இல் பாகிஸ்தானில் இராணுவ சதிப்புரட்சிகள் தொடங்கின. 1951 முதல் பல வெற்றிகரமான முயற்சிகள் நடந்துள்ளன. 1947இல் உருவாக்கப்பட்டதிலிருந்து, 75ஆண்டுகால சுதந்திர பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களாக இராணுவ ஆட்சியின் கீழ் (1958-1971, 1977-1988, 1999-2008) கழித்துள்ளது. பாகிஸ்தானின் ஜனநாயகம் என்பது என்றும் சவாலுக்குரியதாகவே காணப்படுகின்றது. ஜனநாயகரீதியிலான தேர்தல் மூலமாக ஆட்சியை உருவாக்கும் தலைவர்களும் ஆட்சி அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்படுகையில் இராணுவ ஆட்சியை நாடும் இயல்பையே பாகிஸ்தான் அரசியல் கொண்டுள்ளது. இந்திய எதிர்ப்புவாதம் பாகிஸ்தான் மக்களிடையேயும் பலவீனமான ஜனநாயக ஆட்சியை விட பலமான இராணுவ ஆட்சி மேலானது என்ற எண்ணங்களை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானின் இயல்பான இராணுவ அரசியல் கலாசாரத்தினால் பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை அச்சுறுத்தலுக்குள்ளாகுகையில் உலக அரசியல் பாகிஸ்தான் அரசியல் மீது நுணுக்கமான பார்வையை செலுத்துகிறது.
நாட்டின் எதிர்க்கட்சிகளின் குழுவான பாகிஸ்தான் ஜனநாயகக் கூட்டணி(பி.டி.எம்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வெளியேற்ற விரும்புகிறது. பி.டி.எம்-ஆனது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கான் கடந்த காலத்தில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய பிற சிறிய குழுக்களால் உருவாக்கப்பட்டது. இதையொட்டி, ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ)அரசாங்கம் வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதாக பி.டி.எம் குற்றம் சாட்டுகிறது. இது பாகிஸ்தானை ஆழமான பொருளாதாரக் கொந்தளிப்பில் தள்ளியுள்ளது. ஏப்ரல்-3 அன்று, பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் (பாராளுமன்றத்தின் கீழ்சபை) சட்டமியற்றுபவர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களிக்கத் திட்டமிடப்பட்டனர். 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 172 உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை அவருக்கு எதிராக வாக்களித்தால் கான் பதவி விலக வேண்டும். எனினும், இம்ரான் கானுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெளிநாட்டு சதி என்று கூறி நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்ததையடுத்து, பாகிஸ்தான் அரசியலமைப்பு நெருக்கடியில் மூழ்கியது. எதிர்கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்குள் போராட்டம் நடத்தி, பின்னர் சொந்த அமர்வை கூட்டினர். இதில் 197 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த நேரத்தில், கானின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி ஏற்கனவே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார். இடைக்கால அரசாங்கத்தின் தற்காலிக பிரதமராக இம்ரான் கான் நியபிக்கப்பட்டள்ளார். இது மீளவொரு தேர்தலை விரைவுபடுத்தியுள்ள போதிலும், பாகிஸ்தானின் கடந்த கால அரசியல் அனுபவத்தில் இராணுவ அரசியலுக்கான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கொந்தளிப்பில் உள்ள அணு ஆயுத நாடு என்பது உலகம் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அரசியல் வன்முறை, உடைந்த அரசியல், இராணுவம் மற்றும் படைக்குள்ளேயே உள்ள பிரிவுகளால் நிர்வாகத்தை அடிக்கடி கையகப்படுத்துதல் போன்றவற்றின் வரலாற்றை தேசம் கொண்டிருந்தால் அரசியல் மாற்றங்கள் சர்வதேச அரசியலில் உன்னிப்பான கவனத்தை பெற்றுள்ளது. இஸ்லாமாபாத்தின் நிகழ்வுகளின் திருப்பம் தீவிர பாகிஸ்தான் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கவில்லை. கணிக்க முடியாத தன்மை அங்கு பெரும்பாலான அரசியல் முன்னேற்றங்களைக் குறிக்கிறது. ஆனால் தற்போதைய விகிதாச்சாரத்தின் அரசியலமைப்பு நெருக்கடி சில காலமாக காணப்படவில்லை. நிகழ்வுகளின் திருப்பம் குறித்து உறுதியாக எதுவும் இல்லாததால், அத்தகைய சூழ்நிலையை பகுப்பாய்வு செய்து எழுதுவது ஒரு சவாலாக உள்ளது.
பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் வரலாற்றைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளிலும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கங்கள், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை ஜெனரல்களின் கைகளில் உறுதியாகக் கொண்டுள்ளன. உளவுத்துறை சமூகம், நீதித்துறையின் சில கூறுகள் மற்றும் பணக்கார மற்றும் செல்வாக்குமிக்க வணிகர்களையும் உள்ளடக்கிய ஆழமான அரசு என்ற மரபு உள்ளது. சுயமரியாதை என்பது ஆழ்நிலை மாநிலத்தின் அனைத்து செயல்களின் தத்துவமாகும். பல ஆண்டுகளாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கு இடையில் பாகிஸ்தான் மாறி மாறி இராணுவ அரசை உருவாக்கியது. இராணுவம் தனது ஆதிக்கத்தை ஊக்குவிப்பதற்காக அதன் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக பின்பற்ற விரும்பிய இரண்டு சிக்கல்கள் இருந்தன: முதலில், இந்திய-விரோத நிலைப்பாடு மற்றும் இரண்டாவதாக, தீவிரவாத இஸ்லாத்தை ஊக்குவிப்பது தேசத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைமைகள் இராணுவத்தின் கட்டளைகளை அவ்வப்போது சில எதிர்ப்புகளுடன் தொடர்ந்து பின்பற்றின. வர்த்தகம் மற்றும் பிற பொருளாதார நலன்களுக்காக இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான தூண்டுதல் இராணுவத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றியது. தீவிர இஸ்லாம், கடுமையான ஊழல் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஆகியவற்றின் செயல்திட்டத்துடன் நீண்ட காலம் நீடித்தது.
கைபர் பக்துன்க்வாவில் பெரும்பான்மையை பெற்றிருந்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) மட்டுமே ஆட்சியில் நிரூபிக்கப்படாத ஒரே சாத்தியமான கட்சி. 2018 பொதுத் தேர்தலில், பி.டி.ஐ விருப்பமான கட்சியாக மாறியது. மற்றும் இம்ரான் ஒரு கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இராணுவத்தின் ஆதரவைப் பெற்றார். அன்றிலிருந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைமைகளுக்கும் இராணுவத்திற்குமிடையே பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தது. குறிப்பாக 2019 பிப்ரவரியில் இந்தியா நடத்திய பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் இந்திய பாராளுமன்றத்தால் 370வது பிரிவின் திருத்தத்திற்குப் பிறகு, படிப்படியாக இந்தியாவுக்கு எதிரானதாக மாறியது. பாகிஸ்தானின் அரசியலையும் அதன் தெருக்களையும் அடிக்கடி ஆளும் தீவிர இஸ்லாமியக் கட்சிகளை அவர் கட்டுப்படுத்த மறுத்துவிட்டார்.
ஆட்சியின் மூன்று துறைகளிலும், பி.டி.ஐயும் இம்ரான் கானும் படிப்படியாக தடுமாறின. இவற்றில் மிகவும் தீவிரமானது, பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த பிரின்ஸ்டன் பொருளாதார வல்லுனரான அதிஃப் மியான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து தொடங்கிய பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் நிதி முறைகேடு ஆகும். நான்கு ஆண்டுகளில், பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து மோசமாகிவிட்டது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பழைய கால இணைப்புகளுடன் வெளிநாட்டு உறவுகளில் இது சிறந்ததல்ல, இஸ்லாமிய உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க இரண்டு மாநிலங்களும் மோசமான காலங்களில் விலகி உள்ளன. பாகிஸ்தான் சீனாவுடனான உறவையே முதன்மைப்படுத்துகிறது. எனினும், சீனாவின் பொருளாதார உதவியின் நிச்சயமற்ற தன்மை, சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தில் (China–Pakistan Economic Corridor) சிறிய முன்னேற்றம் மற்றும் சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான நிலையான சிக்கல்கள் ஆகியவை சீன-பாகிஸ்தான் உறவில் எளிதான களங்களில் எந்த பெரிய சாதனைகளுக்கு சரியாக வழிவகுக்கவில்லை. சமீபத்தில், இஸ்லாமாபாத்தில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ழுஐஊ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ சமீபத்தில் பேசிய பிறகு இது சிறப்பாகத் தெரிகிறது. குறித்த பேச்சில் அதிகம் வரலாற்றுரீதியான சீன-முஸ்லீம் நாடுகளிடையேயான உறவையே முதன்மைப்படுத்தியுள்ளார். மாறாக, 'சீனா 54 இஸ்லாமிய நாடுகளுடன் BRI ஒத்துழைப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் US$400 பில்லியன் மதிப்பிலான 600 பெரிய அளவிலான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பு சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு உண்மையான நன்மைகளை வழங்கியுள்ளது.' என்பதைக்குறிப்பிட்ட வாங் யீ நன்மைகளை முதன்மைப்படுத்த முடியாத தன்மையை உரையில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி சார்ந்த பிரச்சாரங்களை இம்ரான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டாக முதன்மைப்படுத்துகையில், பாகிஸ்தான் அரசியல் இயல்பில் முதன்மைப்படும் பாதுகாப்புசார் அச்சுறுத்தலை இம்ரான் கான் தனது அரசியல் இருப்புக்காக முதன்மைப்படுத்தி வருகின்றார். இதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச சதி கோட்பாட்டை பிரச்சாரப்படுத்துகின்றார். ஒரு தொலைக்காட்சி உரையிலும், ட்வீட்களிலும் அமெரிக்க கொள்கை மற்றும் பிற வெளியுறவுக் கொள்கை முடிவுகள் மீதான தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தன்னை அதிகாரத்தில் இருந்து அமெரிக்க நீக்க முயல்வதற்கு வழிவகுத்ததாக அவர் கூறினார். தன்னை நீக்குவதற்கான அமெரிக்க தலைமையிலான சதியின் ஒரு பகுதியாக இந்த வாக்கெடுப்பு நடந்ததாக இம்ரான் கான் கூறியிருந்தார். அத்துடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சட்ட சர்ச்சையூடாக நிராகரித்த இம்ரான் கான், ஒரு வருட காலத்திற்கு முன்பே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை எதிர்கொள்ள முன்வருவது ஜனநாயக தோற்றத்தை வெளிப்படுத்தினும், பாதுகாப்புசார் பிரச்சாரம் இராணுவ அரசியலை இம்ரான்கான் முதன்மைப்படுத்த முயல்கிறாரோ என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இம்ரான் கானின் வெளியுறவுக்கொள்கையில் அதிக நட்பு பாராட்டும் ரஷ்சிய மற்றும் சீனா இயல்பும், ரஷ்சிய-உக்ரைன் போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்சியாவிற்கு விஜயம் செய்ததுடன் அவ்விஜயத்தை போரின் சார்பாய் நின்று பெருமிதம் பேசியதும் இம்ரான் கானின் இராணுவ அரசியல் எண்ணங்களை மேலும் வலுப்படுத்தும் காரணிகளாகவே அமைகிறது.
எனவே, பாகிஸ்தானின் அரசியல் பொருளாதார நெருக்கடி 2008களுக்கு பிறகு மீளவொரு நேரடி இராணுவ செல்வாக்கு ஆட்சியை மலர வழிவகுக்குமா என்பதுவே சர்வதேச அரசியலின் கேள்வியாக உள்ளது. எனினும், இம்ரான் கான் தேர்தலுக்கு சென்றமையானது தனது ஆதரவுத்தளத்தின் மீதான நம்பிக்கையில் என்பதனால் நேரடி இராணுவ ஆட்சி என்பது முடிவற்றதாகவே காணப்படுகிறது. பி.பி.சியின் செகந்தர் கெர்மானி, இம்ரான் கானின் ஆதரவாளர் பலர் அவருடைய கூற்றை இன்னும் நம்புகிறார்கள் எனக் கூறுகிறார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால், இம்ரான் கானின் புகழ் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னும் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளதாகவும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் செய்ததைவிடப் புதிய தேர்தல்களில் அவருக்குச் சிறந்த வாய்ப்பு உள்ளதாகவும் பி.பி.சி செய்தியாளர் கூறினார். பாகிஸ்தானின் ஜனநாயகம் தொடருமா என்பதில் இம்ரான் கான் எதிர்பார்த்துள்ள தேர்தல் முடிவுகளை பொறுத்ததாகவே அமையும் என்பதே சர்வதேச அரசியல் ஆய்வுப்பரப்பின் அவதானமாக உள்ளது.
Comments
Post a Comment