தென்இலங்கையின் பொருளாதார முற்றுகைப் போராட்டமும் தமிழர்களின் அரசியல் கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழல் மக்களை வீதியில் இறக்கியுள்ளது. குறிப்பாக, தென்னிலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அம்மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக அரசாங்கமும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மேலும், போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசாரகாலச்சட்டத்தினை பிரயோகித்து வருகின்றது. எனினும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி தென்னிலங்கையில் மக்கள் போராட்டங்கள் தினசரி வீரியம் பெற்று வருகின்றது. ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, பாராளுமன்றம், மற்றும் அமைச்சர்கள், அரசாங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பே பெருந்திரளான மக்கள் கூடி அரசாங்கத்தை பதவி விலக கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் வடக்கு-கிழக்கு தமிழர் பரப்பில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வீரியம் பெற்றிருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அடையாள எதிர்ப்பு போராட்டங்களே நடைபெற்று வருகின்றது. அதேநேரம் தென்னிலங்கை மக்களின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்த்தரப்பும் இணைந்து வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென்ற கருத்தாடல்களும் பொதுவெளியில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி சார்ந்து தென்னிலங்கையில் நிலவும் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த்தரப்பின் நிலைப்பாட்டை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி தினசரி அதிகரித்து வருகின்ற நிலையில் மார்ச்-31 அன்று தென்னிலங்கை மக்கள் நேரடியாக வீதியில் இறங்கினார்கள். அன்றைய தினம் மாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் வீடு அமைந்துள்ள மிரிஹனா வீதியில் மக்கள் திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். குறித்த மக்கள் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டு அரச இயந்திரத்தின் இறுக்கமான நடைமுறையால் முடக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உடனடியாக கொழும்பினை ஊரடங்கு சட்டம் போட்டு முடக்கியதுடன்; முழு இலங்கைக்கும் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தை அடக்குவதற்காக அரசாங்கம் கையாண்ட வழிமுறைகள் தென்னிலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை உக்கிரமடைய செய்தது. குறிப்பாக, மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காக ஏப்ரல்-03அன்று பிறப்பிக்கப்பட்ட நாடுமுழுமையான ஊடரங்கின் போது பல்கலைக்கழக மாணவர்கள் தடைகளை தகர்த்தி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தென்னிலங்கையில் அதிகரித்துவரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கை அரசியல் தலைமைகளை பெரும் அச்சத்துக்குள் தள்ளியுள்ளது. அதன் விளைவாகவே ஏப்ரல்-03அன்று இரவே அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்திருந்தனர். அதுமட்டுமன்றி அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்iதை விட்டு வெளியேறி சுயாதீனமாக இயங்க போவதாக கடந்த ஏப்ரல்-05அன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். இவையாவும் தென்னிலங்கையில் எழுச்சியுற்றுவரும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் தாக்கத்தையே உறுதி செய்கின்றது.
தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ள நிலையிலும் தமிழர் தாயகங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் வீச்சுப்பெறாத நிலையே காணப்படுகின்றது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்ம், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் நெறிப்படுத்தப்பட்ட போராட்டம் மற்றும் கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் நெறிப்படுத்தப்பட்ட போராட்டமென ஒரு சில போராட்டங்களே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மையப்படுத்திய அரசாங்கத்துக்கு எதிரான தமிழ்த்தரப்பின் போராட்டங்களாக காணப்படுகின்றது. அவற்றிலும் தமிழ் மக்களின் பங்கேற்பு என்பது குறைவானதாகவே காணப்படுகின்றது. இப்பங்களிப்பு வீதத்தின் குறைவில் அரசியல் சார்ந்த பகுப்பறிவு என்பதற்கு அப்பால் தமிழ் மக்களிடம் பிணைந்துள்ள அரசியல் பங்கேற்பின்மையும் போராட்டங்கள் தொடர்பிலான விரக்தியுமே காரணமாகிறது. எனினும் தென்னிலங்கையில் வீரியம் பெறும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தமிழர்கள் சாதாரணமாக நோக்கி கடந்து செல்ல இயலாத நிலை காணப்படுகின்றது. குறித்த போராட்டத்தின் நிகழ்வுகளின் நுணுக்கமான அரசியலை தமிழ்த்தரப்பு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
முதலாவது, பௌத்த அடிப்படைவாத பிரசர்சாரத்;தினூடாக அதிகாரத்தை கைப்பற்றிய பொதுஜன பெரமுன அரசாங்கம் தொடர்ச்சியாக தனது அதிகாரத்தை பாதுகாப்பதற்கும் அடிப்படைவாத கருத்தியலை முதன்மைப்படுத்துகின்றது. அரசாங்கம் அடிப்படைவாத கருத்தியல்களூடாக இனக்கலவரங்களை ஏற்படுத்தக்கூடிய சூழலும் அரசறியல் பரப்பில் எதிர்வுகூறப்படுகிறது. குறிப்பாக, அரசாங்கத்துக்கு எதிராக இலங்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை அடிப்படைவாதத்தின் கருத்தியலூடாக அரசாங்கம் முடக்க முயலுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியால் அரசாங்கததின் மீது விரக்தியுள்ள தென்னிலங்கை பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தூண்டலென திரிவுபடுத்தலூடாக போராட்டத்தின் வடிவத்தினை அரசாங்கம் சிதைக்க முயலுகின்றது. அரசாங்கம் மீண்டுமொரு கலவரத்தை உருவாக்க திட்டமிடுகின்றதா என்பதுவே தென்னிலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களதும் தேடலாக காணப்படுகிறது. மார்ச்-31 அன்று மிரிஹனாவில் இடம்பெற்ற போராட்ட வன்முறை தொடர்பில் செய்தி வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு, 'ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகள் குழுவொன்று குழப்பத்தை ஏற்படுத்தியதாக' குற்றம் சாட்டியது. மேலும், 'அவர்கள் அரபு வசந்தத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவோம் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும்' தெரிவித்துள்ளது.
இரண்டாவது, தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக உருவாகியுள்ள போராட்டங்களை முடக்குவதற்கான மிலேச்சத்தமான அடக்குமுறைச்செயற்பாடுகள் தமிழ், முஸ்லீம் தேசிய இனங்களை இலக்கு வைத்து நகர்த்தக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது. தென்னிலங்கையில் இடம்பெறும் மக்கள் போராட்டங்கள் யாவும் தடைகளை மீறியே மக்கள் இயக்கமாக நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் அதனை முடக்குவதற்கு அரசாங்கம் மிலேச்சத்தனமாக வகையில் கண்ணீர்ப்புகை வீசுதல், நீர்ப்பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேநேம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் காணப்படுகின்றது. குறிப்பாக மார்ச்-31அன்று மிரிஹனாவில் ஜனாதிபதி இல்லத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்குபற்றியவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்படும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும்; ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்பை தொடர்ந்தே கைவிடப்பட்டது. அத்துடன் ஏப்ரல்-05ஆம் திகதி வரை அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இலங்கை வரரலாற்றில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரசால சட்டம் என்பன தமிழினத்தையே அதிகம் பாதிப்புக்குள்ளாகியது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரிய போதிலும், அத்தேடுதல் வேட்டையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அதிகம் கைதுசெய்யப்பட்டவர்களாக தமிழ் மக்களே காணப்படுகின்றார்கள். இன்று பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு இலக்காவோரில் முஸ்லீம் மக்களும் காணப்படுகிறார்கள். இவ்வனுபவங்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுமாயின் அதனால்; பாதிக்கப்படக்கூடியவார்களாக தமிழ், முஸ்லீம் தேசிய இனங்களே காணப்படுகிறது.
மூன்றாவது, தற்போது அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டங்களில் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தேசிய இனங்களுக்கிடையிலாக பிளவுகளே காரணம் என்பதை பெருந்தேசிய மக்களும் ஏற்றுக்கொள்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அரசியல் தலைவர்களால் தமது அரசியல் நலனுக்கான ஏற்படுத்ததப்பட்ட இனங்களிடையேயான மோதலினாலேயே இத்தகைய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது எனும் அறைகூவல்கள் போராட்ட களங்களில் உரையாடப்படுகின்றது. இது ஆரோக்கியமான முன்னேற்றமாயினும், இவ்முன்னேற்றத்தால் கவரப்பட்டு ஈழத்தமிழர்கள் தென்னிலங்கையின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சங்கமிப்பார்களாயின் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்ட திசை மாற்றப்படக்கூடிய சூழலும் காணப்படுகின்றது. ஏனெனில் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இனங்களிடையேயான மோதலே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள பெருந்தேசிய இனம், கடந்த காலத்தில் இன ஒடுக்கலால் உரிiமைகளை இழந்த தமிழ்த்தேசிய இனத்துக்கான தீர்வுகளை பற்றி சிந்திக்க தவறுவதையே அவர்களது போராட்ட அறைகூவல்களில் அவதானிக்க முடிகிறது. இனப்பிளவுகளை கடந்து ஒரு தாய் மக்களாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் அறைகூவல்களே எழுப்பப்படுகிறது. கடந்த காலத்துக்கான பொறுப்புக்கூறல் தவிர்க்கப்பட முயலுகிறது. இது தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைக்கோசத்திற்கு எதிரான வடிவத்தின் மாறுபட்ட தோற்றமாகவே காணப்படுகிறது.
எனவே, தென்னிலங்கையில் இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பிலான தமிழ்த்தரப்பின் கருத்துக்களும்; ஈடுபாடும் அரசியல் பகுப்பாய்வுக்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும். அரசாங்கத்துக்கு எதிரான தென்னிலங்கையின் போராட்டம் பொருளாதார பிரச்சினை சார்ந்த நோக்கு நிலையிலேயே காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் பொருளாதார பிரச்சினையாகும். தமிழ்தரப்பு அரசியல் பொருளாதார பிரச்சினையாகவே அவதானிக்க வேண்டியுள்ளது. தென்னிலங்கை போராட்டத்தின் மையமும் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அரசியல் பொருளாதார பிரச்சினையாக நோக்கி அரசியல் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதனூடாக பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் மூலோபாயம் காணப்படினேயே அரசாங்கத்துக்கு எதிரான தென்னிலங்கையின் மக்கள் போராட்டத்தில் தமிழ்த்தரப்பும் ஒருங்கிணைந்து பயணிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். மாறாக அரசியல் தெளிவுபடுத்தலின்றி தென்னிலங்கை போராட்டங்களை தமிழ்த்தரப்பு நோக்குமாயின் அரசியல் அபத்தத்தையே உருவாக்கக்கூடியதாகும். மக்கள் மாத்திரமின்றி தமிழ் அரசியல் தலைமைகளும் தென்னிலங்கையில் இடம்பெறும் போராட்டங்களை அசமந்தமாக பயணிக்க வேண்டியுள்ளது.
Comments
Post a Comment