பாகிஸ்தானின் புதிய பிரதமர் வருகை; அமெரிக்க-பாகிஸ்தான் உறவை பலப்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-
பாகிஸ்தான் அரசியல் இயல்பாகவே அதிகம் குழப்பங்களும் நெருக்கடிகளும் நிறைந்ததாகும். கடந்த ஏழு தசாப்த தன்னாட்சி வரலாற்றில் அதிகம் இராணுவ ஆட்சிகளிலும் முரண்பாடுகளின் நீட்சியிலுமேயே பயணித்துள்ளது. பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரமற்ற சூழலினூடாக தென்னாசிய அரசியலை கையாளும் உத்திகளை காலத்துக்கு காலம் வல்லாதிக்கத்துக்காக போட்டியிடும் அரசுகளும் பயன்படுத்திக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, பனிப்போர்க்காலத்திலும் ஒற்றைமைய அரசியலிலும் தென்னாசியாவினை பாகிஸ்தானூடாகவே அதிகளவில் அவதானித்து வந்தது. எனினும் 2013களுக்கு பின்னர் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியூடாக சீனாவின் செல்வாக்கு தென்னாசியாவிலும் குறிப்பாக பாகிஸ்தானிலும் அதிகரித்து வருவது அமெரிக்காவின் தென்னாசிய சார்ந்த இருப்பில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நிலையிலேயே அமெரிக்காவின் எதிர்முகாமான சீன மற்றும் ரஷ்சியாவுடன் அதிக நட்பினை வெளிப்படுத்திவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவி நீக்கமும் பாகிஸ்தானின் புதிய பிரதமாக ஷேபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளமையும் அமெரிக்காவின் சதி எனும் உரையாடல் சர்வதேச அரசியலில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரிப்-இன் வெளியுறவுக்கொள்கையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்-10அன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு 174வாக்குகள் (342வாக்குகளில்) பெற்று நிறைவேற்றப்பட்டது. இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல்-11அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் வாக்கெடுப்பு நடைபெற்றது. இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி வெளிநடப்பு செய்தததை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஷேபாஸ் ஷெரிப் போட்டியின்றி வெற்றி பெற்று பாகிஸ்தானின் புதிய பிரதமராகி உள்ளார். 70 வயதான முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீப், 2023இல் எதிர்பார்க்கப்படும் அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக பதவி வகிப்பார். இம்ரான் கானின் வெளியேற்றம் என்பது எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரை பாராளுமன்ற பதவிக் காலத்தை முடிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறது. எனினும் ஜனநாயகம் அதிகம் கேள்விக்குட்படுத்தப்படும் பாகிஸ்தானில் ஜனநாயக வழியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தினூடாக பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை பதவி இழுப்பவராக இம்ரான் கானே காணப்படுகின்றார். ஜனநாயக வழிமுறைகள் மூலம் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டாலும், கடந்த ஆண்டு இறுதியில் அவர் நாட்டின் சக்திவாய்ந்த இராணுவ ஸ்தாபனத்திற்கு எதிராக செயற்பட முன்வந்தபோது, அவரது விலகல் முன்னறிவிக்கப்பட்டது.
வில்சன் மையத்தின் பிராந்திய நிபுணரும், Foreign Policy செய்தித்தளத்தின் தெற்காசிய சுருக்கத்தின் ஆசிரியருமான மைக்கேல் குகல்மேன், கானின் நீக்கத்தில் நாடாளுமன்றத் தன்மை கீழே உள்ளதை ஏன் மறைக்கிறது என்பதை விளக்கினார். அதாவது, 'இராணுவம் திரைக்குப் பின்னால் இருந்து சரங்களை இழுத்து, அதிகாரத்தை நேரடியாகப் பிடிக்காமல் அமைதியாக செல்வாக்கைச் செலுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. ஏனெனில் கொள்கைத் தோல்விகளுக்கு பொதுமக்களால் வீழ்த்தப்படுவது நல்லது என்பதை அது அங்கீகரிக்கிறது. அது இராணுவத்தை தனிமைப்படுத்துகிறது மற்றும் அதன் தொடர்ச்சியான பிரபலத்தை உறுதிப்படுத்த உதவுகிறது' என குகல்மேன் தெரிவித்தார்.
இராணுவத்தின் ஆதிக்கம் மற்றும் தாக்கங்கள் பாகிஸ்தான் அரசியல் இயல்பில் தவிர்க்க இயலாத நிலையை பெற்றுள்ளது. பாகிஸ்தானில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கும், இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஜனநாயகவாதியாயினும் இராணுவ அதிகாரத்தை அனுசரித்து செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. எனவே இம்ரான் கானின் பதவி நீக்கம் தொடர்பிலான சச்சரவுகளை தேடுவதாயின் பாகிஸ்தானின் இராணுவ மற்றும் ஜனநாயக நிலைகளை தேடுவதற்கு அப்பால் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரிப்-இன் கடந்த கால மற்றும் நிகழ்கால அரசியல் போக்கினை அறிதல் அவசியமாகிறது.
ஓன்று, 70வயதான ஷேபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் அரசியலில் நெருக்கமான பிணைப்புடையவராக காணப்படுகிறார். ஷேபாஸ் ஷெரீப் மூன்று முறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார். ஷேபாஸ் ஷெரீப் 1997இல் பாகிஸ்தானின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான பஞ்சாபின் முதல்வராக பதவியேற்றார். மேலும் அவரது நல்லாட்சிக்காக மாகாணத்தில் பலராலும் பாராட்டப்பட்டார். ஆனால், 1999இல் முன்னாள் ஜெனரல் பர்வேஸ் முஷாரப், நவாஷ் ஷெரிப்க்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தியபோது எதிர்பாராதவிதமாக அவரது பதவிக்காலம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கும் சக்திவாய்ந்த இராணுவத்திற்கும் இடையிலான உறவு முறிந்தது. ஷேபாஸ் ஷெரீப் தனது குடும்பத்துடன் சவுதி அரேபியாவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு முன்பு, பாகிஸ்தானில் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 2007இல் பாகிஸ்தானுக்குத் திரும்பி, அடுத்த ஆண்டு மீண்டும் பஞ்சாபின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் பஞ்சாபில் அதன் லட்சிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும், கல்வி மற்றும் தொழில்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்காகவும் பலரிடம் பிரபலமாக இருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டில் ஷெரீப்பின் குடும்பம் ஊழலில் சிக்கியது, அவரது மூத்த சகோதரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் ஊழலுக்காக கூ10.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப் அரசியல் பதவியை வகிக்க தடை விதித்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் தலைவராக ஷெபாஸ் ஷெரீப் தனது மூத்த சகோதரரிடம் இருந்து பொறுப்பேற்றார். இப்பின்னணியிலேயே இம்ரான் கானுக்கு எதிரான ஊழல் மற்றும் நிர்வாக பலவீனங்களுக்கு எதிராக ஷேபாஸ் ஷெரீப் முதன்மையான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
இரண்டு, இராணுவ அரசியல் அதிகம் முதன்மைபெறும் பாகிஸ்தான் அரசியலில் ஜனநாயகவாதி அடையாளத்தை வெளிப்படுத்துவராக ஷேபாஸ் ஷெரிப் காணப்படுகின்றார். பல வாரங்களாக, மோசமான நிர்வாகம் மற்றும் பொருளாதார முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஜனநாயக வழியில் நீக்குவதற்கான பிரச்சாரத்தை ஷேபாஸ் ஷெரீப் வழிநடத்தி வந்தார். எனினும் இம்ரான் கானின் பதவி நீக்கத்தில் ஷேபாஸ் ஷெரிப்-இன் பிராச்சாரத்தின் வெற்றியின் பின்னால் இராணுவ ஆதரவும் உள்ளமையையே Foreign Policy செய்தித்தளத்திற்கு மைக்கேல் குகல்மேன் வழங்கியுள்ள கருத்து உறுதி செய்கின்றது. எனவே ஷேபாஸ் ஷெரிப் அடையாளப்படுத்துவது அமெரிக்கா போன்ற போலி ஜனநாயகமே ஆகும். ஷெரீப்பின் எழுச்சி அரசியல் மோதலில் சிக்கியுள்ளது. மேலும், இம்ரான் கானுக்கு ஆதரவான பரவலான எதிர்ப்புகளின் பின்னணியில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மற்றும் முக்கிய நாடுகளுடன் முக்கியமான உறவுகளைப் பேணுவதற்கான கடினமான பணியை ஷெரீப் இப்போது எதிர்கொள்கிறார். ஷெரிப்பின் ஜனநாயகத்தின் வடிவம் எதிர்வரும் காலங்களிலேயே உறுதி செய்யக்கூடியதாகும்.
மூன்று, ஷேபாஸ் ஷெரீப்பின் வெளியுறவுக்கொள்கை அதிகம் அமெரிக்க சார்ந்து பயணிக்கக்கூடியதாகவே காணப்படுகிறது. நவாஷ் ஷெரிப்பின் ஆட்சி வரலாறும் அதனையே உறுதி செய்கிறது. மேலும், புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் பதவியேற்றபின் ஏப்ரல்-11அன்று ஷெரீப்பின் அலுவலகம் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியின் கருத்துக்களுக்கு பதிலளித்தது. அதில் இஸ்லாமாபாத்துடனான வாஷிங்டனின் உறவுகளின் விமர்சனத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. 'பாகிஸ்தானுடனான நீண்டகால உறவுகளை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். சமத்துவம், பரஸ்பர நலன் மற்றும் பரஸ்பர நன்மை ஆகிய கொள்கைகளில் இந்த முக்கியமான உறவை ஆழப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்' என பாகிஸ்தான் அறிக்கை கூறியது. இந்தியாவை தளமாகக் கொண்ட வியூக பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவனர் ஹேப்பிமான் ஜேக்கப், 'பாகிஸ்தான் அமெரிக்கர்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. இருப்பினும், உள்நாட்டில், அவர்கள் ஒளியியலை நிர்வகிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற எளிய காரணத்திற்காக, அமெரிக்கர்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை' என்று கூறினார். மேலும், 'கானைப் போலல்லாமல், ஷெரீப் வாஷிங்டனுடனான தொடர்பைத் துண்டிக்கவில்லை. அமெரிக்காவுடனான உறவுகளில் முன்னேற்றம் பாகிஸ்தான் காண வாய்ப்புள்ளது' என்று ஜேக்கப் கூறினார். ஷேபாஸ் ஷெரீப் அமெரிக்காவை முதன்மைப்படுத்தினாலும் பாகிஸ்தான் சீனாவுடன் கொண்டுள்ள பொருளாதார ஈடுபாடுகளை அடிப்படையாக கொண்டு சீனாவுடனான உறவையும் வலுவாக பேணக்கூடிய தன்மையும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அரசியல் முதிர்ச்சி பெற்ற மற்றும் பாகிஸ்தான் அரசியல் குடும்ப வரலாற்று பின்னணியை கொண்ட ஷேபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் அரசியல் வழமைக்கு திரும்புவார் என்பதே ஆய்வாளர்களது எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. இம்ரான் கான் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். அது பாகிஸ்தான் அமெரிக்காவிலிருந்து தன்னைத் தூர விலக்கி சீனா மற்றும் ரஷ்சியாவுடன் நெருக்கமாகச் சென்றது. அதன் பின்னணியிலேயே தனது பதவி நீக்கத்துக்கு பின்னால் அமெரிக்கா சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இம்ரான் கானின் சதிக்கோட்பாட்டின் நம்பகத்தன்மைகளுக்கு அப்பால் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நாட்டம் ஷேபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்காலத்தில் அதிக பிணைப்பை பெறும் என்பதே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களது கணிப்பாக உள்ளது.
Comments
Post a Comment