பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவினது உரை இனவாதத்தை பிரதிபலிக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி அதிகரித்து கொண்டே செல்கிறது. பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கேயின் கூற்றுப்படி, உலகின் மிக உயர்ந்த பணவீக்க நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில்(69மூ) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமாந்தரமாக காலி முகத்திடலில் கூடாரமிட்டு இளைஞர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் அரசாங்கம் அரசியல் பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்வதில் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முரணாக மீள இனவாத கருத்தியலை முதன்மைப்படுத்தும் பிரச்சாரங்களையே மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் உரை தொடர்பில் பொதுவெளியில் அதிக வாதப்பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்களது உரையின் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-11(2022)அன்று இரவு மக்களுக்கான விசேட உரையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், அவர்களின் எதிர்ப்பின் ஒவ்வொரு நொடியும் நாட்டிற்கு முக்கியமான டொலர்களை செலவழிக்கிறது என்று அவர் கூறினார். எனினும் பிரதமரின் வேண்டுகோள் கொழும்பு தெருக்களில் அமைதியை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் உச்சமாக ஏப்ரல்-09(2022)அன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலிமுகத்திடலில் ஒன்று கூடிய இளைஞர்கள், பல தசாப்தங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நிலைமைக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக கோரி முகாமிட்டுள்ளனர். ஊழல் மற்றும் தவறான ஆட்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, அதிகாரத்தை விட்டு வெளியேற அவரது குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவி விலகும் வரை தாங்கள் காலிமுகத்திடலை விட்டு வெளியேறப்போவதில்லையென போராட்டக்காரர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். எனினும், 'ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எந்த சூழ்நிலையிலும் தனது பதவியை இராஜினாமா செய்யமாட்டார்' என அரசாங்கத்தின் தலைமை கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஏப்ரல்-06அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா மார்ச்-16 அன்று விசேட உரையாற்றியிருந்தார். அதில், 'இந்த நெருக்கடி என்னால் உருவாக்கப்படவில்லை. எனது செயல்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும்' என மக்களிடம் கோரிக்கை விடுத்தார். எனினும் 69லட்சம் மக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுடன், பொதுத் தேர்தலில் 2ஃ3 பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்றுக்கொண்டமைக்கு முழுவீச்சான ஆதரவினை வழங்கிய பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஆதரவாளர்களைக்கூட ஜனாதிபதியின் உரை திருப்திப்படுத்தியிருக்கவில்லை. மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக கட்டுப்பாடற்ற விதத்தில் வளர்ச்சியடைந்தது. இந்நிலையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ஷா  கடந்த ஏப்ரல்-11அன்று மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்தார். 

ஐம்பது வருட அரசியல் முதிர்ச்சி பெற்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் உரை பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவுத்தளத்தை மீளக்கட்டமைக்கும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் காணப்பட்டது. எனினும் பிரதமரது விசேட உரை பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மாறாத இனவாத பிரச்சார  இயல்புகளை வெளிப்படுத்தியதுடன், பெருகிவரும் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் வலுவான அறிகுறிகளைக் காட்டவில்லை என்ற விமர்சனப்பார்வைகளே அதிகளவில் முன்வைக்கப்படுகின்றது. மேலும், ஏப்ரல்-13அன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்துள்ள எதிர்ப்பாளர்களை சந்திக்க முன்வந்தார். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அவர்களின் யோசனைகளுக்கு செவிசாய்ப்பதாகக் கூறினார். எனினும் போராட்டக்காரர்கள் பிரதமரின் முன்னெடுப்புக்களுக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். போராட்டக்களத்திலுள்ள நுவான் களுஆராச்சி எனும் ஆசிரியர், 'ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக இப்போது நடக்க வேண்டியது என்னவென்றால், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் அவரை நிராகரிக்கும் நேரத்தில், அவர் பேசுவதற்கு முன்வராமல் தனது முழு குலத்துடனும் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக தென்னிலங்கையில் அதிகரித்துவரும் எதிர்ப்பினை கையாள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ களமிறங்கியுள்ள நிலையில் அவரின் விசேட உரையின் உள்ளடக்கங்களை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, பொதுஜன பெரமுன எனும் அரசியல் கட்சியின் உருவாக்கம் யுத்த வெற்றி வாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற அடிப்படையில் அதனை தொடரும் வகையிலேயே பிரதமரது உரையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலிலும் சரித்திரத்திலும் சரி மிக மோசமான தருணத்தை இயற்றிய இடத்தில், போரில் வெற்றியீட்டிய தனது பெரும் வரலாற்றுப் பங்களிப்பை அழியாத வண்ணம் தீட்டியுள்ளார். இது சமகால அரசியல் பொருளாதார பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் இளைஞர்களுக்கு அதிக எரிச்சலை உருவாக்கக்கூடியதாகவே அமைகின்றது. முன்னைய நெருக்கடிகாலங்களில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாவின் உரைகளிலும் தொடர்பற்ற விதத்தில் தாங்கள் போர் வெற்றியாளர்கள் என்பதை நினைவூட்டுவது போன்றே பிரதமரும் தனது உரையில் அதிகம் போர் வெற்றியாளர்கள் தாங்கள் தான் என்பதை மீள மீள வலியுறுத்தி உள்ளார். குறித்த உரையின் இறுதியில், 'உங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தேசிய கொடியை வைத்திருப்பதை நான் காண்கிறேன். நாம் பிறந்த இந்த பூமியில் எந்தவொரு இடத்திற்கும் தேசிய கொடியை கொண்டு சென்று ஏற்றி வைப்பதற்கான நாட்டை நாம் உருவாக்கி கொடுத்தோம். அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது.' எனப்பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது இலங்கையில் சமகாலத்தில் நிகழும் அரசியல் பொருளாதார பிரச்சினையையும் போர்க்கால நெருக்கடியுடன் ஒப்பீடு செய்வதையே வெளிப்படுத்துகிறது. கருத்து வேறுபாடுடைய மற்றும் கிளர்ச்சியாளர் என்ற அரசியல் வரலாற்றைக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷாவின் பேச்சு, இளம் எதிர்ப்பாளர்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளை அனுதாபம் கொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ முற்றிலும் தவறிவிட்டது. மக்களின் நாடித் துடிப்பில் எப்போதும் விரலை வைத்திருக்கும் அரசியல்வாதியான அவர், இப்போது அவர்களின் உணர்வுகளுடனான தொடர்பை முற்றிலும் இழந்துவிட்டார் என்பதையே உரையில் போர் பற்றிய முதன்மையும் போராட்டக்காரர்களது எதிர்வினையும் வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டாவது, இராணுவத்தை குளிர்விக்கும் இயல்பிலேயே பிரதமரது உரை அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் அரசியல் பொருளாதார பிரச்சினையை முன்னிறுத்தி போராட்டத்தை நிகழ்த்துகையில் அரசியல் முதிர்ச்சிமிக்க பிரதமர் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுசார் உரையாடல்களை தவிர்த்து இராணுவத்தின் புகழோச்சும் உரையையே நிகழ்த்தியுள்ளார். அதாவது, 'அன்று பீதியிலிருந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது கால்களில் குத்திய மணல் கற்களைவிட அதிகமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதுமான அவமானங்களை இன்று நான் சந்திக்கிறேன். அவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். எனினும், நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள். இன்று நீங்கள் சுதந்திரமாக பயமில்லாமல் வீதிகளில் பயணிப்பதும், எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவதும் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து நாட்டை காப்பாற்றியமையினாலேயே ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.' எனப்பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், எதிர்ப்பாளர்களால் இத்தகைய அவமரியாதை அல்லது அவமானம் மற்றும் துன்புறுத்தலுகள் மேற்கொண்டமைக்கு பிரதமர் தனது உரையில், எந்தவொரு நபரையும் அல்லது இடத்தையும் மேற்கோள் காட்டத்தவறியதால் எந்த ஆதாரத்தையும் முன்வைத்திருக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முன்னாள் தலைவர் கலாநிதி தயான் ஜயதிலகா, 'போராட்டங்களின் அறிக்கையை உன்னிப்பாக அவதானிப்பவராக நான் சொல்லக்கூடிய வரையில், இராணுவம்; நிகழ்காலம் அல்லது கடந்த காலத்தை எங்கும் போராட்டக்காரர்கள் இழிவுபடுத்தியதில்லை.' என பிரதமரின் உரையில் காணப்படும் உண்மைக்கு புறம்பான விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது இராணுவத்தினரை பயன்படுத்தி வன்முறையை ஏற்படுத்துவதற்கான முன்அனுபவமாகவும் அவதானிக்கப்படுகிறது. குறிப்பாக 1980களில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அதனை ஒடுக்குவதற்கு, அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி 1984இல் தொலைக்காட்சி உரையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவர் பேராதனையில் மற்றவர் கொழும்பில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது, பிரதமர் தனது உரையில் அராஜகத்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பல தசாப்தங்களாக கவர்ச்சிகரமான அயோக்கியனாக இல்லை. எனினும் ஏப்ரல்-11 அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில் அவரது பேச்சு கல்லாகவும், சற்றே கெட்டதாகவும் இருந்தது. அவர் படிக்க ஒப்புக்கொண்ட பேச்சு நாட்டை அதலபாதாளத்தில் தள்ளும் அடக்குமுறையின் ஒரு சுற்று சமிக்ஞையாக இருக்கலாம் என்ற விமர்சனம் அரசறிவியலாளர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது. இலங்கை இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றிய கோத்தபாய ராஜபக்ஷா, ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து, நிர்வாகத்தை இராணுவமயமாக்கியதுடன், கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கு ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் ஜெனரல்களையே நம்பியிருந்தார். தனது ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால், இராணுவத்தை இப்போதே நிலைநிறுத்தவும் அவர் தயங்க மாட்டார் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் ஜனநாயக அரசியல் முதிர்ச்சியே அதனை தடுத்து வைத்திருப்பதாக பலராலும் கருத்துரைக்கப்பட்டது. எனினும் பிரதமரின் மக்களுக்கான சிறப்பு உரை பிரதமர் மீதான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. ஜே.வி.பி கலவரத்தையும் அதனை அடக்குவதற்காக அன்றைய அரசாங்கம் மேற்கொண்ட அராஜகத்தையும் சுட்டிக்காட்டியதனூடாக தமது அடக்குமுறை செயற்பாடுகளும் அராஜக நிலைபெறும் என்ற எச்சரிக்கையை வழங்கியுள்ளார். வெகுஜனப் போராட்டங்கள், ராஜபக்சக்களின் அதிகாரப் பிடிக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் போராட்டங்களை நசுக்க வன்முறையைப் பயன்படுத்துவார்கள் என்பதையே பிரதமரது மக்களுக்கான உரை வெளிப்படுத்தி உள்ளது. 

எனவே சுருக்கமாக சொன்னால், இளைஞர்களின் அமைதியான எழுச்சியின் இந்த நேரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை, நாட்டின் மிகப் பெரிய போர்க்காலத் தலைவராக இருந்த நபரின் தார்மீக நெறிமுறை வீழ்ச்சியை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மகிந்த ராஜபக்ஷா மீதான தனிப்பட்ட உணர்ச்சிபூர்வமான உறவால் 1999முதல் அவருடைய அதரவாளனாக தன்னை அடையாளப்படுத்தி பயணித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலகாவும் பிரதமரது உரை மீது அதிக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிரதமரது உரை பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்துகையில், 'நேற்றிரவு (ஏப்ரல் 11, 2022), மகிந்த ராஜபக்சவின் தார்மீக, நெறிமுறை மற்றும் வரலாற்று அந்தஸ்தின் சுய-உந்துதல் வீழ்ச்சியை நான் நேரில் பார்த்தது போல் நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில், 'தன்னால் ஒருவன் தீட்டுப்பட்டவன்' பாடம் தெளிவாக உள்ளது. ஒரு வகை சவாலை எதிர்கொள்வதில் சிறந்த தலைவராக இருக்கும் ஒரு மனிதன், மற்றொன்றின் முகத்தில் அதற்கு நேர்மாறாக இருக்க முடியும்.' என மகிந்த ராஜபக்ஷாவின் கருத்து அரவரது அரசியல் அஷ்தமனத்திற்கு வழிவகுத்துள்ளது என்ற ஆதங்கத்தை ஜயதிலகாவும் வெளிப்படுத்தியுள்ளார்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-