காலிமுகத்திடல் போரட்டமும் பெருந்தேசியவாத சிந்தனையின் போக்கும்! -ஐ.வி.மகாசேனன்-

சமகாலத்தில் இலங்கை அரசியல் போராட்டங்களால் நிறைந்துள்ளது. மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் பங்காளி கட்சிகள் என பல்வேறு முனையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வீரியம் பெற்று வருகின்றது. “GO Home Gota” என்பதே இலங்கை முழுவதும் ஒலிக்கும் செய்தியாக உள்ளது. எனினும் வடக்கிலும் தெற்கிலும் போராட்டத்தின் வீச்சும் போராட்டம் தொடர்பிலான உரையாடல்களும் வேறுபட்டு காணப்படுகின்றது. தெற்கில்  “GO Home Gota”  போராட்டத்திற்கு எதிராக  “We Want Gota”  எனும் பிரசுரங்களுடன்  அரசாங்க ஆதரவாளர்கள் ஒருசிலர் போராட்டங்களை முன்னெடுக்க முனைகையில் அதற்கு எதிரான கருத்துக்களே தெற்கில் அதிகளவில் உரையாடப்படுகிறது. எனினும் மாறாக வடக்கில் 'GO Home Gota' போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு சில இளைஞர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில் அப்போராட்டத்தின் மையக்கருத்துக்கள் தமிழ்த்தேசிய பிரச்சினையை உள்வாங்க தவறியுள்ளது என்ற விமர்சனத்துடன் தமிழர் ஆதரவு தேவையற்றது என்பதான கருத்தாடல்களே காணப்படுகிறது. இக்கட்டுரை 'GO Home Gota' போராட்டம் தொடர்பிலான தமிழர் எதிர்பார்ப்புக்களையும் அதன் உள்ளடக்கங்களையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை முன்னெப்போதும் இல்லாத அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனினும், நெருக்கடியின் ஆரம்ப காலங்களில் தென்னிலங்கை அதிகம் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தியது. கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க முயன்றனர். சகிப்புத்தன்மை முக்கியமாக இரண்டு காரணிகளில் இருந்து வெளிப்பட்டது. ஒன்று, இது அவர்களின் அரசாங்கம். அவர்கள் சமீபத்தில்தான் இந்த அரசாங்கத்தை வலுவான ஆதரவுடன் தேர்ந்தெடுத்தனர். தற்போதைய தலைவர்கள் அவர்களில் பெரும்பாலோருக்கு அன்பானவர்கள். அவர்களை வெறுப்பது சுலபமாக இருக்கவில்லை. இரண்டு, நெருக்கடி தற்காலிகமானது என்றும் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். நெருக்கடியின் ஆழமான காரணங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதனடிப்படையில் விழிப்புணர்வு இல்லாததும் ஆரம்ப சகிப்புத்தன்மைக்கு பங்களித்தது. எனினும் வெகுவிரைவில் நெருக்கடிக்கு நிர்வாகம் பதிலளித்த விதமும் போக்கும் தென்னிலங்கை மக்களின் பொறுமையை வெகுவாக சோதித்தது. அவர்கள் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்த சிறிய குழுக்களாக கூடியதுடன், அதே நோக்கத்திற்காக சமூக ஊடகங்களையும் பரவலாகப் பயன்படுத்தினர். ஏப்ரல்-03அன்று அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மக்கள் மாலை 03 மணிக்கு தங்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இருந்தபோதிலும், மார்ச்-31 அன்று, சமூக ஊடகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்பாளர்கள் குழுவொன்று நுகேகொடையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகத் திரும்பியது. 'வீட்டுக்கு போ' என்று கூட்டம் கோஷமிட்டது. கோஷம் ஹேஷ்டேக் ஆகவும் மாறியது. 

ஆனால், எதிர்பாராதவிதமாக போராட்டம் வன்முறையாக மாறியது. அதனை அடக்குவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய அரச இயந்திரத்தின் அதிகார செயற்பாடுகள் வெகுவாக மக்களை கிளர்ச்சியடைய செய்திருந்தது. அதன்விளைவாகவே ஏப்ரல்-02 மற்றும் ஏப்ரல்-03இல் அரசாங்கம் தீவுமுழுமையாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த போதிலும் தென்னிலங்கையில் பரவலாக பெருந்திரளாய் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொருளாதாரத்தின் தவறான மேலாண்மை மற்றும் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தொடர்ச்சியான கிளஸ்டர் போராட்டங்களின் பின்னர், அதன் உச்சமாக காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏப்ரல்-09அன்று திரண்டனர். இது அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தின் மையமாக மாறியுள்ளது. 2011இல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் பாணியில் அவர்கள் காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ளனர். இந்த தளத்திற்கு 'கோட்டா கோ காமா' என்று மாதிரி கிராமமாக பெயரிடப்பட்டுள்ளது.

கோட்டா கோ காமா களத்தில் ஒன்றுகூடியுள்ள தென்னிலங்கை மக்களின் போராட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கோரிக்கைகளை மையப்படுத்தியே வடக்கும் தெற்கும் 'GO Home Gota' போராட்டத்தின் ஆதரவு தளத்தை சோதிக்கின்றன. எனினும், அரசாங்கத்துக்கு எதிராக கோட்டா கோ காமா களத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களில் தமிழ்த்தரப்பு எவ்வித எதிரான நிலைப்பாடுகளையும் முன்வைக்கப்போவதில்லை என்பதே தமிழ்த்தரப்பின் உரையாடல்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது, அதாவது,  ராஜபக்ஷா குலத்தைச் சேர்ந்த அனைவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் விரும்புகின்றனர். இது சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டு ராஜபக்ஷா குடும்பத்தினரால் திருடப்பட்ட பணம் மற்றும் வளங்களை மீட்பதற்காக எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகிறது. போராட்டக்களத்தில் குடும்ப அரசியல் பிரமுகர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற கோருக்கைகளும் முன்வைக்கப்படுகிறது. வெளிப்படையாக, கோஷங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன மற்றும் தொடர்ந்து விரிவடைகின்றன. இவ்எண்ணங்களை தமிழ்த்தரப்பும் ஏற்றுக்கொள்கிறது. இதனடிப்படையிலேயே வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்திலும் ஒருசில அரசியல் தலைவர்களின் நெறியாள்கையில் சில இளைஞர் அமைப்புக்கள் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தமிழ்த்தரப்பும் ஆதரவு வழங்க வேண்டுமென்ற பொதுக்கூட்டங்களை நிகழ்த்துவதுடன் ஆதரவு பேரணிகளையும் முன்னெடுக்கின்றன. எனினும் தமிழர் தரப்பு முழுமையான ஆதரவுத்தளத்;தில் இயங்குவதற்கு தயக்கத்தையே வெளிப்படுத்துகின்றது. இதற்கு காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தேசிய எண்ணங்களை புறந்தள்ளி சிங்கள தேசிய எண்ணங்களை மாhத்திரம் இலங்கை தேசியமாக சித்தரிக்க முயலும் நிகழ்வுகளே தடையாக உள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.

முதலாவது, சுதந்திர இலங்கையின் தேசிய சின்னங்கள் பெருந்தேசியவாத எண்ணங்களிலிருந்து உருவாக்கப்பட்டமையால் தமிழ்த்தேசிய பரப்பில் அதனை அடிமைப்படுத்தும் விரோத சின்னங்களாகவே நோக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, இலங்கை தேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கம் பெருந்தேசியவாத்தின் குறியாகவே பெருந்தேசியவாதிகளாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் இன்றைய அரசாங்கமான பொதுஜன பெரமுனாவின் கூட்டங்களிலும் இலங்கை தேசிய கொடியில் தமிழர் மற்றும் முஸ்லீம்களை குறிக்கும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் தவிர்க்கப்பட்டு வாளேந்திய சிங்கத்துடன் மாத்திரம் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வாளேந்திய சிங்கம் சார்ந்த இலங்கை தேசிய கொடி பெருந்தேசியவாத கொடியாக தமிழர்களால் கடந்த 70ஆண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அக்கொடியை முதன்மைப்படுத்தி காலிமுகத்திடல் போராட்டம் நெறிப்படுத்தப்படுவது தமிழ்த்தேசியத்தை அப்போராட்டம் ஏற்கவில்லை என்ற மனநிலையையே தமிழர் தரப்பில் உருவாக்குகிறது. 

இரண்டாவது, தமிழில் இலங்கை தேசிய கீதம் பாடுவது தொடர்பில் காலிமுகத்திடலில் எழுப்பட்ட சர்ச்சை தமிழர்களின் இணைவு சார்ந்த தயக்கத்தை பலப்படுத்துகிறது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர சாசனத்தில் இலங்கை தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவே காணப்படுகின்து. எனினும் பெருந்தேசியவாத சிந்தனை ஆட்சியாளர்கள் அதனை தவிர்த்து வருவது தமிழ் மொழி புறக்கணிப்பாகவே தமிழர்களால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே ஏப்ரல்-16அன்று காலிமுகத்திடல் போரட்டத்தில் இலங்கை தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட்டிருந்தது. இதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கவலை தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக காலிமுகத்திடலில் ஏப்ரல்-17அன்று தமிழில் இலங்கை தேசிய கீதத்தை இசைப்பதற்கு தமிழ் இளையோர் சிலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனினும் காலிமுகத்திடலில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது ஒரு பௌத்த பிக்கு வந்து அதனை இடைநிறுத்தி குழப்பங்களை மேற்கொண்டிருந்தார். எனினும் இக்குழப்பசூழலை நீக்கும் வகையில் மறுநாள் ஏப்ரல்-18அன்றும் காலிமுகத்திடலில் தமிழில் இலங்கை தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஆரம்பத்தில்; தமிழில் தேசிய கீதம் பாடப்படாமையும் மற்றும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலையும் தமிழ்த்தேசிய பிரச்சினையை தம்மை சிங்கள முற்போக்குவாதிகளாக அடையாளப்படுத்துவோரும் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.

மூன்றாவது, அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் இடம்பெறும் காலிமுகத்திடலில் பெயரிடப்பட்டுள்ள கோட்டா கோ காமா மாதிரி கிரமத்தினுள் யுத்த போர் வீரர்களை அடையாளப்படுத்தம் வகையில் 'ரணவிருகம' (போர்வீரர் கிராமம்) எனும் உப கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷாக்கு எதிரான போர்க்குற்றங்களை நிராகரிக்கும் அட்டைகளை தாங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கோரிக்கைகளை நிராகரிப்பதுடன், தமிழ்த்தரப்பை காயப்படுத்தும் நிகழ்வாகவே அவதானிக்கப்படுகிறது.

எனவே காலிமுகத்திடல் போராட்டமானது எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பதையே போராட்டக்காரர்கள் விரும்புகிறார்கள் என்று கருதுவதே பாதுகாப்பானது ஆகும். காலிமுகத்திடல் ஆக்கிரமிப்பு இயக்கம் ராஜபக்ஷா சந்ததிற்கு எதிராக பல்வேறு இன, மத, சமூக குழுக்களை ஒன்றிணைத்துள்ளது. இது அரசியல் நோக்கங்களுக்காக இலங்கை அரசியல்வாதிகள் இலங்கை சமூகக் கட்டமைப்பை திட்டமிட்ட முறையில் துண்டாடியமையானது, குறைந்தபட்சம் தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டது எனும் வகையிலேயே ஆறுதலடையக்கூடியதாக உள்ளது. அதேவேளை சமகாலத்தில் காலிமுகத்திடல் போராட்டம் பெருந்தேசியவாத எண்ணங்களை முழுமையாக களையாவிடினும், அதில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் தமிழர் தரப்பால் நுணுக்கமாக அவதானிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அதனைவிடுத்து ராஜபக்ஷ சந்ததிக்கு எதிரான குரல் என்ற அடிப்படையில் தமிழ்த்தரப்பு காலிமுகத்திடலில் சங்கமிக்க முயல்வார்களாயின் அது இன்னுமொரு 1956ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்ட அனுபவத்தையே ஏற்படுத்தக்கூடியதாகும். அரசாங்க பிரதிநிதிகளின் அண்மைய உரையாடல்கள் வன்முறையூடாகவாயினும் போராட்டத்தை முடக்க துணிவதையே வெளிப்படுத்துகிறது. இதனையே ஏப்ரல்-19 ரம்புக்கண விவகாரமும் உறுதி செய்கின்றது. இந்நிலையில் தமிழர்களின் நுழைவு இதனை மேலும் உத்வேகப்படுத்தக்கூடியதுடன், தமிழர்கள் பலிக்கடாவாக்கப்படுவார்கள் என்பதே கடந்த கால அரசியல் அனுபவத்தின் பின்னான எதிர்வுகூறலாக உள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-