தமிழகமும் ஈழத்தமிர்களிடமிருந்து விலகிச் செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி மாறுபட்ட வடிவத்தில் பரிணமித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஒரு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து, எரிவாயு, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பசியின் அளவுகள் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகள் இலங்கையின் நிதிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், நட்பு நாடுகள் எதிர்பார்த்த ஒத்துழைப்பினை வழங்கவும் முன்வரவில்லை. இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மட்டுமே உதவ முன்வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. இந்தியா மத்திய அரசும், தமிழக அரசுமே இலங்கையுடனான நட்பை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக அரசு இலங்கை அரசுடன் வளர்த்து கொள்ளும் உறவு ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் அபாயச்சூழலை அடையாளப்படுத்துகிறது என்ற அச்சம் ஈழத்தமிழ் பரப்பில் உரையாடப்படுகின்றது. இக்கட்டுரை ஈழத்தமிழருடனான தமிழக அரசின் உறவின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர், இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. தமிழக அரசும் உதவிகளை அனுப்பி கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா அரசாங்கத்தின் எரிசக்தித் துறைக்கு 500அமெரிக்க டொலர் கடன் மற்றும் 200அமெரிக்க டொலர் வரிக் கடன் வழங்கியுள்ளது. இந்தியா மற்றொரு 500அமெரிக்க டொலர் கடன் வரியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட 'Tan Binh-99' பொது சரக்குக் கப்பலில் 9,000தொன் அரிசி, 200தொன் பால் மா மற்றும் 24தொன் அத்தியாவசிய மருந்துகளுடன் மே-19அன்று காலை 8.28மணிக்கு இலங்கைக்கான தமிழக அரசின் உதவி சென்னையில் இருந்து புறப்பட்டது. வளரும் நாட்டில் உள்ள ஒரு மாநிலம் மற்றொரு நாட்டிற்கு அதன் உதவியை விரிவுபடுத்தியது. இலங்கைக்கான தமிழக அரசின் உதவி தொடர்பில் மே-15அன்று ANI செய்திச்சேவையில் கருத்துரைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தற்போது, முதல் தவணையாக 8கோடி இந்திய மதிப்பிலான மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும். இந்த மருந்துகள் மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்காக அவர்கள் சிங்களவர் அல்லது தமிழர்கள் என்ற வேறுபாடின்றி அனுப்பப்படுகின்றன' என்று கூறினார். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுகளுக்குமிடையிலான உறவுகள் மற்றும் நெருங்கிய நட்புறவின் வலிமையை இந்திய அரசுகளிடமிருந்து இலங்கைக்கு வரவேற்கும் இந்த மூலோபாய மனிதாபிமான நடவடிக்கைகள் சித்தரிக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக இந்திய-இலங்கை உறவுகள் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. எனினும், தற்போதைய எரிபொருள், அத்தியாவசிய உணவுகள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்வதில் இந்தியாவின் தாராளமான உதவிகள் மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க இலங்கைக்கு நிதி மறுசீரமைப்பு வசதிகள், இந்தியா இலங்கையின் நம்பகமான நண்பன் என்பதையே நினைவூட்டுகிறது.
இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையிலான உறவு, ஈழத்தமிழர்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினை போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தமிழக அரசின் இலங்கைக்கான உதவி, ஈழத்தமிழ் அரசியலில் அதிருப்தியையும், ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் பலவீனமான நகர்வுகளையுமே வெளிப்படுத்துகின்றது. தமிழக அரசின் இலங்கைக்கான உதவியை செய்தியிட்ட இந்து நாளிதழ் குழுமத்தின் ஷகுசழவெடுiநெ' சஞ்சிகையில், 'தீவு தேசத்தின் பொருளாதார சீரழிவைத் தொடர்ந்து மக்கள் படும் துயரங்களைக் கருத்தில் கொண்டு, அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் வடிவில் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்க தமிழ்நாடு முடிவு செய்தது. கடந்த காலங்களில் இலங்கையில் தனித் தமிழ் நாடு கோரிய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இது இரு பிராந்திய மக்களிடையே மேம்பட்ட தொடர்புக்கு களம் அமைக்கிறது.' என குறிப்பிட்டுள்ளது. இங்கு பிராந்திய மக்களிடையே மேம்பட்ட தொடர்பு என்பதில் தமிழகத்துக்கும் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவே எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக, தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்படும் தமிழகத்துக்கும் ஈழத்தமிழருக்குமிடையிலான உறவு நெருக்குவாரத்துக்குள் செல்லும் களமே உருவாகியுள்ளது. இவ்உறவு மாற்ற போக்கை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
முதலாவது, 1987ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் பூமாலை தமிழகத்துக்கும் ஈழத்தமிழருக்குமான உறவின் பலத்தையே அடையாளப்படுத்துவதாகும். 'வடக்கில் பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு உணவளிக்க வேண்டும்' என்று கூறி 1987, ஜூன்-4ஆம் திகதி இந்தியா யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலவந்தமாக விமானத்தில் நுழைந்து உணவுப்பொதியை வீசியது. இந்திய அரசின் செயற்பாடு என்பது, தமிழகத்தின் நெருக்குவாரத்தால் உருவாக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக அக்காலப்பகுதியல் தமிழக அரசிலும் ஈழத்தமிழ் ஆயுதப்போராட்டத்தின் மீது அதிக கரிசணையை வெளிப்படுத்திய எம்.ஜி.ஆரே தமிழக முதல்வராக இருந்தார். அத்துடன், இலங்கை அரசை கண்டித்து தமிழகத்தில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், அரசியல் கட்சித்தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசின் நெருக்குதல் ஆகிய எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் வகையிலே இந்திய மத்திய அரசு ஆபரேஷன் பூமாலையை முன்னகர்த்தியிருந்தது. ஆபரேஷன் பூமாலையின் ஆரம்ப நகர்வுகளிள் இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் தமிழகமே நேரடியாக மேற்கொண்டிருந்தது. 38தொன் நிவாரணப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் 19 மீன்பிடிப்படகுகள் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையை நோக்கி புறப்பட்டன. இந்த மீன்பிடிப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் பாக்குநீரிணை கடல் எல்லையில் தடுத்து நிறுத்தி, இந்தியக் கடற்பரப்பிற்குத் திரும்பும்படி அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்தே அடுத்த நாள், பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலிருந்து ஐந்து விமானங்களில் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்து பராசூட் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப்;பொருட்களை இறக்கியது. இதன்மூலம் தெற்காசியாவில் இந்தியாவின் மேலாட்சியையும் தான் ஒரு வல்லரசு என்பதையும் இந்தியா நிரூபிப்பதாக தென்னிலங்கை தரப்பு கண்டனங்கள் தெரிவித்தன. மாறாக, இந்தியாவின் நடவடிக்கையை மனிதாபிமான நடவடிக்கையாக தமிழ்த்தரப்பு நன்றி தெரிவித்திருந்தது. இலங்கை அரசுக்கும் இந்திய அரசுகளுக்கும் இடையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பகைமை மற்றும் அவநம்பிக்கைக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பிணைப்பு முற்றிலும் மாறுபட்டது.
இரண்டாவது, 80களில் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் இலங்கைக்குள் மாத்திரம் காணப்படவில்லை. அது தமிழகத்திலும் வியாபித்திருந்தது. குறிப்பாக ஆயுதப்போராட்டத்திற்கான பயிற்சி களங்கள் பல தமிழகத்தில் காணப்பட்டன. அத்துடன் ஈழத்தமிழர் அரசியல் விவகாரத்துடன் தொடர்புறும் வகையில் தமிழகத்தில் ஆட்சிக்கவிழ்ப்புகளும் இடம்பெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஈழத்தமிழ் போராளிகள் குழுவிற்கு நான்கு கோடி ரூபா திரட்டி கொடுத்தார். அதேபோல் 1990ஆம் ஆண்டு ஈழத்தமிழ் விடுதலை போராளி பத்மநாபா படுகொலை தி.மு.க ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்தததுடன் ஆட்சி கலைப்புக்கு வழிகோலியது. இவ்வகையில் ஈழத்தமிழர் விவகாரம் 80கள், 90களில் தமிழக அரசியலில் எக்கட்சி ஆட்சிப்பீடமேறினாலும் முதன்மையான அரசியலாக காணப்பட்டது.
மூன்றாவது, 2009களின் பின்னரும் தமிழக மக்களின் எழுச்சிகள் தமிழக அரசை ஈழத்தமிழர் நலன் சார்ந்தே இலங்கை அரசுடன் தொடர்புகளை பேண நிர்ப்பந்தித்துள்ளது. அதாவது, 2009களுக்கு பின்னர் தென்னிலங்கையுடனான தமிழக உறவுகள் முற்றாக நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னால் மக்கள் கிளர்ச்சிகளே காரணமாகியது. தமிழ் தேசியவாத குழுக்கள் மற்றும் விளிம்புநிலை கூறுகள் மாநிலத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு வசதிகளில் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கு எதிராக மாநிலத்தில் கிளர்ந்தெழுந்தது மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கின் சென்னை உரிமையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. மக்கள் எதிர்ப்புக்கு செவிசாய்த்து தமிழக அரசும் தமிழகத்துடன் தென்னிலங்கை தொடர்புறும் விடயங்களை நிராகரித்தே வந்தன. பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசு அதிகாரிகளும் தமிழகத்திற்குள் நுழையவோ அல்லது சென்னை விமான நிலையம் வழியாகச் செல்லவோ முடியாது என்று இலங்கை அரசு தனது தரப்பில் நிபந்தனை விதித்தது.
தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் வெளிப்படுத்திய உறவை பேணும் செயல்முறையை நெறிப்படுத்த ஈழத்தமிழரசியல் தரப்பினர் தவறிழைத்துள்ளார்கள் என்பதையே களநிலவரங்கள் உறுதி செய்கின்றது. குறிப்பாக, ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல்களுக்கு மேற்கை நாடிச்செல்லும் ஈழத்தமிழரசியல் தரப்பு தொப்புள்கொடி உறவான தமிழகத்துடன் ஆரோக்கியமான நகர்வுகளை கட்டமைக்க தவறியுள்ளார்கள். தமிழக அரசியல் கட்சிகளின் மோதலுக்குள்ளேயே ஈழத்தமிழரசியலையும் பிணைத்துள்ளார்கள். இதனூடாக தமிழக மக்களிடமிருந்து ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற கரிசணையிலும் தளர்வுக்போக்கொன்று உருவாகுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்கள் மத்தியில் ஈழத்தமிழர் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாக்கம் பெறுகின்றது. அதாவது, 2009ஆம் ஆண்டு இனவழிப்பின் போது திராவிட முன்னேற்ற கழகமே தமிழக ஆட்சியிலிருந்தது என்ற அடிப்படையில், ஈழத்தமிழர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீது காட்டும் எதிர்வினை ஈழத்தமிழருக்கான ஆதரவுத்தளத்தையே தமிழகத்தில் சிதைக்கிறது.
மாறாக, அரச கட்டமைப்புடைய இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு, தற்போது தமிழ் நாட்டையும் புதுடில்லியின் நிலைப்பாட்டோடு இலகுவாக இணைத்துவிடும் அரசியல் வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடான இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவின் சந்திப்பு. கடந்த ஜூன்-04அன்று தமிழக முதல்வருடனான சந்திப்பு தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்ட மிலிந்த மொறகொட 'முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாகவும், தமிழ்நாடு இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும்' எனக் குறிப்பிட்டுள்ளார். மிலிந்த மொறகொடவுடனான சந்திப்பில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வு தொரடர்பாக தமிழக முதல்வரும் எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் பெருவாரியாக ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் நெருக்குவாரத்துக்கான பதில்வினையாகவே மத்திய அரசு செயலாற்றி வந்துள்ளது. அதன் பின்னணியில் தமிழக அரசின் பலமும் தங்கியுள்ளது. தற்போது மத்தியில் பாஜக பலமான அரசாக காணப்படுவது போலவே தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் பலமான அரசையே உருவாக்கியுள்ளது. இந்திய பிரதமரின் தமிழக விஜயத்தின் போது, இந்திய பிரதமரின் மேடையிலேயே தமிழகத்துக்கும் மத்திய அரசுக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளை தமிழக முதல்வர் வெளிப்படையாக உரையாடியமையும் அதனையே உறுதி செய்கின்றது. எனவே, இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலினுள் ஈழத்தமிழர் விவகாரத்தை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் தமிழகத்தின் ஆதரவும் தவிர்க்க முடியாததாகவே காணப்படுகிறது. பிராந்தியத்தில் பண்பாடு, மொழி பிணைப்பை கொண்ட அதிகார சக்தியை தவிர்த்து மேற்கிடம் மாத்திரம் சரணாகதி அடைவதில் பலன்களில் மட்டுப்பாடே காணப்படுகின்றது. கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் வடக்கிற்கு விஜயம் செய்த போது, பெரும் சலசலப்பு உருவானமை, இந்தியாவுடன் ஒரு தூய புவிசார் அரசியல் குலுக்கலையே வெளிப்படுத்துகிறது. இது, இந்தியா-இலஙகை உறவில் ஈழத்தமிழர் விவகாரம் இன்னும் வீரியமாகவே உள்ளமையையே வெளிப்படுத்தியது. அதனை பலப்படுத்த வேண்டியது ஈழத்தமிழரசியல் வியூகத்தில் தங்கியுள்ளது. மாறாக தொடர்ந்து இந்திய தொடர்பில் ஈழத்தமிழரசியல் தரப்பு கரிசணையற்று இருப்பார்களாயின், ஈழத்தமிழர் விவகாரத்தில் கரிசணையற்ற டெல்லியின் கொள்கைக்கு உரமூட்டுவதாகவே தமிழகத்தின் பயணமும் நீளக்கூடியதாக காணப்படும்.
Comments
Post a Comment