மேற்காசிய நாடுகளால் அரவணைக்கப்படும் இஸ்லாமிய சமூகங்களும் நிர்கதியாகும் ஈழத்தமிழரும்!

இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளனர். இந்நெருக்கடியை சீர்செய்ய இலங்கை தனது பிராந்திய மற்றும் சர்வதேச நட்பு நாடுகளிடம் உதவியை கோரி வருகின்றது. மகிந்த ராஜபக்ஷh பிரதமர் பதவி விலகிய பின் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மாத்திரம் கொண்டிருந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டமைக்கு முன்வைக்கப்பட்ட பிரச்சாரமும் சர்வதேச ரீதியாக ரணில் விக்கிரமசிங்க உதவிகளை பெறக்கூடியவர் என்பதாகவே அமைந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிய பின்னர் பொருட்களுக்கான மக்களின் வரிசைகளே அதிகரித்துள்ளது. முன்னர் வீதிகளில் வாகனங்கள் செல்வதாலேயே போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. தற்போது வாகனங்கள் எரிபொருளுக்காக வீதியின் இருமருங்கிலும் வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல்கள் உருவாகி உள்ளது. பிரதமர் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை முன்வைக்காது யோசியக்காரன் போன்று அதிகரிக்கும் நெருக்கடிகளை ஆருடம் கூறுபவராகவே காணப்படுகின்றார் என்ற விமர்சனப்பார்வையே பொதுவெளியில் காணப்படுகின்றது. இக்கட்டுரை அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடி காலப்பகுதியிலும் மத்திய கிழக்கு நர்டுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்ய முன்வராமைக்கான காரணங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் வாரங்களில் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை சந்தித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சாத்தியமான அனைத்து உதவிகளையும் நாடினார். அதனை தனது டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டிருந்தார். 'இன்று காலை மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதில் அவர்களின் உதவியை நான் கோரினேன். அதே நேரத்தில் இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமையைப் பற்றி அவர்களுக்கு விளக்கி, நேரான(Positive) பதில்களுக்கு அவர்களைப் பாராட்டுகிறேன்.' என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் மோசமான பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் பிராந்திய அரசான இந்தியாவின் உதவியே  இலங்கைக்கு பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலில் கொள்கைக்கு'(Neighborhood First Policy) இணங்க, இலங்கை அரசாங்கத்துக்கு தற்போதைய சிரமங்களை சமாளிக்க உதவுவதற்காக இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதரவை புதுடில்லி நீட்டித்துள்ளது. சீனாவின் மொத்தம் 51 பில்லியன் டாலர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்தத் தவறிய திவாலானதாக அறிவித்த இலங்கைக்கு உதவ, வரிக் கடன் மற்றும் பிற முறைகளில் இந்தியா உதவிகளை விரைந்து செய்துள்ளது. சீனா, கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை மற்றும் கொழும்புக்கான 2.5 பில்லியன் டாலர் கடன் வசதியை பரிசீலிக்க அதன் முந்தைய அறிவிப்பு குறித்து மௌனம் சாதித்தது. எனினும், அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 500மில்லியன் RAM (சுமார் 74மில்லியன் அமெரிக்க டொலர்) உதவியை சீனா அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது தொடர்பான உரையாடலுக்கு இலங்கைக்கான சீன உயர் ஸ்தானிகரும் இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகரும் சந்திப்பொன்றையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்து, அதன் நாணய மதிப்பிழப்பையும், பணவீக்கத்தையும் ஏற்படுத்தியதையடுத்து, இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் எரிபொருள்சார்ந்து கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் எரிபொருளை மையப்படுத்தியே மூளுகின்றது. இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான உதவியையும் எரிபொருள் உற்பத்தியற்ற இந்தியாவே மேற்கொள்கிறது. எரிபொருள் இறக்குமதி தேவைக்காக இலங்கைக்கு 500மில்லியன் டாலர் கூடுதல் கடன் வரியை இந்தியா நீட்டித்துள்ளது. இது இலங்கை அரசாங்கத்தின் தற்காலிக உயிர்நாடியை வழங்கியது. இந்தியா மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தனது கொள்வனவிலிருந்து 4,00,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருள்களை இலங்கைக்கு வழங்கி இருந்தது. 

எரிபொருள் உற்பத்தி நாடுகளிலிருந்து எரிபொருளளை கொள்வனவு செய்யும் இந்தியா, எரிபொருள் சார்ந்து இலங்கைக்கு உதவியை வழங்குகையில் எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்ளும் வளைகுடா நாடுகள் மௌனமாய் இருப்பது வளைகுடா நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் காணப்படும் விரிசலை வெளிப்படுத்தி நிற்கிறது. மத்திய கிழக்கு மற்றும் இலங்கைக்குமிடையிலான உறவுப்போக்கை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.

முதலாவது, மத்திய கிழக்குடனான இலங்கைக்குமான உறவுகளை 13 நூற்றாண்டுகளுக்கும் மேலாக அறியலாம். அரேபிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்துடன் மேற்கு மற்றும் கிழக்கை இணைக்கத் தொடங்கினர். ஆகஸ்ட் 1968இல் தற்போது செயலிழந்த ஆங்கில நாளிதழான SUN-இல் ஒரு கட்டுரையில், முந்தைய பிரபல தமிழ் அரசியல்வாதி சி.சுந்தரலிங்கம், 'அரேபிய வணிகர்கள் 2800 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தீவுக்கு விஜயம் செய்தனர்' என்று கூறினார். 1976இல் இலங்கை அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்தியபோது மத்தியகிழக்குக்கும் இலங்கைக்குமிடையிலான இறுக்கமான பிணைப்பு வெளிப்பட்டது. இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எகிப்து ஜனாதிபதி கமல் அப்தெல் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதி ஜோசப் டிட்டோ ஆகியோர அணிசேரா இயக்கத்தின் நான்கு முக்கிய தூண்களாக கருதப்பட்டனர். 1976 ஆகஸ்ட் 16-19 அன்று கொழும்பில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் உச்சி மாநாட்டில் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைனைத் தவிர அனைத்து அரபுத் தலைவர்களும் கலந்துகொண்டமை மத்திய கிழக்குக்கும் இலங்கைக்குமிடையிலே வளர்ந்து வரும் உறவுகளை பிரதிபலித்தன. இலங்கையின் முதலாவது வெளியுறவு அமைச்சராக ஏ.சி.எஸ் ஹமீத் எனும் இஸ்லாமியரை 1978 ஆண்டு ஜே.ஆர்.ஜெயவாட்த்தனா அரசாங்கம் நியமித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இரண்டாவது, கடந்த காலங்களில் எரிபொருள் நெருக்கடிகளின் போது அரசாங்க தலைவர்களின் தொலைபேசி அழைப்புக்களூடாகவே நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. 1980களின் இறுதியில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில், நாடு எண்ணெய் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொள்ளவிருந்தது. அச்சமயத்தில் பிரேமதாச ஈராக் தூதுவர் அப்தோ அலி டேரியை அலரிமாளிகைக்கு வரவழைத்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினார். அடுத்த நாள் ஈராக் தேசிய எண்ணெய் நிறுவனத்(INCO) தலைவரிடம் பேசுவதாக தூதர் தெரிவித்தார். எனினும், பிரேமதாச INCO தலைவரின் இல்ல தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்துப் பேசுவதற்காகத் தூதரிடம் போனைக் கொடுத்தார். தூதர் INCO தலைவருடன் பேசினார். அவர் இலங்கையர்கள் எங்கள் சகோதரர்கள் என்றும், மறுநாள் பாஸ்ரா துறைமுகத்திலிருந்து புறப்படத் தயாராக உள்ள இரண்டு கப்பல் எண்ணெய்கள் கொழும்புக்குத் திருப்பிவிடப்படும் என்றும் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு மேலும் சில கப்பல்கள் எண்ணெய் வந்தது. இச்செயல் அரேபியர்கள் இலங்கை மீது கொண்டிருந்த அரவணைப்பும் மரியாதையும் வெளிப்படுத்தியது.

எனினும் இன்று இலங்கை அரசாங்கம் எரிபொருள் தேவைக்காக நேரடியாகவும் வேறு நட்பு நாடுகளூடாகவும் அணுகிய போதும், மத்திய கிழக்கு நாடுகள் சாதகமான சமிக்ஞைகள் எதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. மே-24அன்று சுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்ற நசீர் அஹமட், மத்திய கிழக்கு விவகாரங்களை மேற்பார்வையிடும் அரேப் நியூஸிடம், 'சில பெரிய மூலோபாய முதலீட்டை ஈர்ப்பது மற்றும் சவூதி அரேபியா மற்றும் வளைகுடாவில் உள்ள பிற நாடுகளிடம் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல கடனைக் கோருவதுதான் தனது உடனடி முன்னுரிமை' என்று கூறினார். எனினும் மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து இலங்கை அரசாங்கத்தால் அனுகூலங்களை பெறமுடியவில்லை. இதனை ஆழமாக நோக்குதல் வேண்டும்.

ஒன்று, இலங்கை அரசாங்கத்தின் இனவாத அரசியல், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான குரோதம் மற்றும் குறுகிய நோக்குடைய கொள்கைகள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகள் கடந்த தசாப்த காலப்பகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கையுடனான மத்திய கிழக்கு நாடுகளின் உறவில் மதமும் அதீத தாக்கம் செலுத்துவதாக காணப்பட்டது. உதாரணமாக, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் முதல் மனிதராக கருதப்படும் ஆதாம், இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலையில் இறங்கியதாக அரேபியர்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. எனினும் 2009ஆம் தமிழர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்த பின் சிங்கள பேரினவாதத்தின் தாக்குதல் முஸ்லீம்களுக்கு எதிராக திசை திரும்பியது. மசூதிகள் இழிவுபடுத்தப்பட்டது. சொத்துக்கள் எரிக்கப்பட்டதோடு, இஸ்லாத்தை சிதைத்து முஸ்லிம்களை பேய்த்தனமாக சித்தரிக்கும் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட  பிரச்சாரம் தொடங்கப்பட்டது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு முஸ்லீம்கள் திட்டமிடப்பட்டு ஒதுக்கப்படும் நிலைமை விரைவு பெற்றது. குறிப்பாக பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனூடாக முஸ்லீம்களின் விசேட மரபுச்சட்டங்களை நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்திருந்துது. இவை அரபு அரசாங்கங்களிடையே இலங்கை தொடர்பான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு, உலகளாவிய இஸ்லாமிய வெறுப்பு சக்திகளுடன் இலங்கை அரசாங்கம் உறவை வளர்த்துள்ளது என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளிடம் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் நுழைய முயன்ற இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான தீவிர விரோதப் போக்கிற்கு பெயர் பெற்ற இஸ்ரேலுக்கும், இந்தியாவின் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் முன்னணி பாரதீய ஜனதா கட்சிக்கும் தற்போதைய அரசாங்கம் நாட்டைத் திறந்துவிட்டுள்ளதாக முஸ்லீம் அரசியல் விமர்சகர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம் இதனோடு தொடர்புறும் வகையிலே சமகாலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை பிரச்சாரப்படுத்துகின்றார்கள்.

மூன்று, அரசாங்கமும் மத்திய கிழக்கு நாடுகளுடன் சரியான வகையில் தொடர்புற தவறியுள்ளனர். இலங்கையின் மனிதாபிமான நெருக்கடியை சவூதி அரசாங்கத்துடனும் அல்லது வேறு எந்த எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகளுடனும் மனிதாபிமான அடிப்படையில் அல்லது கடன் அடிப்படையில் அத்தியாவசிய எரிபொருளைப் பெறுவதற்கான உதவிக்காக, பிரதமர் நேரடியாகப் பேசவில்லை. மேலும், 2021 ஆம் ஆண்டு வரை, நாட்டின் அதிக அந்நியச் செலாவணி வருமானத்தில் 95மூஇ அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வந்தது. தரமான எரிபொருள் மற்றும் எரிவாயுவும் முக்கியமாக மத்திய கிழக்கில் இருந்தே வருகின்றன. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டன.

நான்கு, நிர்வாகத்துறையின் பலவீனமான இயல்பும் மத்தியகிழக்கு மற்றும் இலங்கை உறவை பலவீனப்படுத்துகிறது. புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது, சவுதி அரேபியாவின் பெற்றோலியம் மற்றும் கனிமங்களின் கிங் ஃபஹத் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். பெற்றோலியம் மற்றும் கனிம வளங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பெரும்பாலான வளைகுடா நாடுகளில் பெற்றோலியத் துறையில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனினும்  நசீர் அகமதுவுக்கு எரிபொருளுடன் தொடர்புடைய அமைச்சை வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழல் அமைச்சை வழங்கியமை அமைச்சரவை தெரிவின் பலவீனத்தையே உறுதி செய்கின்றது. அத்துடன் அமைச்சர் நசீர் அஹமட் அரபுமொழி தெரிந்த அமைச்சராவார். அவரை எரிபொருள் தேவை சார்ந்த உரையாடலுக்கு வளைகுடா நாடுகளுக்கு அனுப்பாமை தொடர்பிலும் அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

எனவே, நீண்ட வரலாற்றை கொண்ட மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவு இலங்கை அரசாங்கத்தில் வளர்ந்து வரும் இனவாத செயற்பாடுகளாலும் பலவீனமான நிர்வாகச் செயற்பாடுகளாலும் சிதைக்கப்பட்டுள்தன் விளைவாகவே சமகால எரிபொருள் நெருக்கடி அவதானிக்கப்படுகின்றது. முஸ்லீம்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கட்டமைத்துள்ள இனவாத செயற்பாடுகளை நாடுகடந்த அளவில் முஸ்லீம் அரசுகளில் கொண்டு சேர்த்தமையும், சமகாலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு அதுசார்ந்த நெருக்கடியை முஸ்லீம் நாடுகள் வழங்குவதிலும் முஸ்லீம்களின் நாடுகடந்த வாத செயற்பாடே பிரதான காரணமாகின்றது. இவற்றிலிருந்து ஈழத்தமிழர்களும் பாடங்கற்க வேண்டியவர்களாக உள்ளனர். ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தில் நீண்ட ஆதரவை வழங்கிய இந்தியாவும் அதன் மாநிலமான தமிழகமுமே இன்று இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளை மேற்கொள்கின்றது. எனினும் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்;துக்கு தீர்வு சார்ந்து எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்க தவறியுள்ளார்கள். இது ஈழத்தமிழரசியல் சரியாக இந்தியாவுடனும் தமிழகத்துடனும் தொடர்புறாமையே வெளிப்படுத்துகின்றது. ஈழத்தமிழரசியல் தம்மை புதுப்பிப்பதுடன் புதிய சிந்தனை பாய்ச்சல்களையும் செய்ய வேண்டியுள்ளதையே காலம் உணர்த்துகிறது.


-ஐ.வி.மகாசேனன்-  

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-