இந்தியாவின் மூலோபாய சுற்றிவளைப்புக்குள் இலங்கையின் பௌத்த அடையாளம்? -ஐ.வி.மகாசேனன்+

மதச்சார்பின்மை பற்றிய உரையாடல்கள் நவீன அரசியலில் ஒரு பிரதான முற்போக்கான விடயமாக அவதானிக்கப்படுகின்ற போதிலும், அரசுகள் நாகரீக மோதலுக்குள் மற்றும் நாகரீக பிணைப்புக்களுக்குள்ளேயே சர்வதேச உறவுகளை வடிவமைத்து வருகின்றனர். இவ்உலக ஒழுங்கின் தொடர்ச்சி தன்மையிலேயே இலங்கையும் காணப்படுகின்றது. அரசியல் பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, போராட்டங்களை முன்னெடுக்கும் இளையோர் சில முற்போக்கான விடயங்களை வெளிப்படுத்துகின்றனர். எனினும் இலங்கை அரசாங்கம், கடும் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியிலும், தனது மரபுரீதியான பௌத்த இனவாதத்தை முதன்மைப்படுத்திய அரசியலையே தொடர்ச்சியாக பேணி வருகின்றது. இலங்கையின் சமகால அரசியல் நிலவரங்களும் அதனையே வெளிப்படுத்தி வருகின்றது. அத்துடன் இலங்கையின் பிராந்திய தேசமாகிய இந்தியாவும் இலங்கையின் பௌத்த நாகரீகத்தை மையப்படுத்தி இலங்கையுடனான உறவை சீர்செய்யும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்ட முனைகிறார்கள். இக்கட்டுரை அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இலங்கையின் பௌத்த தேசியவாதத்தை மையப்படுத்தி இடம்பெறும் உள்ளக மற்றும் வெளியக அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமகாலத்தில் கடும் அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷhவின் இராஜினாமாவை தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்றார். அவர் அதிகம் ஆருடங்களை முன்வைக்கிறாரே அன்றி, அரசியல் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கான ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுக்க தவறியுள்ளார். அத்துடன் இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு அடிப்படையான சிங்கள பௌத்த மேலாதிக்கத்தால் எழுந்த தேசிய இனப்பிரச்சினையை சீர்செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வித உரையாடலையுமே ஆரம்பிக்க தயாரில்லலாத நிலையையே வெளிப்படுத்தி வருகின்றார்கள். இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினையை தனித்த பொருளாதார பிரச்சினையாகவே பிரச்சாரப்படுத்த முயற்சிக்கின்றார்கள். இதனை புதிய அரசாங்கத்தின் பின்னர் இடம்பெறும் பௌத்தத்தை மையப்படுத்திய செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது.

முதலாவது, சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான 'ஒரு நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh இரண்டாவது முறையாக ஜூன்-01அன்று மேலும் மூன்று வாரங்களுக்கு நீடித்து வர்த்தகமானியை வெளியிட்டிருந்தார். முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும் பிற பிராந்தியச் சட்டங்கள் உட்பட ஏனைய அனைத்து தனிப்பட்ட சட்டங்களையும் நீக்கி அனைத்து இலங்கையர்களுக்கும் 'ஒரே சட்டம்' என்ற திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதி 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் பிற்பகுதியில் ஒரே நாடு ஒரே சட்டம் பணிக்குழுவை வர்த்தமானியில் வெளியிட்டார். பணிக்குழுவின் தலைவராக ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் ஆரம்பம் முதலே பல எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டது. 2012இல், ஞானசார தேரர் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிகங்களைப் புறக்கணிக்க பெரும்பான்மை சிங்களவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அலுத்கமவில் இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பொதுபலசேனா ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, சமூக ஊடக தளமான பேஸ்புக் அவரது கணக்கை முடக்கிய நிலையில், 2014ஆம் ஆண்டு, அமெரிக்கா விசாவை ரத்து செய்தது. மேலும் பொதுபல சேனா, சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் மேலாதிக்கம் என்று அழைக்கப்படுவதை ஊக்குவிக்கவும், மத மற்றும் இன சிறுபான்மையினரை இழிவுபடுத்தவும் சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக, சர்வதேச மத சுதந்திரம் குறித்த 2021 அறிக்கையினை சுட்டிக்காட்டி அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில், தேசிய இனங்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதத்தை முன்வைக்கும் தேரர் தலைமையிலான தேசிய இனங்களின் தனியுரிமையை நிராகரிக்கும் செயலணியின் காலநீடிப்பு அரசாங்கத்தின் தொடர்ச்சியான பௌத்த பேரினவாத சிந்தனையையே உறுதி செய்கிறது. 

இரண்டாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் ஜூன் இரண்டாம் வாரத்தில் புத்தரின் சிலையை பலவந்தமாக வைப்பதற்கு பௌத்த பேரினவாதம் முற்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் வாழும் இந்துத் தமிழர்களுக்கு எதிரான போர்முனையை சிங்கள-பௌத்த ஜனாதிபதி செயலணி மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் தலைமையில் இலங்கை அரசாங்கம் நெறிப்படுத்தி வருகின்றது. தமிழர்களுக்கு புனிதமானதாக கருதப்படும் ஏராளமான இந்து கோவில்கள் மற்றும் இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. அவ்வாறானதொரு பின்னணியில் தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான அத்தி ஐயனார் ஆலயம் அண்மைய வருடங்களாக சிங்கள பௌத்த பிக்குகளின் தீவிர நில அபகரிப்பு முயற்சிகளால் குறிவைக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் முயற்சிகள் உள்ளூர் மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. இது 2018இல் நீதிமன்ற உத்தரவுக்கு வழிவகுத்தது. தளத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. மேலும், பௌத்த பிக்குகளை ஆய்வு செய்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தனது அதிகாரத்தை துஷ;பிரயோகம் செய்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்க ஆதரவுடன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்கான முயற்சிகள் தொடர்ந்தன. ஜனவரி 2021இல், இலங்கையின் தேசிய மரபுரிமைக்கான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா, இராணுவ வீரர்கள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் குருந்தூர்மலையில் ஒரு நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இதில் அத்தி ஐயனார் கோவில் இடத்தில் புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ;டை செய்யப்பட்டது. நீதிமன்றம் தடை விதித்த போதிலும். அதன்பிறகு, இலங்கை இராணுவமும், தொல்லியல் துறையும் உள்ளூர் தமிழர்களை மிரட்டி, அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்தது. இக்காலப்பகுதியில், குருந்தூர்மலையில் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் விகாரை அமைக்கப்பட்டு, புதிய புத்தர் சிலைக்கான பிரதிஷ;டை நிகழ்வு ஏற்பாடுகள் ஜூன்-11அன்று நடைபெற்றது. கபோக் கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலையை பிரதிஷ;டை செய்வதற்காக இலங்கை இராணுவத்தின் சிரேஷ;ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களும் வருகை தந்திருந்தார்கள். எனினும் உள்ளூர் மக்களின் தன்னார்வ போராட்டத்தினால் தற்காலிகமாக பிரதிஷ;டை நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக வெற்றியாக அவதானிக்க முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களின் இறைவழிபாடு அழிக்கப்பட்டு விகாரை பணிகள் பெருமளவில் நிறைவேறியுள்ளது. நீதிமன்ற அனுமதியை மீறியே விகாரை கட்டப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களிலும் நீதிமன்ற கட்டளைகள் மீறும் நிலையே எதிர்வுகூறப்படுகின்றது.  மேலும் குறித்த குருந்தூர் நெருக்கடி காலப்பகுதியில், 'கோதா கோ கம' போராட்டத்தை சேர்ந்த ஒரு தொகுதியினர் வடக்கு-கிழக்கு மக்களை அதில் இணைக்கும் செயற்பாட்டுக்கான கலந்துரையாடலுக்காக வடக்கிற்கு மூன்று நாள் விஜயமாக வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது, கோத்தபாய ராஜபக்ஷh ஜூன்-2020இல், 'கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய மேலாண்மைக்காக' ஜனாதிபதி செயலணியை நியமித்திருந்தார். நிறுவப்படுகையில் முழுக்க முழுக்க சிங்கள சபையை உள்ளடக்கிய இந்த பணிக்குழு, அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்றத்தை தொடரும் ஒரு வழிமுறையாக விமர்சிக்கப்பட்டது. சிங்கள-பௌத்த வரலாற்றுத் தலங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்காக, பனமுரே திலகவன்ஷh போன்ற பிற தேசிய இனங்கள் மீது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்களை முன்னெடுக்கும் துறவிகள் இதற்கு மேலும் ஆதரவு அளித்துள்ளனர். திலகவன்ஷh, திருகோணமலை, புல்மோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிங்களமயமாக்கல் முயற்சிகளுக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1940களிலிருந்து, கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு இனமும் 50 சதவீதம் பெரும்பான்மையாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'இது இலங்கையின் மிகவும் இனமத பன்மைத்துவ துண்டு' என்று அரசியல் விமர்சகர் திசரனி குணசேகர தனது பத்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பன்மைத்துவ சூழலை குழப்பும் வகையிலான பேரினவாத செயலணியும் தொடர்ச்சியாக தற்போதும் செயற்பாட்டிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த அரசாங்கம், அரசியல் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் கொள்கை விடயங்களில் முற்றிலும் திறமையற்றதாக இருந்தாலும், அரசியல் தந்திரோபாயங்களில் பௌத்த பேரினவாத மாயையை தக்கவைத்து பகுத்தறிவற்ற வெளித்தோற்ற அரசியலில் நுட்பமானவர்களான உள்ளது. பிராந்திய அரசும் இந்நுட்பத்துக்கூடாகவே இலங்கையுடனான உறவை கட்டமைக்க முனைவதை அவர்களின் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றது.

ஓன்று, இந்தியாவையும் இலங்கையையும் நாகரீகங்களின் இரட்டையர்களாக இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி முதன்மைப்படுத்துகிறது. 2020இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளின் முத்தொகுப்பில், இந்தியாவை ஒரு நாகரீக நாடு என்று விவரித்தார். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஸ்வராஜ்யா என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், 'மோடி இலங்கையை நாகரீக இரட்டையர்களில் ஒன்றாகவும், வெளிப்படையாக இளையதாகவும் குறிப்பிட்டார்' என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 'மோடியின் சிந்தனையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்குவது ஒரு நாகரிக கடமை ஆகும்' என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில், ஜூன்-14அன்று பொசன் போயா தினத்திற்கான வாழ்த்துச்செய்தியை சிங்கள மொழியிலேயே தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச்செய்தியில், 'அரஹத் மகிந்த இன்று போன்ற ஒரு பொசன் பௌர்ணமி நாளில் இந்தியாவில் இருந்து புத்த மதத்தை எடுத்துச் சென்றார். மேலும் இந்தியா தனது புத்த மதத்தை விரிவுபடுத்திய பல நாடுகளில் இலங்கை முதன்மையானது' என்று இந்திய உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தூதுவர் நினைவு கூர்ந்தார்.

எனவே, இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி சூழலிலும் இலங்கையின் அடையாளமாக சிங்கள-பௌத்த பேரினவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்நிலையில் இந்தியா தொடர்பில் இலங்கை பெரும்பான்மை மக்களிடம் உள்ள இந்திய எதிர்ப்பு மனேநிலையை (ஐனெழிhழடியை) மாற்றுவதற்கான காலமாக இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ள இந்திய முனைந்துள்ளது. அதற்கு நரேந்திர மோடி தனது நாகரீக திருப்பத்தினை முதன்மைப்படுத்துகின்றார். அவ்வகையில், இந்தியாவின் பௌத்த கடந்த காலத்தை உலகுக்குக் காட்சிப்படுத்தவும் முடிவு செய்தார். இவை இந்தியாவின் மறுவடிவமைக்கப்பட்ட புவி மூலோபாய சக்தி விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதில் பௌத்தமும் இலங்கையும் மையமாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன், தீவை சீனாவிலிருந்து விலக்கி, இந்தியாவின் புவிசார் மூலோபாய சுற்றுப்பாதைக்கு நெருக்கமாக இழுப்பதில் உள்ளது. எனவே, இந்த மூலோபாய முயற்சிக்கு ஒரு பௌத்த சட்டத்தை வழங்குவது, அதன் சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் இதயங்களையும் மனதையும் வெல்லும் நோக்கில் இலங்கைக்கு ஒரு தந்திரோபாய தூண்டுதலாகமே அமைகின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-