அவுஸ்ரேலியாவின் ஆட்சி மாற்றம் சீனாவுடனான உறவை புதுப்பிக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
2021-2022ஆம் ஆண்டுகளில் உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றாலும் ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவினாலும் அரசியல் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், ஜனநாயக தேர்தல்களும் ஒருங்கே அரங்கேறிக்கொண்டு தான் உள்ளது. சில நாடுகள் ஆட்சி மாற்றத்தை வரவேற்றுள்ளதுடன், சில நாடுகள் முன்னைய ஆட்சியை ஏற்று மீளவும் வாய்ப்பளிக்கும் சூழலினையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு சர்வதேச அரசியல் பின்னணியிலேயே, அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சி மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவை வலது பக்கம் தள்ளிய 'ஒரு புல்டோசர்' என்று தன்னை அழைத்த தற்போதைய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன், அவரது சவாலான போட்டியாளர் தொழிற்கட்சியின் அந்தோனி அல்பானீஸால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் ஏறக்குறைய ஒரு தசாப்தகால பழமைவாத தலைமைக்குப் பிறகு மோரிசனை முற்றிலுமாக நிராகரித்து, மிதவாதம் வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றியின் பின்னர் இந்தோ-பசுபிக் அரசியல் வெளியுறவிலும் மாற்றங்களுக்கான எதிர்வுகூலை சர்வதேச அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இக்கட்டுரை அல்பானீஸின் தேர்தல் வெற்றியின் பின்னர் அவுஸ்ரேலிய-சீன உறவின் தன்மையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த மே-21அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில், 'புரட்சியை அல்ல, புதுப்பித்தலை' என்ற பிரச்சாரத்துடன் மக்களிடம் வாக்குக்கோரிய அந்தோனி அல்பானீஸை அவுஸ்ரேலிய மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு தசாப்த பழமைவாத ஆட்சியை அந்தோனி அல்பானீஸ் மற்றும் அவுஸ்ரேலிய தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசாங்கத்துடன் மாற்றியது. இவ்அரசியல் மாற்றம் இந்தோ-பசுபிக் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போக்கே இரு பிரதான போட்டியாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இந்தோ-பசுபிக் அரசியலில் அவுஸ்ரேலியா போட்டியாளராக வரித்துக்கொண்ட சீனாவுடனான உறவில், அல்பானிஸ் மென்போக்கான நகர்வை மேற்கொள்வாரென்பதாகவே அவரது ஆரம்ப உரையாடல்கள் வெளிப்படுத்தி நிற்கிறது.
சீனா மற்றும் அவுஸ்ரேலியாவின் முட்கள் நிறைந்த இராஜதந்திர உறவு சமீபத்திய ஆண்டுகளில் வெளியுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. பெய்ஜிங்கும் கான்பெர்ராவும் பல பிரச்சினைகளில் மோதலுக்குப் பிறகு உறவுகள் விரைவான சரிவைச் சந்தித்தன. இதன் விளைவாக இராஜதந்திர முட்டுக்கட்டை மற்றும் வவை கழவ வயவ வர்த்தகப் போரை சேதப்படுத்தியது. கோவிட்-19இன் தோற்றம் பற்றிய விசாரணைக்கு கான்பெர்ராவின் அழைப்பு, ர்ரயறநiஐ தடை செய்வதற்கான முடிவு மற்றும் சீனாவின் அரசியல் தலையீடு குறித்த ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகள் ஆகியவை முக்கிய சர்ச்சைகளில் அடங்கும். மேலும், இந்தோ-பசுபிக் அரசியலில் அமெரிக்காவின் முகவராகவும் அவுஸ்ரேலியாவின் வடிவம் சீனாவை கொதிநிலைக்கு தள்ளியது. குவாட் கட்டமைப்பும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் பெறுவதற்கான அமெரிக்க-பிரிட்டன் கூட்டுடனான அவுஸ்ரேலியாவின் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வாகவே சர்வதேச அரசியலில் அவதானிக்கப்பட்டது. இதனை ருவுளு அவுஸ்ரேலியா-சீனா உறவுகள் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் லாரன்சன், 'அந்த இரண்டு முயற்சிகளும் அமெரிக்க-சீனா மூலோபாய போட்டியின் லென்ஸ் மூலம் அமைக்கப்பட்டன' என விபரித்துள்ளார்.
இப்பின்னணியில் கடந்த கால அரசாங்கத்தில் கட்டமைக்கப்பட்ட சீனா-அவுஸ்ரேலியா முரண்பாட்டு சூழலில், அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பதட்டங்களைத் தணிக்க முடியும் என்ற எச்சரிக்கையான நம்பிக்கையைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாற்றம் தொடர்பிலே கட்டியெழுப்பப்படும் நம்பிக்கைக்கான காரணங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
ஓன்று, அல்பனீஸின் முன்னோடியான ஸ்காட் மோரிசனின் கீழ், அவுஸ்ரேலியாவிற்கும் அதன் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவிற்கும் இடையிலான உறவுகள் குறைந்த வீழ்ச்சியை அடைந்தன. பத்து நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில், அவுஸ்ரேலியாவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து 1,000 மைல் தொலைவில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுக்கூட்டத்தில் சீனா ஒரு இராணுவ தளத்தை உருவாக்கலாம் என்ற அச்சத்தை எழுப்பி, சாலமன் தீவுகளுடன் சீனா ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவை நோக்கிய மோரிசனின் சொல்லாட்சிகள் பெருகிய முறையில் கடுமையாகியது. மேலும் அவரது பாதுகாப்பு மந்திரி பீட்டர் டட்டன் இந்த ஆண்டு 'போருக்குத் தயாராகுங்கள்' என்று அவுஸ்ரேலியர்களிடம் கூறியிருந்தார். ஆனால் அல்பானிஸ் சீனாவை எதிர்க்கும் தொனியை எடுத்துள்ளார். அத்துடன் டோக்கியோவில் ஒரு நாள் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட் என அழைக்கப்படுகிறது) உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட அல்பானீஸ், 2021இல் பெய்ஜிங்கின் இழிவான கோரிக்கைகளின் பட்டியலை 'முற்றிலும் பொருத்தமற்றது' என்று அழைத்தார். மேலும் உறவு முன்னேற ஆஸ்திரேலிய தயாரிப்புகள் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றார். அல்பானிஸின் நகர்வுகளை அவதானித்துள்ள முன்னாள் அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் ரூட், 'சீனாவுடன் இன்னும் நிலையான உறவை ஆஸ்திரேலியா எப்போதும் வரவேற்கும் என்று பிரதமர் அல்பானீஸ் சொல்வது முற்றிலும் சரியானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் சீனாவால் நிறுவப்பட்ட இந்த முன்நிபந்தனைகள் தொடர்ந்து இருக்கும் நிலையில் இருக்காது.' எனத்தெரிவித்துள்ளார். ஆக முன்னைய பிரதமர் ஸ்காட் மோரிசனின் சீனா தொடர்பான இறுக்கமான வெளியுறவுக்கொள்கையிலிருந்தானதொரு தளர்வை புதிய பிரதமர் அல்பனீஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டு, முன்னைய அவுஸ்ரேலிய அரசாங்கத்துடன் சீனாவிற்கு காணப்பட்ட நெருக்கடியான உறவினால் சீன அரசாங்கம் அவுஸ்ரேலிய அமைச்சர்களுடனான உறவை முடக்கி வைத்திருந்தது. எனினும் அவுஸ்ரேலியாவின் புதிய பிரதம மந்திரி அல்பனீஸிற்கு மே-23அன்று சீனப்பிரதமர் லீ கெகியாங் வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார். குறித்த வாழ்த்துச்செய்தியில், 'சீனத்தரப்பு, கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தைப் பார்க்கவும், பரஸ்பர மரியாதைக் கொள்கையை நிலைநாட்டவும் அவுஸ்ரேலியத் தரப்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார். மே-24அன்று, செய்தியாளர்களிடம் பேசிய அல்பானீஸ், 'சீனப் பிரதமரின் கடிதத்தை வரவேற்பதாகவும், அவுஸ்ரேலியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை விரும்புவதாக' தெரிவித்திருந்தார். மேலும், 'உலகம் முழுவதிலுமிருந்து வரும் அனைத்து வாழ்த்துக்களையும் நான் வரவேற்கிறேன். நான் அவுஸ்ரேலியாவுக்குத் திரும்பியதும் சரியான நேரத்தில் பதிலளிப்போம்' என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், 'மாறுவது அவுஸ்ரேலியா அல்ல, சீனா மாறிவிட்டது' என அவுஸ்ரேலிய புதிய பிரதமர் வலியுறுத்தி குறிப்பிட்டிருந்தார். கோதிநிலையான சமிக்ஞைகள் இருந்தபோதிலும், சீன ஆய்வாளர்கள் அவுஸ்ரேலியாவின் 'சீன எதிர்ப்புப் போர்' என்று பெய்ஜிங் விவரித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரண முன்னேற்றங்களை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.
மூன்று, அவுஸ்ரேலிய புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சீனாவுடனான வெளியுறவுக்கொள்கையில் எதிர்ப்பை பேணினாலும் முன்னைய வலதுசாரி அரசாங்கத்தின் அணுகுமுறையை தொடராது என்பதுவே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன், தொழிற்கட்சி சீனாவின் மீது மென்மையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். பேராசிரியர் லாரன்சன், மேம்படுத்தப்பட்ட பாதைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். அதாவது 'தொழிற்கட்சியின் பார்வையில், சில நேரங்களில் சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளை புறக்கணிக்கும் சீனாவின் மிகவும் உறுதியான வெளியுறவுக் கொள்கை நடத்தை பற்றிய கவலைகளை காணப்பட்டாலும், ஆத்திரமூட்டலில் இருந்து ஒரு மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கையை' வெளிப்படுத்தியிருந்தார். மேலும், 'இந்த சவாலை கையாள்வதற்கான தொழிலாளர் அணுகுமுறை மோரிசன் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு வேறுபட்டது. குறைவான வெடிகுண்டு பேச்சு, அதிக நடைமுறை நடவடிக்கை மற்றும் இராஜதந்திரம் போன்ற கடின சக்தி அல்லாத பதில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது' என்று பேராசிரியர் லாரன்சன் ABC செய்தி சேவைக்கு தெரிவித்தார். UNSW Canberrat-வின் மூத்த விரிவுரையாளரான பிச்சமன் யோபான்டாங், 'குறைவான ஆத்திரமூட்டும், மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சொல்லாட்சிகளில் மாற்றம் இருக்கும்' என்று ஒப்புக்கொண்டார்.
நான்கு, போட்டியற்ற உறவுகளில் பிராந்தியத்தில் கவனம் செலுத்தும் அரசியல் கொள்கையை புதிய அரசாங்கத்தின் உரைகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலாளர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற பென்னி வோங், தென்கிழக்கு ஆசியாவுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தனது விருப்பங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பசிபிக் பகுதிக்குச் செல்வதில் நேரத்தை வீணடிக்கவில்லை என்ற கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். 'எங்கள் பசிபிக் குடும்பத்துடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள' என பதவியேற்ற உடனேயே அவர் ட்விட்டரில் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். 'நாங்கள் ஒரு வலுவான பசிபிக் குடும்பத்தை உருவாக்க உதவ விரும்புகிறோம், அதனால்தான் நாங்கள் இன்னும் அதிகமாக செய்வோம். ஆனால் நாங்கள் அதை சிறப்பாக செய்வோம்' என்று அவர் கூறினார். இக்கருத்தாடல் சீனாவுடன் கட்டமைக்கப்படவுள்ள போட்டியற்ற உறவையே வெளிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, அமெரிக்காவுடன் உறுதியாக இணைந்திருக்கும் மற்றும் பெய்ஜிங்குடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிராந்தியத்தில் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. இந்நிலை தொடர்பாக கருத்துரைத்துள்ள பேராசிரியர் லாரன்சன், 'முன்னைய அரசாங்கத்தில், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முதன்மையை நிலைநிறுத்துவதற்கான தனது விருப்பத்தை ஆஸ்திரேலியா மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது. தொழிலாளர் அரசாங்கத்தின் கீழ் அதுதான் மாறப் போகிறது என்று நான் நினைக்கிறேன். தொழிற்கட்சியும் பிராந்திய பங்காளிகளுடன் தங்கள் சொந்த விதிமுறைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதற்கும் மிகவும் தயாராக உள்ளது.' எனக்குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் நலனில் சற்று கடினமான பாதைகளை உருவாக்க உள்ளதையே வெளிப்படுத்தி உள்ளது. தொழிற்கட்சி அரசாங்கம் பொதுத்தேர்தலில் குறிப்பிட்டது போன்று புரட்சியான மாற்றமாக அமையாத போதிலும் அணுகுமுறைகளில் அவுஸ்ரேலிய புதிய மாற்றங்களை வெளிப்படுத்த தயாராகுவதே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இறுக்கமான சீனா உறவிலும் நெருக்கமான அமெரிக்கா உறவிலும் சடுதியான முரணான மாற்றங்கள் உருவாக்கா எத்தணிக்காத போதிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதுவே தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஆரம்ப உரையாடல்கள் வெளிப்படுத்துகிறது.
Comments
Post a Comment