ஜனாதிபதி எதிர் உயர் நீதிமன்ற தீர்ப்பு புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு வழிவகுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் தற்போது முதன்மையான உரையாடலாக அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது தொடர்பிலான விவாதமே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் 19வது சீர்திருத்த ஏற்பாடுகளை மீள கொண்டுவரும் வகையிலான 21வது சீர்திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் 21வது சீர்திருத்தம் தொடர்பிலான உரையாடலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தியிருந்தார். எனினும் 21வது சீர்திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி ஆளும் கட்சியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் அதிகளவு சந்தேகங்கள் இலங்கை அரசியல் பரப்பில் உலாவுகிறது. அத்துடன் கடந்த வாரம், அரசியலமைப்புரீதியாக காணப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் அரசியலமைப்புரீதியாக கட்டமைக்கப்பட்ட நீதித்துறையே தீர்ப்பளித்துள்ளது. இது இலங்கை அரசியலமைப்பின் இயல்பு தொடர்பிலான வாதங்களையும் உருவாக்கியுள்ளது. அதிகார முரண்பாடுகள் நிறைந்த இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களூடாக இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அரசியல் பொருளாதாரத்தை சீர்படுத்த, இலங்கை அரசியலமைப்பின் இயல்புகள் வழிவகுக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. இக்கட்டுரை இலங்கை அரசியலமைப்பில் காணப்படும் விவாதங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
மே-31அன்று இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ராஜபக்ஷh குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி, அவரை உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 2011ஆம் ஆண்டு ஒக்ரோபர் 8ஆம் திகதி முல்லேரியாவில் உள்ளூராட்சி தேர்தல் பிரசார நவடிக்கைகளில் ஒரே கட்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிறேமச்சந்திரவை துமிந்த சில்வா கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றிருந்தார். இந்தச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் மூவர் பலியாகினர். இதனையடுத்து பாரத லக்ஷ்மன் பிறேமச்சந்திர கொலைக் குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வா கைதானார். விசாரணைகளின் முடிவில் 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8ஆம் திகதி துமிந்த சில்வாவுக்கும் வேறு மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இருந்தபோதிலும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு பெரிதும் வேண்டப்பட்டவரான துமிந்த சில்வா 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலையானார். அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பாரத லக்ஷ்மன் பிறேமச்சந்திரவின் புதல்வியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கசாலி ஹூசைன் ஆகியோர் தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்ததையடுத்து தற்போது மீளவும் துமிந்த சில்வாவை சிறைவைக்குமாறு உயர் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பும், நீதிமன்றத்தின் இடைநிறுத்தலும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது தேர்தல் வெற்றியினை தொடர்ந்து நான்கு மாதங்களுக்குள், தீவின் இரத்தக்களரி இனப் போரின் போது நான்கு குழந்தைகள் உட்பட தமிழ் பொதுமக்களின் கழுத்தை அறுத்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒர் இராணுவ அதிகாரியையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அரசியலமைப்பு முரண்பாடுகள் இடம்பெறும் சமகாலப்பகுதியிலேயே, கடந்த வாரம் 21வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'இது ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அதே வேளையில் முன்னோடியில்லாத அரசியல் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ள கடனில் சிக்கியுள்ள நாட்டை நிர்வகிப்பதில் பாராளுமன்றத்தின் பங்கை மேம்படுத்துவதாகக்' கூறினார். இந்த பிரேரணைக்கு ராஜபக்ஷh குடும்பத்தின் விசுவாசிகளிடமிருந்து, குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷhவின் ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்துள்ளது. எனினும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் 21ஆம் சீர்திருத்தத்துக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார். பசில் ராஜபக்ஷhவின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்பு சீர்திருத்தங்களை விட மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவது மிகவும் முக்கியமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷhவுக்கு ஆதரவான வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு அரசியலமைப்புச் சீர்திருத்தங்களும் அவசியம் என்று வாதிடுகின்றனர்.
அரசியல் தரப்பினரின் மோதுகைக்கு அப்பால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை ஆக்கிரமித்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில், அரசியலமைப்பு மாற்றமும் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. விசேடமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது தொடர்பான கோரிக்கையினையே போராட்டக்காரர்கள் முதன்மைப்படுத்துகின்றனர். இவ்அரசியல் கொந்தளிப்பை பயன்படுத்தியே, பாராளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 21வது சீர்திருத்தத்தின் கீழ், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுவார். அமைச்சர்களின் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். தேசிய கவுன்சிலும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். என பொறுப்புக்கூறல் இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்றது.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க நம்புகிறதா, அல்லது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பை மாற்றம் செய்யுமா என்பது தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாகும். தற்போதைய நடைமுறையில் அரசியலமைப்பு சீர்திருத்தத்தையே அரசாங்கம் முதன்மைப்படுத்துகிறது. எனினும் 1978ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பின் இயல்புகள், சீர்திருத்தங்களினூடாக பொறுப்புக்கூறும் நிலைப்பாட்டை உருவாக்க வழிவகுக்குமா என்ற கேள்வியை பல தரப்பு மத்தியில் உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் 1978ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் இயல்பினை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பும், அதனை நீதிமன்றம் இடைநிறுத்தி அளித்துள்ள தீர்ப்பும் அரசியலமைப்புக்குள் காணப்படும் அரச கட்டமைப்புகளுக்கிடையிலாக முரண்பாட்டு பிணைப்பையே சுட்டிக்காட்டுகிறது. நிறைவேற்றுத்துறை ஏற்பாடுகளும் நீதித்துறை ஏற்பாடுகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. நிறைவேற்றுத்துறையின் தீர்மானத்தை நீதித்துறை நிராகரிப்பது என்பது அரச துறைகளுக்கிடையிலான மோதலை வெளிப்படுத்துகிறது. இது ஜனநாயகத்தின் வலுவேறாக்கலை கேள்விக்குட்படுத்துகிறது. இவ்வாறானதொரு சூழல் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்துவதுடன் துறைகளுக்கிடையிலான போட்டிகளுக்குள்ளேயே அரச செயற்பாட்டை வழிநடத்தும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகமானதிலிருந்து நீதித் துறையில் பல்வேறு கட்டங்களில் நிறைவேற்றுத்துறையின் தலையீடுகள் இருந்து வந்தன. நிறைவேற்றுத்துறையை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தம்மால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களைக்கூட அச்சுறுத்தும் நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தார். அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா தனது பதவி காலத்தில் முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்கியமை அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. எனினும் யாவும் அரசியலமைப்புக்கு உட்பட்ட நிறைவேற்றுத்துறை அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே காணப்பட்டது. இவ்வாறான பின்னணியில் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ஒப்படைத்துள்ள பொதுமன்னிப்பு அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளமை நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை உறுதிசெய்துள்ளதாக அமைகின்ற போதிலும் இது அரசியலமைப்புக்குள்ளான முரணகை ஏற்பாடுகளையும் அரசியலமைப்பு குழப்பங்களையுமே வெளிப்படுத்துகிறது. இது நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்துவதாக சிலர் சிலாகிப்பது முரணான விடயமாகும். நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து செயற்படும் ஜனாதிபதியின் திறனை செயற்பாடுகளிலேயே விளங்கிக்கொள்ளக்கூடியதாக காணப்படும். எனினும், சமகால அரசியல் பொருளாதார நெருக்கடி அதற்கான வாய்ப்பை அரிதாக்குகிறது. சில சந்தர்ப்பங்களில் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்காவிற்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை தமிழ்தரப்பு கேள்விக்குட்படுத்துமாயின் ஜனாதிபதியின் அரசியலமைப்பு அதிகாரத்தை புரிந்து கொள்ள வாய்ப்பு அமையலாம்.
இரண்டாவது, இலங்கை அரசியலமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி என்ற இயல்புக்குள்ளேயே பயணிக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களாட்சி கோட்பாட்டின் அடிப்படையாகும். எனினும் இலங்கை அரசியலமைப்பு கட்டமைத்துள்ள ஜனநாயகம் பெரும்பான்மையினரின் விருப்பை பூர்த்தி செய்வதாகவே அமைகிறது. இங்கு பெரும்பான்மையினர் என்கையில் ஓரினம் அறுதிப்பெரும்பான்மை சதவீதத்தை(சிங்களவர்: 74.9%) கொண்டுள்ளமையல் முடிவுகள் பெரும்பான்மையின விருப்பாகவே அமைகிறது. மூல ஏற்பாட்டில் பல்லின சமூகம் வாழும் இலங்கை அரசியலமைப்பு பௌத்தத்திற்கு தனியான அத்தியாhயத்தினூடாக விசேட பாதுகாப்பை வழங்குவதே இது பெரும்பான்மை சமூகத்தின் விருப்பை ஈடேற்றும் நிறுவனம் என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. அத்துடன் சமகாலத்தில் அரசியலமைப்பு மாற்றக்கோரிக்கையானது பெரும்பான்மையின சமூகத்திடமிருந்தே விடப்பட்டுள்ளது. அதனை செவிமடுத்தே அரசியலமைப்பு சீர்திருத்த ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஜனாதிபதி முன்னர் பெரும்பான்மையின ஆதரவுடன் நிராகரித்த 19வது சீர்திருத்தத்தை மீளவும் பெரும்பான்மையினத்தின் கோரிக்கைகளுக்காகவே நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளார். அதிலும் பொருளாதார நெருக்கடி மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் தேசிய இனப்பிரச்சினை தீர்வு கோரி முன்வைக்கும் எந்த விடயங்களையும் அரசாங்கம் உள்வாங்க தயாரில்லாத நிலையிலேயே காணப்படுகின்றது.
மூன்றாவது, இலங்கை அரசியலமைப்பின் நிறைவேற்றுத்துறையின் மூல ஏற்பாடு மன்னர் மரபை தழுவி அமைக்கப்பட்ட இயல்புடையதாகவே காணப்படுகின்றது. பல வெளியீடுகளில், ஆசிய மனித உரிமைகள் ஆணையம் (AHRC) 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பானது பிரெஞ்சு அரசியலமைப்பின் கோலிஸ்ட்(டிகோல்) மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன் 2016ஆம் ஆண்டு அறிக்கையொன்றில், 'ஜே.ஆர்.ஜெயவர்தன 1978இல் ஜனாதிபதியாக முடிசூடினார். இருப்பினும் அவர் பிரதமராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயக ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட அனைத்து கோட்பாடுகளையும் அகற்றினார். ஒரு மன்னராக ஆசைப்பட்ட அவர், குடியரசு என்ற யோசனையை கைவிட்டார்.' எனக்குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கத்தில் முன்னோடியாக செயற்பட்ட கொல்வின் ஆர்.டி. சில்வா, 'இந்த அரசியலமைப்பு எந்தவொரு பெரிய பாரம்பரியத்தின் அடிப்படையிலும் இல்லை என்றும், மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜீன்-பெடல் பொக்காசாவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பைப் போலவே உள்ளது என்றும்' கூறினார். பொக்காசா, ஆப்பிரிக்காவின் மிகக் கொடூரமான சர்வாதிகாரிகளில் ஒருவர். நரமாமிசம் மற்றும் தனது எதிரிகளை விலங்குகளுக்கு உணவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர். 1979இல் அவர் வெளியேற்றப்படும் வரை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் சுய-கிரீடம் சக்ரவர்த்தியாக இருந்தார். தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்தமாக செலவழித்தார். எளிமையாகச் சொன்னால், போகாசா தனது தனிப்பட்ட லட்சியங்களுக்கு ஏற்ப ஆளுகையின் ஒவ்வொரு கொள்கையையும் கைவிட்டு, அதன் விளைவாக அவரது தேசத்திற்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கினார். இவ்வரலாற்று அனுபவத்துடன் கொல்வின் ஆர்.டி. சில்வா இலங்கையின் அரசியலமைப்பின் இயல்பு தொடர்பாக கூறிய கருத்துக்களை பொருத்தி பார்க்கையில் இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கும் இலங்கையின் அரசியலமைப்பின் இயல்பே காரணம் என்பதையே வெளிப்படுத்துகிறது.
எனவே, இன்றைய இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது, 1978ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பின் இயல்பின் அடிப்படையிலானதாகும். இத்தகைய அரசியலமைப்பினை மாற்றாது மூல ஏற்பாட்டில் சீர்திருத்தங்களை கொண்டு வர முனைவது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை தற்காலிகமாக நீர்த்துப்போக செய்யும் செயலாகவே காணப்படுகிறது. மாறாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு முழுமையான தீர்வை தரப்போவதில்லை. அத்துடன் எதேச்சதிகாரமிக்க ஆளுமை நிறைவேற்றுத்துறையை அலங்கரிக்கையில் சீர்திருத்தங்களும் நீர்த்துப்போகக்கூடிய நிலையே தோன்றும். மக்களாட்சி இயல்பை வலியுறுத்தக்கூடிய வகையிலான ஜனநாயக அரசியலமைப்பை உருவாக்க, பெரும்பான்மையின இயல்பை கொண்டமைந்த தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டியதே ஆரோக்கியமான முன்னேற்றமாகும். சமகாலத்தில் காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டங்கள் சமூக பரிமாணத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே பரிணாமத்தை அனுமதிக்கும், பரிணாமத்தை எளிதாக்கும், பரிணாமத்தைத் தூண்டும், மேலும் பரிணாமத்துடன் பரிணாம வளர்ச்சியடையும் ஒர் புதிய அரசியலமைப்பு உருவாக்கமே இலங்கை மக்களின் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பாக அமையும்.
Comments
Post a Comment