உலகளாவிய நியாயாதிக்க விசாரணை ஈழத்தமிழர்களுக்கு முழுமையான நீதியை வழங்குமா? -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டு ஆயத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை மனித உரிமை விவகாரமாக மற்றும் போர்க்குற்ற விவகாரமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நகர்த்தி வருகின்றது. 2012ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முதலில் கொண்டு வரப்பட்ட 19/2 தீர்மானம் முதல் இறுதியாக 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானம் வரை வேறுபட்ட நீதிப்பொறிமுறைகளை பரிந்துரைத்து வருகின்றது. எனினும் இதன் சாத்தியப்பாடுகள் அதிகளவு விமர்சனப்பார்வையுடனேயே செயற்பாடின்றி கடந்து சென்றுள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் அரசின் இறைமையை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரைக்கும் நீதிப்பொறிமுறைகளை நிராகரிகரிக்கும் அதேவேளை தமிழ் அரசியல் தரப்பு இனப்படுகொலையை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC) இலங்கையை பரிந்துரைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையிலேயே இவ்வாண்டு நடைபெறும் 51வது கூட்டத்தொடரில், உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) எனும் முறைமை பற்றிய உரையாடல் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால், இலங்கைக்கு பரிந்துரை செய்யப்படும் நீதித்துறை பொறிமுறையின் இயலுமைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை இதுவரை பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் நீண்ட கால தாமதம் மற்றும் மனித உரிமைகள் தீர்மானங்களின் பின்னர் செயற்hடற்று கிடப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தீர்மானங்கள் முறையே 2012 இன் 19/2, 2013 இன் 22/1, 2014 இன் 25/1, 2015 இன் 30/1, 2017 இன் 34/1, 2019 இன் 40/1, 2021 இன் 46/1 மற்றும் 2022இல் 51வது அமர்வில் புதிய தீர்மானம் ஒன்றுக்கான உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையின் சட்ட அமைப்பும், நீதித்துறை நிறுவனங்களும் பல தசாப்தங்களாக இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளால் இழைக்கப்படும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு முறையான மற்றும் வேரூன்றிய தண்டனையை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகால இயலாமையை நிரூபித்துள்ளன. இலங்கையானது மோதல்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களின் காலப்பகுதியில் இருந்து மீண்டு ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், இலங்கை அரசாங்கம் அதன் மனித உரிமைக் கடமைகள் மற்றும் அர்ப்பணிப்புகளை அமுல்படுத்துவதில் பெருமளவு தோல்வியடைந்துள்ளது.உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு தேவையான, தீர்க்கமான மற்றும் நிலையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டது மற்றும் விரும்பவில்லை என்பதுவும் இலங்கையின் கடந்த 13 ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச ஆதரவு 2015 ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1இல் வழங்கியிருந்த போதிலும் பொறுப்புக்கூறலுக்கான அதன் பொறுப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 'சர்வதேச சட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதில் இலங்கை அரசாங்கம் தவறியதன் அர்த்தம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது அல்லது மற்றொரு சர்வதேச பொறிமுறையை உருவாக்குவது முழுமையாக உத்தரவாதமளிக்கப்படும்' என்று சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ICJ) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்வதற்கான அழைப்புக்கான முதன்மைக் காரணம், இலங்கை அரசு வேரூன்றிய மற்றும் பரவலான இனவாதத்தால் ஊடுருவியுள்ளது. இதனால் உள்நாட்டில் தமிழர்களுக்கு நீதியைப் பெறுவதற்கு இடமில்லை. மேலும், முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையின் படியும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின்படியும் சர்வதேச குற்றங்களை அரசே செய்தமை உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களின் சொந்த நீதிபதியாக இருக்க முடியாது. ஓய்வு பெற்றுள்ள மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மிச்சல் பச்லெட் அம்மையார் ஓய்வுக்கு முன்னரான தனது அறிக்கையில் இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான விருப்பத்தை குறிப்பிட்டிருந்த போதிலும், உலகளாவிய நியாயாதிக்கம் என்ற கோட்பாட்டின் கீழ் மேலும் வழக்குகளை கொண்டு வருவது குறித்து மூன்றாவது நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
போர்க்குற்றங்களைத் தடுக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. ஆயினும், போர்க்குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்களுக்காக தனிநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை, 2002ஆம் ஆண்டில் உருவாக்கிய ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை. எனவே, இலங்கையின் போர்க்குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமானால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை தொடர்பிலான பல்வேறு தரப்பினரின் புவிசார் அரசியல் நலன்களால் நிரம்பியுள்ளது. இங்கு முதன்மையாக சீனா மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகள் கொழும்புடன் தங்கள் சொந்த உறவுகளை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகளின் நலன்களுடன் ஈழத்தமிழர்களின் நலனும் ஒரே கோட்டில் பயணிக்கையிலேயே இனப்படுகொலையாளி என அடையாளப்படுத்தப்படுபவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்நிறுத்த முடியும். இது தொடர்பான ஈழத்தமிழர்களின் அரசியல் அதிக விமர்சனத்திற்குள்ளேயே காணப்படுகிறது.
இக்குழப்பமான சூழலிலேயே ஐ.நா முன்னாள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் அம்மையாரை உலகளாவிய நியாயாதிக்கம் சார்ந்த மாற்று விருப்பத்திற்கு அழைத்து செல்கிறது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் சித்திரவதை போன்ற சர்வதேச சட்டத்திற்கு எதிரான எந்தவொரு கடுமையான குற்றத்திற்காகவும் தனிநபர்கள் மீது தேசிய நீதிமன்றம் வழக்குத் தொடரலாம் என்ற கருத்தை உலகளாவிய நியாயாதிக்கம் குறிக்கிறது. இவ்உரையாடலை 2018இலும் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2018 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் கூடிய மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அப்போதைய உயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல்-ஹிசைன் தனது பதவி முடியும் காலப்பகுதியில், இலங்கையின் பொறுப்புக்கூறலை வளர்ப்பதற்காக உலகளாவிய நியாயாதிக்கத்தின் பயன்பாடு உட்பட பிற வழிகளை ஆராயுமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தினார். மார்ச் 2012 முதல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இலங்கை இணங்கத் தயங்குவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் முயற்சியில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இங்கு முதன்மையாக கவனிக்க வேண்டியது யாதெனில், 2022இல் மிச்சல் பச்லெட் அம்மையாரும், 2018இல் செய்ட் ராட் அல்-ஹிசைனும் தமது ஓய்வின் இறுதி தருணத்திலேயே வெளிப்படையாக இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதவி காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு அதிக நெருக்கீட்டை வழங்காத மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணங்கி போகும் செயற்பாடுகளிலேயே ஆர்வம் காட்டியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தனிநபர் உறவுகளை எண்ணங்களை தாண்டி சர்வதேச நிறுவனங்களில் அரசுக்குள்ள முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகின்றது.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஓய்வுக்கு செல்லும் ஆணையாளர்களால் 2018முதல் முன்னிலைப்படுத்தப்படும் உலகளாவிய நியாயாதிக்கம் என்பது, இலங்கையிலும் கடந்த காலங்களில் எடுத்துக்காட்டுகளை கொண்டுள்ளது. இவ்அனுபவங்களின் வெளிப்பாடாக, உலகளாவிய நியாயாதிக்கமானது முழுமையான நீதிப்பரிகாரமாக அமைவதில்லை.
ஒன்று, குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி இராஜதந்திர விலக்கு பெறும் இடத்தில் நடவடிக்கைகள் வெற்றியடையாது. 2011இல், ஜேர்மனி மற்றும் சுவிற்சர்லாந்தில் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம் மற்றும் வுசுஐயுடு ஐவெநசயெவழையெட ஆகியவற்றால் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரி மற்றும் முன்னாள் ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் துணைத் தூதுவர் ஜகத் டயஸக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும், பெர்லினில் உள்ள தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு இராஜதந்திரியாக, இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா மாநாட்டின் 31வது பிரிவின் கீழ் அவர் இராஜதந்திர விலக்கை அனுபவித்தார். கூடுதலாக, அவர் எப்போதாவது சுவிட்சர்லாந்தில் சிறப்பு சலுகை இல்லாமல் மீண்டும் நுழைந்தால் விசாரணைகளை அறிவிப்பதற்கான சுவிஸ் முடிவுக்கு வழிவகுத்தது. அக்டோபர் 24, 2011அன்று, அவுஸ்ரலியா பிரஜை அருணாசலம் ஜெகதீஸ்வரன், இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மகிந்த ராஜபக்சா வேண்டுமென்றே பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை (மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சமூக மையங்கள்) குறிவைத்ததாக ஜெகதீஸ்வரன் குற்றம் சாட்டினார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக அவுஸ்திரேலியாவிற்கு மகிந்த ராஜக்சா வருகை தருவதற்கு முன்னதாக மெல்போர்ன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு நாளில் சட்டமா அதிபர், 'நடவடிக்கைகளைத் தொடர்வது உள்நாட்டுச் சட்டத்தையும், சர்வதேச சட்டத்தின்கீழ் ஆஸ்திரேலியாவின் கடமைகளையும் மீறுவதாக இருக்கும்' எனக்கூறி வழக்கை ரத்து செய்தார்.
இரண்டு, உலகளாவிய நியாயாதிக்கமானது குற்ற விசாரணை தண்டனைகளுக்கு அப்பால் பயணத்தடைகளையே முன்னிறுத்துகிறது. 2020ஆம் ஆண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியான சவேந்திர சில்வாவுக்குப் பயணத் தடை விதித்தது. அவர் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 58வது பிரிவின் தலைவராக இருந்தவராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் விமானப்படைத் தளபதியும், குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்குற்றவாளியுமான சுமங்கலா டயஸை கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பது கனேடிய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு, பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போர்க்குற்றங்களை மேற்பார்வையிட்டதாக மனித உரிமைக் குழுக்கள் வழக்குத் தாக்கல் செய்ததை அடுத்து, நாட்டை விட்டு வெளியேறினார். இவ்வாறான முன்னனுபவங்களே இலங்கை தொடர்பாக காணப்படுகின்றது.
மூன்று, உலகளாவிய நியாயாதிக்க முறையானது, போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டு அந்தந்த நாட்டுச் சட்டங்களின் கீழ் விசாரணை செய்யப்படுவதையே குறிக்கிறது. ஒரு நாட்டின் எல்லைக்குள் சொன்றால் மாத்திரமே கைது செய்து விசாரணை நடத்தலாம். எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சென்றால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிந்த நிலையில், அந்தந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதை தாமாகவே தவிர்த்துக் கொள்வர். வெளிநாடுகளுக்குச் சென்றால் மாத்திரமே விசாரணையை நடத்த முடியும் என்பதால், இலங்கைக்குள் நுழைந்து போர்க்குற்றம் புரிந்த எந்த ஒரு படை அதிகாரிகளையும் எந்த ஒரு நாட்டுச் சட்டத்தின் கீழும் கைது செய்ய முடியாது. இதனால் அமெரிக்கா போன்ற சில நாடுகள் இலங்கை இராணுவ மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மீது விதிக்கின்ற பயணத்தடை குற்றவாளிகளுக்கு அதிக நெருக்கடியற்ற நியாயாதிக்கமாகவே காணப்படுகின்றது.
எனவே, உலகளாவிய நியாயாதிக்கமானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போலல்லாமல், போர்க் குற்றவாளிகள் எனக் கூறப்படும் குற்றவாளிகளை விசாரணைக்குக் கொண்டுவரும் ஒரு கருவியாகும். இது நியாயமான தண்டனைகளுக்கு அப்பால் பயணத்தடைகளுடனேயே அதிகம் மட்டுப்படுகிறது. அதேவேளை போர்க்குற்றவாளி என அடையாளப்படுத்தப்படுபவர், இராஜதந்திரி அல்லது அரச தலைவராக இருக்கும் இராஜதந்திர பாதுகாப்பு தடையாக உள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி இராஜதந்திர விலக்கு மூலம் பாதுகாக்கப்படாவிட்டாலும் கூட, அரசுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதற்கு அரசுகள் தயக்கம் காட்டுகின்ற தன்மையும் காணப்படுகின்றது. ITJP-இன் பிரான்சஸ் ஹாரிசன் திருகோணமலை மூலோபாயக் கற்கை மையத்திற்கு வழங்கிய நேர்காணலில், 'இராஜதந்திரிகள், நன்கொடையாளர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.நா. ஆகியவை இன்னும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டிருந்தால் நல்லது' என்பதை சுட்டிக்காட்டினார். எனினும் இராஜதந்திரிகள், நன்கொடையாளர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.நா. என்பன அரசுகளின் தேசிய நலனுக்குள் சுழலுவதனால் ஈழத்தமிழர்களும் தமது தேசிய நலனை அவர்களின் தேசிய நலனின் நேர்கோட்டில் இணைக்கும் வகையிலான இராஜதந்திரத்தை முன்னகர்த்துவதே தமிழ்த்தேசிய இருப்பிற்கு அவசியமானதாகும்.
Comments
Post a Comment