தென்னிலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல்கள் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமாக தேசிய இனப்பிரச்சினை விளைவுகளை தமிழ்த்தரப்பு அடையாளப்படுத்திய போதிலும், தென்னிலங்கை அரசியல் தரப்பு தேசிய இனப்பிரச்சினை சார்ந்த உரையாடலை முழுமையாக தவிர்த்து வந்தன. அரகலவில் தேசிய இனப்பிரச்சினை உரையாடப்பட்ட போதிலும், மறுதளத்தில் அரகல இராணுவத்தை உயர்நிலையில் பேணியதனூடாக தேசிய இனப்பிரச்சினையின் கணதியை சரியாக உள்வாங்கியிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே சமகாலத்தில் தென்னிலங்கை அரசியல் தரப்பினரால் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினை தீர்வானது இலங்கையில் காணப்படும் தேசிய இனங்களின் ஒருமித்த கருத்துக்களுடன் உருவாக்கப்பட வேண்டும். மாறாக ஒரு தரப்பின் விருப்புடன் திணிக்கப்படுகையில் ஏற்படக்கூடிய விளைவுகள் கடந்த கால அனுபவங்களாய் காணப்படவே செய்கிறது. இக்கட்டுரை தென்னிலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான திடீர் உரையாடலுக்கான காரணத்தையும், தமிழ் தரப்பின் எதிர்வினையையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர்(2022) நடுப்பகுதியில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'தமிழ் மக்களுடன் அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படுமென தான் நம்புவதாக' தெரிவித்திருந்தார். மேலும், தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் பிரதமர் திணேஸ் குணவர்த்தனா இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'வடக்கு-கிழக்கில் காணப்படுகின்ற விசேட பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பாக நாங்கள் வடக்கு-கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்த விடயங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதில் முன்னேற்றங்களையும் ஏற்படுத்துவோம்.' எனத்தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த அக்டோபர்-25அன்று, ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கூட்டத்தில், 'வடக்கு-கிழக்கில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உறுதியளித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில், 'பல்வேறு விடயங்களில் புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் கரிசணையை கவனத்திற் கொள்ளுமாறு' ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு பணித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக காணப்படும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தி எட்டு பேரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார் எனும் செய்தியும் தேசிய இனப்பிரச்சினையில் தென்னிலங்கை அரசியலின் ஈடுபாடு தொடர்பான முதன்மையான செய்தியாக காணப்படுகின்றது.
தேசிய இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய முன்னேற்றகரமான மாற்றங்களை எளிமையான பார்வையில் தமிழ்த்தரப்பு கடந்து சென்றிட முடியாது. கடந்த காலங்களில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒப்பந்தம் வரை சென்று கிழித்தெறியப்பட்ட நாடகங்களும் நிறையவே அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆகவே தென்னிலங்கை அரசியலின் ஈழத்தமிழர் சார்ந்த எண்ணங்களின் மாற்றங்களுக்கு பின்னாலுள்ள அடிப்படை காரணங்களை புரிதல் அவசியமாகிறது.
முதலாவது சர்வதேச நாணய நிதியத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை என்ற கோரிக்கையை ஈடுசெய்ய தென்னிலங்கை அரசியலில் தமிழ்த்தரப்பின் அரசியல் கோரிக்கைகளை மௌனிக்க செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையில் பெரும் அச்சுறுத்தலாக அமைவது தேசிய இனப்பிரச்சினையே ஆகும். எனவே தேசிய இனப்பிரச்சினை நீர்த்துபோய் விட்டதென்ற மாயை அல்லது இனப்பிரச்சினை தீர்வுக்கான நடவடிக்கைகளை தென்னிலங்கை அரசியல் ஏற்படுத்தியுள்ளது என்ற தோற்றப்பாடுகளை சர்வதேச நாணய நிதியத்திடம் வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாடுகள் சமகாலத்தில் தென்னிலங்கை அரசியலில் காணப்படுகின்றது. உத்தேச பிணை எடுப்புத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு ஸ்திரமான அரசாங்கம் இலங்கைக்கு தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதுவர் பீட்டர் ப்ரூயர் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரமின்மையை நீர்த்துப்போகச் செய்வதற்கு இலங்கைக்கு ஒரு தேர்தல் தேவைப்படலாம். ஆனால் தேர்தலுக்கு செல்வதனூடாக ரணில் விக்கிரமசிங்காவால் அரசாங்கத்தை உருவாக்க இயலுமா என்பதில் பல கேள்விகளே காணப்படுகின்றது. ஆதலால் தேர்தலுக்கு செல்லாது ஸ்திரமான அரசியல் சூழல் காட்சிகளை வெளிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடலை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இரண்டாவது, இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதில் தென்னிலங்கை புலம்பெயர் தமிழர்களை நாடியுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியமும் புலம்பெயர் முதலீடுகளை இலங்கையில் வரவைப்பதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை பரிந்துரைத்துள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான வியூகங்கை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. புலம்பெயர் தமிழர்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வையே கடுமையாக வலியுத்தி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கோரிக்கையை பலமான குரலில் தொடர்ச்சியாக முன்வைப்பவர்களாக புலம்பெயர் தமிழர்களே காணப்படுகின்றனர். எனவே, புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை இலங்கைக்குள் உள்ளீர்ப்பதாயின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடலை ஆரம்பிக்க வேண்டிய சூழல் இலங்கை அரசாங்கத்துக்கு தவிர்க்க இயலாததாகிறது. எனவே சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தென்னிலங்கை அரசாங்க தரப்பு உரையாடுவது புலம்பெயர் தமிழர்களின் கரிசணையை ஈர்ப்பதற்காக என்பது தெட்டத்தெளிவாகின்றது. அதுமட்டுமன்றி நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் கரிசணைகளை கவனத்திற் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட பணிப்பு என்பதுவும் அதனையே உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறான நிலைமைகள், இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி அதிலிருந்து இலங்கையை மீட்பதற்கான உரையாடலாகவே தென்னிலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகிறது. அத்துடன் இதுவோர் ஆரம்ப நிலையிலேயே காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சினை மற்றும் தீர்வு எனும் சொல்லாடல்களை பயன்படுத்திய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான வழிமுறை பற்றி ஆரோக்கியமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது எதிர்வினைகள் தொடர்பில் ஆழமாக சிந்தித்தே முடிவெடுக்க வேண்டிய தேவை எழுகிறது.
ஒன்று, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள் முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வாக்குறுதியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக' தெரிவித்திருந்தார். குறித்த ஊடக அறிவிப்பில் கடந்த ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை தொடருமாறும் அதனூடான தீர்வினையும் வலியுறுத்தியுள்ளார். எனினும் கடந்த காலங்களில் குறித்த அரசியலமைப்பு முயற்சியின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களிடையே அதிகளவு எதிர்மறையான விமர்சனங்கள் காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் சரிவில் அதுவுமோர் காரணியாகும். இவ்அனுபவங்களின் பின்னணியிலும் தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னைய அரசியலமைப்பு முயற்சிகளை தொடர அழைப்புவிடுப்பதுவும் ஆதரவு கரம் நீட்டுவதும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உலகில் வேலை செய்வது என்ற கவிதையில் போலந்து கவிஞரும் 1996 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவருமான விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 'முட்டாள்களுக்கு வேடிக்கை மற்றும் வயதான நாய்களுக்கான தந்திரங்கள்' என்று தொடங்கி, ஒரு நல்ல வாழ்க்கை மற்றும் நல்ல மரணம் பற்றிய தனது கற்பனாவாதத்தை அணுகுகிறார். குறித்த கவிதையின் ஆரம்ப வரிகளின் பொதுமையை ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்களது அரசியல் தலைவர்களது செயற்பாடுகளிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இரண்டு, அரசியலமைப்பு உருவாக்க பிரச்சாரங்கள் 1994ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் முதன்மையான பிரச்சாரமாக மாத்திரமே காணப்படுகின்றது. அரசாங்கங்கள் ஒருதளத்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான செயற்பாடுகளாக ஒரு சிலவற்றை காட்சிப்படுத்தி கொண்டு, மறுதளத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுடன் தங்களது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதே தொடர்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் நல்லாட்சியாக சித்தரிக்கப்ட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கமும் அவ்வானதொரு செயலொழுங்ககையே பின்பற்றியிருந்தது. சமகாலத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது சிம்மாசன பிரசங்க உரையில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான விடயங்களை குறிப்பிட்டிருந்தார். எனினும் தற்போது 22வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றார். இதய சுத்தியுடன் அரசியலமைப்பு மாற்ற எண்ணங்கள் கொண்டவர்கள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் காலத்தை செலவழிக்காது, புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான நகர்வுகளையே முதன்மைப்படுத்தி செயற்படுவார்கள். இதுவே யதார்த்தமான பார்வையாகும்.
மூன்று, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் இனவாத கருத்துக்களுடனும் கூட்டுக்களுடனேயே தனது அரசியல் இருப்பை கொண்டுள்ளார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கா தனது சிம்மாசன பிரசங்க உரையில், 'ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்துவமான மத, மொழி, உரிமைகளும் சுதந்திரமும் உண்டு' என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதனைத் தொடர்ந்து 'பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குவதற்கும், அதற்கேற்ப புத்தசாசனத்தை பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நான் அரசியலமைப்பு ரீதியாக கடமைப்பட்டுள்ளேன்' எனக் கூறுகிறார். இது ரணில் விக்கிரமசிங்க 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரதிநிதியாகவே மதங்களை கையாள்கிறார் என்பதையே உறுதி செய்கின்றது. பௌத்த சாசனத்தை முதன்மைப்படுத்தி கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது போலியான வார்த்தைகளே ஆகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மாத்திரமின்றி அடிப்படையில் தென்னிலங்கை அரசியல் முழுமையாக இனவாத கருத்தியலுடனேயே பயணிக்கிறது. ஏதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சமீபத்தில் பௌத்த கருத்தியல் இனவாதத்தின் தலைவரான கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் அவரது பெரும்பான்மை மேலாதிக்க தேசிய அமைப்புகளின் கூட்டமைப்புடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். குறித்த கலந்துரையாடலில், '13வது திருத்தத்திற்கு அதிகாரம் அளித்து நாட்டை துண்டாடுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் உடன்படமாட்டார்' என உரையாற்றியிருந்தார். இவ்வாறன சூழமைவில் தென்னிலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு உரையாடல் போலிப்பிரச்சாரமே ஆகும்.
எனவே, தென்னிலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பிரச்சாரங்கள் தமிழ் மக்களுக்கானது அல்ல. மாறாக தென்னிலங்கை அரசியல் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கான போலிப்பிரச்சாரம் என்ற தெளிவை தமிழ்த்தரப்பு பெற வேண்டும். ஆயினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியும், அதனை சீர்செய்ய ஈழத்தமிழர்களின் ஈடுபாடு அவசியம் என்பதுவும் ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்பான களமாகும். இதனை ஈழத்தமிழரசியல் தரப்பு தந்திரோபாய ரீதியாக கையாள வேண்டும். முழுமையாக உதாசீனப்படுத்துவதோ அல்லது முழுமையாக சரணாகதி ஒத்துழைப்புக்குள் பயணிப்பதுவோ முட்டாள்தனமான அரசியல் நகர்வாகும். கடந்த கால அனுபவங்களை கொண்டு ஈழத்தமிழர்களின் நலன்களை ஈடேற்றிக்கொள்ள கூடிய நகர்வை மேற்கொள்வது தமிழரசியலின் தந்திரோபயத்திலேயே தங்கி உள்ளது. தமிழரசியல் தரப்பு கற்பனாவாதங்களைக் கனவு காண்பதை விட அல்லது துரத்துவதை விட, அதிகரிக்கும் மாற்றங்களுக்காக பாடுபடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் இருக்கும் இடத்தில், எந்த ஒரு முன்னேற்றமும், எவ்வளவு நிமிடம் இருந்தாலும், நிராகரிக்கவோ அல்லது சரணாகதி அடையவோ வேண்டியதில்லை. அதனை நமக்கானதாக பயன்படுத்துவதே அவசியமானதாகும்.
Comments
Post a Comment