சிரியாவின் விசாரணைப் பொறிமுறை ஈழத்தமிழருக்கு வாய்ப்பானதாக அமையுமா? -ஐ.வி.மகாசேனன்-
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட்டதை தொடர்ந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதுவழி இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை என்பன சர்வதேசமயப்படுத்தப்பட்டதாக நிலைபெற்றது. அவ்வகையில் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் தொடர்பில் கடந்த 12 ஆண்டுகளில் பல வேறுபட்ட உரையாடல்கள் ஈழத்தமிழர் அரசியல் களத்தில் முதன்மைபெற்று வருகின்றது. குறிப்பாக சமகால ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் முதன்மை பெறும் உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) மற்றும் ஈழத்தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதியமன்றங்களின் (International Criminal Court) எல்லை வீச்சு தொடர்பில் கடந்த இதழ்களில் இப்பகுதியில் உரையாடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே சிரியாவில் ஐ.நா பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'சர்வதேச, பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான பொறிமுறை' (International Impartial And Independent Mechanism) என்று முறையாகக் குறிப்பிடப்படும் விசேட விசாரணைப்பொறிமுறையின் ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்களும் அவதானிக்க வேண்டிய விடயமாக உள்ளது. இக்கட்டுரை சிரயாவின் விசேட விசாரணைப்பொறிமுறையின் அரசியல் தளத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், 'ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான விடயங்களை கொண்டிருப்பதோடு உயர்ஸ்தானிகர் தனது அதிகாரவரயறைக்குட்பட்டதாக அறிக்கையினைச் சமர்ப்பத்திருக்கின்றார்' எனக்குறிப்பிடுகின்றார். மேலும், 'பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுப்பு நாடுகளின் செயற்பாடுகளுக்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படக் கூடிய விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமித்தல், மியன்மார், சிரியா போன்ற நாடுகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட விசாரணை பொறிமுறைகளை முன்மொழிதல் ஆகிய விடயங்களை உள்ளீர்க்கப்படவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஜெனிவா காலத்து அரசியல் கோரிக்கையில் சிரியாவின் விசேட விசாரணை பொறிமுறை உள்ளடக்கங்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் உள்ளீர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிரியா அல்லது மியான்மரில் இடம்பெற்ற மீறல்களையும், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். சிரியாவில் இடம்பெற்றது தனி ஒரு இனத்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அல்ல. அங்கு அரச பயங்கரவாதமும், அரசுக்கு எதிரான பயங்கரவாதமும் தான், முன்னெடுக்கப்பட்டது. அதனைச் சார்ந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தான் இடம்பெற்றன. எனினும் அவ்அழிவை ஐ.நா பொதுச்சபை கையாண்டுள்ள விதத்தை பரிசீலனை செய்வது ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையின் பயணத்தில் ஏதொவொரு இடைத்தூரத்தில் பயனுடையதாக அமையலாம். இராஜதந்திரத்தின் வெற்றியும் திறனும் என்பது வாய்ப்புக்களை பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. மாறாக இது எமக்கானது அல்ல என உதறித்தள்ளிவிட்டு செல்வது ஆரோக்கியமான அரசியல் இராஜதந்திர செயற்பாடாக அமையாது.
சிரியாவில் மார்ச் 2011இல் போர் தொடங்கியதில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நான்கு மில்லியன் மக்கள் சிரியாவிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளனர். மேலும் நாட்டிற்குள் இன்னும் 13.5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அண்டை நாடுகள் பாரிய மக்கள் வருகையைக் கையாளுகின்றன. தொழில்துறை அளவில் அடிமைப்படுத்தலை ஊக்குவிப்பது முதல் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் பயங்கரமான மிருகத்தனம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முறையான அவமரியாதையால் வகைப்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆகஸ்ட்-22, 2011அன்று சிரிய அரபுக் குடியரசில் ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவை நிறுவியதில் இருந்து, அது சிரிய அரசாங்கத்தால் செய்யப்பட்ட மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட வெளியீடுகளை உருவாக்கியுள்ளது. மேலதிகமாக, ஆகஸ்ட் 2016இல் ஐ.நா பாதுகாப்பு சபையால் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு விசாரணை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமமான இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமைக்கான போதுமான தகவலை அடையாளம் கண்டிருந்தது.
ஆயினும்கூட, புவிசார் அரசியலின் ஆபத்தான போட்டிக்களம் சிரியாவின் போர் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நீதியைப் பராமரிப்பதற்கான தற்போதைய அணுகுமுறைகளின் வரம்புகளையும் வெளிப்படுத்தியிருந்தது. 2011ஆம் ஆண்டிலிருந்து சிரிய போரில் இடம்பெறும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் ஐ.நா பாதுகாப்பு சபையின் முன்முயற்சிகள் யாவும் சீனா மற்றும் ரஷ்சியாவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரங்களுக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடு, சிரிய மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பின் இழப்பில், பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் மீண்டும் செயல்பட முடியவில்லை.
பாதுகாப்புச் சபையின் செயலற்ற தன்மையின் பின்னணியில், சிரியாவில் நடந்துவரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் பாரிய மீறல்களுக்கு எதிராக, டிசம்பர்-21 2016அன்று ஐ.நா பொதுச் சபை நடவடிக்கை எடுத்தது. தீர்மானம் 71ஃ248இல் ஐ.நா பொதுச் சபை ஒரு சர்வதேச பொறிமுறையை நிறுவியது. மார்ச் 2011 முதல் சிரிய அரபுக் குடியரசில் சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களின் விசாரணை மற்றும் விசாரணையில் உதவ பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான பொறிமுறை, 'ஐஐஐஆ' அல்லது 'சிரியா பொறிமுறை' என அழைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இரண்டு வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இது சிரியாவிற்கான நீதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் ஒரு பொறிமுறையை நிறுவுகிறது. இரண்டாவதாக, இது சர்வதேச குற்றவியல் நீதி வரலாற்றில் ஒரு முக்கியமான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் சர்வதேச குற்றவியல் சட்டத்திற்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஆதரிக்க ஐ.நா பொதுச் சபை எவ்வாறு ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை ஒரு வழக்குத் தரநிலைக்கு ஒன்றுசேர்ப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பொதுச் சபை அத்தகைய அமைப்பை முதன்முறையாக நிறுவியது. இது எதிர்கால நீதிமன்றத்திற்கு ஆதாரங்களை பாதுகாக்க முடியும். பொதுச் சபையின் நடவடிக்கை, சர்வதேச குற்றவியல் நீதித் திட்டத்தின் வரம்புகள் மற்றும் வாக்குறுதிகள் இரண்டையும் எடுத்துக்காட்டுகிறது.
ஆனாலும் அது சர்ச்சைக்குரிய முடிவாகவும் ஐ.நாவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாக்கெடுப்பின் போது, பல பிரதிநிதிகள், குறிப்பாக சிரிய அரபு குடியரசின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு, பொதுச் சபையின் தலையீட்டின் சட்டபூர்வமான தன்மையை கேள்வி எழுப்பினர். தனிநபர்கள் அல்லது அரசுகள் மீது கட்டாய சட்ட அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களை நிறுவ ஐ.நா சாசனத்தின் கீழ் பாதுகாப்பு சபைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுச் சபையால் வழக்குத் தொடரக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க முடியாது. எனவே அது அதன் ஆணைக்குள் முடிந்தவரை சென்றது. எனவே, அது எதிர்கால பயன்பாட்டிற்காக சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிக்க, ஒருங்கிணைக்க, பாதுகாக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய மட்டுமே பொறிமுறையை நிறுவியது. இந்தப் பணியை நிறைவேற்ற, பொதுச் சபைத் தீர்மானம் தன்னார்வ ஒத்துழைப்பை மட்டுமே கோருகிறது. ஆகஸ்ட்-23, 2011அன்று மனித உரிமைகள் பேரவையால் நிறுவப்பட்ட சிரிய அரபுக் குடியரசு மீதான சுதந்திர சர்வதேச விசாரணைக் குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைக்க புதிய பொறிமுறையை தீர்மானம் குறிப்பாக அறிவுறுத்துகிறது. பொதுச்செயலாளரின் ஜனவரி-19, 2017 அறிக்கை புதிய பொறிமுறையின் குறிப்பு விதிமுறைகளை முன்வைத்து, விசாரணை கமிஷன் மற்றும் பொறிமுறையின் நோக்கங்களில் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது. ஆணையத்தின் முதன்மை செயல்பாடு மனித உரிமை மீறல்கள் பற்றிய பரந்த அளவிலான ஆதாரங்களை சேகரித்து, அவற்றை உறுப்பு நாடுகளுக்கு புகாரளிப்பதாகும். பொறிமுறையின் பங்கு மிகவும் குறிப்பிட்டதாக இருக்கும், குற்றவியல் வழக்குகளை ஆதரிக்கக்கூடிய குறிப்பிட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
ஐ.நா. சாசனத்தின் 10வது பிரிவு பொதுச் சபைக்கு இந்த சாசனத்தின் எல்லைக்குள் உள்ள ஏதேனும் கேள்விகள் அல்லது விஷயங்கள் அல்லது இந்த சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள எந்த உறுப்புகளின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மற்றும் பரிந்துரைகள் செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. அதன்படி, சிரியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் மற்றும் ஐ.சி.சிக்கு பரிந்துரைப்பது அல்லது தற்காலிக நீதிமன்றத்தை நிறுவுவது அவசியமா என்பது பற்றிய கேள்விகளைக் கருத்தில் கொள்வது பொதுச் சபையின் ஆணைக்கு உட்பட்டது. மேலும், சாசனத்தின் 22வது பிரிவு பொதுச் சபைக்கு அதன் செயல்பாடுகளின் செயல்திறனுக்குத் தேவையானது என்று கருதும் துணை உறுப்புகளை நிறுவ அதிகாரம் அளிக்கிறது. எனவே, இந்த விடயங்களில் பொதுச் சபையின் விவாதம் மற்றும் பரிந்துரைகளை தெரிவிப்பதற்காக, சிரியாவில் சர்வதேச குற்றங்களின் கிடைக்கக்கூடிய ஆதாரங்களை சேகரித்து மதிப்பிடுவதற்கு பொதுச் சபை ஒரு துணை உறுப்பு ஒன்றை நிறுவ முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொதுச் சபைக்கு தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய அதிகாரம் இருந்தால், தகவலைப் பயன்படுத்தக்கூடிய பிற வழிகளைக் கட்டுப்படுத்த எந்த தெளிவான காரணமும் இல்லை. உண்மையைக் கண்டறியும் பணிகள் மற்றும் அமைப்புகளை நிறுவுவதற்கு பொதுச்செயலாளரின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்தில் இணையான ஒன்றைக் காணலாம்.
எனவே, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையில் பொது அரங்கில் உரையாடப்படும் 'சிரியா பொறிமுறை' என்பது ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான நீதியை வழங்கக்கூடிய கட்டமைப்பாக அமையாத போதிலும், எதிர்கால நீதிக்கட்டமைப்புக்கு தேவையான வழக்கு தொடரக்கூடிய சாட்சியங்களை ஆவணப்படுத்தவும், சர்வதேச பொறிமுறையூடாக உண்மையை கண்டறியவும் அவசியமான பொறிமுறையாக காணப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் போர் வலயத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதால், 2009இல் நடந்த இறுதித் தாக்குதல் உண்மையில் 'சாட்சி இல்லாத போர்' என்று அழைக்கப்படுகிறது. ஆதலால் சாட்சியங்களை திரட்ட வேண்டியதும் ஈழத்தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் முக்கிய மைற்கல்லாக காணப்படுகின்றது. சர்வதேச பொறிமுறையூடாக அதனை மேற்கொள்கையில் ஆவணத்திற்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தக்கூடியதாக காணப்படும்.
பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் சமமானது இல்லை என்பதையே சர்வதேச நிகழ்வுகள் உறுதி செய்கிறது. 2011இல் லிபியாவில் அமைதியின்மை வெடித்த பிறகு, முயம்மர் கடாபியின் அரசாங்கத்துக்கு எதிராக ஒருமனதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 2011இல், ஏறக்குறைய அதே நேரத்தில் அமைதியின்மை வெடித்தபோது சிரியா மிகவும் மாறுபட்ட சர்வதேச பதிலைக் கண்டது. ஆறு ஆண்டுகால இடைவெளியில் ஐ.நா பாதுகாப்பு சபையின் பலவீனங்களை வெளிப்படுத்தும் வகையில் பொதுச்சபையில் சிரியா மக்களின் நீதிக்கான குரல் ஒலிக்கப்பட்டது. எனினும் லிபியா மற்றும் சிரியா அமைதியின்மைக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக 2009இல் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனப்படுகொலைக்கு இன்றுவரை சரியான நீதிப்பொறிமுறை உருவாக்கப்படவில்லை. அத்துடன் 2012களுக்கு பிறகே மனித உரிமை விவகாரமாக இலங்கை இனப்படுகொலை சர்வதேச அரங்கிற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் சமத்துவமற்ற பொறுப்புக்கூறல் களத்தில் புவிசார் அரசியலே தீர்மானக்கருவியாக உள்ளது. இலங்கையின் புவிசார் அரசியலையும், ஈழத்தமிழரின் புவிசார் வாய்ப்புக்களையும் சரியாக பகுப்பாய்வதனூடாகவும், நீதிப்பொறிமுறைக்கான கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி நகருகையிலேயே ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கான நீதிக்கான வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும்.
Comments
Post a Comment