சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிரச்சாரம் சாத்தியமான அரசியல் வியூகமா? -ஐ.வி.மகாசேனன்-

சாட்சிகளை பேணாப்படாது அழிவடையும் சூழலில், 'சாட்சிகள் இல்லாத போர்'(War Without Witness) என்று குறிப்பிடப்படும், இலங்கை ஆயுத மோதல்கள் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடந்துவிட்டன. போரின் கடைசி கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. இலங்கையின் இனப்படுகொலை 2012ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவையில் மனித உரிமை விவகாரமாக முன்னெடுக்கப்படுக்கப்பட்டது முதல் இலங்கையின் பிரதான கட்சிகள் தனியாகவும், கூட்டரசாங்கமாகவும் ஆட்சியமைக்கப்பட்ட போதிலும் மனித உரிமை விவகாரமாகவும் தீர்வை வழங்க தயாரில்லாத நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கைகளூடாக நீதிப்பொறிமுறையை வழங்கி செல்லக்கூடிய ஐ.நா மனித உரிமைப்பேரவை சர்வதேச நாடுகளிடம் பாரப்படுத்தும் வகையிலான உலகளாவிய நியாயாதிக்க விசாரணையையே(Universal  Jurisdiction) முதன்மைப்படுத்தி வருகின்றனர். எனினும் ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் கோரிக்கையாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம்(International Criminal Court) பாரப்படுத்த வேண்டும் என்பதாகவே அமைகின்றது. கடந்த பத்திரிகையின் இப்பகுதியில் உலகளாவிய நியாயாதிக்க விசாரணை நீதிப்பொறிமுறையின் இலங்கைக்கான பொருத்தப்பாடு தொடர்பில் உரையாடப்பட்டிருந்தது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் கோரிக்கையின் பொருத்தப்பாட்டையும் அதற்கான ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் செயற்பாட்டையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழரசியல் பரப்பில் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் ஒருமுகப்படுத்தப்பட்டதாக வருவதில்லை என்ற விமர்சனம் ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னராக நிலைபெற்றதாக காணப்பட்டது. குறிப்பாக ஜெனிவாவை மையப்படுத்திய உரையாடலிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கடந்து இலங்கையின் இனப்படுகொலை சார்ந்த விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நகர்த்தப்பட வேண்டுமென்ற பிரச்சாரம் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராலும், தமிழ் சிவில் சமுக செயற்பாட்டு பரப்பிலும் நகர்த்தப்பட்ட போதிலும், 2018வரையில் தமிழ் மக்களின் அரசியலில் ஏகபிரதிநிதிகளாக காணப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிரச்சாரத்தையே நிராகரித்து வந்தனர். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் இல்லாமையால் அவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாதென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்து வந்தது. எனினும் 2022இல் அந்நிலைமைகளில் மாற்றம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 'நீதித்துறைப் பொறிமுறையில் சுயாதீன வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் இந்த உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்காவிட்டால், தமிழ் மக்களாகிய நாம் முற்றிலும் சர்வதேச நீதிப் பொறிமுறையை நோக்கிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை' என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் கார்டியனுக்கு வழங்கிய நேர்காணலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தின் பலவீனமான சமீபத்திய வரைவு இலங்கைக்கு ஆதரவாக நீர்த்துப்போகப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டு, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தொடர்ச்சியாகவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென்ற பிரச்சாரத்தை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றார். 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையில் தமிழ் மக்களை அரசியல் பிரதிநிதிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுசேரவே பத்தாண்டுகள் தேவைப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாட்டு எல்லை வீச்சாக கோரிக்கைகள் அறிக்கைகளாகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு தரப்பினராக இல்லாததாலும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை பொறுப்புக்கூறலுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும் பாரம்பரியமாக கிடைக்கக்கூடிய சட்டப் பொறிமுறைகள் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையப்போவதில்லை என்ற கருத்தாடல் பரவலாக காணப்படுகின்றது. இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்துக்கான பொறிமுறைகளை ஈழத்தமிழ் பரப்பு தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவரை 2010இல் இலங்கையின் நிலைமை குறித்து ஒரு சுருக்கமான அறிக்கையை மட்டுமே வெளியிட்டது. 2010, ஜூன்-07அன்று, 'இலங்கை ரோம் சட்டத்தில் ஒரு அரச கட்சி அல்ல என்பதை வழக்கறிஞர் அலுவலகம் தெளிவுபடுத்த விரும்புகிறது. எவ்வாறாயினும், இலங்கையின் பிரதேசத்தில் அரச கட்சிகளின் பிரஜைகள் செய்த குற்றங்களுக்கு ICC அதிகார வரம்பைக் கொண்டிருக்கக்கூடும்.' என மாத்திரமே ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்து. எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விளக்கமாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு கருவியான ரோம் சட்டத்தில் இலங்கை ஒரு அரச கட்சி அல்ல. எனவே, தற்போது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல என்பதேயாகும். ரோம் சட்டத்தில் இலங்கை ஒரு அரச கட்சியாக மாறினால், அது சர்வதேச உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கு தானாகவே கட்டுப்படாது என்பதையும் பொதுவாகக் கவனிக்க வேண்டியது அவசியம். சட்டம். குறிப்பாக, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச சட்டக் கடமைகள் உள்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, இலங்கை தேசிய சட்டத்தை இயற்ற கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக்கடியான சூழலுக்குள் இலங்கை  ரோம் சட்டத்திற்குள் செல்லுமென நினைப்பதுவும் அரசியல் அறியாமைத்தனமேயாகும். மேலும், ரோம் சட்டம் நடைமுறைக்கு வந்த 2002ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் வழங்கும் ரோம் சட்டம் ஜூலை-1, 2002 இல் நடைமுறைக்கு வந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஜூலை-1, 2002 அன்று அல்லது அதற்குப் பிறகு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பாக மட்டுமே ஐ.சி.சி-க்கு அதிகாரம் உள்ளது. இந்த திகதிக்கு முன்னர் செய்யப்பட்ட குற்றங்கள் (அதாவது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள்) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் வழக்குத் தொடர முடியாது. எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இனப்படுகொலை விசாரணையை நகர்த்த முன்வைக்கப்படும் கோரிக்கைகளால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு முழுமையான நீதியை பெற முடியாது. 2002க்கு பின்னர் இலங்கை அரச தரப்பால் நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலை சார்ந்த விடயங்கள் மாத்திரமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.

2009இல் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையில், குற்றச் செயல்கள் தொடராத பட்சத்தில், இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த முக்கிய சர்வதேசக் குற்றங்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் ஐ.சி.சி.யால் அதன் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது. விதி 12(3) பிரகடனத்தை உருவாக்குவதன் மூலம் ஐசிசியின் அதிகார வரம்பை இலங்கை ஏற்றுக்கொண்டால் விதிவிலக்காக இருக்கும். இவ்ஏற்பாட்டினடிப்படையில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, ரோம் சட்டத்தின் 12(3)வது பிரிவின்படி, இலங்கையால் ஐ.சி.சிக்கு நிலைமையை சுயமாகப் பரிந்துரைப்பதனாலாகும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஐ.சி.சியின் பதிவாளரிடம் நிபந்தனையுடன் (அதாவது ஒரு குறிப்பிட்ட குற்றங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு) அல்லது நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்வதாக இந்தச் செயல்முறை உறுதியளிக்கிறது. இரண்டாவதாக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் மூலம் நிலைமையை நீதிமன்றத்திற்கு அனுப்புவதாகும். எவ்வாறாயினும், ஐ.சி.சி.யிடம் விதி 12(3)பிரகடனத்தினூடாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அல்லது ஐ.சி.சி.க்கு நிலைமையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பரிந்துரைப்பதற்கான சாத்தியப்பாடுகளின்மையையே கடந்தகால நிகழ்வுகளும் உறுதி செய்கிறது. 

மே-2009இல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வடகிழக்கு இலங்கையில் வெளிப்படும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கவலை தெரிவித்தது. ஆனால், அப்போது உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்ட மோதலின் போது, லிபியா மற்றும் டார்பூர் (சூடான்) ஆகிய இடங்களில் நடந்த குற்றங்களுக்கு இணையாக கருதப்படும் சர்வதேச குற்றங்கள் நடந்ததாகக் கூறப்பட்ட போதிலும், இலங்கையின் நிலைமை அதேபோன்ற பரிசீலணையை ஐ.நா பாதுகாப்பு சபை அல்லது சர்வதேச சமுகத்திடம் பெறவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இரு தசாப்தங்களை அடைந்துள்ள போதிலும், ஐ.நா. பாதுகாப்பு சபை இரண்டு சூழ்நிலைகளை மட்டுமே(லிபியா, டார்பூர்) ஐ.சி.சி ரோம் சட்டத்தில் இணங்காத அரசை ரோம் சட்டத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. சர்வதேச அழுத்தம் குறைந்து வருவதால், தற்போது ஐ.நா பாதுகாப்பு சபை இதேபோன்ற முறையில் செயல்படுவதற்கு போதுமான வேகம் உள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும், சக்திவாய்ந்த புவிசார் அரசியல் இருப்பைக் கொண்ட ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இலங்கையின் தொடர்புகள் காரணமாக, ஐ.சி.சி.க்கு இலங்கையின் நிலைமையை ஐ.நா பாதுகாப்பு சபை பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் இருண்டதாகவே உள்ளது.

எனவே, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமெனும் தமிழரசியல் தரப்பின் பிரச்சாரங்களின் வழிவரைபடத்தை ஈழத்தமிழர்கள் வினாவ வேண்டிய தேவை காணப்படுகின்றது. மேலும் விசேடமாக தென்னாசியா நாடுகளில் சர்வதச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்க விதியாகிய ரோம் சட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, தென்னாசியாவின் பெரியண்ணா கொள்கையை வெளிப்படுத்தும் இந்தியாவும் ரோம் சட்டத்துக்கு கையெழுத்திடாமை ஈழத்தமிழர்களுக்கு சாதகமற்ற சூழலையும் இலங்கை அரசாங்கத்துக்கான வாய்ப்பான சூழலையுமே வெளிப்படுத்தி நிற்கின்றது. கடந்தகால உள்நாட்டுப் போரின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் தமிழரசியல் பிரச்சாரங்கள் சிறந்த மழுப்பலாகவே உள்ளது. பிரச்சார அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிரசியல் செயற்பாட்டுக்கான வியூகங்களை பரந்தளவில் உரையாட முன்வரவேண்டும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-