சீனா மீதான ஈழத்தமிழரின் எதிர்ப்பரசியல் தந்திரோபாய ரீதியானதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தினால், இலங்கையினை தமது தேசிய நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகள் போட்டிபோடுகின்றன. அதற்கு சாதகமாக  இலங்கையின் தேசிய இனங்கள் மீது அக்கறை செலுத்துவதனூடாக தமது தேசிய நலனை ஈடேற்றி கொள்ள அந்நாடுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன. இதனை சிங்கள தேசிய இனம் சிறப்பாக கையாண்டு வருகின்றது. அரசுடைய தரப்பாக தமது அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி சர்வதேச ஆதிக்க நலனில் எதிர்முனையாக உள்ள அரசுகளையும் ஓரணியாக தமது நலனை ஈடேற்றி கொள்ள பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் சமாந்தரமாக கையாண்டு தமது நலனை சிங்கள தேசிய இனம் நிறைவேற்றிக்கொள்கிறது. எனினும் தமிழ்த்தேசிய இனம் அவ்வாறான இராஜதந்திர பொறிமுறைக்குள் நகர்வதில்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. குறிப்பாக அண்மைக்காலத்தில் வடக்கு-கிழக்கு மக்ககளின் மீது அக்கறை செலுத்துவதான காட்சியை சீனா அரங்கேற்றி வருகின்ற போதிலும், சீனாவை எதிர்மனப்பாங்குடன் சீனாவின் உதவித்திட்டங்களை முழுமையாக விமர்சிக்கும் உரையாடல்களே தமிழ்ப்பொதுவெளிகளில் காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய இனம் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகள் தொடர்பாக கொண்டிருக்க வேண்டிய பார்வையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓக்டோபர்-02(2022)அன்று இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென ரூபா 43 இலட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில், வடக்கு-கிழக்கு பல்கலைக்கழங்கள் சீன புலமைப்பரிசில் உதவியை நிராகரிக்க வேண்டும் எனும் எதிர்ப்பு அறிக்கைகள் தமிழ் பரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. சீனத்தூதரகத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உதவி குறித்து வெளியாகியுள்ள சிலரது விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் 'சீனாவின் உதவியை அரசியலாக பார்ப்பது ஆச்சரியமளிக்கிறது' எனக்குறிப்பிட்டுள்ளார். துணைவேந்தரின் எண்ணங்களில் அரசியல் பதிவுகள் காணப்படாவிடினும் இதன் விளைவுகள் அரசியல் தாக்கம் நிறைந்தவையாகவே காணப்படுகின்றது. குறிப்பாக சீனத்தூதரகத்தின் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கான நிதிப்பகிர்வு தொடர்பான அறிவுப்புக்கு பின்னர், இந்திய கொள்கைவகுப்பாளர்களும் தூதுவர்களும் வடக்கு-கிழக்கிற்கு மேற்கொண்டுள்ள விஜயம் மற்றும் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்விக்கான விசேட புலமைப்பரிசில் அறிவிப்புக்கள் என்பன அரசியல் விளைவின் நீட்சியாகவே அமைகின்றது. இவ்அரசியல் மோதுகையில் சீனா தொடர்பான ஈழத்தமிழர்களின் வெளிப்பாடுகளை அவதானித்தல் வேண்டும்.

முதலாவது, யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவ நலச்சேவைக்கான சீன நிதியுதவியை முதலில் எதிர்த்து அறிக்கை வெளியிட்டவர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே காணப்படுகின்றார்கள். அண்மைக்கால யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கைகள் பெருமளவில் சீனா எதிர்ப்பாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இறால் பண்ணை விவகாரம், இனப்படுகொலை குற்றச்சாட்டில் இலங்கை அரசுக்கான ஆதரவு என தொடர்ச்சியாக சீனாவிற்கு எதிரான அறிக்கையும், மாறாக இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதிமன்றத்துக்கான நகர்த்துவதற்கான கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நடுநிலைமை எனும் போர்வையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு நழுவும் போக்கை கடைப்பிடிப்பது தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தொடர்பில் பொதுவெளியில் அதிக சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மாணவர் ஒன்றியத்தினை தூதரகங்கள் நேரடியாக கையாள்கின்றது என்ற விமர்சனப்பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றது.

இரண்டாவது, தமிழ் அரசியல் தலைமைகளும் சீனாவை விலத்தி நின்று பார்க்கும் நிலைப்பாடுகளே காணப்படுகின்றது.  குறிப்பாக சீன விஸ்தரிப்பு வாதம் பற்றி உலக அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி சீக எதிர்ப்புவாத பிரச்சாரங்களை பாராளுமன்றத்தின் முன்வைக்கின்றார்கள. குறிப்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் சீனா தொடர்பாக கருத்துரைக்கையில், 'பல ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் அவர்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலமும், இந்த நாடுகளால் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாதபோது திருகுகளை இறுக்குவதன் மூலமும் அவர்களால் உறுதியாக காலூன்ற முடிந்தது. நாங்கள் சீனர்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நமது நாடு சீனர்களிடம் அடமானம் வைக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்' எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள தேசிய இனத்துக்கு தமது தேசம் மீதில்லாத அக்கறையை தமிழ் தலைமைகள் முதன்மைப்படுத்துவது நகைப்பான செயலாகவே அவதானிக்கப்படுகின்றது.

மூன்றாவது, தமிழ் ஊடகப்பரப்பிலும் சீன எதிர் மனோநிலையே தமிழ் மக்களிடம் கட்டமைக்கப்படுகின்றது. சீனாவிற்கு எதிரான செய்தி வீச்சுக்களை அதிகம் தமிழ் ஊடகப்பரப்புக்கள் அதிகம் முதன்மைப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னைய பந்தியில் குறிப்பிட்டுள்ள வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் நிதிப்பகிர்விலும் தமிழ் ஊடகங்களின் சீனா எதிர் மனோநிலை அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த எட்டு வருடங்களாக சீனத்தூதரகத்தால் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போது எவ்வித செய்தி வீச்சுக்களையும் பெறவில்லை. எனினும் 2022ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பகிரப்படுகையில் அது முதன்மையான செய்தி வீச்சை பெற்றுள்ளது.

தமிழ்த்தரப்பின் சீனா எதிர்ப்பு மனோநிலை என்பது இயல்பாக இந்தியா சார்பான மனோநிலைமையின் வெளிப்பாடேயாகும். இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையே உள்ள பாராம்பரிய கலாச்சார பிணைப்பு மற்றும் மகாவம்சத்தில் தமிழர்கள் சார்ந்து இந்தியா தொடர்பாக சிங்கள தேசியத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய எதிர்ப்பு மனோநிலை வெளிப்பாடுகள் என்பன ஈழத்தமிழர்கள் இந்தியாவையே முழுமையான மீட்பராக எண்ணும் மனோநிலையை உருவாக்கியுள்ளது. எனினும் இந்தியாவின் சீனா தொடர்பான பார்வை, இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கை மற்றும் இந்தியாவின் இயலுமை தொடர்பில் ஈழத்தமிழர்கள் நுணுக்கமான அவதானிப்பை செலுத்த வேண்டி உள்ளது.

ஒன்று, சீனாவினை சர்வதேச வல்லரசு போட்டிக்குள் முதன்மையாக உள்ள வலிமையான தேசமாக அங்கீகரிக்கும் மனோநிலையிலேயே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர் மட்டத்திலும் மற்றும் இந்திய இராஜதந்திரிகளிடமும் காணப்படுகின்றது. இலங்கைக்கான சீனாத் தூதுவர் ஷிவென் ஹொங் ஊடகங்களுக்கு எழுதிய கட்டுரையொன்றில், 'சில நாடுகள் அருகில் அல்லது தொலைவில் இருக்கலாம். பல்வேறு அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மிதித்து, அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், மற்றும் ஒருமைப்பாட்டை மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக் கொள்ளாது. சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும்' என்றார். இதற்கு பதிலளித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால்பால்கே, 'சீனத்தூதுவரின் கருத்துக்களை நாங்கள் கவனித்துள்ளோம். அவரது அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவது தனிப்பட்ட பண்பாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய தேசம் என்ற மனப்பாண்மையாக இருக்கலாம்' என்றார். சீனாவின் மேலாண்மையை ஏற்கும் கருத்தாடலாகவே இலங்கைக்கான இந்திய தூதுவரின் கருத்து அமைகின்றது. 

இரண்டு, இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக பொருளாதார ஒத்துழைப்புக்களில் இறுக்கமான பிணைப்பை தொடர்கிறது. செப்டெம்பர் இறுதியில், ஐநா பொதுச் சபையின் வருடாந்திர அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பார்வையாளர்களுடனான உரையாடலின் போது, எல்லைப் பிரச்சினைகளுக்கு மத்தியில் சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் எழுச்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, சீனாவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்பாக கருத்துரைத்திருந்தார். அதாவது, 'ஆசியாவின் எழுச்சி பற்றிய முழு யோசனையின் காரணமாக, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் இடமளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பது பரஸ்பர நலனில் உள்ளது. இது கண்டத்தின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் ஒன்றோடொன்று ஒத்துப்போவதில் உறுதியாக உள்ளது.' எனக்குறிப்பிட்டார். மேலும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பேராசிரியர் ஒருவர் கலந்துரையாடல் ஒன்றில் சீனா எதிர் இந்தியா என்ற எண்ணங்களில் இந்தியாவை அணுக நினைப்பது ஈழத்தமிழர்களின் பலவீனமான பகுதியாகும். இந்தியாவும் சீனாவும் பலமான பொருளாதார இணைப்பில் தொடர்வதாக குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும். 

மூன்று, இந்தியாவின் பிராந்திய வெளியுறவுக்கொள்கையானது அரசுடனான பிணைப்பிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இலங்கையும் இந்தியாவும் அரசு கட்டமைப்பு என்ற அடிப்படையில் தமது அரசு இயந்திரங்களூடாக தம்மிடையேயான பிணைப்பை இறுக்கப்படுத்தி உள்ளது. குறிப்பாக 2019இல் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷாவின் வெற்றியை தொடர்ந்து இந்திய-இலங்கை உறவு தொடர்பில் அதிக எதிர்மறையான உரையாடல்கள் மேலெழும்பியது. எனினும் பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக்கட்சியினை சேர்ந்த மிலிந்த மொறகொடாவை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமித்து இந்தியாவுடனான உறவை சரிசெய்தது. மிலிந்த மொறகொடவும் அதனை நுட்பமாக கையாண்டிருந்தார். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையானது இலங்கை அரசாங்கத்தை எதிர்க்காது அனுசரித்து செல்வதை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளமையின் பிரதிபலிப்பே ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்களின் இந்திய அரசின் நடுநிலைமையாகும்.

எனவே, ஈழத்தமிழர்கள் இந்தியாவையும் சீனாவையும் தெளிவாக அடையாளங்காண்பதுடன் உறவுகளை ஏற்படுத்துவதும் தந்திரங்களை பிரயோப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. சிங்கள தேசியத்தில் வரலாற்றுரீதியாக இந்திய தொடர்பான எதிர்ப்பு மனோநிலை கட்டமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் சிங்கள தேசம் தனது நலன் கருதி இந்தியாவை முழுமையாக விரோதிக்காத அதேவேளை சீனாவுடனும் சமாந்தரமாக உறவை பேணி வருகின்றது. இத்தகைய இராஜதந்திர பொறிமுறைகளை ஈழத்தமிழரசியல் தரப்பினரும் அணுக வேண்டிய தேவை காணப்படுகின்றது. 21ஆம் நூற்றாண்டின் ஆசிய நூற்றாண்டின் வல்லரசாக சீனாவே பல சர்வதேச அரசியல் அறிஞர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வானதொரு சூழலில் சீனாவை முழுமையாக விரோதிப்பது ஆபத்தான அரசியல் போக்கின் வெளிப்பாடாகவே அமைகின்றது. அரசியல் என்பது இராஜதந்திர செயற்பாடாகும். இந்தியா மற்றும் சீனா இடையே ஈழத்தமிழர் தமது தேசிய நலனை சமப்படுத்தும் வகையிலான இராஜதந்திர பொறிமுறையை நெறிப்படுத்துகையிலேயே ஈழத்தமிழரசியல் இருப்பு உறுதிப்படுத்தக்கூடியதாக காணப்படும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-