தமிழ்த்தேசிய அரசியல் தரப்பின் பிளவுகள் தமிழின அழிப்பின் வடிவமே! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்த்தேசியத்துக்குள் பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ்த்தேசிய வரலாற்றுடன் தவிர்க்க முடியாத இணைப்பாகவும் தமிழ்த்தேசிய வீழ்ச்சிக்கான களமாகவும் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது. தமிழ்த்தேசிய கட்சியாக மக்களால் அடையாளப்படுத்தி பேணப்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் 2009களுக்கு பின்னர் கூட்டு கட்சிகளிடையே முறிவுகள் ஏற்பட்டு தொடர்ச்சியாக சிதைவுற்று வந்தது. 2010இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணணி, 2015இல் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் 2019களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ரெலோ கிளையென தொடர்ச்சியாக கூட்டமைப்பின் கூட்டிலிருந்து வெளியேறின. அதன் எதிர்விளைவுகளை 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் முடிவுகளிலும் அவதானிக்கக்கூடியதாக அமைந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் முதன்மையான கட்சியாக காணப்படும் தமிழரசுக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டு பூதாகாரமான உரையாடலை ஆரம்பித்துள்ளது. தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் பிளவுபட்டுள்ள தமிழ்த்தேசிய கட்சிகளிடையே கூட்டை மீளவும் கட்டமைப்பது தொடர்பான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்முவரும் சமதளத்தில் தமிழரசுக்கட்சிக்குள் முரண்பாடு அதிக குழப்பங்களை தமிழ்த்தேசிய பரப்பில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை தமிழரசுக்கட்சியின் உள்ளக முரண்பாட்டு போக்கையும் தமிழ்த்தேசிய அரசியலில் அது ஏற்படுத்த உள்ள விளைவுகளை தேடுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழ்த்தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமது கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் எதேச்சதிகார போக்கினால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு போக்குகள் தொடர்பில் பகிரங்க உரையாடலை முன்வைத்திருந்தார். சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகவே இனி தமிழ்தேசிய கூட்டமைப்பு செயற்படுமென சிறீதரன் தெரிவித்தார். 'கடந்த காலங்களில் சுமந்திரன் எடுத்த முடிவுகளின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருப்பாகவும்,  சுமந்திரன் 22வது திதுத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், எதிராக வாக்களிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். எனது அவதானத்தின் படி, எமது கட்சிக்குள் சுமந்திரனுக்கு எதிராக முடிவெடுக்கும் போக்கே அதிகமாக உள்ளதெனவும்' சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 'புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து ஒரு வருடத்திற்குள் தீர்வுகாணும் ரணிலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக எவருடனும் பேசாமலே அவர் கூறிவிட்டார். யார் எதிர்ப்புக் கூறுவார்கள் என்ற எண்ணம், கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை இன்னும் பல பின்னடைவுகளைத் தரும் என்பதை அவர் எப்போது புரிந்துகொள்வாரோ தெரியவில்லை' எனத் தெரிவித்திருந்தார். தமிழரசுக்கட்சி யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான முரண்பாடு பொதுப்பரப்பில் அதிக ஊகங்களை உருவாக்கியுள்ளது. 

ஒன்று, முதன்மையானதாக இம்மோதலை தலைமைத்துவ போட்டி சார்ந்ததொன்றாக உரையாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மூப்பினாலும் நோயினாலும் வறிதாகும் நிலைமைகளே காணப்படுகின்றது. அத்துடன் தமிரசுக்கட்சியின் தலைவர் கடந்த பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தலைவரின் பிரசன்னம் இன்மையாலும், அவரது செயற்றிறனின்மை பற்றி உரையாடல்களாலும் தமிரசுக்கட்சிக்கு புதிய தலைமை சார்ந்த உரையாடல்களும் பொதுவெளியில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இப்பின்னணியிவேயே தலைமைத்துவத்திற்கான முன்னறிவிப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே கட்சிக்குள் முரண்பாட்டு சூழல் உருவாகியுள்ளதாக பொதுமக்களின் மற்றும் அரசியல் அவதானிகளின் உரையாடல்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

இரண்டு, தேர்தல் தொடர்பான எதிர்வுகூறல்கள் காணப்படுவதனால் தேர்தலை மையப்படுத்திய வாக்குவங்கி சேகரிப்புக்கான நாடகமாகவும் குறித்த முரண்பாடுகள் பொதுவெளியில் ஊகிக்கப்படுகிறது. குறிப்பாக, சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் கடந்த பொதுத்தேர்தலில் ஒன்றாக செயற்பட்டிருந்தனர். இதன்விளைவாகவே கடந்த பொதுத்தேர்தலில் சிறிதரனின் வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டதாகவும் அன்றைய காலங்களில் உரையாடப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 80 000க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்ற சிறிதரன் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 30 000 விருப்பு வாக்குகளுக்குள் சுருங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இதுவரை சுமந்திரனின் எதேச்சதிகார போக்குகள் தொடர்பில் எவ்வித ஆரோக்கியமான எதிர்ப்பையும் வினைத்திறனான செயற்பாடுகளையும் முன்னெடுக்காதிருந்த சிறிதரன், தேர்தலில் மீள தனது வாக்கு வங்கியை பலப்படுப்பத்துவதற்காகவே தேர்தல்கள் பற்றிய எதிர்வுகூறல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் உரையாடுவதாக தெரிவிக்;கப்படுகின்றது. 

மூன்று, பிராந்திய, சர்வதேச அரசியல் தாக்கங்களும் அவதானிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டக்குழுக்களிலும் தமது செயற்பாடுகளில் இணங்கிப்போகாத ஆயுதப்போராட்டக்குழுக்களை பலவீனப்படுத்துவதிலும், தமக்கு ஆதரவான அணிகளை பலப்படுத்துவதிலும் பிராந்திய சர்வதேச அரசுகள் செயற்பட்டிருந்தமை அவதானிக்க கூடியதாக காணப்பட்டது. அவ்வாறானதொரு பிரதிபலிப்பு சமகாலத்திலும் எழுந்துள்ளதாக அவதானிக்கப்படுகிறது. தமிழ் தலைமைகள் பிராந்திய சர்வதேச அரசுகளை சரியாக புரிந்து கொண்டு ஈழத்தமிழர்களின் நலனை பிராந்திய சர்வதேச அரசுகளின் நலன்களுக்குள் இணைக்க திரானியற்றவர்களாக  காணப்படுகின்றார்கள். அத்துடன் பிராந்திய சர்வதேச அரசுகளின் இயலுமைகளை சரியாக அடையாளம் காணவும் தவறிவருகின்றார்கள். இந்நிலைமையிலேயே தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடத்திற்கு தமது எண்ணங்களுக்குள் பயணிக்கக்கூடியவர்களை முதன்மைப்படுத்தும் செயற்பாட்டை பிராந்திய சர்வதேச அரசுகள் மேற்கொள்வதாகவும் ஊகிக்கப்படுகின்றது. இதற்கான வரலாற்று அனுபவங்களும் தமிழ்த்தேசிய பரப்பில் அதிகமாகவே காணப்படுகின்றது.

தமிழ்த்தேசிய நலன்களுக்கு அப்பால், தமது சுயநலன்களுக்காகவும் பிற அரசுகளின் இயக்கவிசையிலும் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு போக்கானது தமிழ் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடியதாகவே காணப்படுகின்றது. முரண்பாட்டு போக்கின் விளைவுகளை நுணுக்கமாக அவதானிப்பது அவசியமாகிறது.

முதலாவது, அனைத்து தமிழ்த் தரப்பினையும் ஓரணியில் திரட்டி அதியுச்ச பேரம்பேசும் சக்தியைக் கொண்ட 'தமிழ்த் தேசிய திரட்சியான அரசியல் சக்தியை' ஏற்படுத்தி விட முடியும் என்பது பலரது கனவாகவே மாற வாய்ப்புள்ளது. பிளவுற்றுள்ள தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழனத்தின் எதிர்கால நலன்களை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட பகிரதப்பிரயத்தனத்தினால் கட்சிகளை ஒரு தளத்திற்கு கொண்டுவந்தார். ஆனால், சுயநல அரசியலாலும், எதேச்சதிகார எண்ணங்களாலும் நெகிழ்வுப்போக்கற்ற நிலையில் ஆண்டகையின் முயற்சி தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சிவில் அமைப்புக்கள், சமயத்தலைவர்கள், துறைசார் நிபுணத்துவமானவர்களை கொண்ட அமைப்புக்கள் யாழ்.பல்கலை மாணவர்கள் என்று பலரும் ஒற்றுமைக்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் அப்படியே அடித்துச் செல்லப்பட்டது. சிறிதுகாலமாக கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டு, திரளாக இருப்பவர்களின் செயற்பாட்டில் வினைத்திறனை எதிர்பார்க்கையில், நீண்ட பாரம்பரியத்தை கொண்ட தமிழரசுக்கட்சிக்குள்ளான முரண்பாடு தமிழ்த்தேசிய திரட்சியை மேலும் பலவீனப்படுத்தும் கூறாகவே அமைகின்றது.

இரண்டாவது, தமிழரசுக்கட்சியின் தேசியம் சார்ந்த செயற்பாடுகளில் 2009களுக்கு பின்னர் அதிக கேள்விகள் காணப்படினும், தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட தமிழ்க்கட்சிகளிடையே வடக்கு-கிழக்கு முகத்தை பூரணப்படுத்துமோர் கட்சியாக தமிழரசுக்கட்சி மாத்திரமே காணப்படுகின்றது. பிற கட்சிகள் அதிகம் வடக்கிற்குள் செல்வாக்கு செலுத்துமளவிற்கு கிழக்கில் ஆழமான தாக்கத்தை பெறவில்லை. தமிழரசுக்கட்சியை பிளவுகளூடாக அழிக்க நினைப்பது வடக்கு-கிழக்கு தாயகக்கோட்பாட்டின் அரசியல் செயற்பாட்டிற்கு அதிக அச்சுறுத்தலை உருவாக்கக்கூடியதாகும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான அணியினர் வடக்கு-கிழக்கில் பிரிவினை எண்ணங்களை உருவாக்குவதில் மும்மரமாக செயற்பட்டு வருகின்றனர். எனினும் தமிழ்த்தேசிய முலாம் பூசியோர் எதிர்ப்பாளர்களுக்கு நிகரான விதத்தில் வடக்கு-கிழக்கு தமிழ்த்தேசிய தாயகக்கோட்பாட்டை பேணுவதில் வினைத்திறனான செயற்பாட்டை முன்னெடுப்பதில்லை. இந்நிலையில் ஒப்பீட்டளவில் வடக்கு-கிழக்கு முகத்தை வெளிப்படுத்தும் கட்சியாகவாயினும் இருக்கும் தமிழரசுக்கட்சியும் பிளவுகளூடாக அழிக்கப்படுவது தமிழரசியில் வடக்கு-கிழக்கு தாயகக்கோட்பாட்டை முழுமையாக சிதைக்கக்கூடிய சூழலையே வெளிப்படுத்தும்.

மூன்றாவது, தமிழரசுக்கட்சியின் முரண்பாடும் எழுப்பப்பட்டுள்ள விமர்சனமும் தமிழ்த்தேசிய பரப்பிலுள்ள ஜனநாயக இயல்பையே அதிகம் கேள்விக்குட்படுத்தியுள்ளது. எம்.ஏ. சுமந்திரன் மீது சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தமிழரசுகட்சியின் மத்திய குழுவால் ஜனநாயக முறையில் விசாரிக்கப்பட்டிருப்பின், தமிழரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு பொதுவெளியில் வந்திருக்க வேண்டிய சூழல் அமைந்திருக்காது. தமிழரசுக்கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகமின்றி தனியொருவரின் எதேச்சதிகாரத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்தன் வெளிப்பாடும் வெடிப்புமே இன்றைய முரண்பாட்டு காட்சிகளாகும். 2009களுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சி, பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சி என்ற இறுமாப்புடன் ஏகாதிபதியாக இருந்த இலங்கை தமிழரசுக்கட்சியும், அரசியல் குழுவின் தலைவர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அனைத்து தீர்மானங்களையும் கட்சித்தலைமைகளை கடந்து சம்பந்தன் முடிவெடுத்தமையும் எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்தி கூட்டுக்கட்சிகளை வெளியேற வைத்ததோ அவ்வாறானதொரு சூழலே இன்று தமிழரசுக்கட்சியிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஊடகப்பேச்சாளர் என்றதொரு நிலையில் கட்சியின் எண்ணங்களை புறந்தள்ளி கட்சிக்குள் ஜனநாயகரீதியான கலந்துரையாடலின்றி தனது எண்ணங்களை கட்சியின் எண்ணங்களாய் வெளியே கொண்டு செல்வதும் அரசியல் முடிவுகளை எடுப்பதுவும் தமிழரசுக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது. 'புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து ஒரு வருடத்திற்குள் தீர்வுகாணும் ரணிலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக எவருடனும் பேசாமலே அவர் கூறிவிட்டார். யார் எதிர்ப்புக் கூறுவார்கள் என்ற எண்ணம், கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை இன்னும் பல பின்னடைவுகளைத் தரும் என்பதை அவர் எப்போது புரிந்துகொள்வாரோ தெரியவில்லை' எனும் சிறிதரனின் நேர்காணல் குறிப்பு தமிழரசுக்கட்சியின் உட்கட்சியின் ஜனநாயமின்மையையே வெளிப்படுத்துகின்றது. கட்சிக்குள் ஜனநாயகமற்ற தமிழரசுக்கட்சி மக்கள் ஜனநாயகத்தை எவ்வாறு மதிக்குமென்பதே பலரது வினாவாக உள்ளது. அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள், தேசியத்திற்கும் ஜனநாயகத்துக்குமான உறவு பற்றிய தொகுப்பில், 'ஒரு இன அடையாளத்தின் மூலமாக மக்கள் திரள் கூட்டாகசேரும் பொழுதில் தேசியம் உருவாகினாலும், ஜனநாயகமே அதற்கு உயிர்மூச்சாய் திகழ்கின்றது' என்கிறார். இவ்வாறான பின்னணியில் உட்கட்சி ஜனநாயகத்தை பேணத்தவறுவோர் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்துகிறார் என்பதுவே  உறுதியாகிறது.

எனவே, தமிழரசுக்கட்சியின் முரண்பாடு தமிழ்த்தேசியத்தின் சிதைவின் ஒரு அங்கமாகவே அமைவதென்பது உறுதியாகின்றது. கூட்டமைப்புக்குள் தமிழரக்கட்சியின் எதேச்சதிகாரம் மற்றும் தமிழரசுக்கட்சிக்குள் தனிநபர் ஆதிக்கங்கள் என்பது முற்றாக களையப்பட வேண்டியதாகும். தமிழரசுக் கட்சியானது தமிழ்தேசியத்துக்கான கட்சியாக திருத்தப்பட வேண்டிய கட்சியே அன்றி முற்றாக அழிக்கப்பட வேண்டியது இல்லை. தமிழரசுகட்சி ஜனநாயகத்தன்மையுடன் மீளமைக்க வேண்டிய தேவைப்பாடுகளே காணப்படுகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சி 'கட்சியாக' இல்லை, தமிழ்த் தேசியத்தின் திரட்சியை வெளிப்படுத்தும் ஷகூட்டமைப்பு கட்டமைப்பாக' இல்லை என்பதுவே தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் பலரின் துன்பியலாக உள்ளது. தமிழரசுக்கட்சி சரியாக கட்டமைக்கப்பட்டு கூட்டமைப்பும் முறையாக பதிவாகின்றபோது தமிழர்களுக்கான வலுவானதொரு அரசியல் இயக்கம் அமையும் என்பது பலரது கருத்து. ஆனால் கூட்டமைப்பு சிதைவுற்ற காலம் போய் இன்று தமிழரசுக்கட்சியும் அழிந்து கொண்டு செல்கின்றது. இதேவேளை, தென்னிலங்கையில் கூட்டுக்களை பிரிக்கு ஆளுமையாக குறிப்பிடப்படும் ரணில் விக்கிரமசிங்கா தனது எதிர்கால இருப்புக்கான வியூகங்களை தேடுகையில், தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒன்றுபட முடியாதிருப்பதும், ஆகக்குறைந்தது ஒரேகட்சிக்குள் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாதிருப்பதும் தமிழினத்தின் சாபக்கேடு என்பதற்கு அப்பால் தமிழின அழிப்பின் மற்றொரு வடிவமே அவதானிக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-