ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிங்கள கட்சிகள் ஓரணியில் திரளுமா? -சேனன்-
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான உரையாடல்கள், தென்னிலங்கை அரசியலில் சமகாலத்தில் முதன்மையான பிரச்சாரமாக காணப்படுகின்றது. எனினும் இதன் நம்பகத்தன்மை தொடர்பில் பல சந்தேகங்களை கடந்த கால அனுபவங்கள் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அரசுகளின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான பிரச்சாரமாகவே தென்னிலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த பிரச்சாரங்கள் அவதானிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பிலான பலவீனங்களை கூறி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை கிடப்பில் போடும் நகர்வே தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தென்னிலங்கை பிரச்சாரத்தின் இறுதி படிமுறையாக தமிழ் அரசியல் அவதானிகளின் கணிப்பு உள்ளது. எனினும் அண்மையில் தென்னிலங்கையில், ஈழத்தமிழரசியல் தரப்பில் உள்ள ஒற்றுமையின்மையை முதன்மைப்படுத்தி இடம்பெற்றுள்ள உரையாடல்கள் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு ஈழத்தமிழ் அரசியல் தரப்பினரே தடையாக உள்ளார்களென்ற பார்வையை சர்வதேச சமுகத்திற்கு திணிக்கும் நடவடிக்கையா என்ற கோணத்தில் தமிழரசியல் அவதானிகள் தேடலை மேற்கொண்டுள்ளனர். இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் கடந்த காலங்களில் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்திய தரப்பினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழரசியல் தரப்பின் ஒற்றுமையின்மை தொடர்பிலும், அதுசார் பலவீனமான விளைவுகளும் தமிழரசியல் ஆய்வு பரப்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படும் விடயமாகவே காணப்படுகின்றது. அண்மையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரனும், 'ஒற்றுமை இல்லாத காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பு முடங்கியுள்ளதாக' தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது புதிதான விடயமல்ல. இலங்கையின் தமிழ் அரசியல் வாரலாற்றிலே எழுபதுகளின் நடுப்பகுதி வரை வியாபித்திருந்த மிதவாத அரசியலிலும், பின்னர் தோற்றம் பெற்ற தமிழ் தீவிரவாத அரசியலிலும் போராட்ட வடிவம் மாற்றம் பெறினும் ஒற்றுமை என்பது கானல் நீராகவே தமிழ் அரசியல் தரப்பில் இருந்து வந்துள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சரான லலித் அத்துலத் முதலி கூட ஒருதடவை, 'தமிழ் ஆயுதப் போராளிகள் ஒற்றுமையின்றி இருந்ததே அவர்களை எதிர்கொள்ள வாய்ப்பாக இருந்தது. அவர்கள் ஒற்றுமைப்பட்டிருப்பார்களே ஆனால், தமது இலக்கை விரைவாகவே அடைந்திருப்பார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் தமிழர் தரப்பில் ஒற்றுமையின்மை என்பதை தென்னிலங்கை அரசியல் தரப்பு நன்கறிந்து வைத்துள்ளதையும், அதன் மூலம் அரசியலில் தமது காய் நகர்த்தல்களை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் தென்னிலங்கை கொண்டிருப்பதை நோக்க முடிகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அண்மைய கருத்தும் காணப்படுகின்றது. அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'இந்த ஜனாதிபதியும் சரி, இந்த அரசும் சரி தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணத் தயாராகவுள்ளது. ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்த அரசுடன் நெருங்கிச் செயற்படுகின்றனர். இன்னொரு பகுதியினர் இந்த மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகின்றனர். மற்றொரு பகுதியினர் தங்களுக்கிடையிலான கட்சி ரீதியிலான மோதலால் ஒதுங்கி நிற்கின்றனர். பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும்' எனத்தெரிவித்துள்ளார்.
நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்து தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தென்னிலங்கை அரசாங்கம் அக்கறையுடன் காணப்படுகின்ற போதிலும், ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமையின்மையே தீர்வை தள்ளிப்போட காரணமாகின்றது என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது தவறான கற்பிதமாகும். தமிழரசியல் தரப்பின் பிளவுகளும் அதுசார் பாதகமான விளைவுகளும் மறுதலிக்க இயலாத உண்மையே ஆகும். எனினும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற கருத்துநிலையில் ஈழத்தமிழரசியல் தரப்பு சமஷ்டி என்ற ஒற்றை முனையில் ஒன்றினைபவர்களாகவே காணப்படுகின்றார்கள். தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் சமஷ்டி அலகையே வலியுறுத்துகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இரு தேசம் ஒரு நாடு என்ற சொல்லாடலில் சமஷ்டியையே வலியுறுத்துகிறது. மேலும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கூட்டு சமஷ்டி என்ற கோரிக்கையில் சமஷ்டியின் வடிவத்தையே வலியுறுத்தி உள்ளனர். எனவே, தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வாக சமஷ்டியை வழங்குகையில் ஈழத்தமிழரசியல் தரப்பும் மக்களும் எந்த சந்தரப்பத்திலும் எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதில்லை.
இன்று ஈழத்தமிழரசியலின் ஒற்றுமையீனம் பற்றி பாடங்கற்பிக்கும் தென்னிலங்கை அரசியலின் ஒற்றுமையீனங்களே வரலாற்றில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு பெருந்தடையாக இருந்துள்ளது. இதனை தெளிவாக நோக்குதல் வேண்டும்.
முதலாவது, சுதந்திர இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் வகையிலான முதலாவது ஒப்பந்தமாக 1957ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா மற்றும் செல்வநாயகம் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம் காணப்படுகின்றது. குறித்த ஒப்பந்தம் முழுமையான சமஷ்டியை வெளிப்படுத்தாத போதிலும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப படியாக ஈழத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் இலங்கை சுதந்திர கட்சியால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஐக்கிய தேசிய கட்சி எதிர்த்தது. குறிப்பாக ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டி தலாதமாளிகை வரை பாதயாத்திரை மேற்கொண்டிருந்தனர். இவ்எதிர்ப்பு போராட்டத்தில் பௌத்த மதகுருமார்களும் ஒன்றிணைந்த நிலையில், 1958 ஏப்ரல் 9அன்று பண்டாரநாயக்கா குறித்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக கைவிடுவதாக அறிவித்தார்.
இரண்டாவது, இனப்பிரச்சினை தீர்வில் சிங்கள அரசியல் தலைமைகளின் ஒற்றுமையின்மைக்கான மற்றைய சான்று 1965ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தமாகும். டட்லி-செல்வா ஒப்பந்தமானது ஒப்பீட்டளவில் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை கொண்டிராத போதிலும், தொடர்ச்சியாக தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சி என்ற நிலையில் தமிழரசியல் தரப்பு இணக்கத்தை வெளிப்படுத்தியது. டட்லி-செல்வா ஒப்பந்தத்தை தொடர்ந்து தேசிய அரசாங்கத்திலும் தமிழரசுக்கட்சி அங்கம் வகித்து அமைச்சுப்பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் டட்லி சேனநாயக்கா தேசிய அரசாங்கத்துக்குரிய பண்பையே நிராகரித்திருந்தார். டட்லி-செல்வா ஒப்பந்த உள்ளடக்கங்களை நிராகரித்திருந்தார். குறிப்பாக, டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் பிரதான உள்ளடக்கமான மாவட்ட சபைக்கான வெள்ளை அறிக்கை 1968-ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அரசாங்க பாராளுமன்ற குழுவிலேயே எதிர்ப்பு காணப்பட்ட நிலையில் அச்சட்ட மூலம் கைவிடப்பட்டது. மேலும் உள்ளூராட்சி அமைச்சராக காணப்பட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்செல்வம் அவர்களால் திருக்கோணேஸ்வர ஆலய பிரதேசத்தை புனித நகராக பிரகடனப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தார். அதனையும் பிரதமர் டட்லி சேனநாயக்கா நிராகரித்த நிலையில், தமிழரசுக்கட்சி-ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமை சீர்குலைந்தது.
மூன்றாவது, 1987இல் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையையும் ஆளுங்கட்சியின் ஒரு பகுதியினராலேயே எதிர்க்கப்பட்டது. குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் அன்றைய காலப்பகுதியின் அடுத்த நிலை தலைவராகவும் பின்னாளில் ஜனாதிபதியுமாக இருந்த ரணசிங்க பிரேமதாசா தொடர்ச்சியாக எதிர்த்திருந்தார். மாகாண சபை முறைமைக்கு காரணமான இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரதான பங்காளரான இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது அவரை தாக்கிய செயற்பாடுகளுக்கு பின்னால் ரணசிங்க பிரேமதாசாவின் ஒத்துழைப்புக்கள் காணப்பட்டதாவும் கூறப்படுவதுண்டு. மாகாண சபை முறைமையை தமிழ்த்தரப்பும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்ற விவாதம் இன்று வரை காணப்படுகின்றது. சிங்கள அரசியல் தரப்பு மாகாண சபை முறைமையை எதிர்ப்பதென்பது குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட தமிழர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் சிங்களக் கட்சிகள் குறியாக உள்ளமையையே உறுதி செய்கின்றது. மாகாண சபை முறைமையை மையப்படுத்தி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதிலேயே 1987ஆம் ஆண்டிலிருந்தே சிங்களத் கட்சிகள் ஒன்றுக்கொண்று முரணாக செயற்பட்டு வருகின்றார்கள். 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்புக்கு பின்னர் 1310 பற்றி உரையாடிய மகிந்த ராஜபக்ஷா தலைமையிலான அணியினரே எதிர்க்கட்சியான பின்னர் 13ஐ முற்றாக நிரகரித்து பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
நான்காவது, 1997களில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தேசிய தேசிய இனப்பிரச்சினை தீர்வு திட்டத்தை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியை மேற்காண்டிருந்தார். குறிப்பாக வடக்கு-கிழக்கு இணைந்த இடைக்கால நிர்வாக சபைக்கான உரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழர்களின் நியாயமான கோரிக்கை ஓரளவு சந்திரிக்காவின் தீர்வுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்டத்திற்கான முன்யோசனையினை விடுதலைப்புலிகள் மற்றும் பிரதான தென்னிலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆகியன ஆதரித்த போதிலும், இறுதிக்கட்டத்தில் யாப்பு மீளமைப்பதிற்கு ஐக்கிய தேசிய கட்சி போதிய ஆதரவை வழங்க மறுத்துவிட்டது. 2000ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடு வஞ்சகமானது என உறுதிப்படுத்தும் விதிமுறைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசிய கட்சி புதிய யாப்பு சீர்திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்குள் எரித்தது. அத்தோடு சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் தீர்வு முயற்சியும் வலிதற்று போனது.
ஐந்தாவது, 2015இல் அமைக்கப்பட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமை சிதைக்கப்பட்டதோடு செயலிழந்து போனது. சிங்கள கட்சிகள் தமிழ் அரசியல் தரப்பை ஏமாற்றுவது தொடர்கதையாக அமைந்த போதிலும், 2015ஆம் ஆண்டு தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளான இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டாக இணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை உள்ளடக்கிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிக்கு தமிழரசியலில் அன்று ஏகபோக உரிமை செலுத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் நிபந்தனையற்ற முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது. எனினும் 2018ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்துக்குள் முறிவு ஏற்பட்டு இலங்கை சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி மகிந்த ராஜபக்ஷhவுடன் இணைந்து ஏற்படுத்திய அரசியல் குழப்பம் தேசிய அரசாங்கம் முனைந்த தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வையும் இடைநிறுத்தியது.
எனவே, கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மைகளினாலேயே வலுவிழந்து போயின. சிங்கள அரசியல் கட்சிகள் தேசிய இனப்பிரச்சினை தீர்வை குழப்ப வேண்டும் என்ற எண்ணங்களில் ஒருமித்து பயணித்தார்களேயன்றி தேசிய இனப்பிரச்சினை தீர்வு யோசனைகளில் ஒற்றுமையின்மையையே வெளிப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அரசியல் ஆய்வாளரான பார்தா எஸ்.கோஷ், 'இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருப்பதோடு, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி அடைந்திக்கும். பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் 1957ஆம் ஆண்டிலேயே இலங்கையில் சமஷ்டி அமைப்பொன்று தோன்றியிருக்கலாம்' எனக்குறிப்பிட்டுள்ளார். 1957 முதல் அனைத்து தீர்வு முயற்சிகளுக்கும் தமிழ்த்தரப்பு ஒத்துழைப்பை வழங்கியுள்ள போதிலும் சிங்கள கட்சிகளின் ஒற்றுமையின்மை தேசிய இனப்பிரச்சினையின் வரலாற்றை குருதி நிறைந்ததாக மாற்றியுள்ளது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமஷ்டி முறையில் அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர். அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்கான அழைப்பு எந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டாலும் சமஷ்டி முறையிலான தீர்வையே தமிழ் மக்களின் அனைத்துத் தரப்பினரும் அரசியல் தீர்வாக முன்வைத்துள்ளனர். தேசிய இனப்பிரச்சினை தீர்வை நிறைவேற்றுவதற்கு சிங்கள கட்சிகள் ஓர் அணியில் வருவதே அவசியமான தேவைப்பாடாகும்.
Comments
Post a Comment