ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்க இராஜதந்திரம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-
நல்லிணக்கம் என்பது உலக நாடுகளில் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள நாடுகளில் போருக்கு பின்னரான காலத்தை திறம்பட கையாண்டு பல்லின சமூக கட்டமைப்பிடையே சுமூக உறவை வளர்ப்பதற்கான பொறிமுறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான தேவைப்பாடு நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருப்பினும், 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு, அதன் வடுக்களை களைவதற்காக இலங்கையில் கொண்டுவரப்பட்ட சர்வதேச உரையாடலாகவே நல்லிணக்க வரவு அமைகிறது. எனினும் இலங்கையில் நல்லிணக்கம் என்பது சர்வதேச உரையாடலுக்கு அமைய இடம்பெறவில்லை. அரசியல் நெருக்கடியை கையாள்வதற்கான இராஜதந்திர பிரச்சாரமாகவே இலங்கை அரசாங்கங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கடந்த ஆட்சிக்காலங்களும் வேறுபட்டதாக அமைந்திருக்கவில்லை. இந்த பின்னணியிலேயே தற்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முதன்மைப்படுத்தும் நல்லிணக்கம் சார்ந்த உரையாடல்களும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக சந்தேகங்களை உருவாக்குகிறது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க உரையாடலின் அரசியல் பின்புலத்தை தேடுவதாவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் அண்மைக்காலமாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பிலும், நல்லிணக்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் பிரச்சாரங்களை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தென்னாபிரிக்க ஆதரவைப் பெறுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவைச் சந்தித்து உரையாடியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமீபத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், அவர்களது கருத்துக்களையும் செவிமடுத்துள்ளார். மேலும், முன்னைய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது. அதில் உலகதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்களின் தடை நீக்கம் உள்ளடங்கும். புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கத்துடன் மகாராணியின் இறுதிச்சடங்கிற்காக பிரித்தானிய சென்ற வேளை, அங்குள்ள புலம்பெயர் தமிழர்களை சந்தித்த ஜனாதிபதி புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றுகையில், 'வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்'' என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் நல்லிணக்கத்துக்கான உரைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் தமிழ் மக்களிடையே சந்தேகங்கள் மாத்திரமே நிறைந்து உள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இதயபூர்வ ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் கூட இம்முறை ஜனாதிபதியின் அறிவிப்புக்களுக்கு உடனடியாக இணக்கங்களை வெளிப்படுத்த இயலாத நிலையினையே வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், 'நல்லிணக்கம், மீள் குடியேற்றம், தொடர்பாக ஒருபுறம் பேசிக்கொண்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை' என குற்றம்சாட்டியுள்ளார். எனினும், புலம்பெயர் தரப்பில் குறிப்பாக தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இசைவான எதிர்வினை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேயதாச ராஜபக்சாவினை கனேடிய தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதி சந்தித்து தடை நீக்கத்தக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சந்திப்பில் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதி ஒரு நாடாக இலங்கைக்குள் சகல மக்களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல திட்டங்கள் கொண்ட ஆவணத்தை நீதி அமைச்சரிடம் கையளித்தாரென அரச பத்திரிகை செய்தியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான நல்லிணக்க உரையாடலை கண்மூடித்தனமாக நம்பும் போக்கு ஈழத்தமிழர்கள் ஒருபகுதியிடம் காணப்படுவதனால், இதனை சாதாரணமாக கடந்துவிட இயலாது. இலங்கையில் நல்லிணக்கப்பொறிமுறையின் வரலாறு ஒரு தசாப்தங்களை கடந்து விட்டது. எனினும் நல்லிணக்கம் என்பது சிறு முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும். கடந்த ஒரு தசாப்தங்களில் இன்றைய ஆட்சியாளர்களே முன்னைய அரசாங்கங்களிலும் பயணித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நல்லிணக்க பிரச்சாரத்தை முதன்மைப்படுத்தும் அரசியல் பின்னணிகளை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.
முதலாவது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கத்தை முதன்மைப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பிரச்சாரத்தை முதன்மைப்படுத்தும் காலத்தை அவதானிக்கையில் இதனை உறுதிப்படுத்தக்கூடியதாக காணப்படும். குறிப்பாக 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் சமகாலத்திலேயே நல்லிணக்க பிரச்சாரமும் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு நல்லிணக்க பொறிமுறையை அறிமுகப்படுத்தியவர்களாய் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளே காணப்படுகின்றது. குறித்த தாரளவாத நாடுகள் தமது செல்வாக்கை இலங்கையில் தொடர்ச்சியாக பேண நல்லிணக்கத்தையே கருவியாக கொண்டுள்ளனர். இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கான நிபந்தனையில் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளன. முன்னைய கோத்தபாய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் நிவாரண நிதியை பெறுவதற்கு மறுத்து வந்தமைக்கு பின்னால் சர்வதேச நாணய நிதியத்தின் நல்லிணக்கம் சார்ந்த அழுத்தங்களும் பிரதான காரணமாகும். எனினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தாரளா முகத்துடன் அதிகம் போலிகளை மெய்யாக காண்பிக்கும் ஆற்றலுடையவர். கடந்த கால அவரது செயற்பாடுகள் அதனையே உறுதி செய்கின்றது. குறிப்பாக, 2015-2018 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் மற்றும் 2019 ரணில் அரசாங்க காலப்பகுதிகளிலும் ரணில் இலங்கையில் நல்லிணகத்தை சர்வதேச செய்தியாக முதன்மைப்படுத்திய போதிலும், அதில் எவ்வித ஆக்கபூர்வ முன்னேற்றங்களையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறானதொரு தோற்றப்பாட்டையே தற்போதும் ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுவார் என்பதே பலரதும் கருதுகோளாக உள்ளது.
இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கா நல்லிணக்கம் தொடர்பான போலி தோற்றப்பாட்டையே உருவாக்குவார் என்ற கருத்துக்கு பிரதான காரணமாக அமைவது, நல்லிணக்கத்துக்கு தேவையான அடிப்படை முன்நிபந்தனைகளை பூர்த்தி செய்ய ரணில் விக்கிரமசிங்காவும் தயாரில்லை என்பதாகும். இலங்கையின் இராணுவமயமாக்க சூழல் என்பது வடக்கு-கிழக்கில் நீண்ட கால நெருடலாகவே தொடர்கின்றது. தமிழ்மக்களை தொடர்ச்சியாக பயமுறுத்தும் கருவியாகவே இராணுவம் காணப்படுகின்றது. எனினும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் தொடர்ச்சியாக இராணுவத்தை பாதுகாக்கும் உத்திகளையே மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக நல்லிணக்க பிரச்சாரத்துக்குள்ளும் இராணுவத்தை பாதுகாக்கும் உத்திகளும் காணப்படுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சிவில் சமுகத்தலைவர்களுடான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த ஆணைக்குழுவின் வெற்றிக்கு வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் படைகள் உண்மை ஆணைக்குழுவின் கருத்தை ஆதரிப்பதாகவும், அவர்கள் தங்கள் பெயர்களை அகற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய நியாயாதிக்கம் எனும் சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் கமகாலத்தில் இலங்கை ஆயுதப் படைகளின் முழுப் பிரிவுகளும் சர்வதேச மனித உரிமைக் குழுக்களாலும், சில சர்வதேச அரசுகளாலும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவ ஈடுபாட்டுடனான நல்லிணக்க செயற்பாடு முன்னெடுப்பு நாடகத்தினூடாக சர்வதேசரீதியாக இலங்கை இராணுவம் தொடர்பாக உள்ள விமர்சனங்களை அகற்றுவதற்கே இலங்கை அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகின்றது. இது தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கப்போவதில்லை.
மூன்றாவது, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தனது உண்மையை நிரூபிப்பது பெரும் சவாலாக உள்ளது. எனினும் உண்மையும் நல்லிணக்கமும் ஓர் இணையிலி ஆகும். உண்மையை வெளிப்படுத்துவதனூடாகவே நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். தென்னாபிரிக்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தூதுக்குழுவொன்றை தென்னாபிரிக்காவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களிலும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நல்லிணக்க பொறிமுறையூடாக வடக்கு-கிழக்கு சிவில் சமூக உறுப்பினர்களும் கடந்த காலங்களில் தென்னாபிரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் ஆய்வுகளை தாண்டி செயற்பாட்டிற்கு செல்வதற்கான அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்கங்கள் என்றுமே வெளிப்படுத்த தயாராக இருக்கில்லை. தென்னாபிரிக்காவில் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட சமூகம் அதிகாரத்தை பெற்றே நல்லிணக்க பொறிமுறைக்குள் நகர்ந்தது. அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் ஒடுக்குமுறை புரிந்த பல அதிகாரிகளும் தங்கள் குற்றங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள். எனினும் இலங்கையில் அவ்வாறானதொரு சூழல் காணப்படவில்லை. போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டவர்களே உயர் அதிகாரங்களில் இருப்பதுடன் ஆணைக்குழுக்களின் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான எதிர்மறையான விமர்சனங்கனுடனேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, 2015-2019 காலப்பகுதியில் பிரதமராக காணப்படுகையில் தென்னாபிரிக்கா மாதிரியில் 'மறப்போம் மன்னிப்போம்' இற்கான அழைப்பை விடுத்தார். இது ரணில் விக்கிரமசிங்கா தமிழ் மக்களுக்கு எவ்வித பரிகார நீதியும் வழங்க தயாரில்லை என்பதையே உறுதி செய்கின்றது.
எனவே, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்கத்துக்கான பிரச்சாரம் என்பது தேசிய இனங்களின் கடந்த கால வடுக்களை களைவதை தாண்டி, இலங்கை அரசாங்கத்திள் அரசியல் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான உத்தியாகவே அமைகின்றது. போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயல்முறையை மீண்டும் அரசியல் பொறிமுறையில் கொண்டு வருவதற்கும், சர்வதச நாணய நிதியம் மற்றும் மேற்குலக அரசாங்கங்களை நம்ப வைப்பதற்குமான அரசாங்கத்தின் முயற்சியாகவே நல்லிணக்க பிரச்சாரம் காணப்படுகின்றது. இங்கு ரணில் விக்கிரமசிங்காவின் நெருங்கிய சகா மற்றும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச விவகாரங்களுக்கான நோர்வே நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டில், 'நல்லிணக்க இராஜதந்திரத்தை முன்னேற்றுதல்: இலங்கைக் கண்ணோட்டம்' எனும் தலைப்பில் ஆற்றிய உரை முக்கியமாகிறது. 'இலங்கை எவ்வாறான இராஜதந்திரத்தை பின்பற்றுகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஜவஹர்லால் நேரு 1947இல் கூறிய ஒன்றிற்கு நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன். 'நீங்கள் எந்தக் கொள்கையை வகுத்தாலும், ஒரு நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களை நடத்தும் கலை, நாட்டிற்கு எது மிகவும் சாதகமானது என்பதைக் கண்டுபிடிப்பதில் உள்ளது.' எனவே இன்று இது மிகவும் சுயநலமாகத் தோன்றலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாம் கருத்தியல் ரீதியாக உந்தப்பட்டவர்கள் அல்ல. ஆனால் சுயநலமே நமது வெளியுறவுக் கொள்கையின் உந்து சக்தி என்று நான் கூறுவேன்.' எனக்குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் வெளியுறவுக்கொள்கையானது தொடர்ச்சியாக தென்னிலங்கையின் சுயநலத்தின் வெளிப்பாடாகவே தொடர்கின்றது. இதனை ஈழத்தமிழர் அரசியல் தரப்புகள் புரிந்து கொள்ள தவறுமாயின் மீளவொரு ஏமாற்று பதிவே மிஞ்சும்.
Comments
Post a Comment