தமிழர்களை சித்திரவதை செய்த 'புனர்வாழ்வு' சட்டமூலம் அரகலய போராட்டக்காரரை பாதுகாக்க முயலுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை பேரினவாத எதேச்சதிகார சக்திகள் தமது நலன்களை ஈடேற்றிக்கொள்வதற்கு காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்களூடாக தமக்கு எதிரான செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு இயன்றளவு அரச இயந்திரத்தை தொடர்ச்சியாகவே பயன்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக சுதந்திர இலங்கையின் 74ஆண்டுகால அரசியலில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தேசவிரோதமாக மற்றும் பயங்கரவாதமாக காட்சிப்படுத்தி ஒடுக்குவதற்கும், தமிழ் மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் அரச இயந்திரத்தை வெகுவாக பயன்படுத்தி வந்திருந்தது. 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாக முஸ்லீம்களும் மாறிய நிலையில் முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறைகளை நியாயயப்படுத்தவும் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தை பயன்படுத்தி வந்தது. இலங்கையின் தமிழ், முஸ்லீம் தேசிய இனங்கள் அரச பயங்கரவாத செயல்களை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த போதிலும் சிங்கள தேசிய இனம் இலங்கை அரசை தமது அரணாக அதிகம் பாதுகாத்து வந்தது. எனினும் 2022ஆம் ஆண்டு அரகல்யாவுக்கு பின்னர் அரச பயங்கரவாதம் சிங்கள தேசிய இனத்தின் மீதும் தனது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகையிலேயே அரச பயங்கரவாத்தின் வீரியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறான பின்னணியிலேயே அரச பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறையின் ஓர் வடிவமாக புனர்வாழ்வு நிலையங்களையும், சட்டத்தையும் சிங்கள தேசிய இனம் இன்று எதிர்க்கிறது. எனினும் புனர்வாழ்வூடாக தண்டனையை பெற்று இன்னும் புலனாய்வின் கண்கானிப்பினுள் முழுமையாக தண்டனை விலக்கு பெறாத பலரும் தமிழ்ப்பரப்பில் காணப்படவே செய்கின்றார்கள். இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவரப்பட்ட புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பான உரையாடல்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் செப்டெம்பர் மாதம் புதிய அடக்குமுறை புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்து, செப்டம்பர்-23 அன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷhவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்ட மூலமானது, புனர்வாழ்வு பணியகத்தின் முன்பு இருந்த அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. அதன் பங்கை தேசிய முக்கியத்துவம் என்று அறிவிக்கிறது. அதன் கடமைகள் மற்றும் செயல்பாடுகளாக, முன்னாள் போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு கோரும் நபர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது. மேலும், புனர்வாழ்வு முகாம்களின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகள் முப்படைகளின் உறுப்பினர்களுக்கு கைதிகள் பற்றிய இரகசிய பதிவுகளுடன் அதிகாரம் அளிக்கப்படும் எனக்குறிப்பிடுகின்றது.
சட்டமூலத்தை எதிர்க்கும் சிவில் உரிமைகள் சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியினர், சிவில் சமூக ஆர்வலர்கள் இச்சட்டம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் உட்பட பரந்த அளவில் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களின் எந்தவொரு தனிநபரும் புனர்வாழ்வு மையங்களில் சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையிலேயே செப்டம்பரில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) மற்றும் அதன் நிர்வாக இயக்குநரும் உட்பட ஆறு மனுக்கள் இந்த மசோதாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யப்பட்டன. ஒக்டோபர்-20அன்று பாராளுமன்றத்தில் உயர்தீதிமன்ற தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பின் 12 (1) வது சரத்திற்கு முரணானது எனவும், எனவே விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே அமுல்படுத்தப்பட முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் 1980களின் முற்பகுதியில் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஆகியவற்றின் கீழ் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் நிறுவப்பட்டிருந்தது. இதனூடாக தவறான போராளிகள், தீவிரமான அல்லது அழிவுகரமான நாசவேலைகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பல மையங்கள் நிறுவப்பட்டன. இம்மையங்கள் கடந்த முப்பதாண்டுகால இரத்தக்களரி இனவாதப் போரின் போது அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பலர் முன்னாள் போராளிகள் என்று அறிவிக்கப்பட்டு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்களில் சிலர் காணாமல் போயினர். மற்றவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் புலனாய்வு அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகள் மற்றும் சந்தேக நபர்களை தடுத்து வைப்பதற்காக இராணுவத்தால் நடத்தப்படும் இலங்கையின் போருக்குப் பிந்தைய புனர்வாழ்வுத் திட்டங்கள் ஐ.நாவால் தன்னிச்சையான தடுப்புக்காவலாக வர்ணிக்கப்பட்டது மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தால் (ICJ) சட்ட கருந்துளை' என்று சாடப்பட்டது. தமிழர்களுக்கான போருக்குப் பிந்தைய புனர்வாழ்வு மையங்களில் பல சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் பரவலாக உள்ள இடங்களாக நம்பத்தகுந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை மௌனமாக கடந்து சென்றதன் பிரதிபலிப்பே இன்று தென்னிலங்கைiயும் குறித்த அச்சத்துக்குள் தள்ளியுள்ளது என்பது மறுக்கஇயலாத கருத்து நிலையாகவே காணப்படுகின்றது. எனினும் தமிழ்த்தரப்பு அவ்வாறாக மௌனமாகவோ அல்லது பெருமெடுப்பில் பின்னுந்தலாகவோ செல்ல இயலாது. எனினும் புனர்வாழ்வு பணியக சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான தென்னிலங்கை செயற்பாடுகளையும் விளைவுகளையும் தமிழ்த்தரப்பு நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, உயர்நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பின் பிரிவு 12(1)ஐ மையப்படுத்தி குறிப்பிட்டுள்ள விடயம் கடந்த காலத்தில் புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர்களின் நீதி மறுக்கப்பட்டுள்ளதையே உறுதி செய்கின்றது. அரசியலமைப்பின் பிரிவு 12(1) 'சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமமானவர்கள் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமையுடையவர்கள்' எனக்கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, 'முன்னாள் போராளிகள்', 'வன்முறை தீவிரக் குழுக்கள்' மற்றும் 'வேறு ஏதேனும் நபர்கள் குழு' பற்றிய அனைத்துக் குறிப்புகளும் மசோதாவில் இருந்து நீக்கப்பட்டால் மற்றும் இந்த மசோதா போதைப்பொருள் சார்ந்த நபர்கள் மற்றும் சட்டத்தால் அடையாளம் காணக்கூடிய பிற நபர்களின் மறுவாழ்வுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தால் பிரிவு 12(1) இல் உள்ள முரண்பாடானது நிறுத்தப்படும் என்கின்றது. இதனூடாக முக்கியமாக, ஷபுனர்வாழ்வு' செயல்முறை போதைக்கு அடிமையானவர்களுக்கு மட்டுமானதென்பதுடன், முன்னாள் போராளிகள் மற்றும் வன்முறை மற்றும் தீவிரவாத போக்கு உள்ளவர்களுக்கும் பொருந்தாது என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இரண்டாவது, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஆயுதப் படைகள் ஈடுபடுவதையும் உயர்நீமன்றம் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் எதிர்த்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில், 'சபையின் நிர்வாகத்தை அமைச்சரின் கோரிக்கையின் பேரில் ஜனாதிபதி ஆயுதப்படை உறுப்பினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்பது தெளிவாகிறது. இந்தப் பின்னணியில்தான், திரு. ஹேவமன்னா (மனுதாரர்) சட்டமூலத்தின் நோக்கத்திற்கும், படைகளின் உறுப்பினர்களைப் புனர்வாழ்வளிக்கப் பயன்படுத்துவதற்கும் இடையே பகுத்தறிவு மற்றும் நெருங்கிய தொடர்பு இல்லை என்றும், ஒரு தொடர்பு இல்லாத நிலையில், கூறப்பட்ட உட்பிரிவு பிரிவு 12(1) க்கு முரணானது' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஒக்டோபர்-17அன்று வெளியிட்ட அறிக்கையில், இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களில் மக்களைத் தடுத்து வைக்கும் பரந்த அதிகாரங்களை அதிகாரிகளுக்கு வழங்கும் சட்ட வரைவை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும், அவர்களை துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் தெரிவித்துள்ளது. மேலும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறுகையில், 'இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு முயற்சிகள், குற்றஞ்சாட்டப்படாமல் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு புதிய வடிவத்தை தவிர வேறொன்றுமில்லை. இலங்கை அரசாங்கம் முன்பு தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை செயல்படுத்துவதற்கு கட்டாய புனர்வாழ்வு மையங்களைப் பயன்படுத்தியது. 2009இல் முடிவடைந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என அரசாங்கம் அடையாளப்படுத்திய ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு சிலர் பாலியல் வன்முறை உட்பட பிற துஷ்பிரயோகங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சட்டமூலம் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களின் பின்னர் முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு அளிக்க முயல்கிறது.' என எச்சரித்துள்ளார். மீனாட்சி கங்குலியின் எதிர்வுகூறல் தமிழ் மக்கள் ரணில் அரசாங்கத்தின் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையை உறுதி செய்கிறது.
முன்றாவது, புனர்வாழ்வு பணியக மசோதாவில் உள்ள தெளிவற்ற மற்றும் துல்லியமற்ற வார்த்தைகள் தொடர்பில் தென்னிலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே விமர்சனம் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் புனர்வாழ்வு மசோதாவில் உள்ள சொற்களின் சட்டபூர்வ வரையறை தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பி உள்ளார். அதாவது, இந்தச் சட்டம் பொருந்தக்கூடிய நபர்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் எதுவும் இலங்கையில் சட்டபூர்வமாக வரையறுக்கப்படவில்லை. உதாரணமாக, தீவிரமான அல்லது அழிவுகரமான செயல்களில் ஈடுபட்டுள்ள நபரை வரையறுக்க எந்த புறநிலை அளவுகோல்கள் பயன்படுத்தப்படும்? உலகளாவிய ரீதியில், பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாதல் ஆகிய அனைத்து விதிமுறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட வரையறைகள் இல்லாதவை ஆகும். இவை தன்னிச்சையான மற்றும் தவறான அரச நடவடிக்கையை நியாயப்படுத்த நாடுகளால் ஒன்றிணைக்கப்பட்டு ஆயுதமாக்கப்படுகின்றன எனக்கூறியுள்ளார். 2015-2019 காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமை ஆணையாளராக கடந்த காலங்களில் சட்டபூர்வ வரையறையற்ற சொல்லாடல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முன்னாள் ஆணையாளரின் செயற்பாடுகளில் அதிக விமர்சனமே காணப்படுகின்றது.
எனவே, தென் இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு சட்டமூலம் கடந்த காலங்களில் தமிழர்கள் மீது புனர்வாழ்வு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகங்களை இலங்கை சமூகத்திடம் தெளிவுபடுத்த தகுந்த காலத்தை உருவாக்கி தந்துள்ளது. புனர்வாழ்வு தண்டனையல்ல. எனினும் ஈழத்தமிழ் சமூகப்பரப்பில் புனர்வாழ்வை ஒரு தண்டனையாகப்பெற்றுள்ளதுடன் தொடர்ச்சியாக புலனாய்வின் கண்கானிப்புக்குள் தண்டனை சூழலுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றார்கள். இன்றும் தென்னிலங்கையில் புனர்வாழ்வு சட்டமூலத்தால் அரகல்யா போராட்டக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலே உரையாடப்படுகின்றதே தவிர, கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு இன்றுவரை அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பில் எந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதியை கோர முன்வர தயாரில்லை. தமிழ்த்தரப்பு யாவற்றிலும் படிப்பினைகளை கற்று நகர வேண்டும்.
Comments
Post a Comment