ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்டம் அரசியல் பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தை உருவாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக இலங்கை அரசாங்கங்கங்கள் பொருளாதார முதலீடுகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டையே அதிகமாக முதன்மைப்படுத்தி வந்துள்ளதுடன், அதிகம் சொல்லும் செயலும் வேறுபட்டிருந்தன. இது பொருளாதார நிபுணர்களாலும் அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்பின்னணியில் பொருளாதார நெருக்கடியை நீக்குவதாக கூறி அரசாங்கத்தை பொறுப்பெடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்காவின் 2023க்கான வரவு-செலவுத்திட்டம் அதிக எதிர்பார்க்கையை உருவாக்கியது. இப்பின்னணியிலேயே நவம்பர்-14அன்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கா தனது முழு ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்ட உரையின் முகப்பில் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் சீர்திருத்தமே பிரதான இலக்கு என ரணில் விக்கிரமசிங்கா முன்மொழிந்துள்ளார். எனினும், உள்ளடக்கங்கள் ஒப்பீட்டளவில் பெரிய புரட்சிகரமான சீர்திருத்தங்களை உள்ளடக்கி இருக்கவில்லை என்பதே பொருளியல் நிபுணர்களின் கருத்தாடலாக காணப்படுகின்றது. இக்கட்டுரை ரணில் விக்கிரமசிங்காவின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் சீர்திருத்தம் எனும் இலக்கை பூர்த்தி செய்யக்கூடிய முன்னேற்றகரமான அரசியல் மாற்றங்களை உள்ளடக்கியுள்ளதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை தூண்ட முயன்றுள்ளார். சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா போன்றவற்றுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் சாதகமான பலன்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி, 'சமூக சந்தைப் பொருளாதாரம்' அல்லது 'சமூகப் பாதுகாப்பின் திறந்த பொருளாதார அமைப்பை' உருவாக்க அவர் முன்வந்துள்ளார். 'சமூக சந்தைப் பொருளாதாரம் 7 முதல் 8 சதவீத உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும். சர்வதேச வர்த்தகத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக) 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கவும், புதிய ஏற்றுமதிகள் மூலம் ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் உதவும்' என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார். மேலும் வரிகளை அதிகரிப்பதனூடாகவும் இலாபமீட்டும் அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதனூடாக வருமானங்களை ஈட்டிக்கொள்ள இயலுமெனும் வகையிலேயே 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை ரணில் விக்கிரமசிங்கா பிரச்சாரப்படுத்துகின்றார். இதனூடாவே பொருளாதார மீட்சியையும் சீர்திருத்தத்தையும் அடையாளப்படுத்த முயலுகின்றார்.
2023ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்டத்தின் பொருளாதார மீட்சி மற்றும் சீர்திருத்தம் தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை பொருளாதார சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டபிள்யூ விமலரதன, 'ஒரு ஆவணமாக, வரவு-செலவு திட்டம் நன்றாக உள்ளது. இது ஒரு விதிவிலக்கான வரவு-செலவு திட்டம் அல்ல. கடந்த காலங்களில் கூட, வரவு-செலவு திட்ட உரைகள், வரவு-செலவு திட்ட ஆவணங்களைப் பார்க்கும்போது அவை அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமானவை. வழங்கப் போகும் போது, நிறைய சிக்கல்கள் இருக்கும். ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதாக இல்லாததால் துணை வரவு செலவுத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்' எனத்தெரிவித்துள்ளார். எனவே, வரவு-செலவு திட்டம் கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு அப்பால் கணதியான செயற்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய திறனை கொண்டுள்ளதா என்பதில் நுணுக்கமான அவதானிப்பு அவசியமாகிறது.
முதலாவது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூலம் கடன் சேவைச் செலவுகளை உள்ளடக்கிய 613 பில்லியன் ரூபா நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி முன்னைய ஆண்டுகள் போலவே மீளவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்குமே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாவும்; பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 129 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவு திட்டத்தில் 539 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளனர். அதேவேளை சுகாதார அமைச்சுக்கு 322 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபாவுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜீவ முதலிகே, 'அறையில் இருக்கும் யானையின் தற்காப்பாக, முப்படையினரையும் பொலிஸாரையும் பராமரிக்க 500 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடுகிறோம். இது ஒரு பெரிய தொகை' எனத் தெரிவித்தார். போரின் இறுதி ஆண்டுகளில் இருந்து, இலங்கை எப்பொழுதும் பாதுகாப்புக்கு முதன்மையான முன்னுரிமையை வழங்கியது மற்றும் போரின் போது முக்கியமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஏராளமான ஆயுதம் மற்றும் பொலிஸ் படைகள் காரணமாக அதிக வரவு-செலவு திட்ட ஒதுக்கீடு எப்போதும் வழங்கப்பட்டது. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு இது ஆழமான காரணமாகவும் பொருளாதார நிபுணர்களால் சிபார்சு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர் இல்லாததால், ஆயுதப்படைகளுக்கு அதிக பொது வளங்கள் ஒதுக்கப்படுவது பகுத்தறிவுதானா என்ற கேள்வியை பொருளாதார நெருக்கடியின் பின்னர் பொதுமக்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இப்பின்னணியில், மோதல் முடிவுக்கு வந்து 13 வருடங்களாகியும் இதைப் பற்றி எவ்வித மறு ஆய்வுக்கும் உட்படுத்தாத வரவு-செலவு திட்டம், சீர்திருத்தத்தை அரசியல் பொருளாதாரரீதியாக உருவாக்க இயலாத நிலைமையே வெளிப்படுத்துகின்றது.
இரண்டாவது, இளைஞர்களின் அமைதியின்மை மற்றும் அதன் விளைவாக எழும் எதிர்ப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் சார்ந்த அணுகுமுறை என்று அழைக்கப்படுவதை அரசாங்கம் மேற்கொள்ளத் தூண்டியதாகத் தெரிகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க, தனது வரவு செலவுத் திட்ட உரையில், இளைஞர்களை 'உண்மையான தேசிய செல்வம்' என்று அழைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை, அவர்களின் நம்பிக்கைகள் மங்கி வருகின்றன என்பது அவரது கருத்தாகவும் காணப்படுகின்றது. இளைஞர்களின் நலன்களுக்கு சேவையாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி உணர்ந்துள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவரது அரசாங்கம் எவ்வாறு பணியை மேற்கொள்ள விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த கால அனுபவங்கள் இது சந்தர்ப்பவாத அரசியலின் உதட்டளவு பிரயோகமாகவும் அரசியல் ஆய்வாளர்களால் அவதானிக்கப்படுகின்றது. ஏனெனில் அரசியல் பொருளாதார நெருக்கடியின் போது பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கா, காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனநாயக உரிமையாக கூறி அதற்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென உறுதியளித்தார். எனினும் இடைக்;;கால ஜனாதிபதியாகியதும் உடனடியாக அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அரச இயந்திரத்தினூடாக மிலேச்சத்தனமான தாக்குதலை நிகழ்த்தியிருந்தார். இன்றுவரை தொடர்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களை நசுக்க போலிசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரண்டு மாணவர் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர்-12அன்று களுத்துறையில் இருந்து கொழும்புக்கு நடைபயணமாகச் சென்ற இரண்டு பெண்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு உயர் போலிஸ் அதிகாரி, ஒரு பெண் கான்ஸ்டபிளை கழுத்தை அழுத்தி வெளியே தள்ளி, இரண்டு போராட்டக்காரர்களையும் கைது செய்யும்படி கட்டளையிட்டார். இது அரசாங்கமும், பொலிஸாரும் சர்வதேச ரீதியில் நாட்டின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறானதொரு களச்சூழலில் இளையோரின் மீதான கரிசணையை வெளிப்படுத்தும் ஜனாதிபதியின் வரவு-செலவு திட்ட உரை மீது எத்தகைய நம்பிக்கையை வைப்பது என்பது விமர்சனமாகவே உள்ளது.
மூன்றாவது, வெளிநாட்டு நாணய வரவை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள நடவடிக்கைகளில் வணிக நட்புச் சூழலை உருவாக்குவதும் அடங்கும். அந்நிய முதலீட்டுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ஊழலும் ஒரு காரணியாகும். எண்ணற்ற உள்ளங்கைகளுக்கு கிரீஸ் தடவத் தயாராக இருக்கும் வரை எந்த வெளிநாட்டவரும் இங்கு முதலீடு செய்ய முடியாது. இந்த சிக்கலை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி உறுதியான விளக்கத்தையும் செயற்பாட்டையும் முன்னெடுக்க தயாரில்லை. குற்றவாளிகள் அவருடைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக கோத்தபாய ராஜபக்ஷா மற்றும் மகிந்த ராஜபக்ஷா உள்ளிட்ட ராஜபக்ஷாக்களின் அமைச்சரவை அந்தஸ்தற்றவர்களாக்கப்பட்ட போதிலும் பொதுஜன பெரமுனவே தொடர்ச்சியாக அரசாங்கத்தை அமைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்க விடயமாக காணப்படுகின்றது. மேலும் கடந்த ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை இழந்தமையும் குறித்த அரசாங்கத்தின் ஊழலே பிரதான காரணமாகும். எனினும் எக்காலத்திலும் ஊழலுக்கு எதிரான வினைத்திறனான செயற்பாட்டை ரணில் விக்கிரமசிங்கா வெளிப்படுத்தியதில்லை.
நான்காவது, வடக்கில் பூதாகாரமாகி உள்ள போதைக்கான சட்ட அங்கீகாரத்துக்கான ஏற்பாடுகளும் ஜனாதிபதியின் வரவு-செலவு திட்ட உரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மீதான அரசாங்கத்தின் விரக்தியானது கஞ்சா ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைக்கும் திட்டத்தில் இருந்து தெளிவாகிறது. எனினும், இது இலங்கையை மலினப்படுத்தும் நடவடிக்கையாகவே அமைகின்றது. வடக்கில் போதைப்பாருள் பாவனை அதிகரிப்பும் அதனால் தமிழ்த்தேசிய இளைஞர்களின் வாழ்வு அழிக்கப்படுவது தொடர்பாகவும் வடக்கு மக்கள் துன்புறுகையில் போதைப்பொருள் உற்பத்தியை சட்பூர்வமாக்க முனையும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வடக்கு பற்றிய கரிணையற்ற அரசாங்கத்தின் செயற்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இதற்கு பின்னால் தமிழரசியல் தரப்பின் பலவீனமான நடத்தைகளும் காணப்படுகின்றது. வடக்கில போதைப்பொருள் பூதகரமான ஆபத்தாக வியாபித்துள்ள போதிலும் அதற்கெதிராக அதனை தடுக்கும் வகையில் வினைத்திறனான நாடுதழுவிய செயற்பாட்டை தமிழரசியல் தரப்பு செய்ய தவறியுள்ளது. இனிவரும் காலங்களிலாவது, அரசாங்கம் கஞ்சா உற்பத்தி செய்வது தொடர்பான ஆராய்வுக்காக உருவாக்கும் நிபுணர் குழுவின் செயற்பாடுகளை விழிப்புடன் அவதானிப்பதுடன், கஞ்சா உற்பத்திக்கான முன்னாயர்த்தங்கள் நடைபெறின் அதனை தடுக்க வினைத்திறனுடன் செயற்பட வேண்டும். தற்போதுள்ள உரத் தட்டுப்பாடு, அதிக உற்பத்திச் செலவு போன்ற விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, அதன் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்த அரசாங்கம் அக்கறை காட்டினால், நாட்டின் திருடப்பட்ட நிதியை மீட்டெடுக்க முனைந்தால், கஞ்சாவை வளர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே, ரணில் விக்கிரமசிங்காவின் முதலாவது முழு ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் அதிகம் வார்த்தைகளால் ஜோடிக்கப்பட்ட கவர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தாலும், புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த முன்வராமையையே வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கான அதிகளவு நிதி ஒதுக்கீடு இலங்கையின் மரபார்ந்த அரசியல் கலாசாரத்துக்குள்ளேயே ரணில் விக்கிரமசிங்காவும் பயணிப்பதையே தெளிவுபடுத்துகின்றது. ருணில் விக்கிரமசிங்க காட்சிப்படுத்தும் தாரளவாத முகம் சந்தர்ப்பவாத அரசியலின் காட்சிகள் என்பதை நிரூபிக்கும் மற்றொரு சான்றாகவே 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டமும் அமையப்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க வரவு-செலவுத்திட்டத்தின் இலக்காக பிரச்சாரம் செய்யும் பொருளாதர மீட்சி மற்றும் சீர்திருத்தம் என்பது வெறும் பெயர்ப்பலகைகளாவே கவர்ச்சிக்கான வார்த்தைகளாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment