தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களினை ஒன்றிணைத்து அரசியல் சமூகமாக செயற்பட தயங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடல்கள் முதன்மையான செய்தி தலைப்புக்களாக உள்ள. தென்னிலங்கையில் இனப்பிரச்சினை தீர்வாக பல மாறுபட்ட பொறிமுறைகள் பிரேரிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பிராந்தியங்களின் ஒன்றியம்,முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் மாவட்ட அதிகார சபை, 13ஆம் சீர்திருத்தம் மற்றும் மகிந்த ராஜபக்ஷா தரப்பினரால் 13பிளஸ் தொடர்பான விடயங்கள் முதன்மை பெறுகின்றன. யாவுமே கடந்த 74ஆண்டுகால இலங்கை சுதந்திர வரலாற்றில் இனப்பிரச்சினை தீர்வாக உரையாடி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்தவையாகவே காணப்படுகின்றது. தமிழ் தரப்பு வலியுறுத்தும் சமஷ்டியை தொடர்ச்சியாக நாட்டினை பிளவுபடுத்தும் பொறிமுறையாகவே பேரினவாத தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இம்முரணகையான நிகழ்வுக்குள் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பாக கொண்டுள்ள எண்ணங்களையும், தமிழ் அரசியல் தரப்பின் நகர்வையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது வருடத்திற்கு முன்னர் பிரச்சினையை பேசி தீர்த்துவைக்க அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தேவை அடையாளப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியின் அறிவிப்பை தொடர்ந்து ஒன்றுகூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மூன்று பூர்வாங்க நடவடிக்கைகளுக்கு அழைப்பு விட்டுள்ளனர். முதற்கட்டமாக, கைப்பற்றப்பட்ட அனைத்து நிலங்களையும் உரிய உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதும், நில அபகரிப்புகளை நிறுத்துவதும் ஆகும். இரண்டாவது முன்மொழிவு, அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்துவது தொடர்பாக தற்போதுள்ள அரசியலமைப்பு மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துவது ஆகும். மூன்றாவதாக, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் கூட்டாட்சி அடிப்படையில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும என்பதாகும். எனினும் தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் கட்சிகளின் பூர்வாங்க கோரிக்கைகளுக்கு முரணான நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது நடைமுறையில் காணப்படும் 13க்குள் அரசியல் தீர்வை நிறைவு செய்வதற்கான ஆதரவையே வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மாவட்ட அபிவிருத்தி சபையை பிரேரித்துள்ளார். மேலும், பொதுஜன பெரமுனாவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா 13பிளஸ் பற்றி உரையாடி வருகின்றார்.
தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக சமஷ்டியை பிரிவினைவாத பொறியாகவே பிரச்சாரப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக, முன்னாள் அமைச்சரும் ஆளும்கட்சி உறுப்பினருமாகிய சரத்வீரசேகர 'சமஷ்டி என்றால் நாடு துண்டாடப்படும். வடக்கு-கிழக்கு பகுதியில் பௌத்தத்துக்கு அச்சுறுத்தல். நாட்டை பாதுகாத்தாலே சிங்கள இனத்தை பாதுகாக்கலாம்' என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் சிங்கள மக்களினை முன்னிறுத்தி உரையாடுகையில், தமிழரசியல் தரப்பினர் தமிழ் மக்களின் எண்ணங்களை சுட்டிக்காட்டுவது அவசியமாகும். எனினும் தமிழ் அரசியல் தரப்பில் இவ்வாறான செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. தமிழ் மக்களும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் தனியன்களான இயங்குகிறார்களோ என்ற கேள்வியே அரசியல் பரப்பில் காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகிறது.
ஒன்று, தென்னிலங்கை அரசியல் கட்சிகள் சிங்களை மக்களை முன்னிறுத்தி சமஷ்டியை நிராகரிக்கையில், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான பொறிமுறையை தமிழரசியல் தரப்பினர் செய்ய தவறி உள்ளனர். எனினும் மாவிரர் நாளில் சிதைந்து போயுள்ள துயிலுமில்லங்களில் தமிழ் மக்களின் தன்னார்வமான திரட்சி தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, அடக்குமுறைகளுக்குள்ளும் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிக்குள் தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு தம் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனூடாக தமது தேசியம் தொடர்பான நிலைப்பாட்டையும், தமக்கு உள்ள சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தியுள்ளார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின்படி (ஐஊஊPசு), 'எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது. அந்த உரிமையின் மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாகத் தீர்மானிக்கிறார்கள் மற்றும் அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியை சுதந்திரமாகப் பின்தொடர்கிறார்கள்.'
இரண்டு, தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் சுயநிர்ணய உரிமையை பொதுத்தளத்திற்கு காவி செல்லும் முகவர்களாகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் வகிபாகம் முதன்மை பெறுகின்றது. எனினும் சமகாலத்தில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் சுயநிர்ணய உரிமையை இழிவுபடுத்தி தென்னிலங்கை அரசியலை குளிர்விக்கும் அரசியலை தமிழரசியல் தரப்பினர் மேற்கொள்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நினைவேந்தல் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டது. அதனை அனுஷ்டிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 'மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடிகள் கொடுக்காது அவற்றை நடாத்தி செல்ல இடமளித்த நல்லிணக்கத்திற்காக' ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அவ்வாறே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், 'நினைவேந்தலுக்கு எவ்வித தடையை ஏற்படுத்தாத ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட இளம் சிங்கள சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக' கூறியிருந்தார். தேர்தல் பிரச்சார அரங்குகள் போன்று மக்கள் துயிலுமில்லங்களுக்கு வலிந்து அழைக்கப்பட்டிருக்கவில்லை. இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் இயல்பாகவே நினைவேந்தல்களை அனுஷ்டித்தார்கள். அரசியல் விடுதலைக்காகப் போராடி மரணித்த மாவீரர்களை நினைவுகூர அனுமதி பெறுவதென்றால், அல்லது அனுமதியளித்தமைக்கு நன்றி தெரிவிப்பது என்றால், அந்த இனத்தின் சுயமரியாதை கேள்விக்குட்படுத்தப்படுவதாவே அமைகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் தென்னிலங்கை சிங்கள கட்சிகள் கேள்வி எழுப்பும் சமகாலப்பகுதியில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டு மக்கள் தன்னார்வமாக திரண்ட செயற்பாட்டை தமிழ்த்தரப்பே இழிநிலைக்கு உட்படுத்துவது தமிழினத்தின் சாபமாகவே காணப்படுகின்றது.
மூன்று, தமிழ் அரசியல் தரப்பின் வலிந்த நல்லிணக்க சமிக்ஞைகளும், நல்லிணக்க சமிக்ஞைகளாக சிலவற்றை புலகாங்கிதம் அடைவதும் தமிழ் மக்களை மீள மீள தமிழ் அரசியல் தரப்பு ஏமாற்றும் செயலாகவே அமைகின்றது. குறிப்பாக மாவீரர் நினைவேந்தலை நல்லிணக்க சமிக்ஞையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சிலாகித்துள்ளனர். இது, வடக்கு-கிழக்கில் அரச இயந்திரம் மாவீரர் நினைவேந்தல்களில் மேற்கொண்ட இடையூறுகளை இலாபகரமாக மறைத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் உத்தியாகவே அமைகின்றது. குறிப்பாக இன்றும் பல துயிலுமில்லங்கள் இராணுவ காவலரண்களாகவே காணப்படுகின்றது. மேலும், மாவீரர் தினத்து அன்று முல்லைத்தீவில் நினைவேந்தல் சூழலை அலங்கரித்திருந்த வளைவுகளை கெடிகளை அகற்றி இராணுவம் மற்றும் காவல்துறையினர் மிலேச்சத்தனமாக செயற்பட்டிருந்தனர். இவ்வாறே ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியிலும் 2015ஆம் ஆண்டு நினைவேந்தல்களை மேற்கொள்ள விடாது கைது நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அவ்வாறனதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் மீளவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நகர்த்தப்படுகின்றதா என்ற சந்தேகங்களே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் நல்லிணக்க வரவேற்புகளும் நல்லிணக்க வெளிப்பாடுகளும் உருவாக்குகிறது. இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 'பைத்தியம் ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்து வௌ;வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது' எனும் கருத்தையே நினைவுபடுத்துகின்றது.
நான்கு, தமிழ் தரப்பு அரசியல் சமூகமாக செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு கூட்டு உரிமை என்பதையே சுயநிர்ணய உரிமை தொடர்பிலான சர்வதேச தீர்மானங்கள் குறிக்கிறது. அதாவது, 'மக்கள் குழுவாக' மட்டுமே சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த முடியும். ஒரு தனிநபர் அல்ல என்பதே அத்தீர்மானமாகும். எனினும் தமிழ் தரப்பில் அரசியல் பிரதிநிதிகளே தமிழ் மக்கள் சார்ந்த முடிவுகளை தனித்து எடுப்பவர்களாக காணப்படுகின்றார்கள். எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தேர்தல் காலங்களுக்கு பின்னர் மக்களோடு இணைந்து பயணிப்பது அரிதாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கையில் சிவில் சமுகங்கள் வலிந்து தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்து முழுமையாக இல்லாவிடினும் பகுதியளவில் தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசியல் கட்சிகளின் முடிவுகளின் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வந்துள்ளனர். எனினும் சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல் களத்தில் தமிழ் சிவில் சமூகங்களும் அதிகளவில் பார்வையாளர் நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களது அபிப்பிராயங்களை மற்றும் புலமைசார் அறிஞர்களின் எண்ணங்களை உள்வாங்காது தமிழ் கட்சிகளாக இணைந்து தங்களின் அபிலாசைகளை தமிழ் மக்களின் அபிலாசைகளாக திணிக்க முற்படுகின்றார்கள். அரச பாதுகாப்புடைய சிங்கள தேசியமே தனது தேசம் சார்ந்த முடிவுகளில் அரசியல் சமூகமாக அரசியல் பிரதிதிநிதிகள், சிவில் சமூகங்கள் மற்றும் நிபுணத்துவவியலாளர்களின் கூட்டிணைவிலேயே முடிவுகளை எடுக்கின்றனர். எனினும் உரிமைக்காக போராடும் தேசிய இனம் அரசியல் சமுகமாக இணையத்தவறுவது ஆபத்தான அரசியல் போக்கையே வெளிப்படுத்தி நிற்கிறது.
ஐந்து, கடந்த கால இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகளால் தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த அறிவிப்பு தொடர்பாக அவநம்பிக்கைகள் காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மீளவும் இனப்பிரச்சிளை தீர்வு நகர்வை குழப்பும் வகையிலான தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகளின் வரலாற்று மனநிலையையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள்ளே இலங்கை இயங்க வேண்டுமென்பதில் ஒற்றுமையாய் காணப்படுகின்ற போதிலும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட பொறிமுறையிலேயே அதிக குழப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் தமிழ் தரப்பு ஒற்றையாட்சியையே முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். இவ்வாறான பின்னணியில் இனப்பிரச்சினை தீர்வு உரையாடல் அதிக அவநம்பிக்கைகளே உருவாக்குகிறது. இதனடிப்படையில் சில தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசிய கட்சி ஆகியன பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் சமஷ்டி தீர்வை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இல்லாவிடின் பேச்சுவார்த்தையை நிராகரிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். கடந்த கால சமாதான முயற்சிகளின் தெளிவான விடயம் என்னவெனில், சமாதான முன்னெடுப்புகளை ஒருதலைப்பட்சமாக தகர்த்தெறிவதன் மூலம், தகர்த்தெறியும் தரப்பு தனது சொந்த நம்பகத்தன்மையை சேதப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மற்;றைய தரப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளனர். எனவே, இவ்விடயத்தில் தமிழ்த்தரப்பு இராஜதந்திர ரீதியிலான நகர்வை மேற்கொள்வதே ஆரோக்கியமான இருப்பை உறுதி செய்யக்கூடியதாகும்.
எனவே, ஈழத்தமிழர்களின் அரசியலின் முக்கியமான காலகட்டத்தில் ஒன்றாக சமகாலமும் காணப்படுகின்றது. குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னாயர்த்தங்களில் கடந்த காலங்களில் அரசாங்க தரப்பு விருப்பமின்மையுடன் செயற்பட்ட போதிலும், இறுதியில் தீர்வு முயற்சி முறிவடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டு தமிழ் தரப்பு மீதே முன்வைக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தீர்வு முயற்சிகளில் சிங்கள அரசியல் கட்சிகள் ஒற்றுமையின்மை இன்றி குழப்பிய போதிலும், இன்று சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மையை காரணமாக்க முனைகின்றார்கள். இதனை இராஜதந்திர ரீதியாக நகர்த்துவதிலேயே தமிழ் அரசியல் சமூகத்தின் வெற்றி தங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களை தனியானதொரு தேசிய இனமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாகவும் தங்களது அரசியல் தீர்வு விடயத்தில் தெளிவான பார்வையுடன் காணப்படுகின்றார்கள். இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் மீளவும் தங்கள் தென்னிலங்கை எஜமானர்களுடன் இதயபூர்வ ஒப்பந்தங்களுக்கு சென்று தமிழ் மக்களை ஏமாற்றாது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து அரசியல் சமூகமாக செயற்படுவதே இன்றைய தமிழரசியல் தரப்பின் வினைத்திறனான அரசியல் செயற்பாடாகும்.
Comments
Post a Comment