நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடும் தமிழரசியல் தரப்பின் உத்திகளும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு, இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் எட்டப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உறுதியளித்தார். அதனை தொடர்ந்து தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளான தீர்வு தொடர்பாகவும், தமிழரசியல் தரப்பு ஜனாதிபதியின் உரையில் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தினர். எனினும் பொது தளத்தில் சமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் மத்திதியஸ்தம் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மீள மீள வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையிலேயே டிசம்பர்-13அன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சர்வகட்சி மாநாடொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளின் நடத்தைகளுக்கு பின்னாலான அரசியல் வெளிப்பாடுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு போர் இல்லாதது எதிர்காலத்தில் மற்றொரு போர் உருவாகாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. இந்தப் பின்னணியில், உண்மையான நல்லிணக்கத்தில் முதலீடு செய்வது இலங்கைக்கு இன்றியமையாததாகும். பேரினவாத உணர்வுகளை பரப்பும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கங்கள் தலையிடாததன் காரணமாக போருக்குப் பிந்தைய இலங்கையில் அரசியல் மேலும் இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபட்டுள்ளது. 2015களுக்கு பின்னர் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தேசிய நல்லிணக்க மாநாடுகளை நிகழ்த்திய போதிலும், ஒரு முழுமையான அணுகுமுறையை அடையாளம் காண முடியவில்லை. 2018ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலும் அதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன உரையாடல்களும் இலங்கையின் நல்லிணக்க பொறிமுறையின் பலவீனங்களையே வெளிப்படுத்தின. 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நல்லிணக்கம் முதன்மையான உரையாடலில் இருந்தும் விலகியது. தற்போது மீளவும் இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் நல்லிணக்க உரையாடல் மீள புத்துயிர் பெற்றுள்ளது. டிசம்பர்-13அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாடும், நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி மாநாடு என்ற பெயரிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு-செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பிற்கான உரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். அதன்பின்னணியிலேயே டிசம்பர்-13 சர்வகட்சி மாநாடும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் ஒழுங்கமைக்கப்பட்டது. குறித்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் அரசியல் தரப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணித்திருந்த சூழலில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

சர்வகட்சி மாநாட்டின் முடிவில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், ஜனாதிபதி, 'இந்த நாட்டில் நிலவும் பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை இனப்பிரச்சினை என்றோ அல்லது வேறு ஏதாவது சொல்லலாமா என்பது முக்கியமல்ல. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க விரும்புகிறோம். இதற்கு தீர்வு காணவும், நாடாளுமன்றத்தில் உடன்பாடு எட்டவும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடின.' ஏனக்குறிப்பிட்டிருந்தார். மேலும், 'நாட்டின் தேசிய பிரச்சினையை வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று எழுப்பியுள்ளனர். இந்த கேள்வியை இரண்டு பகுதிகளாக விவாதிக்கலாம். முதலாவது, காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு மற்றும் விசாரணைகள். பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் காணி தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இரண்டாவது அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டப் பணிகளைச் செய்வதற்குத் தேவையான ஏற்பாடு. இதனடிப்படையில் வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றனர். அதன்படி, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான அறிக்கையை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு அதிகாரப்பகிர்வு பற்றி பேசலாம்.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாநாட்டின் முடிவுகள் ஆரோக்கியமான சமிக்ஞையை வெளிப்படுத்திய போதிலும், உரைகளுக்கு அப்பால் செயற்பாட்டு நகர்வுக்கு தமிழ் அரசியல் கட்களின் இறுக்கமான செயற்பாடுகளே உந்துதலாக அமையக்கூடியனவாகும். எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் சர்வகட்சி மாநாட்டு களத்தில் வெளிப்படுத்திய அரசியல் நடத்தைகளை நுணுக்கமாக ஆராய வேண்டி உள்ளது. அதனூடாகவே எதிர்கால நடத்தைகளையும் நெறிப்படுத்த ஏதுவாக அமையும். 

ஒன்று, டிசம்பர்-13 ஒழுங்கமைக்கப்பட்ட சர்வ கட்சி மாநாட்டின், 'நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி மாநாடு' எனும் பெயரிடலே அதன் மைய நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம் என்பது சர்வதேசத்தை கையாள்வதற்கான சொல்லாடலாகவே தென்னிலங்கை அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்றைய பொருளாதார நெருக்கடி மீட்புக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கான கோரிக்கை விடப்பட்டுள்ள சூழலில், இலங்கையில் நல்லிணக்கம் முதன்மை பெறுவது அதன் தார்ப்பரியம் சர்வதேசத்துக்கானது என்பதையே உறுதி செய்கின்றது. மேலும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நல்லிணக்கத்தின் மூலம் தீர்வு காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வகட்சி மாநாட்டு உரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, 'பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களுக்கு தேவையான நான்காண்டு திட்டத்திற்கு இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவிப்பது மிகவும் அவசியமானது' என்ற கோரிக்கைiயும் முன்வைத்திருந்தார். எனவே நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடு என்பது பொருளாதார ஒத்துழைப்புக்காக சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க உள்ள சாலை வரைபட திட்டத்துக்கான (Road Map Plan) செயற்பாடு என்பது தெளிவாகிறது.

இரண்டு, இலங்கை அரசாங்கம் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கான எண்ணங்களுடளேயே இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த உரையாடலை மேற்கொள்வதனை உறுதிப்படுத்தியுள்ள சூழலில், ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கான முன்நடவடிக்கைகளாக சர்வகட்சி மாநாட்டில் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தமிழரசியல் தரப்பினரே வழங்க வேண்டும். எனினும் ஊடகங்களுக்கு முன்னாலே தமிழரசியல் தரப்பின் பெரும்பாலானனோர் ஆக்ரோஷமானவர்களாக காணப்படுகின்றார்கள். பேச்சுவார்த்தை களங்களில் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை வெளிப்படுத்த முன்பே நல்லிணக்கத்துடன் அமைதியை கடைப்பிடிப்பவர்களாகவே தமிழரசியல் தரப்பினர் காணப்படுகின்றனர். குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ந்தன், ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மாத்திரமே தமிழ் தேசிய தரப்பில் தமிழ் மக்கள் சார்ந்த உரையாடல்களை முன்னிறுத்தியிருந்தனர். குறிப்பாக தமிழ் தரப்பில் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டிய விடயங்களை முன்நடவடிக்கைகளாக திகதியிட்டு வெளிப்படுத்தியமை ஆரோக்கியமானதாகும். எனினும் தமிழ் தேசிய அரசியல் தரப்பினர் முழுமையாக அழுத்தத்தை பிரயோகிக்க கூடிய திறனை வெளிப்படுத்தவில்லையோ என்ற எண்ணங்கள் பொதுவெளியில் காணப்படுகின்றது. குறிப்பாக ஊடகங்களில் ஆக்ரோஷமாக சமஷ்டியையும், இந்திய மத்தியஸ்தத்தையும் கூறிய செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எவ்வித கருத்துக்களையும் சர்வகட்சி மாநாட்டு களத்தில் முன்வைக்கவில்லை. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தனின் பெயரை குறிப்பிட்டு 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாக கூறிய போதிலும் சமஷ்டி தொடர்பான அழுத்தமான கருத்தினை வெளியிடாமை தமிழ் அரசியல் தரப்பின் அழுத்த அரசியல் தொடர்பான சந்தேகங்களையே அதிகரிக்கிறது.

மூன்று, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளமையானது இராஜதந்திரமற்ற செயற்பாடாக அரசியல் பரப்பில் நோக்கப்படுகின்றது. தேர்தல் அரசியலை ஏற்றுக்கொண்டு இலங்கையின் ஒற்றையாட்சி பாராளுமன்றத்திற்கு சென்று அங்கு உச்சபட்ச ஆக்ரோஷ உரைகளை முன்னிறுத்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அரசாங்கத்துடன் பேச மறுதலித்து வருகின்றமை அரசியல்ரீதியாக முரணான செயற்பாடாகவே அமைகின்றது. மறுதலிக்க முடியாத யதார்த்தபூர்வமான உண்மை தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடன் உரையாடியே இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நகர்த்தக்கூடியதாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் தீர்வு பொதிகளை முன்னெடுக்கையில் தென்னிலங்கை எதிர்க்கட்சிகளே அதனை குழப்பி சீர்குலைத்து வந்துள்ளன. இலங்கை அரசியலை பொறுத்தவரை நல்லிணக்கம் பற்றிய பயிற்சிகள் முதலில் அரசியல்வாதிகளுக்கே வழங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறனதொரு பின்னணியில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை முழுமையாக நிராகரிப்பது என்பது இராஜதந்திர பொறிமுறையற்ற செயற்பாடாகவே அமைகின்றது.

நான்கு, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை களத்தினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புறக்கணிப்பனாது தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க முடியாத சந்தர்ப்பவாத தீர்வுப்பொதிகளுக்குள் இனப்பிரச்சினை சுழலக்கூடிய வாய்ப்பையும் உருவாக்குகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது கடந்த காலங்களில் எதிர்ப்பரசியலற்ற ஏகபிரதிநித்துவ தொனியில் ஏக்கிய இராச்சிய சொல்லாடலுக்குள் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் உரிமைகளை சுருக்கும் அரசியல் யாப்பிற்கு இணங்கி சென்ற வரலாறு காணப்படுகின்றது. தற்போதும் பேச்சுவார்த்தை களத்தில் இடையில் நிறுத்தப்பட்ட ஏக்கிய இராச்சிய உள்ளடக்க தீர்வு பொதியை பற்றியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் ரணில் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணக்கத்தடன் கொண்டு வரப்பட்ட ஒற்றையாட்சி கட்டமைப்பு என்ற ரீதியில் மீளவும் இடைநிறுத்தப்பட்ட இடைக்கால வரைபு மீள புத்துயிர் பெறக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படும். போட்டி அரசியலிலேயே கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையில் நடந்தவற்றை இனப்படுகொலையாய் ஏற்காத தமிழ் அரசியல் தரப்பினர் தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிரா நடந்த இனப்படுகொலையை பகிரங்கமாக கூறி வருகிறார்கள். மேலும், உள்ளக விசாரணை பொறிமுறையை ஏற்றவர்கள் சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை கோரி வருகின்றார்கள். இச்சூழலில் பேச்சுவார்த்தை களத்தில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்த மீளவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் ஏகபிரதிநிதித்துவம் வழங்குவது ஆபத்தான போக்கிற்கு வழிகோலும் என்ற பார்வையும் தமிழரசியல் வெளியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழ்த்தேசிய அரசியல் தரப்பு வாய்ப்புக்களை நழுவ விடுவதும், தென்னிலங்கை அரசாங்கம் தமிழ்த்தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாட்டுக்குள் தங்கள் வெற்றியை பெற்றுக்கொள்வதும் நிலையான அரசியலாக இம்முறையும் நகரும் போக்கே அதிகம் வெளிப்படுத்தப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் ஊடக செய்தியிடல்களில் அரசாங்கத்தின் கடந்தகால நம்பிக்கையீன செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் தமிழ் அரசியல் தரப்பினர் அவ்வாறனதொரு நம்பிக்கையை தமிழ் சமுகத்திற்கு வழங்குகின்றார்களா என்ற கோணங்களிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. ஊடகங்களில் ஆக்ரோசமான கருத்தாடல்களை வெளிப்படுத்தி, ஆக்ரோசமான நடத்தைகளை வெளிப்படுத்த வேண்டிய களங்களில் அமைதியான இணக்கங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றும் வேலைகளை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் செய்வதே, 2009களுக்கு பின்னர் தமிழ் மக்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாக்கப்பட்டுள்ளர் என்ற உரையாடல்களின் தார்ப்பரியமாகும். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும், தொடர்ச்சியாக மேய்ப்பானற்ற மந்தைகளாகவே அலைவது தமிழினத்தின் துர்ப்பாக்கியமே ஆகும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-