தீர்வு முயற்சி மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடல்கள் சமகாலத்தில் உயர்வீச்சில் இடம்பெற்று வருகின்றது. தேசிய இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தொரு நிகழ்வாகும். அடுத்த வருடம்(2023) பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெறப்பட்டிருக்கும் என்ற பிரச்சாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முன்னெடுத்து வருகின்றனர். எனினும், ஜனாதிபதி தீர்வு உள்ளடக்கம் தொடர்பிலான தெளிவான கருத்தினை முன்வைக்கவில்லை. தமிழ் அரசியல் தரப்பினர் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் அதேவேளை தென்னிலங்கையில் ஒரு தரப்பினர் 13ஆம் திருத்தத்திறகான ஆதரவை முன்னிறுத்துவதுடன் இன்னொரு தரப்பு அதிகார பகிர்வு எனும் விடயத்தையே முழுமையாக நிரகரிப்பவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையில் அதிகார பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்துக்கட்சி மாநாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி தவிர்ந்த அனைத்து கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து அதிகம் உரையாடப்பட்டது. ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தையே குறிப்பிட்டிருந்தனர்.  நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, 'இந்த நாட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை இனப்பிரச்சினை என்றோ அல்லது வேறு ஏதாவது சொல்லலாமா என்பது முக்கியமல்ல. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க விரும்புகிறோம். இதற்கு தீர்வு காணவும், நாடாளுமன்றத்தில் உடன்பாடு எட்டவும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடின. இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.' எனத்தெரிவித்திருந்தார்.

இலங்கைக்குள் இனப்பிரச்சினை தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாடு அவசியம் என்பதனையே டிசம்பர்-13அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி மாநாடும், ஜனாதிபதியின் உரையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. தேசிய நல்லிணக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே ஜனாதிபதி அனைத்து கட்சி மாநாட்டையும் ஒழுங்கமைத்திருந்தார். எனினும் தென்னிலங்கை அரசியல் தரப்பு நல்லிணக்கத்துக்கு முரணான நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கையின் நல்லிணக்கத்துக்கு முரணான  நிலைப்பாட்டை நுணுக்கமாக அவதானிப்பது அவசியமாகும்.

ஒன்று, சிங்கள பேரினவாத இயக்கங்கள் தொடர்ச்சியாக அதிகார பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் அதிகாரப் பகிர்வின் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் எனும் தொணிப்பொருளிள் தெற்கில் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். சமஷ்டி தொடர்பாக தெற்கில் நிலவிவரும் பிழையான கண்ணோட்டத்தை இல்லாது செய்து, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் அமைந்திருந்தது. இதன் ஓர் அங்கமாக அண்மையில் குறித்த சுவிற்ஸர்லாந்து தூதுவரையும் சந்தித்து, கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலே சிங்கள இராவய மற்றும் அப்பே ஜனதா பக்ஷய எனும் கட்சியினர் சுவிற்ஸர்லாந்து தூதரகத்துக்கு முன்னாள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டக்காரர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எடுக்கும் இந்த முயற்சிக்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் ஒத்துழைக்கக்கூடாது என்றும் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு நாட்டில் இடமில்லை என்றும் தூதுரகத்திற்கு தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டுள்ள இந்தியாவே இன்னும் வளர்ச்சியடையாத நாடாகத்தான் காணப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு, சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் அதிகாரப்பகிர்வு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக காணப்பட்ட சரத் வீரசேகர, நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் டிசம்பர்-13அன்று இடம்பெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்துக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாது புறக்கணித்தமை தொடர்பில் ஊடகங்கள் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், 'நாட்டின் பொருளாதாரம் குறுகிய காலத்தில் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. பொருளாதார பாதிப்பை தொடர்ந்து ஒரு சில புலம்பெயர் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.' எனக்குறிப்பிட்டுள்ளார்.

மூன்று, இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக பௌத்த மத பீடங்களே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் பல சான்றுகள் அதனை உறுதி செய்துள்ளன. குறிப்பாக அண்மைய நிகழ்வில், கொரோனா பெருந்தொற்றில் இரண்டாம் அலை உயர்வீச்சில் காணப்பட்ட வேளை பொதுமுடக்கத்துக்கான அழைப்பை சுகாதார திணைக்களங்கள் உட்பட நிபுணத்துவமிக்க பலரும் கோரிக்கை விட்ட போது பொதுமுடக்கத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. எனினும் பௌத்த மகா சங்கங்கள் பொதுமுடக்கத்துக்கான கோரிக்கையை முன்வைத்த போது அடுத்த நாளே அது நிறைவேற்றப்பட்டிருந்தது. இவ்வாறாக பல சூழல்கள் இலங்கையின் தீர்மானிக்கும் சக்திகள் பௌத்த சங்கங்கள் என்பதை உறுதி செய்துள்ளது. 1956ஆம் ஆண்;டு பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதற்கு பின்னாலும் பௌத்த சங்கங்களின் வலுவான எதிர்ப்பே பிரதான காரணியாகும். எனவே, இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறைக்கான இணக்கம் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பௌத்த சங்கங்களின் இணக்கத்தையே முதலில் பெற வேண்டியது இலங்கையில் எழுதப்படாத நியதியாக காணப்படுகின்றது. அதிகார பகிர்வுக்கான ஆதரவு சமிக்ஞையை பௌத்த சங்கங்கள் இதுவரை பகிரங்கமான வெளிப்படுத்தாத நிலைமையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறையின் நகர்வில் அதிக சந்தேகங்களே காணப்படுகின்றது.

நான்கு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்குள் குறிப்பாக ஐம்பது நாட்களுக்குள் இலங்கையின் நூற்றாண்டு கால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக உறுதியளித்திருக்கின்ற போமிலும், தீர்க்கமான பொறிமுறையை வெளிப்படுத்தாமை குழப்பமான விளைவுகளையே ஏற்படுத்தக்கூடியதாகும். தமிழ்த்தேசிய தரப்பினர் வலியுறுத்தும் சமஷ்டிக்கும் மறுதலிப்பின்றியே பேச்சுவார்த்தையை நகர்த்தி வருகின்றார். அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேனா மாவட்ட அதிகார சபைகள் பற்றிய உரையாடலை பாராளுமன்றத்தில் முன்னிறுத்திய போது அதற்கும் ஆதரவான சமிக்ஞையையே வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் தமிழ் தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்பையடுத்து மாவட்ட அதிகார சபை தொடர்பான கருத்திலிருந்து பின்வாங்கி இருந்தார். நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி தீர்க்கமான உள்ளடக்கங்களை வெளிப்படுத்தாது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற உரையாடலை ஆரம்பித்துள்ளமை மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகமா என்ற சந்தேகம் வலுப்படுவதையே நியாயப்படுத்துகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, 'இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் நிறைவேற்று அதிகாரம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுப்பதுடன் அரசியலமைப்பின் இரு பகுதிகளுக்கும் அமைவாக தீர்மானங்களை மேற்கொள்ளும் திறன் உள்ளது. அரசியல் தீர்வை வழங்குவதற்கு தேவையான தீர்வுகள் நிறைவேற்று அதிகாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன.' எனக்குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனவே, சிங்கள பேரினவாத சக்திகளின் அதிகார பகிர்வுக்கு எதிரான எண்ணங்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒரு வேலைத்திட்டத்தை இறுதி செய்ய முடியாது என்பதையே மிகவும் தெளிவாகியுள்ளது. மதமும் அரசியலும் ஒரே வண்டியில் சவாரி செய்யும் போது சூறாவளியும் பின் தொடர்கிறது (When religion and politics ride in the same cart, the whirlwind follows) என அமெரிக்காவின் விஞ்ஞான புனை கதை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பிராங்க் ஹேர்பட் கூறியுள்ளார். 1956களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவின் சுயநல அரசியலுக்காக இலங்கை அரசியலில் சூறாவளி பின்தொடர ஆரம்பித்து விட்டது. அதனை இலகுவாக கடந்து செல்வது என்பது எளிமையான பொறிமுறையாக அமைய போவதில்லை. 1959 செப்டம்பர் 25 பிரதமர் பண்டாரநாயக்கா சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ஜனாதிபதி கொத்தலாவலை பார்வையிட்டு, 'ஒரு நாயை கட்டியே வளர்க்கவேண்டும். பண்டாரநாயக்கா அவிழ்த்துவிட்டார், கடித்துவிட்டது' என்று பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடு குறித்து கூறியிருந்தார். எனவே மீள அதனை இழுத்துக்கட்டுவதும் அதனை கடந்து இனப்பிரச்சினைக்கு நியாயமான அதிகார பகிர்வூடாக தீர்வு காண்பதும் தொடர்ச்சியான ஏமாற்று நாடகமாகவே இலங்கை அரசியலில் தொடர உள்ளமையே தற்போதைய அரசியல் நிலவரமாகிறது என்பதே அரசியல் அவதானிகளின் எண்ணங்களாக காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-